Published:Updated:

#நானும்தான் - குறுந்தொடர் - 6

#நானும்தான் - குறுந்தொடர் - 6
பிரீமியம் ஸ்டோரி
News
#நானும்தான் - குறுந்தொடர் - 6

#நானும்தான் - குறுந்தொடர் - 6

#நானும்தான் - குறுந்தொடர் - 6

னுஜாவுக்கு கிளிசரின் போடாமலேயே கண்ணீர் கொட்டியது. ‘ரெடி டேக்’ எனச் சொல்வதற்கு முன்பே அழுதுகொண்டிருந்தாள். அது ஒரு விளம்பரப் படம். ஜவுளிக் கடை விளம்பரத்தில் நடித்துக் கொண்டிருந்தாள். தனுஜா அழுவதற்கான காரணத்தை நான்கு வரிகளிலும் சொல்லலாம்; நாவலாகவும் சொல்லலாம். இப்போதைக்குக் கீழே உள்ள பாராவில்...

அவள் ஒரு மாடல். விளம்பரப்பட நாயகி. ஒரு வருட கான்ட்ராக்ட். மொத்தம் ஆறு ஷூட். ஆறு ஒரு நிமிடப் படங்கள் முடித்துத் தர வேண்டும் என்பது கான்ட்ராக்ட்டில் முக்கிய ஷரத். இப்போது 11 மாதங்கள் ஆகி, ஐந்து விளம்பரப் படங்கள் முடித்த நிலையில் கான்ட்ராக்டில் இருந்து விலகவேண்டிய நெருக்கடி. தமிழகத்தின் முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு. கான்ட்ராக்ட் படி இன்னும் ஒரு மாதம் இருக்க வேண்டும். ஆனால், படக்குழுவினர் இந்த ஒரு மாதத்தில் படப்பிடிப்பை முடித்துவிட வேண்டும் என்கிறார்கள்.

#நானும்தான் - குறுந்தொடர் - 6

பிறந்த வீட்டைவிட்டுப் புகுந்த வீடு செல்லும் பெண், தாயை அணைத்துக் கண் கலங்குவதும், பின்பு தாயின் ஒரு பட்டுச் சேலையின் கதகதப்பின் துணையோடு செல்வதும் விளம்பரத்தின் தீம்.

கிளிசரின் போடாமலேயே அவளுக்குக் கண்ணீர் வரக் காரணம், டைரக்டர் தன்வீர். ‘‘இன்னொரு ஷூட் முடிக்காமல் அனுப்ப முடியாது’’ என உறுதியாகச் சொல்லிவிட்டான். தொடர்ச்சியான அவளுடைய விளம்பரப் படங்களைப் பார்த்துவிட்டு, அவள் சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கின. ஆரம்பத்தில் இரண்டு புதுமுகங்கள் பேசினார்கள். ‘‘இல்லை சார்... ஒரு வருடம் கான்ட்ராக்ட் இருக்கிறது. இப்போது நடிக்க முடியாது’’ என்று சொல்லித் தவிர்த்து வந்தாள்.

இது தமிழ் சினிமாவின் நான்கு உச்ச நட்சத்திரங்களில் ஒருவருடன் நடிப்பதற்கான வாய்ப்பு. பெரிய சம்பளம்... பெரிய புகழ்... பெரிய வாசல்... பெரிய உலகம்... பெரிய திரை... இப்படி அகன்ற சொர்க்கம்.

தன்வீர் பிடிவாதமாகச் சொல்லிவிட்டான். ‘‘இது முறையல்ல. வேண்டுமானால் ஜவுளிக் கடை உரிமையாளரிடம் பேசுகிறேன்’’ என்று சொல்லியிருந்தான். தனுஜாவே நேரடியாக ஜவுளிக்கடை முதலாளியிடம் பேசிவிடலாமா என யோசித்தாள்.

ஜவுளிக்கடை முதலாளி ரொம்ப தங்கம். பார்க்கும்போதெல்லாம் அன்பாகப் பேசுவார். அவரிடம் நிலைமையைச் சொன்னால், சாதாரணமாக ஒப்புதல் தருவார். தன்வீரை மீறிப் பேசுவது சரிதானா என்கிற தயக்கம்தான். அவன்தான் விளம்பரப் பட உலகில் முதல் வாய்ப்பு தந்தவன். தர்மம் சார்ந்த ஒரு தயக்கம் மட்டும்தான்.

விளம்பரக் குழுவின் மேனேஜர் ராம்குமார் தனியாக வந்து காதைக் கடித்தார். ‘‘நாளை காலை வரை பொறுத்திருங்கள். தன்வீரைச் சமாதானப்படுத்த முடியுமா என்று பார்க்கிறேன்’’ என்றார்.

நாளை மாலை வரைதான் சினிமா குழுவும் நேரம் கொடுத்திருந்தது. இந்த மாத இறுதியில் அந்தப் படக்குழு ஜெர்மனியில் பாடல் காட்சிகளை எடுக்க இருந்தது. இந்த சான்ஸை விட்டால் இன்னொரு கதவு திறக்குமா என்று சொல்ல முடியாது. சினிமா என்பது குதிரைப் பந்தயம்... புகழ் இருப்பவர்கள் மீது கட்டப்படும் பந்தயம். அதிர்ஷ்டம் கதவைத் தட்டும்போது அரவணைத்துக் கொள்ள வேண்டும். நாம் அழைக்கிற நேரத்தில் வருவதற்கு அதிர்ஷ்டம் என்ன அட்டெண்டரா?

‘‘காலையிலேயே முதலாளியிடம் பேசி விட்டேன். தன்வீருக்குத் தெரிந்தால் காரியம் கெட்டுவிடும். பதில் வரும்வரை பொறுமையாக இரு’’ என்று சொன்னார் ராம்குமார்.

#நானும்தான் - குறுந்தொடர் - 6

`மாலை 5 மணிக்கு போன் செய்கிறேன்' என்று சொல்லியிருந்தார் பட டைரக்டர். நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. ராம்குமாருக்கு போன் செய்தபோது, `முதலாளி தன்வீரிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டார்' எனக் குண்டைப் போட்டார். ‘‘வேறு வழி இல்லை... அடுத்த மாசம் வேற ஒரு சான்ஸ் கிடைக்காமலா போயிடும்? வெயிட் பண்ணுமா’’ என்றார்.

பட இயக்குநர் சொன்னபடி மாலை 5 மணிக்கு போன் செய்தார். ‘‘என்ன சொல்றீங்க?’’

‘‘ரெண்டு மணிநேரம் டைம் தரமுடியுமா?’’ - ஓர் அசட்டு தைரியத்தில் அவகாசம் கேட்டாள்.

தனுஜாவின் அப்பா, கார் டெக்கர் கடை வைத்திருந்தார். அம்மா வீட்டு நிர்வாகி. ஒரே பெண். மாடலிங் உலகைக் கலக்க வேண்டும் என்கிற ஆசையோடு அலங்கரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டவள் தனுஜா. ஃபேஷன் ஷோ, கேட் வாக்... இப்படியாக வளர்ந்தாள். தன்வீர் மூலம் விளம்பரப் பட வாய்ப்புகளும் கிடைத்தன. அடுத்து? அவள் எதிர்பார்த்த கனவு... லட்சியம்... பெரிய திரை. கையருகே வானம் நழுவுகிற ஏக்கம் மனதை வாட்டியது.

ஒரு முடிவுடன் தைரியமாக ஜவுளிக்கடை முதலாளியைப் பார்க்கக் கிளம்பினாள். ஐயா மாடியில் இருப்பதாகச் சொன்னார்கள். வணக்கம் சொல்லி எதிரில் அமர்ந்து, வந்த காரணத்தைச் சுருக்கமாகச் சொன்னாள்.

‘‘தன்வீர் சொன்னாரு.’’

‘‘அந்தப் பட ஷூட்டிங் போயிட்டு வந்துகூட நம்ம ஷூட்டை முடிச்சுக் கொடுத்துடுவேன் சார்.’’

‘‘எனக்கு இதப் பத்தியெல்லாம் தெரியாதும்மா. தன்வீர்தான் ஒத்தக்கால்ல நிக்கறார்.’’

‘‘நீங்க ஒரு வார்த்தை சொன்னா...’’

‘‘நீ முதல்ல என்கிட்ட பேசி இருக்கலாமே... எவ்ளோ நல்ல வாய்ப்பு? இப்ப அவர் பேச்சை கேட்காம நான் முடிவெடுக்கிற மாதிரி ஆகிடும். சரி, நான் பாத்துக்கிறேன்.’’

‘‘ரொம்ப நன்றி சார்’’ - கண்கலங்கிப் போனாள் தனுஜா.

தன்வீருக்கு அவள் எதிரிலேயே போன் போட்டு பேசினார். ‘‘ரொம்ப நன்றி சார்’’ என்றாள் மீண்டும்.

‘‘சினிமா தம்பிக்கிட்ட சொல்லிடு... படத்தில நடிக்கிறேன்னு’’ - பொறுப்பாக, அக்கறையாகச் சொன்னார்.

‘‘ஆமா சார். அவங்க வெயிட் பண்றாங்க.’’ உடனே கால் ரிஜிஸ்டரில் போய் இயக்குநரின் எண்ணை அழுத்தி, `நடிக்க சம்மதம்' என்றாள். ‘‘நாளைக்கே கான்ட்ராக்ட் சைன் பண்ணிடலாம்’’ என்றார் இயக்குநர். தனுஜாவின் முகத்தில் சந்தோஷத்தின் உச்சம்.

‘‘நான் வரேன் சார்!’’ என்று கிளம்பினாள்.

‘‘என்னம்மா இவ்ளோ பண்ணியிருக்கேன், கண்டுக்காம போறியே?!’’ என்றார் முதலாளி.

- அதிர்ச்சி தொடரும்

-தமிழ்மகன் 

ஓவியம் : ஸ்யாம்