
நமக்குள்ளே!
முறையாகச் சோதிக்கப்படாமல் செலுத்தப்பட்ட ரத்தம் காரணமாக, விலைமதிப்பற்ற மனித உயிர் ஒன்றை இழந்திருக்கிறோம். கண்ணுக்குத் தெரிந்து இன்னும் இரண்டு உயிர்கள் ஊசலாடிக்கொண்டிருக்கின்றன. ‘கணக்கில் வராமல் துடித்துக்கொண்டிருப்பது எத்தனை உயிர்களோ?’ என்கிற அச்சம் தமிழகம் முழுக்கவே

பரவிக்கிடக்கிறது.
சாத்தூர்ப் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு ரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவாக இருந்ததால், சிவகாசியிலுள்ள அரசு ரத்த வங்கியிலிருந்து ரத்தம் வரவழைக்கப்பட்டு ஏற்றப்பட்டது. அந்த ரத்தம், ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட இளைஞரிடமிருந்து பெறப்பட்ட ரத்தம் என்பது அதிர்ச்சியின் உச்சம். இதைத் தொடர்ந்துதான், இன்னும் எத்தனை பேர் இப்படி பாதிக்கப்பட்டுள்ளனரோ என்கிற அதிர்ச்சிக் கேள்விகள் நாடு முழுக்க அலையடித்துக்கொண்டிருக்கின்றன.
உண்மையில், ரத்ததானம் செய்த அந்த இளைஞர், அதன்பிறகு தனக்கு மேற்கொள்ளப்பட்ட ரத்தப் பரிசோதனையின்போது ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தெரியவரவே, உடனடியாக ரத்த வங்கிக்கு அதைத் தெரிவித்திருக்கிறார். அதற்கு முன்பாகவே அந்த கர்ப்பிணிக்கு ரத்தம் ஏற்றப்பட்டுவிட்டதுதான் கொடுமை. எந்தவகையில் ரத்தம் பெறப்பட்டாலும் அதை உரிய பரிசோதனைகளுக்குட்படுத்த வேண்டும் என்கிற அடிப்படை விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டிருக்கின்றன. உச்சகட்ட அலட்சியத்தோடு செயல்பட்டுள்ளனர் சம்பந்தபட்ட ஊழியர்கள்.
ரத்ததானம் செய்த அந்த இளைஞர், குற்ற உணர்ச்சி காரணமாக விஷத்தைக் குடித்து, சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். ‘நம் எதிர்காலம் என்னாகுமோ, வயிற்றில் வளரும் சிசுவின் கதி என்னாகுமோ?’ என்றெல்லாம் நடுங்கியபடியே மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவருகிறார் அந்த கர்ப்பிணி.
வழக்கமாக அரசு மருத்துவமனைகளில் ஹெச்.ஐ.வி நோய்த்தொற்றைக் கண்டறிய எலீசா அல்லது ராப்பிட் டெஸ்ட் மேற்கொள்ளப்படும். ஆனால், ‘நாட்’ என்கிற நியூக்ளிக் ஆசிட் டெஸ்டிங் முறையைத்தான் ‘சிறப்பானது’ என்று உலக சுகாதார மையம் பரிந்துரைக்கிறது. இதைத்தான் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என வளர்ச்சியடைந்த நாடுகள் பலவும் பின்பற்றுகின்றன. ஆனால், இதற்கான செலவு அதிகம் என்பதால், வளர்ந்துவரும் நாடுகள் பலவற்றிலும் இது பரிந்துரைக்கப்படுவதில்லை... இந்தியாவிலும் அப்படியே!
இப்போது ரத்த வங்கிகள் இப்படி ‘ரத்தக் கறை’ பூசி நிற்பது, அரசு மருத்துவத்துறை மீதான அவநம்பிக்கையை மேலும் அதிகப்படுத்தவே செய்திருக்கிறது. இது, தேசிய ரத்தக் கொள்கையை மறுபரிசீலனை செய்யவேண்டிய கட்டாயத்தை உருவாக்கியிருக்கிறது. இது அவசியம் மட்டுமல்ல, அவசரமும்கூட! உயிருக்கு விலை நிர்ணயம் செய்ய அரசு உட்பட யாருக்குமே உரிமை இல்லை என்பதை அனைவருமே உணர வேண்டும்!
உரிமையுடன்,

ஆசிரியர்