கடலூர் தென்பெண்ணை ஆற்று திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கடலூர் தென்பெண்ணை ஆற்றில் நடந்த ஆற்று திருவிழாவில் கடலூர் வண்டிபாளையம், கடலூர் முதுநகர், பாதிக்குப்பம், தேவனாம்பட்டினம், குண்டு உப்பலவாடி, தாழங்குடா, உச்சிமேடு, பச்சாங்குப்பம் மற்றும் புதுச்சேரி மாநில கிராம பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு பெண்ணையாற்றுக்கு கொண்டு வரப்பட்டது. அப்பொழுது கடலூர் நகரில் மஞ்சக்குப்பம், நேதாஜி சாலை ஆகிய பகுதிகளில் பக்தர்கள் நின்று தென்பெண்ணை ஆற்றுக்குச் செல்லும் சுவாமிகளை வணங்கினார்கள்.
சுவாமிகளுக்குப் பெண்ணையாற்றில் தீர்த்தவாரி நடந்தது. பின்னர் சுவாமிகள் வரிசையாக வைக்கப்பட்டது. கடலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் ஆற்று திருவிழாவில் கலந்துகொண்டு புனித நீராடி சுவாமிகளை வழிப்பட்டனர். சிறுவர்கள், சிறுமிகள் ராட்டினம் உட்பட விளையாட்டு சாதனங்களில் விளையாடி மகிழ்ந்தனர். பொதுமக்கள் அங்கு விற்பனை செய்யப்பட்ட வீட்டு உபயோகப்பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், உணவுப் பொருட்களை ஆர்வமாக வாங்கிச் சென்றனர். மேலும் ஆற்று திருவிழாவில் கிடைக்கக்கூடிய சுருளி கிழங்கின் மகத்துவத்தை அறிந்த பொதுமக்கள் அதிக அளவில் வாங்கிச் சென்றனர். அதிக மக்கள் கூடியதால் அப்பகுதியில் போலீஸார் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.