
என் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன?
அவள் பெயர் நீத்து. மழலை மாறாத குழந்தை. தாய், தந்தை, தாத்தா, பாட்டி என்று உறவுகள் சூழக்

கழிந்தன அவளது நாள்கள். நீத்துவின் தாய் வினுப்பிரியா. கணவர் ஷயான்தான் வினுவுக்கு எல்லாம். இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். கொடநாடு விவகாரம் தொடர்புடை யதாகக் கூறப்படும் விபத்து, ஒரு பாவமும் அறியாத வினுப்பிரியா மற்றும் குழந்தை நீத்துவின் உயிர்களைப் பறித்துவிட்டது. இவர்களின் மரணங்களிலும் மர்மங்கள் விலக வில்லை.
கோவை மதுக்கரை மார்க்கெட் அருகே இருக்கிறது வினுப்பிரியாவின் பெற்றோர் வீடு. வினுப்பிரியாவின் தந்தை சிவசங்கரனிடம் பேசினோம். “என் மகளின் காதல் திருமணத்தில் ஆரம்பத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. என் மகளின் ஆசையை நிறைவேற்றவே திருமணம் செய்து வைத்தோம்.

எங்கள் வீட்டில்தான் அவர்கள் ஏழாண்டுகள் குடும்பம் நடத்தினர். ஷயானும் நன்றாகத்தான் பார்த்துக்கொண்டார். அவருக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. பேத்தி நீத்து யூ.கே.ஜி முடித்து, ஒன்றாம் வகுப்புக்கு அட்மிஷன் போட்டிருந்தோம். அப்போது திடீரென ஒருநாள், ‘என் மாமாவுக்கு ஹார்ட் அட்டாக். புறப்படு’ என்று மகளிடம் ஷயான் கூறினார். குழந்தை நீத்து, ‘நான் போக மாட்டேன்’ என்று அழுதாள். குழந்தையைக் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு சென்றார்கள். நீத்து அழுதுகொண்டேதான் சென்றாள். அன்று இரவு ஷயானின் ஓனருடன், போலீஸார் எங்கள் வீட்டுக்கு வந்தனர்.

கொடநாடு எஸ்டேட் சி.சி.டி.வி கேமராவில், ஷயான் கார் ஓட்டுவது பதிவாகியிருப்பதாகக் கூறி விசாரணை நடத்தினர். அப்போதுதான், எங்களுக்கு அந்த விபரீதமே தெரிந்தது. இவ்வளவு பெரிய பிரச்னையில் சிக்கியுள்ளார். மகள், குழந்தையை வேறு கூட்டிச் சென்றுள்ளாரே என்று நினைத்து இரவெல்லாம் நாங்கள் தூங்கவே இல்லை. எது நடக்கக் கூடாது என்று நினைத்தோமோ மறுநாள் காலை, அது நடந்துவிட்டது. 2017 ஏப்ரல் 29 அன்று அதிகாலையில் கேரள மாநிலம் பாலக்காடு நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தில் என் மகளும் பேத்தியும் இறந்துவிட்டனர் என்று தகவல் வந்தது. இருவரையும் பிணங்களாகத்தான் பார்த்தோம். நீத்துவின் விளையாட்டுப் பொருள்கள் எல்லாமே அப்படியேதான் அறையில் வைத்துள்ளோம்” என்று தேம்பி அழுதார்.

வினுப்பிரியாவின் தாய் சுகுணா லட்சுமி, “ஷயானால், எந்தப் பிரச்னையும் வந்ததில்லை. அவருக்கு நண்பர்களும் அதிகமாக இல்லை. வேலை, வீடு என்றுதான் ஓடிக்கொண்டிருந்தார். பண விஷயத்திலும் அவர் சரியாகத்தான் இருந்தார். சென்னையில்தான் ஷயானுக்கும், கனகராஜுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவருடன் பழக்கம் ஏற்பட்ட பிறகு பல நாள்கள் அவர் இரவில் வீட்டுக்கே வரவில்லை. திடீரென வெளிநாட்டுக்குச் செல்வதற்காக பாஸ்போர்ட் புதுப்பிக்க வேண்டும் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். இந்தப் பிரச்னையால்தான் அவர் வெளிநாடு செல்லத் திட்டமிட்டிருந்தார் என்று இப்போதுதான் எங்களுக்குப் புரிகிறது. இப்படிப் பிரச்னை இருக்கிறது என்று தெரிந்திருந்தால் அன்றைய தினம் நாங்கள் என் மகளையும், பேத்தியையும் அவருடன் அனுப்பியிருக்கவே மாட்டோம். என் மகள் அவரை மிகவும் நம்பினாள். ஆனால், அவளிடம்கூட அவர் உண்மையைச் சொல்லவில்லை. தப்பு செய்தவர்கள் தண்டனை அனுபவிப்பது சரி... ஆனால், ஒரு பாவமும் அறியாத என் மகளும் பேத்தியும் என்ன தப்பு செய்தார்கள்...” என்றார் ஆற்றாமையுடன்.
எந்தக் குற்றமும் செய்யாத வினுப்பிரியா மற்றும் நீத்துவின் மரணங்களுக்குப் பதில் சொல்வது யார்?
- இரா.குருபிரசாத், படங்கள்: கே.அருண்