
கழுகார் பதில்கள்!
@மணிசங்கரன்.பா.ந. நெல்லிக்குப்பம்.
பெரியாரும் அம்பேத்கரும் எந்தப் புள்ளியில் ஒன்றுபடுகிறார்கள், எந்தப் புள்ளியில் வேறுபடுகிறார்கள்?
தீண்டாமைக்கு எதிரான புள்ளியில் ஒற்றுமை. மதம் சார்ந்த விஷயத்தில் வேற்றுமை. அம்பேத்கர், புத்தமதத்தில் சேர்ந்தார்.
பெரியார், இறுதிவரை எந்த மதத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஏ.சேகர், கும்பகோணம்.
கொலைப்பழி வந்த பிறகும் முதல்வர் பதவியில் நீடிக்கலாமா எடப்பாடி பழனிசாமி?
சட்டரீதியாக அவசியம் இல்லை. ஆனால், மரபு மற்றும் தார்மிகரீதியில் பதவியைவிட்டு விலகிய உதாரணங்கள் இங்கே மட்டுமல்ல, உலக அளவிலும் நிறைய உண்டு!

சி.சிவதாணு, நாகர்கோவில்.
காங்கிரஸ் - ஜனதா தளம் (எஸ்) கூட்டணியில் நடந்துவரும் கர்நாடக மாநில ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான முயற்சிகளில் தொடர்ந்து பி.ஜே.பி ஈடுபட்டு வருகிறதே?
மாற்று அரசியலை முன்வைக்கும் என்றுதான் பலரும் பி.ஜே.பி மீது நம்பிக்கை வைத்தனர். ஆனால், நான்கரை ஆண்டுகளைக் கடந்தப் பின்பும் காங்கிரஸின் அதே மகாமட்டமான அரசியலைத்தான் பின்பற்றுகிறது பி.ஜே.பி. அதற்கான இன்னுமோர் உதாரணம்தான் இதுவும். அவர்கள் செய்த எதிர்மறையான விஷயங்களின் அடிச்சுவடுகூட இல்லாமல் நேர்மறையான விஷயங்களைச் செய்வதுதான் மாற்று அரசியல். ஆனால், நடப்பதையெல்லாம் பார்க்கும்போது, அதற்கெல்லாம் இங்கே வழியே இல்லை என்கிற எண்ணமே மேலோங்குகிறது.
@டி.சிவக்குமார், சீலப்பாடி, திண்டுக்கல்.
‘டாக்டர் தமிழிசை எந்தக் கட்சி?’ என்கிற சந்தேகம் பலநேரங்களில் எனக்கு வருகிறது... என்ன செய்ய?
எவ்வளவு அடிச்சாலும் தாங்குகிறார் என்பதற்காக, ஏகத்துக்கும் கலாய்க்கக் கூடாது. எதற்கும் ஓர் எல்லை இருக்கிறதுதானே.
டி.கருணாநிதி, திருச்சி-1.
‘பேட்ட’ படம் எப்படி?
ரஜினி, சிறப்பான சேட்ட; அவரின் ரசிகர்களுக்கு தரமான வேட்ட!
@இ.முத்துக்குமார், கிருஷ்ணாபுரம்
கோலிவுட்டில் பயங்கரக் கதைப்பஞ்சம் நிலவும் சூழலில், கொடநாடு திகில் கொலை, கொள்ளை சரியான தீனிதானே?
சூப்பர் டூப்பர் ஹிட் கதை என்பதில் சந்தேகமே இல்லை. ஒருகாலத்தில் மறைமுகமாக நடந்து கொண்டிருந்த விஷயங்களை மோப்பம் பிடித்துப் படமாக எடுத்தார்கள். இப்போது நேரடியாகத் திரைக்கதையையே கொடுக்கத் தொடங்கிவிட்டனர் நம் அரசியல்வாதிகள். தமிழ் சினிமா உலகு, இந்த அரசியல்வாதிகளுக்கு நிறையவே கடன்பட்டுள்ளது.
சி.செழியன், திருநெல்வேலி.
கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக முதல்வர் மீது குற்றம்சாட்டியவர்களைச் சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுத்துவிட்டதே?
கிட்டத்தட்ட ‘நக்கீரன்’ கோபால் விஷயத்தில் நடந்ததுதான் இப்போதும் நடந்துள்ளது. கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பற்றிச் செய்திகளை வெளியிட்டதற்காக அவர் மீது வழக்கைப் பாய்ச்சிக் கைது செய்தது, எடப்பாடி அரசு. வழக்கமாக, 15 நாள் நீதிமன்றக் காவல் என்பதைத்தான் மாஜிஸ்திரேட்கள் பின்பற்றுவார்கள். அரிதிலும் அரிதாக, கோபால் விஷயத்தில் சிறையிலடைக்க மறுத்துவிட்டார் சென்னைப் பெருநகர நீதிமன்ற மாஜிஸ்திரேட் கோபிநாத். இதற்காக இவரை உயர் நீதிமன்றம் வெகுவாகப் பாராட்டியிருப்பதுடன், இதுதான் சரியான சட்ட நடைமுறை என்றும் கருத்துத் தெரிவித்துள்ளது. நீதிமன்றம் இதைச் சொன்ன ஒரு வாரத்துக்குள்ளாகவே மீண்டும் மூக்குடைபட்டிருக்கிறது எடப்பாடி பழனிசாமியின் போலீஸ். எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் சரிதா, சபாஷ் பெற்றுள்ளார்.
@வாசுதேவன், காடுகுடி, பெங்களூரு.
அதிர்ஷ்டத்துக்கு எவ்வளவு சதவிகிதம் ஒதுக்கலாம், வாழ்க்கையில் முன்னேற?
0 சதவிகிதம்.

@ஜான்செல்வராஜ், பாலவாக்கம்.
ஊழல், கொலை, கொள்ளை, மாசு பிரச்னை, கலப்பட உணவு இப்படி எதுவும் இல்லாத ஒரு நாடு இருந்தால் சொல்லுங்கள் கழுகாரே... அங்கே நான் குடியேறிவிடுகிறேன்.
ஹலோ, டுபாக்கூர் டிராவல்ஸா. ஜான் சார், செவ்வாய் கிரகத்துக்கு போறதுக்கு ஒரு டிக்கெட் போடுங்கப்பா!
@செந்தில்குமார்.எஸ்.
இந்த அ.தி.மு.க அரசிடம் பாராட்டும்படியாக ஒரு விஷயம்கூட இல்லையா கழுகாரே?
ஏன் இல்லை... பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்காக எடுத்துவரும் முயற்சி, உண்மையிலேயே மனப்பூர்வமாகப் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
@விஷ்ணுகோபால்.
பொதுவாழ்வில் கருத்துக் கூறும் அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், ஏன் தனிமனிதனைக்கூட விமர்சித்து மீம்கள் போடப்படுகின்றன. அந்த வகையில் திரைமறைவில் கருத்துகூறிக் கொண்டிருக்கும் கழுகார் பற்றி மீம் வந்தால்?
டாக்டர் தமிழிசை, அமைச்சர் ஜெயக்குமார் போன்றோரை நினைத்து ஆறுதலடைந்துகொள்ள வேண்டியது தான்.
@ஹுசைன் ரஹீம்.
‘சர்கார்’ ரசிகர்கள், ‘சர்க்கார்’ கொடுத்த பொங்கல் பரிசுத் தொகையை என்ன செய்தார்களாம்?
எதிர்ப்பது கடமை... வாங்குவது உரிமை.
@சேகர்.கே.
‘இந்திய வரலாற்றிலேயே ஊழலற்ற மாநிலம் தமிழ்நாடுதான்’ என்கிறாரே பிரதமர் மோடி?
ஹலோ சேகர், ஏற்கெனவே தமிழக அரசை மிகவும் தாங்கிப்பிடிப்பதாக மோடி மீதும் பி.ஜே.பி மீதும் தமிழ்நாட்டில் வாய்க்கால் தகராறு ஓடிக்கொண்டிருக்கிறது. நீரும் மண்வெட்டியோடு கிளம்பிவிட்டீரே! பொங்கல் ஜோரில் ஏகத்துக்கும் கண் விழித்திருந்தால், நன்றாகத் தூங்கியெழுந்து ஒருவார செய்தித்தாள்களையும் நன்றாகப் புரட்டிப் பார்க்கவும்.
@மு.கல்யாணசுந்தரம், கணபதிபுதூர், கோவை-6.
‘தமிழக மக்களுக்குத் துரோகம் செய்பவர்களுடன் கூட்டணி இல்லை’ என்று எடப்பாடி பழனிசாமி யாரைக் கூறுகிறார்?
‘தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்பவர்களுடன் கூட்டணி இல்லை’ என்று தமிழக மக்கள் சொல்லிக் கொண்டிருப்பதை இவர் காதில் வாங்கியதாகத் தெரியவில்லை.
@சி. கார்த்திகேயன், சாத்தூர்.
பொங்கல் பரிசு விஷயத்திலும் நீதிமன்றம் வழக்கம்போல, புறப்பட்ட இடத்துக்கே வந்து நின்றுவிட்டதே?
அரசாங்கங்களின் திட்டங்களுக்கு எதிராகத் தீர்ப்பைப் பெறுவதில், வழக்கு போட்டவர்கள் தோற்பதுதான் பெரும்பாலும் வழக்கமாக இருக்கிறது. அரசாங்கத்தை எதிர்க்கும் அளவுக்கான ஆதாரங்களைத் திரட்ட முடியாமல் தோற்றுவிடுகிறார்கள், பாவம். நீதிமன்றங்களைப் பொறுத்தவரை, கண்முன்னே இருக்கும் ஆதாரங்கள்தானே பேசும்.
@லா.ரா.கணபதி ரவி, மடிப்பாக்கம்.
தமிழக அரசியலில் இன்றைக்கு உண்மையான ஹீரோ யார்... மழுப்ப வேண்டாம்?
மக்கள்தான். இதுநாள்வரை கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்று ‘தனிநபர் வழிபாட்டு அரசியல்’தான் இங்கே நிலவிவந்தது. தற்போது அது கிட்டத்தட்ட காலாவதியாகிவிட்டது. இதுவே சரியான தருணம். ‘நாம்தான் ஹீரோ’ என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து, நம் வாக்குகளை உரியவருக்கு மட்டுமே வழங்கினால், நிச்சயமாக மாற்றங்கள் வரக்கூடும். நாம் தட்டும் ஜால்ரா சத்தத்தின் காரணமாக, கடவுளுக்கும் மேலாகத் தங்களை உணரும் அரசியல்வாதிகள்தான் ஆட்டம்போடுகிறார்கள்.
பாரதிமுருகன், மணலூர்பேட்டை.
மீண்டும் ‘தர்மயுத்தம்’ நடக்க வாய்ப்பிருக்கிறதா?
அப்படி வாய்ப்பிருப்பதாகத் தோன்றவில்லை. ஆனால், ‘மர்ம யுத்தம்’ நடந்துகொண்டிருக்கிறது. கத்தியின்றி, ரத்தமின்றி மறுபடியும் ஒரு வாய்ப்பு வரக்கூடும் என்றே தோன்றுகிறது!
எஸ்.பூவேந்தஅரசு, சின்னதாராபுரம்.
அ.தி.மு.க ஆட்சியில் நடைபெறுவதாகக் கூறப்படும் அவலங்கள், நாளை தி.மு.க ஆட்சிக்கு வந்தாலும் தொடர்வதற்கு வாய்ப்பிருப்பதை மறுப்பதற்கில்லைதானே!
எது நடக்கிறதோ... அது ‘நன்றாக’வே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ... அதுவும் ‘நன்றாக’வே நடக்கும்..
கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை,
சென்னை- 600002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!