
#நானும்தான் - குறுந்தொடர் - 7
``சார்... இதை சுரபுன்னைனு சொல்லுவாங்க. இந்த மாதிரியான காடு இந்தியாவில் ரெண்டு இடங்கள்லதான் இருக்கு. இன்னோர் இடம் சுந்தரவனக்காடுகள். இதுதவிர, தாய்லாந்திலும் தென் அமெரிக்காவிலும் இருக்கு. அலையாத்திக் காடுன்னு பொதுவா சொல்லுவாங்க. சுனாமி வந்தப்ப, இந்த அலையாத்திக் காடுதான் இந்தப் பகுதியைக் காப்பாத்துச்சு’’ - பிச்சாவரம் கழிமுகத்தின் படகோட்டி சொல்லிக்கொண்டே வந்தார்.
அருள்மொழி எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டே தன் ஃபைவ்-டி கேமராவில் படம்பிடித்துக் கொண்டிருந்தாள். விஷ்ணு, வேகமாகக் குறிப்பெடுத்தபடி இருந்தான்.
‘‘வேர்களே கிளைகளாகவும் கிளைகளே வேர்களாகவும் மாறிக் கொள்ளும் விநோதமான மரம். இடையிடையே சின்னச்சின்ன இலைகளோடு இருக்கே... அதுதான் தில்லை மரம். அதனாலதான் இந்த ஊருக்கு `தில்லை'னு பேர் வந்தது. உப்பு நீர்லதான் வளரும். உப்பை நீக்கிட்டு நல்ல நீரை மட்டும் உறிஞ்சிக்கும் தன்மை இதுக்கு இருக்கு. எவ்வளவு மாசு இருந்தாலும் இந்த இலையில் அது ஒட்டாது. எப்பவும் பச்சைப் பசேல்னு பளிச்சுனு இருக்கும்.’’
‘‘அருள், நாம ரெண்டு பேரும் ஒரு போட்டோ எடுத்துக்கலாமா?’’ என்றான் விஷ்ணு.
டி.வி சேனல் ஒன்றுக்காக அவுட்சோர்சிங் முறையில் இப்படியான நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தரும் நிறுவனம் ஒன்றில் அவர்கள் இருவரும் பணியாற்றினர். விஷ்ணுவுக்கு அருள்மீது ஒருவித ‘இது’ இருந்தது. அதைச் சரியாக வெளிப்படுத்த முடியாமல் தவித்தான்.

‘‘எடுத்துக்கலாம் சார். யாரு எடுப்பாங்க?’’
‘‘செல்போன்ல எடுத்தா போதும். வரலாறு முக்கியமாச்சே. இதோ இவரு எடுப்பாரு’’ எனப் படகு ஓட்டுபவரைக் காட்டினான்.
படகு ஓட்டுகிறவர் போட்டோ எடுத்துவிட்டு, ‘‘சார் கொஞ்சம் இன்டீரியர் போய் காட்டலாமா? எக்ஸ்ட்ரா எனக்குக் கொஞ்சம் தர வேண்டியிருக்கும்’’ என்றார்.
‘‘அதப்பத்தி பரவால்ல... எங்களுக்கு நிகழ்ச்சி நல்லா வரணும், அதுதான் முக்கியம்’’ - விஷ்ணு செலவைப் பற்றி கவலைப்படாமல் அக்கறையாகச் சொன்னான்.
‘‘போய்க்கொண்டிருந்த இடத்தில் ஓர் இடத்தில் புதர்களுக்கு இடையில் அமைந் திருந்தது அந்த தண்ணீர்ப் பாதை. இருளாகவும் மரங்கள் கவிழ்ந்தும் இருந்தது. படகை அந்த வழியில் செலுத்தினார்.
அடர்ந்த தில்லை மரங்கள் கவிந்த அந்தப் பாதையில், படகு ஓட்டுநர் வெளிநாட்டுப் பறவைகள் சிலவற்றைக் காட்டினார். அருள் மொழியின் கேமராவுக்குக் கொள்ளை விருந்தாக ஃபிளமிங்கோ பறவைகளும் விதவிதமான நாரைகளும் ஏராளமாகக் காட்சியளித்தன.
‘‘இது, எம்.ஜி.ஆர் தீவு. `இதயக்கனி' படத்தோட ஷூட்டிங் இங்கே நடத்தினார். சூர்யா தம்பி கார்த்திக்கூட இங்கே வந்து நடிச்சாரு. தெலுங்கு பட ஷூட்டிங் எடுத்திருக்காங்க’’ என ஒவ்வோர் இடம் வந்ததும் சினிமாக்காரர்களின் அடையாளங்களோடு சொல்லிக்கொண்டே போனார்.
இருவரும் கரைக்கு வந்தபோது, பிச்சாவரம் காடு வனத்துறைக் கட்டுப்பாட்டுக்கு வந்து விட்டது தெரிந்தது. ஆறு மணிக்குப் பிறகு டூரிஸ்டுகள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.
கார் டிரைவர், ‘‘அடுத்து எங்கே சார்?’’ என்றபடி கதவைத் திறந்துவிட்டார்.
‘‘சென்னைக்குத்தான்...''
கார் பண்ருட்டியைக் கடந்து கொண்டிருந்தது. ஓரிடத்தில் காரை நிறுத்தி, ‘‘சார்... ரெண்டு நிமிஷம் இதோ வந்துடறேன்’’ என்றபடி டிரைவர் வேகமாகப் போனார். விஷ்ணு, அருள்மொழி மட்டுமே காருக்குள் இருந்தனர். காருக்குள் இருட்டு. விஷ்ணுவுக்கு அந்தத் தனிமை ஒரு துணிச்சலைக் கொடுத்திருக்க வேண்டும்.
‘‘இங்கெல்லாம் வந்தா ஒரு நா தங்கி ஷூட் பண்ணிட்டுப் போனா இன்னும் பக்காவா இருக்கும். இப்படி அவசரப்பட்டு ஒரே நாளில் எடுக்கிறதுல பிரயோஜனமே இல்லை’’ என்றான்.
‘‘சன் ரைஸ்ல இருந்து சன் செட் வரைக்கும் சூப்பரா எடுத்துட்டோம். தங்கி எடுக்க என்ன சார் இருக்கு?’’ என்றாள்.
விஷ்ணுவின் ஒரே நோக்கம் தங்கிச் செல்வது மட்டும்தான். அருளிடம் இன்னும் கொஞ்சம் பேசினால் வழிக்குக் கொண்டுவந்துவிடலாம். ஆனால், அவள் சர்வ ஜாக்கிரதையாக இருப்பது தெரிந்தது. மரியாதை நிமித்தமாக ‘சார்’ தவிர நெருங்கி வருவது இல்லை.
தனியாக அவனுடன் இருப்பது சங்கடமாக இருந்தது. வேண்டுமென்றே நெருங்கி நெருங்கி அமர்ந்து எரிச்சலூட்டிக்கொண்டிருந்தான். உரிமையாக தோளுக்கு மேலாகக் கையைப் போட்டு பேச ஆரம்பித்தான். இன்னும் கொஞ்ச நேரத்தில் என்ன செய்வானோ என அச்சம் குடியேறியது. ‘‘எங்க டிரைவர் இன்னும் ஆளை காணோமே?''
``ஏதாவது இயற்கை உபாதை இருக்கும்'' என்று விஷ்ணுவே ஒரு காரணத்தைச் சொன்னான்.
பக்கத்தில் அதற்கான இடம் இருக்கிறதா? யோசித்தான். டிரைவர் ஒரு வழியாக வந்து சேர்ந்தார்.
சனிக்கிழமை என்பதால் புதுச்சேரி மார்க்கத்தில் டிராஃபிக் அதிகமாக இருந்தது. விக்கிரவாண்டி வந்து சேரும்போது, மணி ஒன்பது ஆகிவிட்டது.
விஷ்ணு, ‘‘டிபன் சாப்பிடலாமா?’’ என்று கேட்டான்.
பசி ஒருபக்கம் இருந்தாலும், சாப்பிட்டால் இன்னும் நேரம் ஆகிவிடுமோ என்று பயமாக இருந்தது அருள்மொழிக்கு.
இருட்டை விரட்ட ஆண்களோடு இருக்கிற பெண்களுக்குப் பதற்றமும், பெண்களோடு இருக்கிற ஆண்களுக்குத் தைரியமும் வருவது கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய ஆரம்பித்தது.
அந்த ஹோட்டல் வாசலில் பிரமாண்டமாக கவிந்திருந்த இருளில், அவர்கள் கார் மட்டும் அநாதையாக நின்றுகொண்டிருந்தது.
கார் அருகே சென்றபோது, டிரைவர் எங்கிருந்தோ வேகமாக வந்து கையில் வைத்திருந்த நீண்ட பலகையால் விஷ்ணுவின் தலையில் ஓங்கி அடித்தான். விஷ்ணு சுருண்டு விழுந்தான். அதிர்ந்துபோனாள் அருள்மொழி. செத்தானா, இருக்கிறானா எனத் தெரியவில்லை. கத்தலாமா, வேண்டாமா தெரியவில்லை. கிழக்கா, மேற்கா தெரியவில்லை. இரண்டு தாண்டலில் அவளுடைய துப்பட்டா அவன் கையில் சிக்க, அதை அப்படியே சுருட்டி அவள் வாயில் திணித்தான். கை கால்களைக் கட்டி காரில் தூக்கிப் போட்டான். காரை ஸ்டார்ட் செய்தபோது கிளம்பவில்லை.
டிரைவர் வேகமாக பேனட்டைத் திறந்து பார்த்தான். பேட்டரி நல்ல நிலையில் இருந்தது. மீண்டும் ஸ்டார்ட் செய்தான். ஹோட்டலுக்கு இன்னொரு கார் வந்து நிற்பது தெரிந்தது.
டிரைவர் கேஷுவலாக இருப்பதுபோல சற்று தள்ளி வந்து புகை பிடிக்க ஆரம்பித்தான். காரில் இருந்தவர்கள் இறங்கி உள்ளே சென்றதும் மீண்டும் காருக்கு வந்தான். மீண்டும் பேனட்டைத் திறந்து சரிசெய்து பார்த்தான். இன்னொரு முறை ஸ்டார்ட் செய்து பார்க்கலாம் என்று காரின் கதவைத் திறந்தபோது, அந்தப் பெண் இல்லை.
அரசுப் பேருந்து ஒன்றைக் கைகாட்டி ஏறி, அந்தக் குளிரில் வியர்வையில் நனைந்தபடி விஷ்ணுவும் அருள்மொழியும் ஆசுவாசமாக அமர்ந்தனர். ‘‘அவன் அடிச்சதும் மயக்கமாகிட்ட மாதிரி விழுந்துட்டேன். அங்கே இருந்த ஒரு கந்தல் துணியை எடுத்து சைலன்ஸரில் அடைச்சுட்டேன். அதான் கார் கிளம்பலை. நல்லவேளையா இன்னொரு கார் வந்தபோது வேகமா காரைத் திறந்து உன்னைக் கூட்டிட்டு வந்துட்டேன்’’ என்றான் விஷ்ணு.
`விஷ்ணுகிட்ட இருந்து டிரைவர் காப்பாத்தினானா, டிரைவர்கிட்ட இருந்து விஷ்ணு காப்பாத்தினானா' என அருள்மொழிக்குப் புரியவில்லை.
- அதிர்ச்சி தொடரும்
-தமிழ்மகன், ஓவியம் : ஸ்யாம்