
ஆண் குழந்தையை வளர்ப்பது எப்படி?யாழ் ஸ்ரீதேவி
ரோட்டுக்கடை முதல் ஸ்டார் ஹோட்டல்கள் வரை மிகப் பெரும்பாலும் ஆண்கள்தான் செஃப். கப்பல் முதல் வெளிநாட்டு ரெஸ்டாரன்ட்டுகள் வரை பல ஆண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கிறது சமையற்கலை. இந்த ஆண்களில் எத்தனை பேர் தங்கள் வீட்டு சமையலறையில் தன் மனைவிக்கு உதவுகிறார்கள்? எத்தனை ஆண்கள் வீட்டு வேலைகளைச் செய்ய முன்வருகிறார்கள்? வீட்டு வேலைகளில் ஒன்றை ஆண் செய்துவிட்டால், அவரைத் தியாகி போலவே பெண்கள் கொண்டாடுவது ஏன்? இப்படிப் பல கேள்விகள் ஆண் பெண் சமத்துவத்தின் முதுகில் ஆணிகளாகப் படிகின்றன.

ஆண் குழந்தைகள் ஏன் பெண்களை மதிப்பதில்லை? மதிக்கும் மனநிலையை எப்படி உருவாக்குவது? இதற்கான கல்வியை எந்த வயதிலிருந்து ஆரம்பிப்பது? இந்தக் கேள்விகள், மகன்களைப் பெற்ற அம்மாக்களுக்கு இருக்கின்றன. `ஆண் பெண் சமத்துவத்தை குழந்தை வளர்ப்புக் காலத்திலேயே தொடங்க வேண்டும்' என்கிறார் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்.
வார்த்தைகளோடு நின்றுவிடாமல், தன் வீட்டு வேலைகள் மற்றும் சமையலறை வேலைகளைப் பல்லாண்டுகளாகச் செய்துவருபவர். தன் மனைவிக்குக் காபி போட்டுக் கொண்டுபோய் அவரை எழுப்புபவர். ஆண் குழந்தை வளர்ப்பில் சமத்துவத்தைக் கற்பிக்கும் வழிகள்குறித்து விரிவாகப் பேசுகிறார், தமிழ்ச்செல்வன்.

‘`கல்வித்துறையில் புதிய பாடத்திட்டம் பற்றிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், ஆண் பெண் சமத்துவத்தை உருவாக்க என்ன மாதிரியான பாடத்திட்டம் வைக்கலாம் என்று விவாதிக்கப்பட்டது. என்றாலும், பாடத்தில் மட்டும் வைத்தால் ஆண் பெண் சமத்துவம் வந்துவிடாது. குழந்தைகள் பள்ளிக்கு வரும்போது ஐந்து ஆண்டுகள் முடிந்துவிடுகின்றன. அதற்குள் ஆண் பெண் சமம் இல்லை என்பதை வீட்டில் அனுபவபூர்வமாகக் கற்றுக்கொண்டே வருகின்றனர்.
ஆண் பெண் சமம் என்பதற்கான கல்வி அவர்களுக்கு வீட்டிலிருந்தே தொடங்க வேண்டியுள்ளது. பெற்றோர் மத்தியில் இதற்கான விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும். இதுதான் மிகவும் முக்கியம். வீட்டிலேயே அம்மாவுக்கான வேலைகள், அப்பாவுக்கான வேலைகள் என்ற பேதம் உள்ளது. இதை குழந்தைகள் கண்ணால் பார்த்தே வளர்கின்றனர். இந்த பேதம் சரிதான் என்று நம்பி வளர்கின்றனர். இதை உடைக்க வேண்டும் என்றால், வீட்டில் உள்ள வேலைகளில் எல்லாவற்றையும் இருவரும் பகிர்ந்து செய்ய வேண்டும். இதை வீட்டில் வழக்கப்படுத்தும்போதுதான் அது சமூகத்தில் இயல்பான விஷயமாக மாறும்.
சமையல் மட்டுமல்ல... பாத்திரம் கழுவுவது, வீடு கூட்டுவது, வீட்டைச் சுத்தம்செய்வது என எல்லா வேலைகளையும் ஆண் குழந்தைக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும். குடும்பம் என்ற அமைப்பு ஆணும் பெண்ணும் இணைந்து உருவாக்கும் சமூக அமைப்பின் ஒரு பகுதி. குடும்பத்தை நடத்துவதற்கான வேலைகளில் பெரும்பகுதியைப் பெண்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்பதும், அந்த வேலைகளை இழிவாகப் பார்ப்பதும் எப்படி சமூக நீதியாகும்?
`நாம் வாழ்வதற்காகத்தான் இந்த வேலைகளைச் செய்கிறோம்... இதில் ஆண் வேலை, பெண் வேலை என்று எதுவும் இல்லை’ என்ற மனநிலையை உருவாக்கத்தான் சிறு வயதிலிருந்தே வீட்டு வேலைகளில் ஆண் குழந்தைகளையும் பங்கெடுக்கச் செய்ய வேண்டும். சமையலறை என்றாலே அது பெண்ணுக்கானது என்ற எண்ணத்தை உடைத்தால்தான், சமையலறையில் தனக்கும் வேலைகள் உண்டு என்ற மனப்பான்மை ஆண்களுக்கு ஏற்படும். இதனால் பெண்ணின் வேலைச்சுமை குறைவதுடன், ஆணும் பெண்ணும் இணைந்து செலவழிக்கும் நேரம் அதிகரிக்கவும் வாய்ப்பு உண்டாகும்.

நம் சமூகத்தில், இயல்பாகவே ஆண் என்கிற அகந்தை உள்ளது. அந்த அகந்தை வீட்டில்தான் உருவாகிறது. இந்த அகந்தை தான் ஆணாதிக்கமாகவோ, பாலியல் வன்முறையாகவோ வெளிப்படுகிறது. எதெல்லாம் இன்று நோயாக உள்ளதோ அதற்கான வேர் இந்த அகந்தைதான். அதை வேரிலிருந்து சரிசெய்ய வேண்டும். அந்த அகந்தையை அழிப்பதற்கு, ஆண் குழந்தைகளை அனைத்து வேலைகளிலும் ஈடுபடுத்த வேண்டும். உளவியல் ரீதியான மாற்றத்தை இது உருவாக்கும். குழந்தைப் பருவத்தில் இருந்தே மாற்றத்தைக் கொண்டுவருவதற்காகத்தான் சமைப்பது மற்றும் வீட்டு வேலைகளைச் செய்யச் சொல்கிறோம்.
திருமணத்துக்குப் பின் மனைவியுடன் வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்ள, இப்போதைய வளர்ப்பு முறையே ஆண் குழந்தைகளுக்கு மனத்தடையாக அமைந்துவிடுகிறது. இதுவே ஆதிக்கமாக வளர்ந்து ஆணின் தலையில் ஏறிவிடுகிறது. மனைவியை அடக்க வேண்டும் என்பது போன்ற ஆதிக்க சிந்தனைக்கு இதுபோன்ற வளர்ப்பு முறையே காரணமாகிவிடுகிறது. மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவும் ஆண்களை ‘பொண்டுகசட்டி’ என்பதில் ஆரம்பித்து பல பெயர்களில் கிண்டல் செய்வதும் இங்கு வழக்கமாக உள்ளது. இவையெல்லாம் மாற வேண்டும். இதுபோன்ற ஈகோக்களை ஆண்கள் மனதில் உடைக்க வேண்டும். குழந்தைகள் மலம் கழித்தால் கழுவிவிடுவது, அந்தத் துணியை அலசுவதுவரை எல்லா வேலைகளையும் ஆணும் பெண்ணும் செய்ய வேண்டும் என்ற நிலைக்குக் கொண்டுவர வேண்டும்.
பெண்ணை அடிமைப்படுத்தவும் பெண் மீது ஆளுமை செலுத்தவும், பெண் செய்யும் வேலைகளை இழிவுப்படுத்துவதும், அதைப் பெண் மட்டுமே செய்ய வேண்டும் என்று வற்புறுத்துவதும் எவ்வளவு வஞ்சகமான சிந்தனை? இந்த மனநிலையை உடைக்க வேண்டும். ஆண் பெண் சமம் என்பதற்கான முதல் படியும், முதல் பாடமும் இதுவே.”
- யாழ் ஸ்ரீதேவி