முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
இந்தியாவின் 13 வது குடியரசுத் தலைவராக இருந்தவர் பிரணாப் முகர்ஜி. காங்கிரஸின் மிக மூத்த தலைவர். பல அரசியல்வாதிகளுடன் நல்ல நட்பு கொண்டிருந்தவர் பிரணாப். காங்கிரஸ் ஆட்சியில் இதுவரையில் பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை, நிதி, பொருளாதாரம், தகவல் தொடர்பு, வணிகம், தொழில், கப்பல் போக்குவரத்துத்துறை எனப் பல துறைகளிலும் பணியாற்றியவர். கடந்த 2017-ம் ஆண்டு இவருடைய குடியரசுத் தலைவர் பதவிக்காலம் முடிவடைந்தது. இதையடுத்து தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கி இருந்து வருகிறார்.
இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் அறிவித்துள்ளார். அவருடன் சமூக சேவகர் நனாஜி தேஷ்முக், கவிஞர் பூபென் ஹசாரிகா ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதற்குப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ``நம் காலத்தின் சிறந்த அரசியல்வாதி பிரணாப் முகர்ஜி. தேசத்துக்காகத் தன்னலமின்றி அயராது பணியாற்றியுள்ளார். நாட்டின் வளர்ச்சிக் கொள்கையில் ஒரு வலுவான முத்திரையைப் பதித்துள்ளார். அவர் பாரத ரத்னா விருது பெறப்போவது மகிழ்ச்சியாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.