தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

நான் கடவுள் அல்ல - பாரத மாதா

நான் கடவுள் அல்ல - பாரத மாதா
பிரீமியம் ஸ்டோரி
News
நான் கடவுள் அல்ல - பாரத மாதா

எதிர்க்குரல்ஓவியம் : கார்த்திகேயன் மேடி

வெள்ளை நிறம். அழகிய, மெலிந்த தோற்றம். நீளமான கூந்தல். அந்தக் கூந்தலில் அழகிய மலர்கள் சூடியிருக்கிறார். நெற்றியில் சிவப்புப் பொட்டு. கண்கவர் காவி நிறச் சேலை. நெற்றியில் கிரீடம். கைகளில் அடுக்கு வளையல்கள். காதில் தங்கக் கம்மல். கழுத்தில் தங்கமும் வைரமும் மதிப்புமிக்க கற்களும் பளபளக்கின்றன. கண்களில் அமைதி. உதடுகளில் புன்னகை. ஒரு கை மூவர்ணக்கொடியை ஏந்தியிருக்கிறது. இன்னொன்று நம்மையெல்லாம் பார்த்து அருள் பாலிக்கிறது. சில நேரம் இவருக்குப் பின்னால் ஒரு சிங்கம் அடக்கமாக நின்றிருக்கும். நமக்கு இவரை நன்கு தெரியும். இவர் இந்தியாவின் வடிவம். இந்தியாவின் பெருமிதத்துக்குரிய அடையாளம். பாரத மாதா.

பாரத மாதா எங்கிருந்து தோன்றினார்? இவருடைய பின்னணி என்ன? பண்டைய காலத்தில் இவர் இருந்ததில்லை. மத்திய காலத்தில் இவர் வந்திருக்கவில்லை. முதன்முதலில் இவரை நாம் தரிசிப்பது பிரிட்டிஷ் காலனியாதிக்கக் காலத்தில்தான். வங்காளத்தில் கே.சி.பண்டோபாத்யாய் 1873-ல் இயற்றிய ஒரு நாடகத்தின் பெயர் பாரத மாதா. ஏழு ஆண்டுகள் கழித்து பங்கிம் சந்திர சட்டோபாத்யாய் தனது `ஆனந்த மட'த்தின்மூலம் பாரத மாதாவைப் பிரபலப்படுத்தினார். 1936-ம் ஆண்டு வாரணாசியில் பாரத மாதாவுக்கு ஒரு கோயில் உருவானது. அதைத் திறந்துவைத்தவர் காந்தி.  அந்தக் கோயிலில் வழிபடத்தக்க தெய்வமாக அமைந்திருந்தது இந்தியாவின் வரைபடம் மட்டுமே.

நான் கடவுள் அல்ல - பாரத மாதா

ரபீந்திரநாத்தின் உறவினர் அபநீந்திரநாத் தாகூர், தான் வரைந்த ஒரு பெண் ஓவியத்துக்கு `வங்கமாதா' என்றுதான் பெயரிட நினைத்திருந்தார். பின்னர், `பாரத மாதா' என்னும் பெயரைச் சூட்டினார். இதில் தோன்றிய பெண் காவிச் சேலை உடுத்திக்கொண்டு,  நான்கு கைகளுடன் ஓர் இந்துக் கடவுளைப் போல எழுந்தருளியிருந்தார். வெள்ளைத் துணி, நெற்கதிர், ஏட்டுப்பிரதி, மாலை ஆகியவற்றை அவர் தன் நான்கு கைகளில் ஏந்தியிருந்தார். பாரதியார் பாரத மாதாவைப் பராசக்தியாகக் கண்டார். பிற்காலத்தில் எம்.எஃப்.ஹுசேனும் பாரத மாதாவை பார்வதியாகவே உருவகப்படுத்தி ஓவியம் தீட்டியிருந்தார். ‘பாரத் மாதா கீ ஜே!’ என்னும் முழக்கம் இந்தியாவை மகிமைப்படுத்தும் முழக்கமாக மாற்றம் பெற்றது. பாரத மாதா இந்தியாவின் அடையாளமாகவும் இந்து மதத்தின் அடையாளமாகவும் ஒரே நேரத்தில் மாறிப்போனார்.

அதற்குப் பிறகு, பாரத மாதா மீண்டும் மறுகட்டுமானம் செய்யப்பட்டார். தேசியவாதத்தையும் மதத்தையும் பிசைந்து பாரத மாதாவின் வரலாறு கட்டியெழுப்பப்பட்டது. இந்து மதம் பழைமையானது. இந்தியா பழைமையானது.  இந்த நிலையில், இந்தியாவின் அடையாளமாகத் திகழும் பாரத மாதா மட்டும் காலனிய காலத்தில், அதுவும் நூறாண்டுக்கு முன்பு தோன்றியிருக்க முடியாது. அவரும் பழங்காலத்தைச் சேர்ந்தவராகத்தான் இருக்க முடியும். காளியும் துர்கையும் லட்சுமியும் அம்மனும் கொண்டாடப்பட்ட நாடு இது. பாரத மாதா அந்தக் கடவுளர்களோடு கடவுளாக இருந்தவர்தான். அவர் சங்ககாலத்தில் இருந்திருக்கிறார். வேதகால தெய்வமான பிரித்வியிடம் பாரத மாதாவுக்கான வேர்களை ஒருவர் காணமுடியும். இந்தியாவையும் இந்து மதத்தையும் எப்படிப் பிரிக்கமுடியாதோ அப்படியே இந்தியாவையும் பாரத மாதாவையும்கூடப் பிரித்துப் பார்க்கமுடியாது. அதனால்தான் பாரத மாதா தோற்றத்தில் ஓர் இந்துப் பெண்ணாகக் காட்சியளிக்கிறார்.

கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் சீக்கியர்களும் பௌத்தர்களும் இந்துக்கள் அல்லாத இன்ன பிறரும் பாரத மாதாவைத் தயக்கத்துடன் அணுகுவதற்கு இது ஒரு காரணம். இந்துக்கள் பெரும்பான்மையினர் என்பதால் பாரத மாதாவும் அவர்களில் ஒருவராகக் காட்சியளிக்க வேண்டுமா? நான் இந்து அல்ல... ஆனால், நானும் இந்தியர்தானே? ஏன் இந்த மாதா என்னுடைய ஆடையை அணிந்திருக்கவில்லை? ஏன் என்னைப் போல இவர் இல்லை?  ஏன் பாரத மாதா ஓர் ஆதிவாசியாக இல்லை? ஏன் அவர் கையில் அம்பும் வில்லும் ஏந்தியிருக்கவில்லை? ஏன் அவரது சருமம் என்னுடையதைப் போல கறுப்பாக இல்லை? ஏன் அவர் ஒரு கிறிஸ்தவராகவோ, இஸ்லாமியராகவோ இருக்கக் கூடாது? அவர் ஏன் உயர்ந்த சாதிக் காரராக எனக்குத் தோற்றமளிக்கிறார்? அவர் ஏன் உயர் வர்க்கத்தினராகவும் இருக்கிறார்? 

சரி விடுங்கள்... இந்தியா பல மதங்களை, பலவிதமான நம்பிக்கைகளைக் கொண்டிருக்கும் நாடு. இந்தியாவிலுள்ள அனைவருமே இந்தியர்கள், அனைவருமே சமமானவர்கள். அப்படியானால் அனைவருக்கும் பொதுவான ஒருவர்தானே பாரத மாதாவாக இருக்க வேண்டும்? அனைவரும் அவரைத் தங்களில் ஒருவராக, தங்களுக்கு அணுக்கமானவராக அல்லவா பார்க்க வேண்டும்?

பாரத மாதாவின் மதத்தையும் தோற்றத்தையும் கேள்விக்கேட்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அவருடைய அடிப்படைக் கட்டமைப்பையும் விமர்சனத்துக்கு உட்படுத்துகிறார்கள் பெண்ணியவாதிகள். பாரத மாதா அடிப்படையில் ஆண்களின் கட்டமைப்பு என்னும் புள்ளியிலிருந்து இவர்களுடைய விமர்சனம் கிளை பரப்பி விரிவடைகிறது.

ரு பெண்ணை ஒரு பெண்ணாக உங்களால் இயல்பாக ஒருபோதும் பார்க்கமுடியாதா? அவளைக் கடவுள் நிலைக்கு உயர்த்துவதுதான் அவளுக்குச் செலுத்தும் மரியாதை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படி யாராவது முன்வந்து உயர்த்தி வைத்தால்தான் அவளை நீங்கள் மதிப்பீர்களா? அல்லது அப்படி உயர்த்துவதன்மூலம் மட்டுமே அவளைப் பாதுகாப்பாக வைத்திருக்கமுடியும் என்று நினைக்கிறீர்களா? அதனால்தான் நதிகளுக்கும் நிலங்களுக்கும் அவள் பெயரை நீங்கள் சூட்டியிருக்கிறீர்களா? பாருங்கள், பெண்களை நாங்கள் புனிதமாக நடத்துகிறோம், வழிபடுகிறோம் என்று மார்தட்டிக்கொள்ளவே இந்த நாடகம் அரங்கேற்றப்படுகிறதா? நிஜத்தில் நிலைமை அவ்வாறில்லை, இங்கே பெண்களால் கண்ணியத்தோடும் சுயமரியாதையோடும் வாழமுடியாது என்னும் உண்மையை மறைக்க, சில பெண்களை நீங்கள் கடவுள்களாக மாற்றவேண்டியிருக்கிறதா?

உங்களுடைய தேசம் என்பது ஆண்களின் தேசமாகவே இருக்கிறது. ஆண் மகன் வலுவானவன். நாடு அவனுடைய கட்டுப்பாட்டில் உள்ளது. எதிரிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுவது அவனுடைய தலையாய கடமை. அவ்வாறே ஒரு பெண்ணைப் பாதுகாப்பதும் அவனுடைய கடமை என்றாகிறது. எதிரிகளிடமிருந்து அவன் பெண்ணைக் காப்பாற்ற வேண்டும். பெண் அவனுடைய கட்டுப்பாட்டில் இருப்பவள். அவனை  நம்பி வாழ்பவள். தேசம், வீரர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆணின் துணையின்றி ஒரு நாடோ, ஒரு பெண்ணோ உயிர்த்திருப்பது சாத்தியமில்லை. காரணம், நாடு பலவீனமானது. அதன் எல்லைகளை எதிரிகள் எப்போது வேண்டுமானாலும் மீறலாம். பெண்ணும் அவ்வாறே. அவள் எல்லைகள் மற்ற ஆண்களால் மீறப்படுவதைத் தடுக்க வேண்டும். அது அந்தப் பெண்ணைப் பாதுகாக்கவேண்டிய ஆணின் கடமை.

தேசியம் என்பதும் ஆணாதிக்கம் என்பதும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். தேசியவாதத்தின் கோட்பாடு என்பது அடிப்படையில் தந்தை வழிக் கோட்பாடாகவே இருக்கிறது. ஒரு நாடு ஆளப்படவேண்டியது என்பதுபோல ஒரு பெண்ணும் ஆளப்படவேண்டியவள் ஆகிறாள். அவளை ஒழுங்குபடுத்தவேண்டியது அவசியம். ஒரு பெண்ணின் உடல் அந்நியரால் தீண்டப்படும்போது அவள் தன் புனிதத் தன்மையை இழந்துவிடுகிறாள். நிலமும் அப்படித்தான். அந்நியர்களால் தீண்டப்படும் போது நாட்டின் புனிதம் கெட்டுப்போகிறது. பெண்ணின் உடலுக்குப் புனிதத்தன்மையை ஏற்றியது நீங்கள். அந்தப் புனிதத்தன்மையின் பெயரால் அவளை ஆள்வதும் நீங்கள். நாட்டுக்கும் இது பொருந்தும்.

அதனால்தான் என்னுடைய ஆடையை நீங்கள் முடிவு செய்கிறீர்கள். நான் யாரை மணக்க வேண்டும் என்பது உங்களுக்கு முக்கியமாகிறது. நான் அழகாக இருக்கவேண்டிய அதே நேரம் அடக்கமாகவும் இருக்க வேண்டும். பாரத மாதாவைப் போல. நீங்கள் என் கையில் எதைக் கொடுக்கிறீர்களோ, அதை நான் ஏந்திக் கொள்வேன். என் உடலை நீங்கள் யாருக்கும் அளிக்கலாம். உங்கள் கௌரவமும் உங்கள் குடும்பத்தின் கௌரவமும் என் உடலில் தேங்கி நிற்கும். என் கற்பை உங்களுக்கு நான் நிரூபிப்பேன். என் முறைகேடுகள் உங்களால் கட்டுப்படுத்தப்படும். என் உடலுக்கு நீங்கள்  அளித்துவரும் இருபத்து நான்கு மணி  நேரப் பாதுகாப்புக்குப் பிரதி உபகாரமாக, நான் சரியான ரத்தத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்திச் செல்வேன்.
 
உங்கள் தேசியம் ஆண்களின் தேசியம் மட்டுமல்ல; அது பெரும்பான்மையினரின் தேசியமும்தான். அதனால்தான் உங்கள் பாரத மாதா ஓர் இந்துவாகவும் இருக்கிறார். உங்கள் தேசியத்துக்கு சேவையாற்ற என் உடலை நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டியது அவசியமாகிறது. ஆண் குழந்தைகள் பெற்றுக்கொடுப்பதும் அந்தக் குழந்தைகளை நல்ல குடிமகன்களாக வளர்த்தெடுப்பதும் எங்களுக்கு நீங்கள் கொடுத்துள்ள புராஜெக்ட் வொர்க். இந்தப் பணியை நாங்கள் உயர்வானதாக, மேன்மையானதாக, புனிதமானதாகக் கருத வேண்டும். வலுவான ஆண்கள். அந்த வலுவான ஆண்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் மென்மையான பெண்கள். தேசியவாதத்துக்கு இந்த இரண்டும் அவசியம் அல்லவா?

பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டங்களில் பெண்களை அதிகளவில் ஈடுபடுத்தியவர் காந்தி. இந்தியாவை ஒரு பெண்ணாக உருவகப்படுத்தியவரும் அவர் தான். பெண்களுக்குக் காலம்காலமாக  அறிவுறுத்தப்பட்டுவந்த பண்புகளை அவர் கேள்விகளின்றி ஏற்றுக்கொண்டதோடு அந்தப் பண்புகளை மகிமைப்படுத்தும் பணியையும் அவர் மேற்கொண்டார். சீதாவையும் திரௌபதியையும் சாவித்திரியையும் காந்தி உதாரணப் பெண்களாக உயர்த்திப் பிடித்தார். இந்த மூவருமே தன்னலமற்று இருந்தவர்கள். தூய்மையானவர்கள்.  மூவருமே தங்களுடைய  வலுவான கணவர்களுக்காக எதையும் செய்யச் சித்தமாக இருந்தவர்கள். ஒவ்வொரு பெண்ணும் இவ்வாறு இருந்துவிட்டால் அவள் வீடும் நாடும் நலமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

ஒரு பெண்ணைக் கடவுளாக்குவது எளிது. கடினமானது எது தெரியுமா? உங்கள் புனிதம், உங்கள் பரிவு, உங்கள் கௌரவம், உங்கள் தேசியவாதம், உங்கள் கலாசாரம், உங்கள் கருத்தாக்கம், உங்கள் அரசியல், உங்கள் ஆன்மிகம் அனைத்திலும் நிரம்பிக்கிடக்கும் குப்பைகளை, கசடுகளை அள்ளியெடுத்து வெளியில் வீசியெறிவதுதான்.

-மருதன்