தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

இணைந்தால் வெல்வோம் எந்த சவாலையும்! - துளசி கபார்ட்

இணைந்தால் வெல்வோம் எந்த சவாலையும்! - துளசி கபார்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
இணைந்தால் வெல்வோம் எந்த சவாலையும்! - துளசி கபார்ட்

முகங்கள்

மெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க அரசியலில் புதிய சகாப்தத்தைப் படைத்த ஜனநாயகக் கட்சிப் பெண் உறுப்பினர்களில் ஒருவர், ஹவாய் மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட துளசி கபார்ட். அந்த வெற்றி தந்த தன்னம்பிக்கையால், 2020-ல் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், ட்ரம்புக்கு எதிராகப் போட்டியிட தன் விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். ட்ரம்ப்பை வென்றால், அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற அந்தஸ்தை இவர் பெறுவார்.

இணைந்தால் வெல்வோம் எந்த சவாலையும்! - துளசி கபார்ட்

துளசி டீன் ஏஜிலேயே இந்து மதத்தை ஏற்றுக்கொண்டவர். இந்தியக் கலாசாரத்தின் மீதும் ஆர்வம்கொண்டவர். 21 வயதில் முழு நேர அரசியல்வாதியான துளசி, தான் போட்டி யிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று, ஹவாய் மாகாண சபை உறுப்பினரானார். அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் இளம் உறுப்பினர் இவர்தான். இரண்டாம் முறை தேர்தலில் வெற்றிபெற பிரகாசமான வாய்ப்பிருந்தும், தானாக முன்வந்து போட்டியிலிருந்து விலகி, இராக் போரில் பங்கேற்கச் சென்றார். பின்னர் முன்னாள் ராணுவ வீரராக நாடு திரும்பிய இவர், 2013-ல் காங்கிரஸ் பேரவை உறுப்பினரானார். அமெரிக்காவின் முதல் இந்திய வம்சாவளி பேரவை உறுப்பினர் இவர்தான். நாட்டின் முதல் முன்னாள் ராணுவ வீராங்கனை  எம்.பி என்கிற சாதனையும் இவரையே சேரும்.

 ராணுவத் துருப்புகளை வழிநடத்துவதில் மட்டுமல்லாமல், கட்சியினரை அரவணைத்துச் செல்வதிலும் நிபுணர் துளசி. இவரின் திறமை கண்டு, தேசிய கவுன்சில் துணைத் தலைவர் பதவி அளித்து கெளரவப்படுத்தியது கட்சி. அவ்வளவு பெரிய பதவிக்கு இவர் பொருத்தமானவரா என்ற சந்தேகமும் அப்போது எழுந்தது. அதையெல்லாம் உடைத்தெறிந்து, தனது திறமையாலும் மதிநுட்பத்தாலும் தன் கட்சியினர் மட்டுமல்லாமல் குடியரசுக் கட்சியினரின் மதிப்பையும் மரியாதையையும் பெற்றார். குறிப்பாக இந்திய அமெரிக்கர்களிடையே மிகவும் பிரபலமானவர் துளசி.

2015-ல், ஒபாமாவின் சிரியா கொள்கைகள், சிரியா - இராக்கில் அமெரிக்காவின் ராணுவத் தலையீட்டை எதிர்த்து, கடுமையாகக் குரல் கொடுத்தார். நாடாளுமன்றத்தில், பயங்கரவாதிகளுக்கு துணைபுரியும் அமைப்புகள், தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவியைத் தடுக்க கோரி துணிச்சலாக ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். அரசியல் காரணமாக, அந்தத் தீர்மானம் தோல்வி அடைந்தது வேறு கதை. கட்சிக் கட்டுப்பாட்டை, மீறி செயல்பட்டதால் கட்சித் தலைமையின் கோபத்துக்குப் பலமுறை ஆளாகி இருக்கிறார்.

தனக்கு எதிராகக் கிளம்பியுள்ள சர்ச்சைகளையும், தடைகளையும் உடைத்தெறிந்து அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றால் துளசி அமெரிக்காவின் முதல் இளம் அதிபராவார்.  இதற்கு முன்  இளவயதில் அமெரிக்க அதிபரானவர்கள் இருவர். ஒருவர் ஜான் எஃப் கென்னடி, மற்றவர் தியோடர் ரூஸ்வெல்ட். இருவரும் 45 வயதுக்குள் அதிபரானவர்கள்.

“நாம் (பெண்கள்) இணைந்து செயல்பட்டால், நம்மால் வெல்ல முடியாத சவால் ஒன்று இருக்கவே முடியாது'' எனத் தன்னம்பிக்கையுடன் கூறுகிறார் துளசி.

கே. ராஜு