
விதிமீறல் நிறுவனங்களுக்கு சீல்! - அதிரடி காட்டும் நாகர்கோவில் ஆணையாளர்!
நாகர்கோவிலில் விதிமுறைகளை மீறிக் கட்டடம் கட்டியதாகத் தினமும் பல நிறுவனங்களுக்குச் ‘சீல்’ வைத்து அதிரடி காட்டுகிறார் நாகர்கோவில் நகராட்சி ஆணையாளர் சரவணகுமார். பிரபலப் பெரிய நிறுவனங்களும் இவரது அதிரடி நடவடிக் கைக்குத் தப்பவில்லை. அமைச்சர் தொடங்கி உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் வரை இவரது நடவடிக்கைக்கு எதிராக அழுத்தம் கொடுத்தும், எதற்கும் அசராமல் கையில் நீண்ட பட்டியலுடன் கிளம்பியிருக்கும் ஆணையாளரின் அதிரடியால் கதிகலங்கிக் கிடக்கிறார்கள் விதிமுறைகளை மீறிய நாகர்கோவில் வணிகர்கள். இதற்கிடையே ஆணையாளரின் அதிரடி நடவடிக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேரக் கிளம்பியிருக்கிறது.

இதுகுறித்துப் பேசிய கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சங்கத் தலைவர் எஸ்.ஆர்.ஸ்ரீராம், “சட்ட விதிகளுக்கு உட்பட்டு அரசு அனுமதி பெற்றுத்தான் கட்டடங்கள் கட்ட வேண்டும். அனுமதி மறுத்தாலும் சில நிறுவனங்கள் விதியைமீறிக்கட்டுகி றார்கள். அதிகாரிகளும், அரசியல்வாதி களும் லஞ்சம் வாங்கிக்கொண்டு கண்டுகொள்ளாமல் இருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப் படுகிறார்கள். பெரிய கட்டடங்களில் தீயணைப்பு நடவடிக்கைக்காக 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி அமைத்து, அதில் எப்போதும் தண்ணீர் இருக்கும்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் அந்தக் கட்டடத்தைச் சுற்றித் தீயணைப்பு வாகனம் செல்லும் அளவுக்குப் பாதை அமைத்திருக்க வேண்டும். கட்டடத்தில் திடீரெனத் தீப்பிடித்தால் வெளியேறுவதற்காக இரண்டு பாதைகள் அமைத்திருக்க வேண்டும். ஆனாலும், இதை யாரும் கடைப்பிடிப்பதில்லை. பல நிறுவனங்கள் கார் பார்க்கிங் பகுதியை குடோனாக மாற்றிவிடுகின்றன.
இதுவரை நாகர்கோவில் நகராட்சியில் இருந்த அதிகாரிகள் சம்பாதிப்பதிலே குறியாக இருந்தனர். இப்போது இருக்கும் ஆணையாளர் நேர்மையாக நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். ஆனால் அவரை செயல்படவிடாமல் தடுப்பதற்காகவும் சிலர் மொட்டை பெட்டிஷன் போடுவதுடன், அவதூறும் பரப்புகிறார்கள். மேலிடத்திலிருந்து அவருக்குக் கடுமையான அழுத்தங்கள் வருவதாகவும் தெரிகிறது. இனி கட்டுமான பணியின்போதே கட்டட அனுமதி பெற்ற விவரம், கட்டடத்தின் வரைபடம் உள்ளிட்டவை அடங்கிய போர்டு பொதுமக்கள் பார்வையில் படும்படி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டடம் கட்டும்போது அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். விதி மீறலை இனியும் கண்டுகொள்ளாமல் இருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப் பலன்களை அரசு வழங்கக்கூடாது” என்றார்.

இதுகுறித்துப் பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் குமரி மாவட்டத் தலைவர் எல்.எம்.டேவிட்சன், “விதிமுறைகளை எல்லாம் பார்த்தால் நாகர்கோவிலில் 80 சதவிகிதம் கட்டடங்களை இடிக்க வேண்டிய நிலை ஏற்படும். அதெல்லாம் சாத்தியமா? நாகர்கோவில் நகரத்தில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மூன்று அடி பாதை கொண்ட குறுகலான பகுதிகளில் குடியிருக்கிறார்கள். அதற்காக அந்த வீடுகளை இடிக்க முடியுமா? ஒன்று அல்லது இரண்டு சென்ட் நிலத்தில் டவுன் பிளானிங் விதிப்படி எல்லாம் கட்டடம் கட்ட முடியாது. இதுதான் நடைமுறை யதார்த்தம். இதைப் புரிந்துகொள்ளாமல் கட்டடங்களை இடிக்கச் சொல்வது எந்த வகையில் நியாயம்? வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு நாகர்கோவிலில் 20 மாடிக் கட்டடம் வரை கட்ட, மாவட்ட ஆட்சித்தலைவர் அனுமதி பெற்றுத்தர வேண்டும். தனது பெயரை முன்னிலைப்படுத்துவதற்காகவே நகராட்சி ஆணையாளர் இவ்வாறு நடந்துகொள்கிறார்” என்றார்.
நாகர்கோவில் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ-வான சுரேஷ்ராஜன், “கட்டடப் பணிகள் நடக்கும்போதே நகராட்சி அதிகாரிகள் ஏன் தடுத்து நிறுத்தவில்லை? அப்படித் தடுத்து நிறுத்தாததால், அந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங் கள் பாதிக்கப்படுகின்றன. அதற்காக விதிமீறலை நாங்கள் ஆதரிக்கவில்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும், பேருந்து நிலையம் முன்பும் விதிமுறைகளை மீறிக் கட்டடங்கள் கட்டும்போது அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்தார்கள். எனவே, அதிகாரிகள் மீதுதான் முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். செயல் இழந்த அரசு இருப்பதால்தான் இப்படி எல்லாம் நடக்கிறது” என்றார்.

ஆணையாளர் சரவணகுமாரிடம் பேசினோம். “அதிகாரிகள் இதற்கு முன்பு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதிகாரிகளைக் குறை சொல்லலாம். ஆனால் அதிகாரிகள் கடந்த சில ஆண்டுகளாக நோட்டீஸ் வழங்குவதும், அதற்கு அவர்கள் நீதிமன்றம் மூலம் தடை ஆணை பெறுவதும் நடந்துகொண்டிருக்கிறது. அதிகாரிகளின் தொடர் நடவடிக்கை காரணமாகத்தான் விதிமுறையை மீறிய கட்டடங் களுக்கு இப்போது சீல் வைக்கப்பட்டுள்ளன. விதிமுறையை மீறிக் கட்டடம் கட்டும்போது அதுகுறித்து புகார் அளிக்காத மக்கள் பிரதிநிதி களும், சமூக ஆர்வலர்களும் நாங்கள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தபிறகு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறுவது சரியல்ல. என்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற தேவை எனக்கு இல்லை. எனது வேலையைச் செய்கிறேன். விதி மீறல் கண்டறியப் பட்டால் நோட்டீஸ் வழங்குகிறோம். சம்பந்தப் பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடுகிறார்கள். நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்குகிறதோ அதை நாங்கள் செயல்படுத்துகிறோம். விதிகளுக்கும், சட்டத்துக்கும் உட்பட்டுத்தான் அனைத்தும் நடக்கின்றன. பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
- ஆர்.சிந்து, படங்கள்: ஆர்.ராம்குமார்
நாகர்கோவில் பெயர் மாறுமா?

நாகர்கோவில் என்ற பெயர் ஆங்கிலத்தில் ‘NAGER COIL’ என்று அரசுத் தரப்பில் எழுதப்பட்டுவருகிறது. இதை உச்சரித்தால் ‘நாகர் காயில்’ என்று உள்ளது. அதை ‘NAGARKOVIL’ என்று பெயர் மாற்ற ஆணையாளர் நடவடிக்கை எடுத்துவருவதாக நகராட்சி அலுவலகப் பணியாளர்கள் தெரிவித்தனர். இதற்குப் பொது மக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் இடையே வரவேற்புக் கிடைத்துள்ளது.