சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

காலத்தில் நிலைத்த காஞ்சித் தலைவனும் நமக்கு வாய்த்த நாற்காலி அடிமைகளும்

காலத்தில் நிலைத்த காஞ்சித் தலைவனும் நமக்கு வாய்த்த நாற்காலி அடிமைகளும்
பிரீமியம் ஸ்டோரி
News
காலத்தில் நிலைத்த காஞ்சித் தலைவனும் நமக்கு வாய்த்த நாற்காலி அடிமைகளும்

அண்ணா நினைவு 50

ந்த ஆண்டோடு அண்ணா மறைந்து 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. அரைநூற்றாண்டு கடந்தும் அண்ணா என்னும் மகத்தான ஆளுமையை நினைவுகூர்வதற்கு  முக்கியமான காரணம், தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதற்குமே அண்ணா உருவாக்கித் தந்த அரசியல் கொடைகள் அவசியமானவை என்பதுதான்.

காலத்தில் நிலைத்த காஞ்சித் தலைவனும் நமக்கு வாய்த்த நாற்காலி அடிமைகளும்

அரசியல் தலைவராகவும் இருந்துகொண்டு எழுத்தாளராக, வசனகர்த்தாவாக, நாடக நடிகராகக் கலையையும் இலக்கியத்தையும் கொள்கை பிரசாரக் கருவிகளாக மாற்றியவர்  இந்திய அளவில் அண்ணாவே. அண்ணாவும் அவர் தம்பிமார்களும் இதழியலிலும் திரைப்படத்திலும் காலடி எடுத்துவைத்த பிறகுதான் ‘அக்கிராசனார்’ என்பது ‘தலைவர்’ என்றானது; ‘அபேட்சகர்’ என்பது வேட்பாளர் ஆனது; ‘நமஸ்காரம்’ என்ற சொல், ‘வணக்கம்’ என்றானது.

இன்றைய மொழிநடையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அண்ணாவின் மொழிநடை பளபளப்பானது; அதிகம் அலங்காரம் மிக்கது. இன்று அந்த மொழிநடை முற்றிலும் மாறிவிட்டது என்பது உண்மை. ஆனால் இன்னொரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும்.  எதுகை, மோனை, இயைபு மூன்றும் தமிழின் தனிச்சிறப்புமிக்க பண்புகள். இதைத்தான் திராவிட இயக்கப் பேச்சாளர்களும் எழுத்தாளர்களும் பயன்படுத்தினார்கள். அவை இன்று வெகுஜனப் பத்திரிகைகளின் கட்டுரைகளில் இல்லாமலிருக்கலாம். ஆனால் ஒரு கட்டுரையின் தலைப்பு, அட்டையில் வைக்கப்படும் தலைப்பு, சுவரொட்டி வாசகம் ஆகியவை இன்றும் எதுகை, மோனை, இயைபு என்று அண்ணாவின் மொழிநடையை அடிப்படையாகக் கொண்டவையே.

 அண்ணா எழுதிய ‘தம்பிக்குக் கடிதங்கள்’ வெறுமனே அரசியல் கட்டுரைகள் மட்டுமல்ல. அதில் பழந்தமிழ் இலக்கியம், உலக இலக்கியம், சர்வதேச வரலாறு, தத்துவம் என எல்லாமும் கலந்திருக்கும். வால்டேர், ரூசோ, சாக்ரடீஸ், பெர்னாட் ஷா, எமர்சன், பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் எனப் பலரையும் தமிழகத்தின் வீதிகளில் கொண்டு சேர்த்தவர் அண்ணா.

அவருடைய சினிமாக்களைவிட அண்ணா எழுதிய நாடகங்கள் முக்கியமானவை. இன்று வீரசிவாஜியை மதவாதச் சக்திகள் தங்கள் அடையாளமாகக் கையிலெடுக்கின்றன. ஆனால் அதே சிவாஜி என்ற மன்னன், வர்ணாசிரமத்தால் என்ன பாடுபட்டான் என்பதை விளக்கியது அண்ணாவின் ‘சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்’ நாடகம். சூழலின் முக்கியத்துவம் கருதி, ‘பரிக்‌ஷா’ ஞாநி, அந்த நாடகத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் மேடையேற்றினார்.

காலத்தில் நிலைத்த காஞ்சித் தலைவனும் நமக்கு வாய்த்த நாற்காலி அடிமைகளும்

அதேபோல் அண்ணாவின் மிக முக்கியமான நாடகம் ‘நீதிதேவன் மயக்கம்.’ ராவணனை ‘இரக்கம் என்னும் ஒருபொருளிலா அரக்கன்’ என்று குறிப்பிட்டிருப்பார் கம்பர். நீதிதேவனையும் கம்பரையும் கூண்டிலேற்றி ‘இரக்கம்’ என்னும் வார்த்தையின் பின்னுள்ள அரசியலைக் கட்டவிழ்த்து ராவணன் எழுப்பும் கேள்விகளும் வாதங்களுமே அந்த நாடகம். ராவணன் கேள்வியின் வெப்பம் தாளாமல் இறுதிக்காட்சியில் நீதிதேவன் மயங்கிவிழுவான். இன்றைய நவீன இலக்கியக் கோட்பாடுகளைக் கொண்டு ஆராயப்படவேண்டிய முக்கியமான நாடகம், அண்ணாவின் ‘நீதிதேவன் மயக்கம்.’

அண்ணாவின் சிறப்பே அவர் பண்டிதர்கள் வியக்கும் ஆளுமையாகவும் இருந்தார்; பாமரர் மதிக்கும் தலைவராகவும் இருந்தார் என்பதுதான். கம்பராமாயணம் குறித்து அவரிடம் வாதிட முடியாமல் ரா.பி.சேதுப்பிள்ளை, சோமசுந்தர பாரதியார் போன்ற தமிழறிஞர்களே பின்வாங்கினர். அண்ணாவின் மறைவுக்குக் கூடிய தமிழர்கள் கூட்டம் கின்னஸ் சாதனையானது, அவர் எப்படிப்பட்ட மக்கள் தலைவராகவும் இருந்தார் என்பதற்கான உதாரணம்.

தேர்தல் அரசியலுக்கு வந்தபின்னும் அண்ணா திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்து இயங்கினார். 1963, ஜனவரி 25-ல் அண்ணா என்ற தனிநபருக்காகவே இந்திய நாடாளுமன்றத்தில் ‘பிரிவினைத் தடைச்சட்டம்’ கொண்டுவரப்பட்டது. பிரிவினைத்தடைச்சட்டத்தின் காரணமாக அண்ணா ‘திராவிட நாடு’ கோரிக்கையைக் கைவிட்டாலும் ‘அதற்கான காரணங்கள் அப்படியே உள்ளன’ என்றார். இந்தித்திணிப்பு, வளர்ச்சித் திட்டங்களில் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் புறக்கணிப்பட்டது ஆகியவற்றை அடிப்படையாக வைத்து ‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ என்ற முழக்கத்தை முன்வைத்தார் அண்ணா. அவருக்குப் பிறகு தொடர்ச்சியாகத் திராவிடக் கட்சிகளின் ஆட்சிதான். அவற்றின்மீது எவ்வளவோ குற்றச்சாட்டுகள் இருந்தாலும் வடமாநிலங்கள் பலவற்றைவிடத் தமிழகம் உள்கட்டமைப்பு, மருத்துவ வசதிகள், மக்கள்நலத்திட்டங்கள், மனிதவளக்குறியீடு ஆகியவற்றில் முன்னேறியிருக்கின்றன. தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகள் 22 என்ற உண்மை தெரியாததால்தான் மதுரைக்கு வந்த மோடி ‘மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மருத்துவக்கல்லூரி அமைப்போம்’ என்று அறியாமையில் பேசியிருக்கிறார்.

திராவிடநாடு கோரிக்கையைக் கைவிட்டதும் அண்ணாவின் தி.மு.க, ‘மாநில சுயாட்சி’ என்னும் கருத்தாக்கத்தை நோக்கி நகர்ந்தது. ‘இந்தியா என்பது எல்லா மாநில மக்களின் அடையாளங்களையும் பண்பாடுகளையும் பாதுகாக்கக்கூடிய, மாநில அரசுகளின் உரிமைகளை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு கூட்டாட்சி நாடாக இருக்கவேண்டும்’ என்பதே அண்ணா வலியுறுத்திய அரசியல். இன்று கர்நாடகம், மேற்கு வங்கம், ஆந்திரா என்று இந்தியாவின் பல மாநிலங்களில் மாநில உரிமை களுக்கான குரல்கள் எழும்புகின்றன என்றால் அதற்கு முன்னோடி அண்ணாதான். ‘வலிமை வாய்ந்த மத்திய அரசு’ என்பதில் பிடிவாதமாக இருந்த காங்கிரஸ் கட்சியின் இன்றைய தலைவர் ராகுல் காந்தி ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலுக்கு மாற்றுவோம்’ என்று அறிவித்திருப்பது அண்ணாவுக்குக் கிடைத்த வெற்றி. இன்று மாநிலக்கட்சிகளின் துணை இல்லாமல் யாராலும் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை உருவாகியிருக்கிறது என்றால், அதற்குக் காரணம் அண்ணாவின் திராவிட அரசியல்தான்.

காலத்தில் நிலைத்த காஞ்சித் தலைவனும் நமக்கு வாய்த்த நாற்காலி அடிமைகளும்

பிரிவினைத் தடைச்சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப் பட்டபோது, அண்ணா ஆற்றிய உரை முக்கியமானது. ‘இந்தியா என்பது இயல்பாக உருவான தேசம் அல்ல’ என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பன்மைத்துவத்தைக் காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். இன்று இந்தியாவின் மிக முக்கியமான சவாலே பன்மைத்துவத்துக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல்தான். வெவ்வேறு சாதிகள், வெவ்வேறு மதங்கள், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு தேசிய இனங்கள், வெவ்வேறு பண்பாடுகளைக் கொண்ட ஒரு நாட்டில் ‘ஒரே மதம் - ஒரே மொழி - ஒரே சிவில் சட்டம் - ஒரே வரி - ஒரே பண்பாடு - ஒரே நுழைவுத்தேர்வு’ என்ற ஒற்றை அடையாளத்துக்குள் அடைக்கப் பார்ப்பதைத்தான் மக்கள்மீது அக்கறை கொண்டவர்கள் எதிர்க்கிறார்கள். அவர்களுக்கான கருத்தியல் ஆயுதமாக அண்ணா விளங்குவார்.

அவர் வெறுமனே ‘இந்தியா’வுக்கு மட்டும் பன்மைத்துவத்தை வலியுறுத்தவில்லை, அவரது ‘திராவிட நாட்டு’க்கும் பன்மைத்துவமே அடிப்படை. 1961-ல் சென்னைக் கொத்தவால் சாவடியில் அண்ணா பேசிய வார்த்தைகள் இவை.

“எது தேசியம் என்று இன்னமும் வரையறுத்துச் சொல்ல முடியவில்லை. இந்தக் கூட்டத்தில் உங்களைப் பார்த்துப் பாட்டுப் பாடத் தெரிந்தவர்களெல்லாம் ஒரு பக்கம் வாருங்கள்; பாடத் தெரியாதவர்களெல்லாம் மற்றொரு பக்கம் இருங்கள்” என்று நான் கேட்டுக்கொண்டு, அதன்படி நீங்கள் வந்தால், அந்த இரு பிரிவினரையும் பாட்டுப் பாடத் தெரிந்த தேசியம், பாடத் தெரியாத தேசியம் என்று சொல்லலாம்.

இன்னொருவர் வந்து ‘இந்தக் கூட்டத்திலுள்ள உயரமானவர்களெல்லாம் ஒரு பக்கமும், குட்டையானவர்கள் மற்றொரு பக்கமும் வாருங்கள்’ என்று சொன்னால், பாடத் தெரிந்த பிரிவினரும் பாடத் தெரியாத பிரிவினரும் கலைவார்கள்… உயரத்தின் அளவிலேதான் பிரிக்கப்படுவர்” என்று, பன்மைத்துவத்தை அழகான உதாரணத்தின் மூலம் விளக்கினார். ஒரு தனிநபர் ஒரே நேரத்தில் தமிழராக, இந்தியராக, குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவராக, குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவராக, ஆணாக / பெண்ணாக, ஏதோ வர்க்கத்தைச் சேர்ந்தவராக இருக்கிறார். ஒரே ஓர் அடையாளத்தை மட்டும் வலியுறுத்தி, மற்றவற்றைப் புறக்கணிக்கும்போது அது வன்முறையாகிறது என்பதைத் தனக்கேயுரிய பாணியில் விளக்கியிருப்பார் அண்ணா.

அண்ணாவின் திராவிடத் தேசியமோ தேர்தல் அரசியலோ அது யாரையும் வெறுக்கக்கூடியதல்ல. எல்லாவற்றையும் அரவணைக்கக்கூடியது. சிவாஜி கணேசன் தி.மு.க.வில் இருந்து பிரிந்துபோனபோது, ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்றார். மாற்றுக்கட்சிகளையும் மாற்றுக்கருத்துகளையும் மதித்து ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு’ என்றார். இந்த அரசியல் நாகரிகப் பண்பு அண்ணா நமக்களித்த கொடை.

திராவிடர் கழகத்தில் இருந்தபோதே நடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்கு அண்ணாமீது ஏதோ மனவருத்தம். அண்ணாவின் சாத்விகப் பண்பு, கலகக்காரரான ராதாவுக்குப் பிடிக்காமல்போயிருக்கலாம்.  அண்ணாவைத் ‘தளபதி’ என்று அழைப்பது திராவிடர் கழக வழக்கம். ஒரு நாடகத்தில் கருணாநிதியுடன் நடிக்கும்போது, “தளபதி, தளபதி என்கிறீர்களே, எத்தனை போர்களைச் சந்தித்திருக்கிறார் உங்கள் தளபதி?” என்று கேட்டார் ராதா. அது ஸ்க்ரிப்டிலேயே இல்லாத வசனம். திடீரென்று கேட்டதால் திகைத்துப் போகாமல், ‘`உறையில் இருந்தாலும் வாளுக்கு வாள் என்றுதான் பெயர். மீட்டப்படாவிட்டாலும் வீணைக்கு வீணை என்றுதான் பெயர்” என்று சாமர்த்தியமாகச் சமாளித்தார் கருணாநிதி. ஒருகட்டத்தில் ‘அறிஞர் கருணாநிதி வசனம் எழுதிய நாடகம்’ என்றே நாடகம் ஒன்றுக்கு விளம்பரம் செய்தார் எம்.ஆர்.ராதா. ‘அறிஞர்’ என்ற பட்டத்தைக் கருணாநிதி ஏற்காததால் ‘கலைஞர்’ என்று பட்டம் வழங்கினார். பெரியாரிடமிருந்து அண்ணா பிரிந்து சென்றபோது, ‘அண்ணாவின் அவசரப்புத்தி’ என்று ஒரு புத்தகத்தைச் சுடச்சுடத் தயார் செய்து, அதை அண்ணாவிடமே கொண்டுபோய்க் கொடுத்தார் நடிகவேள். அண்ணாவும் அதைப் பெருந்தன்மையாக வாங்கிக்கொண்டார். நடிகவேளின் துணிச்சலையும் அண்ணாவின் அரசியல் நாகரிகத்தையும் இன்று நினைத்துப்பார்க்க முடியுமா?

அண்ணாவின் 50-ம் ஆண்டு நினைவுதினம் வரும் அதேகாலத்தில்தான், அண்ணாவின் பெயரில் ஒரு கட்சி இருக்கிறது. அந்தக் கட்சியின் பெயரில்தான் ஆட்சியும் நடக்கிறது என்பதையும் நினைத்துப்பார்க்க வேண்டியதிருக்கிறது. ஆனால் இன்றைய ஆட்சியாளர்களுக்கும் அண்ணாவுக்கும் வெகுதூரம்.

அண்ணா பெரியாரை விட்டுப் பிரிந்துவந்தாலும், பெரியார் எவ்வளவு கடுமையாக விமர்சித்தபோதும் அண்ணா ஒருவார்த்தையும் பெரியாரைக் கடுமையாக விமர்சித்ததில்லை. 1967-ல் தேர்தலில் வென்றதும் ‘பெரியாருக்கு இந்த ஆட்சி சமர்ப்பணம்’ என்று சொல்லிவிட்டு நேரடியாகப் பெரியாரைச் சந்தித்தார். அதேநேரத்தில் தன் தம்பிகளை நடத்தியதிலும் ஜனநாயக உணர்வைப் பேணியவர் அண்ணா.

காலத்தில் நிலைத்த காஞ்சித் தலைவனும் நமக்கு வாய்த்த நாற்காலி அடிமைகளும்

‘தம்பி வா, தலைமையேற்க வா. உன் தலைமையின்கீழ் பணியாற்றத் தயாராக இருக்கிறோம்’ என்று மாநாட்டுத் தலைமையேற்க நாவலர் நெடுஞ்செழியனை அழைத்தவர் அண்ணா.

‘காது கொடுத்துக் கேள் தம்பி!
கருணாநிதி என்னுமரிய கழகக் கம்பி!
ஏதுமறியாத் தமிழர் தூய வாழ்வை - எனக்குப் பின்

சீர்படுத்தும் மறவன் நீதான்!’ என்று தன் தம்பி கருணாநிதியைப் புகழ்ந்து கவிதை எழுதியவர் அண்ணா. தலைவருக்குத் தலைவராய், தொண்டருக்குத் தொண்டராய் இருந்தவர் அவர்.

இன்றோ யாரைக் கவிழ்த்தால் பதவி கிடைக்கும், யார் காலில் விழுந்தால் பதவி நிலைக்கும் என்ற போட்டி நிலவுகிறது. ஜெயலலிதா காலில் விழுந்து, சசிகலா காலில் விழுந்து, தினகரன் காலில் விழுந்து, இப்போது டெல்லியை நோக்கி நெடுஞ்சாண்கிடையாக விழுந்துகிடக்கிறார்கள் இன்றைய ஆட்சியாளர்கள்.

‘கம்பரசம்’ எழுதி ‘தீ பரவட்டும்’ என்று இயக்கம் கண்டவர் அண்ணா. ஆனால் ‘சேக்கிழார் எழுதியது கம்ப ராமாயணம்’ என்று சொல்லக்கூடியவர்தான், இப்போது நமக்கு வாய்த்த தமிழக முதல்வர். ‘ஆரிய மாயை’ நூலில் ‘பேச நா இரண்டுடையாய் போற்றி’ என்று எழுதியிருப்பார் அண்ணா. இன்று அதிகார நாற்காலியில் இரண்டு நாக்குகள், இரண்டும் இரண்டுவிதமாகப் பேசிக்கொண்டிருக்கின்றன.

அண்ணாவின் படைப்புகளைக் கொண்டே இன்றைய தமிழகம் குறித்து ஒரு சித்திரத்தைத் தீட்டலாம்.

போயஸ் தோட்டம் முதல் எடப்பாடி தோட்டம் வரை எல்லாமே ‘பணத்தோட்டம்.’ அப்போலோவில் அனுமதிக்கப்படுவதற்கு முதல்நாள் இரவு, என்ன நடந்தது என்று மர்மம் விலகாத ‘ஓர் இரவு’, இன்று தமிழக அரசை ஆட்டிப்படைத்துக்கொண்டிருப்பது டெல்லியில் இருந்து ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்’, அதிரடி ரெய்டுகள், சி.பி.ஐ. விசாரணை, ஊழல் குற்றச்சாட்டுகள், ஜெயலலிதா மரண விசாரணை, கொடநாட்டுக் கொள்ளை - கொலை வழக்கு என்று நித்தம் நித்தம் ‘நீதிதேவன் மயக்கம்.’

இன்று அண்ணா இருந்திருந்தால் அவர் தன் புத்தகத்தையே இன்றைய தமிழகத்துக்கான குறியீடாகச் சொல்லியிருப்பார், அது ‘ஏ தாழ்ந்த தமிழகமே!’

சுகுணா திவாகர் - ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி