அரசியல்
சமூகம்
Published:Updated:

மத்திய அரசின் ‘போலியோ’ தாக்குதல்!

மத்திய அரசின் ‘போலியோ’ தாக்குதல்!
பிரீமியம் ஸ்டோரி
News
மத்திய அரசின் ‘போலியோ’ தாக்குதல்!

சொட்டு மருந்து முகாம் தள்ளிவைப்பு, நிதிப் பற்றாக்குறை காரணமா?

போலியோ நோயை முற்றிலுமாக ஒழித்த நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது இந்தியா. 2011-க்குப் பிறகு இந்தியாவில் ஒரு போலியோ நோயாளிகூட உருவாகவில்லை. வருடத்திற்கு இரண்டு முறை போலியோ தடுப்பு மருந்து கொடுப்பதுடன், தொடர்ச்சியாக ஏற்படுத்திய விழிப்பு உணர்வால்தான் சாத்தியமானது இது. இப்படியாகக் கடந்த 25 ஆண்டுகளாகச் செயல்பாட்டிலிருந்த இந்த நடைமுறையைத் தற்போது மாற்றியிருக்கிறது மத்திய அரசு. இதனால், பிப்ரவரி 3-ம் தேதி நடத்த வேண்டிய போலியோ சொட்டு மருந்து முகாம், ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ‘போலியோ’ தாக்குதல்!

வழக்கமாக ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் இரண்டு கட்டங்களாக ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். இதுதான் தற்போது நிறுத்தப் பட்டுள்ளது. மத்திய அரசுப் போதிய நிதியை ஒதுக்காததால்தான் போலியோ சொட்டு மருந்து முகாம் நிறுத்தப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டுகிறார்கள் மருத்துவச் செயற்பாட்டாளர்கள். இதுகுறித்துப் பேசிய குழந்தைகள் நலச் செயற்பாட்டாளர் தேவநேயன், “போலியோ என்பது, முதுகுத்தண்டு நரம்புகளையும், மூளை நரம்புகளையும் தாக்கித் தசைகளின் இயக்கத்தைத் தடுக்கும் கொடிய வைரஸ். இது குழந்தைகளைத்தான் அதிகம் தாக்கும். இதைத் தடுக்கவே போலியோ தடுப்பு சொட்டு மருந்துத் திட்டம் இந்தியாவில் 1994-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் காரணமாக இந்தியாவில் போலியோ தாக்குதல் பாதிப்பு பெருமளவு கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. கடைசியாக, 2011, ஜனவரி 13-ம் தேதி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு போலியோ பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதுதான் கடைசி. அதற்குப் பிறகு யாருக்கும் பாதிப்புக் கண்டறியப்பட வில்லை. எனவே, 2014-ம் ஆண்டு, இந்தியாவை ‘போலியோ இல்லாத தேசம்’ என்று உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்தது. தமிழகமும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக போலியோ பாதிப்பு இல்லாத மாநிலமாக இருந்து வருகிறது.

இந்த ஆண்டும் வழக்கமாக போலியோ சொட்டு மருந்து முகாமுக்காக, மாநிலச் சுகாதாரத் துறை தயாராகிக் கொண்டிருந்தபோதுதான் மத்திய அரசின் சுற்றறிக்கை ஒன்று வந்திருப்பதாகத் தெரிகிறது. அதன்படி ஆண்டுக்கு இரண்டு முறை போலியோ மருந்து கொடுக்கும் முகாம், ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் என்று தெரிகிறது. இது சாதாரணமாகக் கடந்துவிடக்கூடிய விஷயமல்ல. குழந்தைகளுக்கான அடிப்படை மருத்துவ உரிமையை மறுக்கும் செயல். ஆனால், நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி மருந்துகள் கொள்முதல் செய்யப்பட வில்லை என்பது மிகவும் மோசமான போக்கு. குழந்தைகளின் மருத்துவத்துக்காக ஒதுக்கப்படும் நிதியை, அவர்களுக்குச் செய்யப்படும் செலவைத் தேவையற்றதாக ஆட்சியாளர்கள் பார்க்கிறார்கள். ஆனால், நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடியவர்கள் குழந்தைகள்தான். அவர்களை அலட்சியப் படுத்துவது நாட்டின் எதிர்காலத்தையே அலட்சியப்படுத்தும் செயல்.

மத்திய அரசின் ‘போலியோ’ தாக்குதல்!

குழந்தைகள் பிறந்து, முதல் ஆயிரம் நாள்களை ‘கோல்டன் டேஸ்’ என்பார்கள். அப்போது நாம் கொடுக்கக்கூடிய ஊட்டச்சத்துகளும், தடுப்பு மருந்துகளும்தான் அவர்களின் ஆயுள்காலம் முழுமைக்கும் ஆரோக்கியத்தைத் தரும். அதற்குச் செலவழிக்கக்கூடிய நிதியில் பற்றாக்குறை இருக்கிறது என்பது ஏற்கக்கூடியது அல்ல. குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேறு எதற்கோ பயன்படுத்தி இருக்கிறார்கள். அதனால்தான் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. அதை மறைப்பதற்காகத்தான் ‘நிர்வாகக் காரணம்’ என்றெல்லாம் ஏமாற்றி முகாமைத் தள்ளி வைக்கிறார்கள். அதேபோல, குழந்தைகள் நலனுக்காக ஒதுக்கப்படும் நிதியையும் குறைத்துக் கொண்டே வருகிறார்கள். குழந்தைகளைத் துன்புறுத்துவது மட்டும் மனித உரிமை மீறல் அல்ல. அவர்களுக்கான அடிப்படை உரிமையை மறுப்பதும் உரிமை மீறல்தான்’’ என்றார் கோபமாக.

மத்தியச் சுகாதாரத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் நம்மிடம், “இந்த ஆண்டு போலியோ தடுப்பபூசி யின் விலை உயர்ந்திருக்கிறது. எனவே அதை வாங்குவதற்கு 100 கோடி ரூபாய் வரை கூடுதலாகச் செலவாகும். இதுகுறித்து மத்தியச் சுகாதாரத்துறை சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப் பட்டது. மத்திய அரசோ நிதி ஒதுக்குவதற்குப் பதில், ‘சர்வதேசத் தன்னார்வ நிறுவனத்திடம் நிதி வாங்கி முகாமை நடத்துங்கள்’ என்று சொல்லி இருப்பதாகத் தெரிகிறது. இதனால்தான் இந்த ஆண்டு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்துவதற்குத் தாமதம் ஆகிறது” என்றார்கள். இந்த விஷயம் உண்மையா என்று சமூகச் சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர்
ஜி.ஆர்.ரவீந்திரநாத்திடம் கேட்டோம்.‘‘போலியோ சொட்டு மருந்தும், ஊசி மருந்தும் வாங்குவதற்குத் தேவையான  நிதியை மத்திய அரசு ஒதுக்கத் தவறிவிட்டது உண்மைதான். அதனால் தேவையான மருந்துகள் கொள்முதல் செய்ய முடியாமல் போய்விட்டது. அந்தப் பற்றாக்குறையை வெளியில் சொல்லாமல் நிர்வாகப் பிரச்னை என்று அதிகாரிகள் மழுப்புகிறார்கள்.

மத்திய அரசின் ‘போலியோ’ தாக்குதல்!

போலியோ தடுப்பூசியின் விலை 67 ரூபாயிலிருந்து, 177 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இந்த மருந்துகளைத் தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்வதால்தான், இஷ்டத்துக்கு விலை ஏற்றுகிறார்கள். இதனால், தேவையில்லாத தட்டுப்பாட்டையும் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள். அதைத் தவிர்க்க, அரசாங்கமே பொதுத்துறை நிறுவனங்களின் மூலம் இதுபோன்ற அத்தியாவசிய மருந்துகளை உற்பத்தி செய்ய வேண்டும். அதைக் குறைந்த விலையில் அரசின் தடுப்பூசித் திட்டங்களின் மூலம் வழங்கவேண்டும். அரசின் கவனக்குறைவுதான் இந்தக் காலதாமதத்துக்கான காரணம். இதற்கு முன்பு எந்தக் காரணங்களுக்காகவும் போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்கப்பட்டதில்லை. மருந்து கொள்முதலுக்காகப் பன்னாட்டு நிறுவனங்களை நம்பாமல், பொதுத்துறை நிறுவனங்களின் மூலம் அரசே உற்பத்தியைத் தொடங்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத்துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமியிடம் பேசினோம். ‘‘நிர்வாகக் காரணங்களால் முகாம் தள்ளி வைக்கப்படுவதாகத்தான் தகவல் வந்திருக்கிறது. குறிப்பிட்ட காரணம் எதுவும் சொல்லப்படவில்லை. நிதிப்பற்றாக்குறையால் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்பது உண்மையல்ல. இந்தியா முழுவதும் ஒரே நாளில் நடத்தவேண்டும். அதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. விரைவில் தேதியை அறிவிப்பார்கள். தமிழகத்தில் முகாம் நடத்துவதற்குத் தேவையான முன்னேற் பாடுகளைச் செய்துவருகிறோம். இதுகுறித்து யாரும் பயப்படத் தேவையில்லை. கண்டிப்பாக முகாம் நடக்கும்” என்றார் அவர்.

சர்ச்சைகள் எழுந்ததை அடுத்து இப்போது மார்ச் 10-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என்று அரசு சொல்லியிருக்கிறது. அதே நேரத்தில் இனி ஆண்டுக்கு ஒரு முறைதான் நடத்தப்படும் என்பதாக வரும் தகவல்களையும் அவ்வளவு எளிதாகக் கடந்து விடமுடியாது. போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்துவதற்குப் போதுமான நிதி ஒதுக்காததற்கு உண்மையான காரணம் என்ன என்பதை விளக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது.

- இரா.செந்தில்குமார்

கோவை கலெக்டருக்கு நோட்டீஸ்!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், சிறுமுகை அருகே உள்ள லிங்காபுரம் கரந்தையாற்றில் கட்டப்பட்ட பாலம், தண்ணீரில் மூழ்கியது. இதனால் ஆற்றைக் கடக்க மக்களும் பள்ளிக் குழந்தைகளும் பரிசலில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுவருகின்றனர். இதுகுறித்து கடந்த 26.12.18 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் “பாலமும் இல்லை... பஸ்ஸும் இல்லை! பரிசலில் பரிதவிக்கும் பள்ளிக் குழந்தைகள்” என்கிற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்தக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து கோவை மாவட்ட ஆட்சியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினரும் முன்னாள் நீதிபதியுமான ஜெயசந்திரன் பிறப்பித்த உத்தரவில் `இந்த நோட்டீசுக்கு மாவட்ட ஆட்சியர் ஐந்து வாரங்களுக்குள் முழுமையாக ரிப்போர்ட்டை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இனியேனும் பிரச்னைக்கு விரைவாகத் தீர்வு காண மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.