சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“அவர் என் நண்பர் இல்லை, ரோல் மாடல்!”

“அவர் என் நண்பர் இல்லை, ரோல் மாடல்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“அவர் என் நண்பர் இல்லை, ரோல் மாடல்!”

“அவர் என் நண்பர் இல்லை, ரோல் மாடல்!”

யில்வேக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை நடத்திய அவர்தான், பின்னாளில் ரயில்வே அமைச்சராகி, கொங்கன் ரயில்வே திட்டத்தைக் கொண்டு வந்தார். நெருக்கடி நிலையின்போது, தப்பியோடித் தலைமறைவாக இருந்த அவர் தான், நாட்டிற்காக கார்கில் போரையும், பொக்ரான் அணுகுண்டு சோதனையையும் வெற்றிகரமாக நடத்தி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார். முற்றிலுமான பல முரண்களுக்குச் சொந்தக்காரர், ஜார்ஜ் பெர்ணான்டஸ். 

“அவர் என் நண்பர் இல்லை, ரோல் மாடல்!”

அகில உலகுக்குமான இந்திய சோஷலிசப் பிரதிநிதி, தொழிலாளர் வர்க்கத்தின் தன்னிகரற்ற போராளி என்பதோடு, தமிழீழத்தின் தனிப்பெரும் ஆதரவாளர் என்பது ஜார்ஜுக்கான மகத்தான மற்றொரு அடையாளம். ஜார்ஜ் பெர்ணான்டஸ் மறைவில் துயருடன் இருந்த அவர் நண்பர் வைகோவிடம் பேசினேன்...

‘‘மும்பையில் மிகப்பெரிய போக்குவரத்து வேலைநிறுத்தம் நடந்தபோதுதான், இந்தியத் தொழிலாளர்களின் கதாநாயகனாக மாறினார் ஜார்ஜ் பெர்ணான்டஸ். நெருக்கடி நிலையின்போதே, அவரது பெயர் தேசமெங்கும் தெரிந்தது. தலைமறைவாகி மக்களிடம் கிளர்ச்சியை ஏற்படுத்தி வந்தார். கைதான பின், அவரை விடுதலை செய்யுமாறு, ஐரோப்பியாவின் பல நாடுகள் தீர்மானம் நிறைவேற்றி, இந்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தன. பரோடா டைனமிக் வழக்கில், பிரதான குற்றவாளியாகச் சேர்த்து, அவரைக் கைது செய்து, கைகால்களில் விலங்குகளைப் பூட்டியே, நீதிமன்றத்துக்குக் கொண்டு வந்தனர். அந்த விலங்குகளுடன் கையைத்தூக்கி, அவர் காண்பிக்கும் படம், வரலாற்றுச் சிறப்புமிக்க படம்.

1978-ம் ஆண்டில், முரசொலி மாறன்தான் எனக்கு அவரை அறிமுகப்படுத்தினார். அதன் பின், எனக்கு அவர் மிகவும் நெருக்கமாகி விட்டார். அவரது ஈழ ஆதரவு நிலைப்பாடுதான், எங்களின் நட்பை இன்னும் அதிகமாக்கியது. ஈழத்துக்கு ஆதரவாக டில்லியில் மாநாடு நடத்தத் தடை விதிக்கப்பட்டபோது, அவரது வீட்டின் முன்பாகவுள்ள புல்வெளியில்தான் மாநாடு நடத்தப்பட்டது.

1989-ல் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, விடுதலைப்புலிகளுக்கு மருந்துகளை அனுப்ப முயற்சி எடுத்தேன். அதற்குப் பெரிதும் உதவினார் ஜார்ஜ் பெர்ணான்டஸ். ஆனால் சில காரணங்களால் அனுப்ப முடியாமல்போனது. ஆன்டன் பாலசிங்கத்துக்கு நார்வேயில் மாற்றுச் சிறுநீரகம் பொருத்திய பின், 2002 தொடக்கத்தில், தொடர் சிகிச்சைக்காக மும்பைக்கு அவரை அழைத்து வர முயன்றேன். அதற்கும் ஜார்ஜ் உதவினார். தகவல் தாமதத்தால், அதுவும் நடக்காமல்போயிற்று. 2001 கடைசியில், விடுதலைப்புலிகளுக்குப் பால் பவுடர், பொருள்கள் கொண்டு சென்ற கப்பலை நமது கடற்படையினர் மறித்தது பற்றி, அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸிடம் சொன்னேன். ‘இனிமேல் அது நடக்காது’ என்றார். அவர் அமைச்சராக இருக்கும் வரை அது நடக்கவில்லை.

அவரது எளிமை போற்றத்தக்கது. அவரது உடையை அவரே துவைத்துக்கொள்வார். அவரது பெட்டியை அவரே தூக்கி வருவார். மதியம் எளிமையான உணவு வரும். பல நாள்கள் அதை நான் பங்கிட்டு உண்டிருக்கிறேன்.

அவரது திருமண நாளிலும் எங்கேயோ போராட்டத்துக்குப் போய்விட்டு, பழைய சட்டையோடு கடைசி நேரத்தில் டாக்ஸியில் வந்து இறங்கியவர் அவர். நேர்த்தியான ஆடையில் வெளீரென்ற வெள்ளைச் சட்டையில் அவரை நான் பார்த்தது, சவப்பெட்டியில் அவர் படுத்திருந்தபோதுதான்.

அமைச்சராக இருந்தபோதும் ‘எகானமிக்’ வகுப்பில்தான் பயணிப்பார். அவரது வீடு எப்போதும் திறந்தே இருக்கும். திபெத், இலங்கை அகதிகள் பலர், அவரது வீட்டிலேயே குடியிருந்தனர்.

ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் படித்திருக்கிறார். இந்தி, ஆங்கிலம், கன்னடம், மராட்டி எனப் பல மொழிகள் அவருக்குத் தெரியும். தமிழை நன்றாகப் புரிந்துகொள்வார். நாடாளுமன்றத்தில் இந்தியும் ஆங்கிலமும் கலந்து அவர் பேசுவது, இடிமுழக்கம் போலிருக்கும். அவரது கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல், பல அரசுகள் திணறியிருக்கின்றன.

பழங்களை பிரியமாகச் சாப்பிடுவார். நம் ஊர் முறுக்கு ரொம்பவும் பிடிக்கும். நினைவுதப்பிய நிலையிலும், முறுக்கு என்ற வார்த்தையைக் கேட்டதும் சிரிப்பார். 2001-ல் எனது சென்னை வீட்டில் நாள்கள் தங்கியிருந்தார். பொடா கைதியாக நான் இருந்தபோது, மூன்று முறை என்னைப் பார்க்க வந்தார். மிலிட்டரி ஹெலிகாப்டர், வேலூர்ச் சிறைக்கு வெளியே நிற்கும். சிறையிலிருந்து வெளியான மூன்றாவது நாளிலும் என்னைப் பார்க்க வந்துவிட்டார்.

ஏற்கெனவே ஒரு போராட்டத்தில் அவரது தலையில் பலமாக அடிபட்டிருந்தது. மற்றொரு நாள் குளிக்கும்போது, கீழே விழுந்ததில் இரும்புக்குழாயில் தலை அடிபட்டுவிட்டது. மூளையில் பாதிப்பு என்று இருமுறை அவருக்கு சர்ஜரி செய்தனர். அதற்கு இரு ஆண்டுகளுக்குப் பின்பே அவருக்கு நினைவு மங்க ஆரம்பித்தது.

கடந்த எட்டு ஆண்டுகளில், அவர் நினைவிழந்திருந்தபோதும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அவரைப் பார்க்கப் போவேன். அவருடைய வீட்டில் இருக்கும் பார்வையாளர் புத்தகத்தில் பக்கம் பக்கமாய் எழுதியிருப்பது நான்தான். அவர் எனக்கு நண்பர் மட்டுமில்லை; ரோல் மாடலும்கூட.

பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோது, அதிவேகமாகச் செல்லும் ‘மிக்’ ரக போர் விமானத்தில் அவர் பறந்து சென்றபோது, ராணுவ உடையில் கிரேக்க வீரனைப்போல் இருந்தார். அந்தப் படத்தை, பெரிதாக வரைந்து ‘Oh... Brave Heart of India... We Salute You. Vaiko’ என்று வரைந்து கொடுத்தேன். அதைத் தனது இருக்கையின் பின்னாலேயே நீண்ட நாள்களாக வைத்திருந்தார்.

கருணாநிதியின் பிறந்த நாளன்று பிறந்தவர், அவர். முத்துக்குமார் இறந்த நாளில் இறந்தார்.

1977-ல் முசாபூர்த் தொகுதியில், மூன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தும், அமைச்சராக அவர் மறுத்துவிட்டார். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், அவரது வீட்டின் முன்பாக வந்து போராடிய பின்பே, அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். லட்சக்கணக்கான இளைஞர்களின் கதாநாயகனாக இருந்த அவரது இறுதிச் சடங்கில் நூறு பேர்கூடக் கலந்துகொள்ளவில்லை என்பது எனக்குப் பெரும் வேதனை. அரசியல் வணிக, விளம்பர மயமாக மாறியதற்கான அடையாளம் இது. என்னடா வாழ்க்கை என்றாகிவிட்டது எனக்கு!’’

நண்பரின் நினைவுகளில் மூழ்க, வார்த்தைகள் வர மறுக்கின்றன வைகோவிடமிருந்து.

We Salute You... George!

சே.சேவியர் செல்வகுமார்