அரசியல்
சமூகம்
Published:Updated:

வரம்புமீறும் குறும்பு! - அதிகரிக்கும் டிக்டாக் மோகம்...

வரம்புமீறும் குறும்பு! - அதிகரிக்கும் டிக்டாக் மோகம்...
பிரீமியம் ஸ்டோரி
News
வரம்புமீறும் குறும்பு! - அதிகரிக்கும் டிக்டாக் மோகம்...

வரம்புமீறும் குறும்பு! - அதிகரிக்கும் டிக்டாக் மோகம்...

ணிக்கணக்கில் தலையைக் குனிந்துகொண்டே ஸ்மார்ட்போனில் மூழ்கியிருக்கும் பழக்கம் மக்களைக் கிட்டத்தட்ட அடிமைப்படுத்திவிட்டது. மொபைல் வழியே தினமும் புதுப் புதுச் செயலிகள் வந்துகொண்டே இருக்கின்றன. அந்த வரிசையில் சமீபகாலமாக ‘டிக் டாக்’ செயலிக்கு அடிமையாகும் போக்கு அதிகரித்துவருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் இந்தச் செயலியில் உலகம் முழுவதும் ஏழரைக் கோடிப்பேர் புதிதாக இணைந்துள்ளனர். இல்லத்தரசிகள் தொடங்கி வயதானவர்கள் வரை டிக்டாக் செயலியில் புகுந்துவிளையாடுகிறார்கள். சமூக, கலாச்சார மற்றும் தனி மனித உறவுகளிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது டிக் டாக். சரி... இது நல்லதா, கெட்டதா?

வரம்புமீறும் குறும்பு! - அதிகரிக்கும் டிக்டாக் மோகம்...

டிக்டாக் செயலியில் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டுவருகிறார் சீரியல் நடிகை சீமா. அவரிடம் பேசினோம். ``டிக்டாக் செயலியில் நான் அப்லோடு செய்த வீடியோக்களைப் பார்த்துதான், எனக்கு சீரியலில் நடிக்க வாய்ப்புக்கிடைத்தது. பள்ளி மாணவி உடையில் நான் தோன்றும் ஒரு வீடியோ, பரவலாக வைரல் ஆனது. அதைப் பார்த்துவிட்டு, ‘பிரியமானவளே’ சீரியலில் பள்ளி மாணவி வேடத்தில் என்னை நடிக்கக் கேட்டார்கள். இப்போது, அதில் நான் நடித்து வருகிறேன். நான் மட்டுமல்ல, என்னைப் போல பலரும் டிக்டாக் செயலியில் வீடியோக்கள் பதிவிட்டதன் மூலம் நடிக்கும் வாய்ப்புகளைப் பெற்றுள்ளார்கள். நம் திறமைகளை வெளிப்படுத்த இது ஒரு நல்ல களம் என்றுதான் நினைக்கிறேன். அதே சமயம், இந்தச் செயலியைப் பலர் தவறாகவும் பயன்படுத்துகிறார்கள். பள்ளிச் சீருடையில் சக மாணவிகளைக் கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது என வீடியோக்கள் வெளியிடுகிறார்கள். சில பெண்கள் மோசமாக உடையணிந்து ஆபாசமான வீடியோக்களை வெளியிடுகிறார்கள். கணவன்-மனைவி சிலர் நான்கு சுவருக்குள் இருக்க வேண்டிய விஷயங்களைப் படம் பிடித்து உலகமே பார்க்கும் வகையில், டிக்டாக்கில் வெளியிடுகிறார்கள்” என்றார்.

அரசியல் வசனங்களுக்கு வாயசைத்து டிக்டாக்கில் பிரபலமாக வலம்வரும், சென்னையைச் சேர்ந்த சத்யா பாண்டியனிடம் பேசினோம். “ஆரம்பத்தில் பொழுதுபோக்காக டிக்டாக்கைப் பயன்படுத்தத் தொடங்கினேன். என் வீடியோக்களைப் பலர் பார்க்க ஆரம்பித்ததும், மண் சார்ந்தும், விவசாயம் மற்றும் இயற்கை வளங்கள் குறித்தும் விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் விதமாக வீடியோக்களைப் பதிவிட்டேன். ஃபேஸ்புக்கில் எழுதுவதைவிட, டிக்டாக் வீடியோக்கள் மக்களிடையே எளிதாகச் சென்று சேர்ந்தன. நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், போகப்போகச் சமூகக் கருத்துகள் கொண்ட வீடியோக்களுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது. சமீபகாலமாக, டிக்டாக்கில் அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் தோன்றும் வீடியோக்களுக்குத்தான் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. தவறான விஷயங்கள்தான் அதிகமாக வருகின்றன. பெண்களைதான் அதிகமாகப் பின்தொடர்கிறார்கள். பெண்கள் பதிவிடும் ஒரு சாதாரண வீடியோவுக்குக்கூட, ஆகா ஓகோவெனப் புகழ்ந்து தள்ளுகிறார்கள். நாம் சொல்லும் நல்ல கருத்துகளை யாரும் திரும்பிப் பார்ப்பதில்லை. ஆரம்பத்தில் நாளொன்றுக்குச் சுமார் முப்பது வீடியோ வரை போட்டுவந்தேன். போதிய வரவேற்பு இல்லாததால் தற்போது வாரத்துக்குப் பத்து வீடியோ எனக் குறைத்துக்கொண்டேன். இப்படியே போனால், டிக்டாக் செயலியை அன்இன்ஸ்டால் செய்துவிடலாம் என யோசித்து வருகிறேன்” என்றார் வருத்தத்துடன்.

வரம்புமீறும் குறும்பு! - அதிகரிக்கும் டிக்டாக் மோகம்...

18 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் மொபைல் செயலிகளை லாக் இன் செய்ய முடியும் என்பது தெரிந்ததுதான். ஆனால், பெற்றோர்களைவிட ஸ்மார்ட்போன்களை இயக்கத் தெரிந்தவர்கள் குழந்தைகள்தான். எனவே, இந்த வயது எல்லாம் அவர்களுக்குத் தடையாக இல்லை. பெற்றோரின் பெயரில் பதிவு செய்து செயலிகளைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துகின்றனர். எனவே, இந்தச் செயலியைக் கண்காணிக்க வேண்டும் என்றும், அதற்குக் கட்டுப்பாடுகள் கொண்டுவர வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து மனநல மருத்துவர் பூங்கொடியிடம் பேசினோம். ``மற்றவர்களின் கவனம் தங்கள் மீது திரும்பவேண்டும் என்பதற்காக எல்லை மீறி நடந்துகொள்கிறார்கள். பிறரை வசைபாடவும் இதுபோன்ற செயலிகளைப் பயன்படுத்துகிறார்கள். போதியக்கட்டுப்பாடுகளை உருவாக்கினால், இந்தப் பிரச்னைகளைச் சரிசெய்யலாம். பிறரைக் காயப்படுத்தும் விதமாகச் செயல்படுபவர்களுக்குத் தண்டனை வழங்குவது தொடர்பான புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். தவறான இணையதளங்கள் தடை செய்யப்படுவதைப்போல, இதுபோன்ற தவறான வீடியோக்களுக்கும் தடைவிதிக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இதுபோன்ற செயலிகளைப் பயன்படுத்தவேண்டும் என்கிற விதிமுறையைக் கடுமையாக்கி, கண்காணிக்க வேண்டும். குழந்தைகளை ஒருபோதும் இதுபோன்ற செயலிகளைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. தவறான ஆபாசமான விஷயங்களைப் பகிர்ந்துகொள்வது தவறென்று உணரவேண்டும். கட்டுப்பாட்டுடனும், பொறுப்புணர்வோடும் நடந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்’’ என்கிறார் பூங்கொடி.

வரம்பு மீறும் குறும்பைக் கட்டுப்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு மட்டுமல்ல... நமக்கும் இருக்கிறது!

- இரா.செந்தில்குமார்