சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

தமிழ்ச் சமூகத்தின் தியாகம் தள்ளுவண்டியில்!

தமிழ்ச் சமூகத்தின் தியாகம் தள்ளுவண்டியில்!
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழ்ச் சமூகத்தின் தியாகம் தள்ளுவண்டியில்!

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

``ஈழத்தில் நடக்கும் அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதரர்களும் பிள்ளை களும் அறிவாயுதம் ஏந்தி யிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக் கிறேன்” என்று தனது இறுதிவரிகளைப் பதிவு செய்துவிட்டு சென்னை சாஸ்திரி பவன் வாயிலில் 29 ஜனவரி 2009 அன்று தன்னைத் தீக்கிரையாக்கிக் கொண்டார் பத்திரிகையாளர் முத்துக்குமார். அவர் மரணித்துப் பத்தாண்டுகள் ஆகிவிட்டன. இந்தப் பத்தாண்டுகளில் ஈழத்தில் போர் ஓய்ந்து அமைதியும் இயல்பும் திரும்பி வெள்ளைப் பூக்கள் மலர்ந்துவிட்டதாகவே பொதுச்சமூகம் நம்பிக் கொண்டிருக்கிறது. உண்மையில் ஈழத்துக்கும் விடியவில்லை... இறந்த முத்துக்குமாரின் குடும்பத்துக்கும்  விடிவு கிட்டவில்லை. 

தமிழ்ச் சமூகத்தின் தியாகம் தள்ளுவண்டியில்!

பத்தாவது நினைவுதினத்தையொட்டி சென்னைக் கொளத்தூரில் இருக்கும் முத்துக்குமாரின் குடும்பத்தைச் சந்திக்க அவர்களது வீட்டுக்குச் சென்றோம். ஒழுங்கற்ற சாலையில் ஆஸ்பெஸ்டாஸ் மறைப்பு போடப்பட்டு, ஓரமாய் இருக்கிறது அந்த வீடு. வீட்டு வாசலில் நம்மை வரவேற்றார் முத்துக்குமாரின் தங்கை தமிழரசி. நான்கு பேர் ஒருசேர அமர்ந்தால் நிரம்பிவிடும் அந்தக் குறுகிய வீட்டில்தான் முத்துவின் அப்பா குமரேசன், தங்கை தமிழரசி, தங்கையின் கணவர் கருக்குவேல் ராஜன், அவர்கள் மகன் மோனிஷ் ஆகியோர் வசிக்கிறார்கள். முத்துக்குமார் இறந்தபோது நிறைமாதமாக இருந்த தமிழரசிக்கு அடுத்த மாதமே பெண்குழந்தை பிறந்தது. இப்போது நான்காம் வகுப்பு படிக்கிறாள். பெயர் ‘முத்து’ எழில். தன் அண்ணனைப் போலவே அவளும் வாசிப்பில் படுகெட்டி எனப் பேச்சுவாக்கில் பதிவு செய்கிறார் தமிழரசி.

புற்றுநோய்த் தாக்கத்தின் பாதிப்பால் தொண்டையை ஒருவிதமாகப் பிடித்தபடியே பேசத் தொடங்குகிறார் முத்துக்குமாரின் அப்பா.

“வீட்டுல கம்ப்யூட்டர் வாங்கி வெச்சிருந்தோம்.அதுல வேலை செய்துட்டிருப்பான். பொழுதன்னிக்கும் அரசியல்தான் பேசுவான், கல்யாணம் செய்துக்கடான்னு சொல்லுவேன் அவனுக்கு அதுல விருப்பமில்லை. இதனால் எங்களுக்குள்ள சண்டை வரும். அதனால் நான் தாம்பரத்தில் கொஞ்சநாள் இருந்தேன். முத்துவுக்கும் தமிழரசிக்கும் ஒரு தம்பி இருந்தான். பேரு வசந்தகுமார். 2006-ல் ஒரு விபத்துல அவன் இறந்துட்டான். முத்து இறக்கிறதுக்கு இரண்டுநாள் முன்ன எனக்கு போன் செஞ்சான். வசந்துடைய இன்சூரன்ஸ் பேப்பர் எல்லாம் ரெடி செஞ்சி வெச்சிருக்கிறதா, அதை வாங்கிட்டுப் போகச் சொன்னான். அதுதான் என்கிட்ட அவன் கடைசியா பேசினது. கொளுத்திக்கிட்ட பிறகுதான் எனக்கு செய்தி வந்தது.  இன்னிக்கு நிறைய பிரச்னைகளுக்கு மாணவர்கள் ஒற்றுமையா இருந்து போராடறாங்க. அந்த ஒற்றுமைக்கான விதை என் மகன் போட்டதுங்கிற பெருமிதம் மட்டும் இருக்கு. அது போதும்” என்கிறார்.

“முதல்நாள் இரவு நான், எங்க வீட்டுக்காரரு, அண்ணன் மூணு பேரும் ஒண்ணா உட்கார்ந்துதான் சாப்பிட்டோம். மறுநாளைக்கு சீக்கிரம் கிளம்பணும், காலையில சாப்பாடும் மதிய சாப்பாடும் வேணாம்னு சொல்லிட்டுப் போயி, மாடியில படுத்துட்டான். எப்பவும் அண்ணனுக்கு நான்தான் சட்டைப்பையில காசு வெச்சு அனுப்புவேன். மறுநாள் காலையில அஞ்சேமுக்காலுக்குப் போய்ப் பார்த்தேன். அண்ணன் இல்ல, அது போட்டிருந்த பேன்ட் மட்டும் ஈரம் சொட்டிட்டிருந்துச்சு. பத்து நிமிசம் முன்ன போயிருந்தா அண்ணனைப் பார்த்திருப்பேன்.” 

தமிழ்ச் சமூகத்தின் தியாகம் தள்ளுவண்டியில்!

ஓர் அமைதி நிலவவும் அதை உடைத்துக் கொண்டு பேசத் தொடங்குகிறார் கருக்குவேல் ராஜன், “நாங்க காதல் திருமணம் செய்துகிட்டோம். அந்தக் கோபத்துல இருந்தவன், கடைசி ரெண்டு வருடங்கள்தான் என்கிட்ட பேச ஆரம்பிச்சான். அதுவும் ஈழத்துல போர் நடக்கிற காலகட்டத்துல தினமும் இரவுல பேசிட்டிருப்போம்.  முத்துக்குமார் தற்கொலை செய்துக்கிற ஆள் கிடையாது. யாராவது தற்கொலை செய்துகிட்டா அந்த சாவு வீட்டுக்கே போகமாட்டான். ஒரு தனிமனுஷனா ஈழத்துக்காக எப்படியோ போராடி எதுவுமே கையாலாகாமப்போகதான் இறுதியா உயிரையே கொடுத்துட்டான்.”

தமிழரசி தொடர்கிறார், `` `நாமளே அரை வயித்துக் கஞ்சி குடிச்சிட்டு இருக்கோம் நமக்கு ஏன் அண்ணே இந்த விவகாரம்?’னு கேட்டா, கோபப்பட்டு என் பிள்ளைய தள்ளிவிட்டு ‘பாரு பாப்பா இந்தப் புள்ளைய தள்ளிவிட்டதுக்கே உனக்கு வலிக்குதுல்ல? அங்க இதுமாதிரி பிள்ளைங்கள கொன்னுட்டு இருக்காங்க. என்னைய அமைதியா இருக்கச் சொல்லாதிங்க’ன்னு அண்ணன் கத்தும். எங்க அண்ணன் சின்ன வயசுலேர்ந்து சேகரிச்ச புத்தகங்கள்தான் இதெல்லாம்...” என வீட்டில் இருக்கும் பீரோவைக் காட்டுகிறார்.

கடைசி இரண்டு தட்டுகளில் ‘மினி’ பொன்னியின் செல்வன் முதல் லெனினியம் வரை அத்தனை புத்தகங்களும் அங்கே அடைக்கப்பட்டுக் கிடந்தன. புத்தகங்களின் வலு தாங்காமல் பீரோ பலகை நன்றாகவே வளைந்திருக்கிறது. அதில் ‘கு.முத்துக்குமரன் கவிச்சிற்றேடு’ என எழுதப்பட்ட டைரி ஒன்று தென்பட்டது. அதை எடுத்துப் புரட்டிக்கொண்டிருந்தவளிடம் இரண்டு ஐஸ்க்ரீம் கப்புகளை நீட்டுகிறார் தமிழரசி. 

தமிழ்ச் சமூகத்தின் தியாகம் தள்ளுவண்டியில்!

“இதுதான் எங்க வியாபாரம்!” என்றவரை நான்  அதிர்ச்சியோடு பார்த்ததும் தொடர்கிறார். “எங்களுக்கு தினக்கூலிதான் வயித்துச் சாப்பாட்டுக்கு. கூடவே, இரண்டு பிள்ளைங் களையும் படிக்க வெச்சாகணுமே! காலையில அப்பாவும் வீட்டுக்காரரும் பழைய இரும்பு பேப்பர் வாங்க வீடு வீடா போவாங்க; மாலையில இந்த ஐஸ் வண்டி வியாபாரம். அண்ணன் இறந்து இத்தனை வருசமாச்சு, ஒவ்வொரு முறை இறந்த தினத்தன்னைக்கும் சந்திக்கிறவங்க ஏதாவது உதவின்னா கேளுங்கன்னு சொல்லுவாங்க. அதோட அவங்களை அடுத்த நினைவு தினத்துலதான் சந்திக்க முடியும். அடுத்த நினைவுதினத்துலேயும் அதையேதான் சொல்வாங்க. எங்க அண்ணன் போன வலியோட சேர்த்து, அன்னாடங்காய்ச்சி யாதான் எங்க பொழப்பு போயிட்டிருக்கு. பொண்ணு வயசுக்கு வந்துடுச்சு, அந்தச் செய்தியப் பகிர்ந்துக்கக் கூட என்னோட உடன்பிறப்புக இல்லையே!” அதுவரை சலனமற்றுப் பேசிக் கொண்டிருந்தவர் கண்களில் கண்ணீர்.

தமிழ்ச்சமூகத்துக்காக உயிர்த்தியாகம் செய்தவர் குடும்பம் தள்ளுவண்டியோடு நின்றுகொண்டி ருந்தது. இது விடுபட்ட கதையின் பத்தாண்டுகள் கழித்தான தொடர்ச்சி... ஈழத்துக்கும் நீதியில்லை, அதற்காக இறந்தவரின் குடும்பத்தை அரவணைக்கவும் நாதியில்லை.

ஐஷ்வர்யா - படங்கள்: தே.அசோக்குமார்