Published:Updated:

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #9 - கிருஷ்ணகிரி 200 - இன்ஃபோ புக்

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #9 - கிருஷ்ணகிரி 200 - இன்ஃபோ புக்
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #9 - கிருஷ்ணகிரி 200 - இன்ஃபோ புக்

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #9 - கிருஷ்ணகிரி 200 - இன்ஃபோ புக்

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #9 - கிருஷ்ணகிரி 200 - இன்ஃபோ புக்

வணக்கம் சுட்டி நண்பர்களே...

‘இந்தியாவின் தலைநகரம் புது டெல்லியாக இருக்கலாம்... ஆனால், நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைநகர் என்பது, அவரவர் பிறந்த ஊர்தான்’ என்கிறார் ஒரு பிரபல கவிஞர்.

உலகில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் அதே நேரம், நாம் பிறந்த மண்ணின், நம் ஊரின் வரலாற்றையும் பண்பாட்டையும் தெரிந்துகொள்ளும் அவசியத்தை நோக்கமாகக் கொண்டு உருவாக்கிவருவதுதான் இந்த இணைப்பிதழ். இதில், கிருஷ்ணகிரியின்  வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், சாதனைகள், பிரபலங்கள் எனப் பல்வேறு தகவல்களைத் திரட்டிக்கொடுத்திருக்கிறோம். இது, உங்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை அளிக்கும். அத்துடன், பிரமாண்டமான போட்டியும் வைத்துப் பரிசும் அளித்தால், உங்கள் மகிழ்ச்சி இரட்டிப்பாகும் அல்லவா?

சேலம், சென்னை, தருமபுரி, மதுரை, நெல்லை, கோவை, புதுச்சேரி மற்றும் விருதுநகர் ஆகிய இணைப்பிதழ்களைத் தொடர்ந்து, அந்தந்த மாவட்டங்களில் நடத்திய போட்டிகளில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அந்தப் புத்தகத்துக்கும், நீட் தேர்வு போன்று OMR ஷீட் முறையில் நடத்தப்பட்ட தேர்வுக்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது.

‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல, எங்கள் மாவட்டத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளவும், வருங்காலத்தில் பல போட்டித் தேர்வுகளைக் குழப்பமின்றி எதிர்கொள்ளவும் இணைப்பிதழ் வழிவகுத்தது’ என மாணவர்கள் சொல்லியிருந்தனர். ஆசிரியர்களும், ‘எங்கள் மாணவர்களுக்குக் கிடைத்த இந்த நல்ல வாய்ப்பை, தமிழ்நாட்டின் மற்ற மாணவர்களும் பெற வேண்டும். உங்கள் பணி தொடரட்டும்’ என வாழ்த்தியிருந்தனர். அந்த வரவேற்பு கொடுத்த உற்சாகத்தில் தொடர்கிறோம்.
‘சேலம் 150’, ‘சென்னை டே 2018,’ ‘தருமபுரி 200,’ `மதுரை 200,' `நெல்லை 200,' `கோவை 200,' மற்றும் `புதுச்சேரி 200,' `விருதுநகர் 200' ஆகியவற்றைத் தொடர்ந்து,  இப்போது கிருஷ்ணகிரி 200 இன்ஃபோ புக் இதோ... உங்கள் கைகளில்.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #9 - கிருஷ்ணகிரி 200 - இன்ஃபோ புக்

அன்பு கிருஷ்ணகிரி சுட்டிகளே... வாருங்கள் நம்மைச் சுற்றி உள்ளவற்றை அறிவோம்.

தருமபுரி மாவட்டத்திலிருந்து  30-வது மாவட்டமாக 2004 ஆம் ஆண்டு உருவானது கிருஷ்ணகிரி மாவட்டம். இந்த கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கென்று தனித்த அடையாளத்தை உருவாக்கிக்கொண்டு, தொழில்துறையிலும் வேளாண் துறையிலும் முன்னேறிவருகிறது. இந்த மாவட்டத்துக்கென்று தனிச்சிறப்புகளும், அடையாளங்களும்  உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.

வரலாறு

கிருஷ்ணகிரி மாவட்டம் வரலாற்று முக்கியத்துவம் கொண்டது. இந்த மாவட்டத்தில் சிந்து சமவெளி நாகரிகம் மற்றும் ஆதி காலத்து பாறை ஓவியங்கள் இம்மாவட்த்தின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுவதாக உள்ளது.

1. வராற்றுக்கு முந்தைய காலம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கற்காலத்திலேயே மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இம்மாவட்டத்தில் உள்ள பாறை ஓவியங்களும், கற்சிற்பங்களும் இதை உறுதி செய்கின்றன. அதேபோன்று, சிந்து சமவெளி நாகரிக காலத்தோடும் தொடர்புடையது என்று கூறப்படுகிறது.

2. பழங்கற்கால கருவிகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வரட்டனப்பள்ளி, கப்பல்வாடி ஆகிய ஊர்களிலிருந்து சேகரிக்கப்பட்ட பழையகற்கால கருவிகளும் கத்தேரி, கங்கலேரி, தொகரப்பள்ளி, பையூர் கொக்கிக்கல்போடு, மோதூர், கொல்லஹள்ளி மற்றும் வெள்ளோலை ஆகிய ஊர்களிலிருந்து சேகரிக்கப்பட்ட புதிய கற்கால கருவிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

3. பெருங்கற்படைக் காலம்

புதிய கற்காலத்தைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெருங்கற்படைக் கால கலாசாரம் பரவியிருந்ததை ஈமச் சின்னங்கள், பாறை மற்றும் கல் திட்டைகளில் காணப்படும் ஒவியங்கள், இரும்பு ஆயுதம் மற்றும் கறுப்பு-சிவப்பு மண்பாண்டங்கள் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம். பீமாண்டப்பள்ளி என்கிற ஊரில் பலவகையான பெருங்கற்படைக் காலத்தைச் சேர்ந்த மண்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பெரிய கோட்டப்பள்ளி, கிருஷ்ணகிரி மலை ஆகிய இடங்களில் உள்ள பாறை ஓவியங்களும், மல்லசந்திரம் கல்திட்டையில் ஓவியங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

4. நடுகற்கள்

பெருங்கற்படைக் காலத்தைத் தொடர்ந்து வருவது சங்க காலமாகும். வீரத்துடன் போரிட்டு மாண்ட வீரர்களின் நினைவாக நடப்பட்ட நடுகற்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏராளமாய் காணப்படுகின்றன. பீமாண்டப்பள்ளி, சூளகிரி, காத்தாடிகுப்பம், சின்னக்கொத்தூர், எமக்கல்நத்தம், கொடியாளம், லண்டன்பேட்டை மற்றும் பெண்ணேஸ்வர மடம் ஆகிய இடங்களிலிருந்து பல நடுகற்கள் தொல்லியல் துறையால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #9 - கிருஷ்ணகிரி 200 - இன்ஃபோ புக்

5. அதியமான் நாடு

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் மைசூரு பகுதிகள், சங்க காலத்தில் ‘தகடூர்’ அல்லது ‘அதியமான் நாடு’ என்ற பெயரில் அழைக்கப்பட்டன. மகாராஜா அதியமான், தனது அவையை அலங்கரித்த பெரும் கவிஞரான ‘அவ்வையாரு’க்கு நீண்ட ஆயுளைத் தரக்கூடிய ‘கருநெல்லி’க் கனியை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

6. எயில் நாடு

கிருஷ்ணகிரி, முற்காலத்தில் ‘எயில் நாடு' எனவும், ஓசூர்  ‘முரசு நாடு' எனவும் ஊத்தங்கரை ‘கோவூர் நாடு' எனவும் அழைக்கப்பட்டிருக்கிறது.

7. கிருஷ்ணகிரியை ஆண்டவர்கள்

முற்காலத்தில் தமிழகத்தின் எல்லையாக விளங்கியுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டம். இம்மாவட்டத்தை பல்லவர்கள், கங்கா வம்சத்தினர், நுளம்பர்கள், சோழர்கள், ஹொய்சாளர்கள், விஜய நகரப் பேரரசர்கள், பீஜப்பூர் சுல்தான்கள், மைசூரின் உடையார்கள் மற்றும் மதுரை நாயக்கர்கள் ஆகியோர் ஆட்சி செய்துள்ளனர்.

8. கிருஷ்ணகிரியும் தகடூரே...

சங்க காலந்தொட்டே கிருஷ்ணகிரியில் பல மொழியினர் குடியேறியுள்ளனர். ‘விரவுமொழித் தகடூர்’ என்று அகநானூறு குறிப்பிடுகிறது. தமிழ் நிலத்திற்குள் நுழைவதற்கான நிலப்பகுதியாக கிருஷ்ணகிரி இருந்திருக்கிறது. அதியமான் ஆட்சிக்குப் பிறகு கர்நாடகத்திலிருந்து பலரும் கிருஷ்ணகிரி வழியாக நுழைந்து ஆட்சியைப் பிடித்துள்ளனர். 

9. நவகண்டம்

போரில் உயிரிழந்தவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் அந்தக் காலத்தில் நடுகற்கள் அமைக்கப்பட்டுவந்துள்ளன. ‘சங்க காலத்திலிருந்து அரசர்களின் நலனுக்காக தங்களது உயிர்களைத் தியாகம்செய்யும் மக்களுக்கு நினைவு நடுகற்கள் அமைப்பதற்கான ஒரு பாரம்பர்யம் இருந்தது. சங்க காலத்தில் போர் வீரர்களுக்கு வைக்கப்படும் ‘நவகண்டம்’ எனப்படும் நடுகற்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகம் காணப்படுகின்றன.

10. பல்லவர்கள்

கி.பி 8ஆம் நூற்றாண்டில் சேலம் மாவட்டத்தின் வடக்குப் பகுதிகள், பல்லவர்களுடைய ஆட்சியின் கீழ் இருந்தன என அறியப்படுகிறது. அதே நேரத்தில் சேலம் மாவட்டத்தின் மேற்குப் பகுதிகள், கங்கா பல்லவர்களின் கீழ் இருந்தன. கி.பி 8ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில், கங்கா பல்லவர்கள் பாரமஹால் பகுதியை ஆட்சி செய்தனர்.

11. சோழர்கள்

கி.பி.9ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து கி.பி 12 ஆம் நூற்றாண்டு வரை ராஷ்டிரக்கூடர் களின் செல்வாக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்தது. இந்தச் சமயத்தில், தெற்கில் சோழர்கள் அதிகாரத்துக்கு வந்தனர். கி.பி.894 ல் முதலாம் ஆதித்ய சோழன் கொங்கு நாட்டைக் கைப்பற்றினார். கி.பி.949-950-ல் சோழர்கள் ராஷ்டிரக்கூடர்களால் தோற்கடிக்கப்பட்டனர். ராஷ்டிரக்கூடர்களின் அரசர் மூன்றாம் கிருஷ்ணரின் இறப்புக்குப் பிறகு அவர்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்தது. அதன் பின் சேலம் மாவட்டத்தின் முழுபகுதியும் சோழர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. கங்கவாடி,  சோழப்பேரரசுடன் இணைக்கப்பட்டு, தகடூர் அதியமானின் ஆட்சிப் பகுதியாக ஆக்கப்பட்டது.

12. ஹொய்சாளர்கள்

கி.பி.12 ஆம் நூற்றாண்டில் ஹொய்சாளர்கள் அதிகாரம் பெற்று சோழர்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்து, கங்கவாடி ஹொய்சாளர்கள் வசம் வந்தது. மேலும் கோலார், கோட்டையூர் மற்றும் கொங்கு நாட்டின் மேற்குப் பகுதிகளை கைப்பற்றினர். பாரமஹால் (கிருஷ்ணகிரியில் உள்ள 12 கோட்டைகள் கொண்ட பகுதி) மற்றும் தால்காட் பகுதிகள் சோழர்கள் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. ஆனால், அதியமான் பகுதிகள் சுதந்திரமாகவும், பெயரளவுக்கு மட்டும் சோழர்களுடன் இணைந்தும் இருந்தது.

13. பாண்டியர்கள்

கி.பி. 13ஆம் நூற்றாண்டின் வரலாறு, ஹொய்சாளர்கள் மற்றும் பாண்டியர்களுக்கு இடையேயானது. வடக்கில் யாதவர்களின் தாக்குதலுக்குப் பிறகு, ஹொய்சாளர்கள் கொங்கு நாட்டின் தெற்குப் பகுதிக்கு பின்வாங்கினர். ஜடாவர்மன் முதலாம் சுந்தரபாண்டியன், யாதவர்களுடன் இணைந்து ஹொய்சாள அரசன் வீரசோமேஸ்வரனைச் சோழர் பகுதியிலிருந்து விரட்டி அடிக்க உதவியதாக அறியப்படுகிறது. ஆனால், அவர் தால்காட் பகுதியில் ஆட்சி செய்தாரா என்பதில் சந்தேகம் உள்ளது. ஆனால் வீர சோமேஸ்வரனின் மகன் வீர ராமநாதன் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தை முழுவதுமாக ஆட்சி செய்ததாகப் பதிவுகள் உள்ளன. பின்னர் பாண்டியர்கள், தில்லி சுல்தானின் முகமதிய ஆட்சியர்களால் சூழப்பட்டனர்.

14. விஜய நகரர்

விஜய நகர ராஜ்ஜியத்தின் எழுச்சி 14ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது. மதுரையில் உள்ள முகமதிய சுல்தானின் அரசை வீழ்த்துவதற்காக கி.பி.1365-66 ஆம் ஆண்டு, முதலாம் புக்கா தனது கவனத்தை தெற்குத் திசையில் திருப்பினார். இந்தப் படையெடுப்புகளில் ஒன்றில்தான் சேலம் மாவட்டம் விஜயநகர ஆட்சியின் கீழ் வந்தது. கி.பி.1565 ஆம் ஆண்டு வரை பெருமையுடன் ஆண்ட விஜயநகர அரசர்களைத் தக்காண சுல்தான்களின் ஒருங்கிணைந்த படைகள் தலைக்கோட்டை, ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில் வீழ்த்தினர். இதே சமயம், சென்னைப் பட்டணத்தின் ஜெகதீரராயர் மைசூருடன் சேர்த்து பாரமஹாலையும் ஆட்சி செய்தார்.

15. மராட்டியர்கள்

கி.பி.1611 ஆம் ஆண்டு, ஸ்ரீரங்கப்பட்டணத்தைச் சேர்ந்த காந்திராவேநரசராஜா என்பவர் கெட்டி முதலியார்களிடமிருந்து கோயம்புத்தூரிலுள்ள பல பகுதிகளைக் கைப்பற்றினார். மேலும் இவர், 11 ஆண்டுகளுக்குப் பிறகு கி.பி.1654 ஆம் ஆண்டு பாரமஹாலுடன் சேர்த்து விராலகத்திரதுர்க், பென்னாகரம், தருமபுரி மற்றும் தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளைக் கைப்பற்றினார். ஓசூரை மைசூர் மன்னரான சந்திரசங்கர் தொட்டா தேவராஜ் என்பவரிடமிருந்தும், ஓமலூரை கெட்டி முதலியார்களிடமிருந்தும் கைப்பற்றி, அவர்களை ஆட்சியிலிருந்து அகற்றினார். மராட்டியர்களின் ஆக்கிரமிப்பால் மைசூர் அரசு ஒடுக்கப்பட்டது. பாரமஹால் மற்றும் தால்காட் பகுதி மராட்டியர்களின் கைகளுக்கு மாறியது.

16. சிக்க தேவராயர்

கி.பி.1688-89 ஆம் ஆண்டுகளில் மைசூரை ஆண்ட சிக்க தேவராயர் பாரமஹால் பகுதியின்மீது படையெடுத்து தருமபுரி, மனுக்கோண்டா, ஓமலூர் பரமத்தி, காவேரிப்பட்டணம் மற்றும் ஆத்தூர் ஆகிய பகுதிகளைக் கைப்பற்றினார். கி.பி.1704 ஆம் ஆண்டில், சிக்க தேவராயரின் மரணத்துக்கு  முன்பு சேலத்தின் முழுப்பகுதியும் அவரின் ஆட்சியின் கீழ் இருந்தது. இதற்கிடையில், கடப்பாவின் நவாப் அப்துல் நபிக்கான் தன்னுடைய அதிகாரத்தை தெற்கு நோக்கி செலுத்தி, கி.பி.1714 ஆம் ஆண்டில் பாரமஹால் பகுதியின் தலைவரானார்.

17. ஹைதர் அலி

கி.பி.1760ஆம் ஆண்டு மைசூர், பாரமஹால் ஹைதர்அலியின் அதிகாரத்தில் இருந்தன. கி.பி.1767 ல் மெட்ராஸில் இருந்த ஆங்கிலேய அரசு ஹைதர்அலியின் மீது தாக்குதல் நடத்தி காவேரிப்பட்டணத்தைக் கைப்பற்றினர். பின்னர் கிருஷ்ணகிரியை முற்றுகையிட்டனர். ஹைதர்அலி மீண்டும் வலிமையுடன் போரிட்டு, ஆங்கிலேயர்களைத் துரத்திவிட்டு, காவேரிப்பட்டணத்தை மீண்டும் கைப்பற்றினார். சில மாதங்களுக்குப் பிறகு ஆங்கிலேயர்கள் பாரமஹால் மீது மீண்டும் ஒரு படையெடுப்பை மேற்கொண்டனர். மேலும், தெற்கு தருமபுரி, சேலம் மாவட்டம் மற்றும் நாமக்கல் ஆகியவை பெரிய எதிர்ப்பு ஏதுமின்றி சரணடைந்தன. இருந்தபோதிலும் இந்த வெற்றி குறுகிய காலமே நீடித்தது. ஹைதர்அலி மீண்டும் தருமபுரி, தேன்கனிக்கோட்டை, ஓமலூர், சேலம் மற்றும் நாமக்கல்லை கைப்பற்றினார். இரண்டாம் மைசூர் போரின்போது, சேலம் மாவட்டம் ஹைதர்அலியின் கட்டுப்பாட்டில் இருந்தது.

18. திப்பு சுல்தான்

ஹைதர்அலிக்குப் பின் ஆட்சிக்கு வந்த திப்புசுல்தான் அதிக அதிகாரம் பெற்றவராக இருந்தார். திப்புசுல்தானின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஆங்கிலேயர்கள், மராட்டியர் மற்றும் ஹைதராபாத் நிஜாமுடன் உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டு, கி.பி.1790 ல் மூன்றாம் மைசூர் போரைத் தொடுத்தனர். ஆங்கிலேயப் படையின் ஒரு பிரிவு காவேரிப்பட்டணத்தில் வலிமையுடன் போரிட்டது. திப்புசுல்தான் முழு பலத்துடன் போரிட்டபோதும் அவரால் ஆங்கிலேயரைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. கி.பி.1791 ஆம் ஆண்டில் ஓசூர், அஞ்செட்டி, நீலகிரி மற்றும் ரத்தினகிரி ஆகிய பகுதிகள் ஆங்கிலேயர் வசம் வந்தன. மேலும் சில கோட்டைகள் பெரிய எதிர்ப்பு ஏதுமின்றி ஆங்கிலேயர் வசம் வந்தது.

19. சமாதான ஒப்பந்தம்

கி.பி.1792 ஆம் ஆண்டில் திப்புசுல்தானுக்கும், ஆங்கிலேயருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, திப்புசுல்தான் ஆட்சியின் பாதி பகுதிகள் ஆங்கிலேயர் வசம் வந்தது. பாலக்காட்டுப் பகுதியைத் தவிர்த்து, சேலம் மாவட்டத்தின் முழுப்பகுதியும், ஒசூரின் ஒரு பகுதியும் ஆங்கிலேயர் வசம் வந்தது.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #9 - கிருஷ்ணகிரி 200 - இன்ஃபோ புக்

20. திப்பு சுல்தான் இறப்பு

கி.பி.1799 ஆம் ஆண்டு நடைபெற்ற கடைசி மைசூர் போரில் ஓசூர் தாலுகா, நீலகிரி, அஞ்செட்டி துர்க்கம், ரத்தினகிரி மற்றும் கெலமங்கலம் போன்ற பல இடங்கள் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது. ஸரங்கப்பட்டணத்தில் நடைபெற்ற போரில் திப்புசுல்தான் இறந்த பிறகு, சேலம் மாவட்டத்தின் பாலக்காடு பகுதியும் ஆங்கிலேய ஆட்சியுடன் சேர்க்கப்பட்டது.

21. பாரமஹால்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ‘பாரமஹால்’ என்று அழைக்கப்பட்ட 12 கோட்டைத் தலங்கள், வரலாற்றில் மிக முக்கியப் பங்கு வகித்துள்ளன. இதில் முதன்மையானது, கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள சையத்பாஷா மலைக்கோட்டையாகும். இந்தக் கோட்டை விஜயநகரப் பேரரசர்களால் கட்டப்பட்டதாகும். ஹொய்சாள மன்னன் வீர ராமநாதன், தற்போதைய கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ‘குந்தாணி’ என்னும் இடத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்ததாகவும், மற்றொரு மன்னனான ஜெகதேவிராயர், ஜெகதேவி என்னும் இடத்தைத் தலைநகராகக் கொண்டு 12 கோட்டைகளில் ஒன்றை அங்கு கட்டி ஆட்சி செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

22. பாரமஹால் கோட்டைகள்

1. கிருஷ்ணகிரி, 2. ஜெகதேவிதுர்க்கம், 3 . வீரபத்ரதுர்க்கம், 4. கவல்கரா, 5. மகாராஜக்கடை, 6. பஜங்ககாரா, 7. கடோர்கர், 8. திருப்பத்தூர், 9. வாணியம்பாடி, 10. கனகநகரா, 11. சுதர்சநகரா,   12. தட்டக்கல் ஆகியவையாகும். இவற்றில் 6 கோட்டைகள் தற்போது இல்லை.

23. கிருஷ்ணகிரி கோட்டை

கிருஷ்ணகிரி கோட்டை அல்லது சையத்பாஷா மலைக்கோட்டை என்றழைக்கப்படும் இந்தக் கோட்டை, விஜயநகர மன்னர்களில் ஒருவரான கிருஷ்ணதேவராயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. பழைய கிருஷ்ணகிரி என்றழைக்கப்படும் பழைய பேட்டை, இம்மலையின் அடிவாரத்தில்தான் அமைந்துள்ளது. 

24. கிருஷ்ணகிரி தர்கா

கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சுங்கச்சாவடி அருகே அமைந்திருந்துகிறது புகழ் வாய்ந்த தர்கா. கிருஷ்ணதேவராயர் ஆட்சியில் அவரை எதிர்த்து சையத்பாஷா, சையத் ஷாவுதீன் ஆகிய இருவரும் போரிட்டனர். கிருஷ்ணகிரியிலுள்ள மலையின்மீது நடந்த போரில், கிருஷ்ணதேவராயர் சையத் பாஷா, சையத் ஷாவுதீன் ஆகிய இருவரையும் வெட்டிச் சாய்த்த இடத்தில் அவ்வுடல்களின்மீது எழுப்பப்பட்ட சமாதி அமைந்துள்ள மலை என்பதால் அம்மலை, சையத்பாஷா மலை என்று அழைக்கப்படுகிறது. அவ்வாறு வெட்டிச் சாய்த்தபோது தலைகள் இரண்டும் மலையடிவாரத்தில் விழுந்தன. தலைகள் வீழ்ந்துகிடந்த இடத்தில் தர்கா அமைந்துள்ளது. தர்காவின் உள்ளே ஒருபுறம் சையத்பாஷா தலை அடக்கம் செய்யப்பட்ட சமாதியும், அதன் அருகில் நான்கு தூண்கள் கொண்ட அமைப்பும் உள்ளன. மறுபுறம், சையத் ஷாவுதீன் தலை அடக்கம் செய்யப்பட்ட ஒரு சமாதியும், அதன் அருகில் நான்கு தூண்கள் (மினார்கள்) கொண்ட அமைப்பும் உள்ளன.

25. ராயக்கோட்டை

ராயக்கோட்டை மலையின்மீது அமைந்திருக்கிறது இக்கோட்டை. இது 18 ஆம் நூற்றாண்டில் மைசூர் சமஸ்தானத்தை ஆண்டு வந்த ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் கீழ் இருந்தது. 1791 ல் மூன்றாம் மைசூர் போரின்போது ஆங்கிலேயர்களின் கீழ் இந்தக் கோட்டை வந்தது. தற்போது, இந்திய தொல்லியல் துறையின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

26. குந்தாணி

கி.பி 13 ஆம் நூற்றாண்டில், கிருஷ்ணகிரிக்கு அருகேயுள்ள குந்தாணி என்ற ஊரைத் தலைமையிடமாகக் கொண்டு ஹொய்சாள மன்னன் வீர ராமநாதன் ஆட்சி புரிந்துள்ளார். இதற்கடுத்து வந்தவர் ஜெகதேவராயன். இவர், ஜெகதேவிக்கோட்டை என்ற இடத்தைக் கொண்டு ஆட்சிபுரிந்துள்ளார்.

27. முதல் மைசூர் போர்

முதலாம் மைசூர் போரின்போது, கிருஷ்ணகிரியைக் கடந்து ஆங்கிலேயே படைகள் சென்றிருக்கின்றன. மைசூரை ஆண்ட ஹைதர் அலியுடன் போரை நிகழ்த்தின. இந்தப் போரில் ஆங்கிலேயப் படைகள் தோற்றன. 1794 ல் கிருஷ்ணகிரி, ஆங்கிலேயர் வசமானது.

28. காவேரிப்பட்டணம் போர்

முதலாம் மைசூர் போரின்போது, ஆங்கிலேயப் படைகள் கிருஷ்ணகிரி வழியாக காவேரிப்பட்டணத்துக்குச் சென்று, அங்கு ஹைதர் அலியின் படைகளுடன் போரிட்டதாகத் தெரிகிறது. இதில், ஆங்கிலேயர்கள் படுதோல்வி அடைந்தனர். இரண்டாம் மைசூர் போரின்போது, ஹைதர் அலியின் கட்டுப்பாட்டிற்குள் சேலம் மற்றம் கர்நாடகப் பகுதிகள் வந்தன. ஸ்ரீரங்கப்பட்டண உடன்படிக்கையின்படி சேலம் மற்றும் பாரமஹால் பகுதிகள் ஆங்கிலேயர் வசம் வந்தன. 1792 ஆம் ஆண்டு, கேப்டன் அலெக்சாண்டர் ரீட், மாவட்ட கலெக்டராக அறிவிக்கப்பட்டார்.  ஓசூர் சேலம் மாவட்டத்தலைநகரானது.

29. பாறை ஓவியங்கள்

கிருஷ்ணகிரி – குப்பம் சாலையில் அமைந்துள்ளது, மகாராஜக்கடை எனும் கிராமம். இங்குள்ள பூதிகன் மலைக்குன்றின் மேல் உள்ள பாண்டுவுரார் பாறை என்னும் இடத்தில், பெருங்கற்காலக் கற்பதுக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக்கிராமத்தில் இருந்து கற்பதுக்கை உள்ள இடத்துக்குச் செல்ல, சுமார் 3.5 கி.மீ வனப்பகுதிக்குள் பயணிக்க வேண்டும்.

30. கற்பதுக்கைகள்

பெருங்கற்காலத்தில் இறந்தவர்களுக்காக அமைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த கற்பதுக்கைகள், மூன்று விதமாகக் காணப்படுகின்றன.  கற்பதுக்கைகளின் உட்புறத்தில் வெள்ளை நிறத்தில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. பெரும்பாலான ஓவியங்களில் விலங்குகளோடு மனித உருவம் சேர்ந்து காட்டப்பட்டுள்ளது.

31. சிறு தெய்வங்கள்

கி.பி.9 ஆம் நூற்றாண்டு முதலே சிவபெருமான், திருமால் கோயில்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உருவாகிவிட்டன. பௌத்த, சமணப் பள்ளிகள் இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகளும் கிடைத்துள்ளன. இதைவிட வேடியப்பன், முனியப்பன், ஐயனாரப்பன், சானாரப்பன், அரியக்கா, பெரியக்கா, சாக்கியம்மா, பந்தகநாச்சியம்மா, காளியம்மன், செல்லியம்மன் என சிறுதெய்வ வழிபாடு மிகுந்து காணப்படுகின்றன.

32. புதையல்கள்

தமிழகத்திலேயே கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான் அதிக அளவில் பழைய நாணயப் புதையல்கள் கிடைத்துள்ளன. ஓசூர் பகுதியில் கி.பி.13ஆம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த வீர ராமநாதன் காலத்திய நாணயங்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன.

33. ஜெகதேவிக்கோட்டை

ஹைதர் அலி, திப்புசுல்தான் ஆகியோர், ஆங்கிலேயருடன் நடத்திய போர்களில் பெரும் பங்கு வகித்தது இக்கோட்டை. விஜயநகரப் பேரரசர்களில் ஒருவரான ஜெகதேவிராயரின் தலைநகராக விளங்கியது. கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள பாரமகால் என்றழைக்கப்படும் 12 கோட்டைகளில் இது ஒன்றாகும்.

34. ஜெகதேவராயன்

பன்னிரண்டு கோட்டைகளின் தலைமையிடமாக ஜெகதேவிக்கோட்டை இருந்தது.இக்கோட்டைகளின் முதல் சிற்றரசனாக நியமிக்கப்பட்டவர் ஜெகதேவராயன். 16ஆம் நூற்றாண்டில் ஜெகதேவராயன் இறந்தப்பிறகு, இக்கோட்டைகள் பாளையக்காரர்களின் வசமானது.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #9 - கிருஷ்ணகிரி 200 - இன்ஃபோ புக்

35. நாகமலைத் துர்க்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவி-பர்கூர் நெடுஞ்சாலையில், ஜெகதேவியிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது நாகமலைத் துர்க்கம் என்று அழைக்கப்படும் நாகமலைக்கோட்டை. மலையின் உச்சியில் கோட்டை அரண்களும், இடிபாடுகளுடைய பல கட்டடங்களும், சுனைகளும் உள்ளன.

36. தட்டக்கல் கோட்டை

இம்மலைக்கோட்டை, பாராமஹால் கோட்டைகளிலையே சிறந்த வேலைப்பாடு மிக்கது. மலையின் உச்சியில் கோட்டை அரண்களும், இடிபாடுகளுடைய பல கட்டடங்களும், சுனைகளும், சிறிய கோயிலும், பாறையில் செதுக்கப்பட்ட பெரிய அனுமார் சிலையும் காணப்படுகின்றன. மலையைச் சுற்றி ஏராளமான நடுகற்கள் காணப்படுகின்றன.

37. கோயில் நகரம்

கிருஷ்ணாகிரி மாவட்டம், தளிக்கு அருகே தமிழக-கர்நாடக எல்லையில் அமைந்திருக்கிறது கும்மளாபுரம். ஹொய்சாளர்களால் ஏற்படுத்தப்பட்ட இவ்வூர்,  விஜயநகரர் ஆட்சியிலும் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வந்தது. இவ்வூரில் அமைந்துள்ள வீரபத்திரன் கோயில் சிறப்பு வாய்ந்தது. இக்கோயிலின் வெளிச்சுவர் முழுவதும் நடன மாதர்கள், மல்யுத்த வீரர்கள், போரிடும் வீரர்கள் என்று சிற்பங்களாகவே அமைந்துள்ளன.

38. போளுதிம்மராயன் துர்க்கம்

காவேரிப்பட்டணத்துக்கு அருகே உள்ளது, போளுதிம்மராயன் துர்க்கம் அல்லது போளுமலை என்றழைக்கப்படும் மலைக்கோட்டை. இம்மலை, செடி கொடிகளின்றி ஒரே பாறையாக நான்கு புறங்களிலும் செங்குத்தாக, அரைச்சந்திரன் வடிவமாக அமைந்துள்ளது. இம்மலையில், மூன்று நான்கு சுனைகளும், திம்மராய சுவாமி கோயிலும் உள்ளன. இக்கோட்டை ஐதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோருக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே நடைபெற்ற போர்களில் பெரும் பங்கு வகித்தது.

39. சேலம் மாவட்டத்தின் பகுதிகள்

தற்போதைய தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் ஆங்கிலேய ஆட்சியின்போது, சேலம் மாவட்டத்தின் ஒரு தாலுகாவாக இருந்தது. 1965 ஆம் ஆண்டில், சேலம் மாவட்டத்திலிருந்து தருமபுரி மாவட்டமும், 2004 ஆம் ஆண்டில், தருமபுரி மாவட்டத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டமும் தனி மாவட்டங்களாக உருவாக்கப்பட்டன.

புவியியல்

40. மலைகளின் ராணி

 நீலகிரி மாவட்டத்தை `மலைகளின் ராணி' என்று வருணிப்பார்கள். அதேபோன்று, கிருஷ்ணகிரி மாவட்டத்தையும் மலைகளின் ராணி என்று அழைக்கலாம். அந்த அளவுக்கு மலைகள், சிறுகுன்றுகள், காடுகள், பள்ளத்தாக்குகளை ஒருங்கே கொண்ட மாவட்டமாகத் திகழ்கிறது.

41. கிருஷ்ணகிரி பெயர் காரணம்

‘கிருஷ்ணா’ என்பது ‘கறுப்பு’ என்றும் ‘கிரி’ என்பது ‘மலை’ என்றும் குறிக்கிறது. கறுப்பு கிரானைட் மலைகளுடன் அமைந்துள்ளதால், இந்த மாவட்டம் கிருஷ்ணகிரி என அழைக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. அதேபோன்று, கிருஷ்ண தேவராயர் ஆட்சியின் கீழ் இப்பகுதி இருந்தது, எனவே இந்த மன்னரின் பெயராகவும் இது அழைக்கப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. கிருஷ்ணகிரியைத் தமிழ் ஆர்வலர்கள் 'கிருட்டிணகிரி' என்றும் எழுதிவருகிறார்கள்.

42. தமிழ்நாட்டின் நுழைவுவாயில்

ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்கள், தமிழகத்திற்குள் நுழைவதற்கான நுழைவாயிலாக கிருஷ்ணகிரி மாவட்டம் இருந்துவருகிறது. தங்க நாற்கரச் சாலை திட்டத்தின் கீழ், பெங்களூரு முதல் சென்னை வரை உள்ள நெடுஞ்சாலையும், கன்னியாகுமரி முதல் காஷ்மீர்  வரையிலான தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிருஷ்ணகிரி-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை ஆகியவையும் இணைக்கப்பட்டுள்ளன.

43. அமைவிடம்

கிருஷ்ணகிரி மாவட்ட, கிழக்கே வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களையும், தெற்கே தருமபுரி மாவட்டத்தையும், மேற்கே கர்நாடக மாநிலத்தையும், வடக்கே ஆந்திர மற்றும் கர்நாடக மாநிலங்களையும் எல்லையாகக் கொண்டுள்ளது.

44. பேசப்படும் மொழிகள்

இது, கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர் முதல் 1,400 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, உருது மற்றும் கன்னடம் ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன.

45. காலநிலை

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பரப்பளவு 5,143 சதுர.கி.மீ. மாவட்டத்தின் கிழக்குப் பகுதி, வெப்பமான காலநிலையும் மேற்குப் பகுதி ஒரு மாறுபட்ட குளிர் காலநிலையும் கொண்டுள்ளது.

46. மழையளவு

ஜூலை முதல் நவம்பர் மாதம் வரை மழைக்காலமாக இருந்து வருகிறது. டிசம்பர் முதல் பிப்ரவரி வரை குளிர்காலமாக இருக்கிறது. ஆண்டுதோறும் சராசரியாக 830 மில்லிமீட்டர் மழையளவைக் கொண்டிருக்கிறது கிருஷ்ணகிரி மாவட்டம்.

47. ஆறுகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை, பாம்பாறு, மார்க்கண்டேய நதி ஆகியவை ஓடுகின்றன. தென்பெண்ணையாறு மட்டுமே கிருஷ்ணகிரி மாவட்டத்துக்குள் முழுமையாக ஓடி வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.

48. தென்பெண்ணையாறு

கர்நாடக மாநிலம், சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் (நந்தி துர்க்கம்) பிறக்கும் தென்பெண்ணையாறு, கெலவரப்பள்ளி அணை வழியாக வந்து கிருஷ்ணகிரி அணையில் சேர்கிறது. கிருஷ்ணகிரி அணையிலிருந்து தொடங்கி திருவண்ணாமலை மாவட்டத்தில் நுழைந்து சாத்தனூர் அணையில் சென்று சேர்கிறது. அங்கிருந்து விழுப்புரம் மாவட்டம் வழியாகப் பயணித்து புதுச்சேரிக்கும் கடலூருக்கும் இடையில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது தென்பெண்ணையாறு.
 
49.மார்க்கண்டேய நதி

கிருஷ்ணகிரி மாவட்டம், தீர்த்தம், வேப்பனஹள்ளி, நெடுசாலை, குரும்பரப்பள்ளி வழியாக கிருஷ்ணகிரி அணையில் சேர்கிறது மார்க்கண்டேய நதி. கர்நாடகத்தில் மாநிலத்தில் உருவாகும் இந்நதி தென்பெண்ணையாற்றின் துணையாறு என்றும் அழைக்கப்படுகிறது.

50. கெலவரப்பள்ளி அணை

தென்பெண்ணையாற்றின் குறுக்கே ஓசூருக்கு  அருகே கட்டப்பட்டுள்ள அணை கெலவரப்பள்ளி அணை. இந்த அணை 1995 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்த அணையின் உயரம் 44 அடிகள். இதன் மூலம் 9,062 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இந்த அணைப்பகுதி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகவும் இருந்துவருகிறது.

51. கிருஷ்ணகிரி அணை (கே.ஆர்.பி டேம்)

தென்பெண்ணையாற்றின் குறுக்கே முத்தூர் என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ளது, கிருஷ்ணகிரி அணை. 1955-1957-ஆம் ஆண்டுகளில் முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இதன் உயரம் 52 அடிகள். இதன்மூலம் 9,012 ஏக்கர் நிலங்கள் பாசனம்பெறுகின்றன.

52. பாம்பாறு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓடும் சிறிய ஆறு இது. ஆந்திரப் பிரதேசத்தின் குப்பம் வனப்பகுதியிலிருந்து வரும் நீர், மத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஓதிக்குப்பம் ஏரியை வந்தடைகிறது. இந்த ஏரியிலிருந்து தொடங்கும் இந்த ஆறு, ஊத்தங்கரைக்கு அருகேயுள்ள பாம்பாறு அணைக்கு வருகிறது. அணையிலிருந்து வெளியேறும் நீர், தென்பெண்ணை ஆற்றை வந்தடைகிறது. அதனால், இது தென்பெண்ணை ஆற்றின் துணை ஆறு என்றும் அழைக்கப்படுகிறது.

53. பாம்பாறு அணை

ஊத்தங்கரையிலிருந்து 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பாம்பாறு அணை. 19.6 அடி உயரம் கொண்டது. இந்த அணையில் 280 மில்லியன் கனஅடி தண்ணீரைச் சேமிக்க முடியும். இந்த அணை மூலம் 4,000 ஏக்கர் நிலங்கள் பாசனம்பெற்று வருகின்றன.

54. சனத்குமார் நதி

கெலமங்கலத்துக்கு அருகே ஓடுகிறது சனத்குமார் என்கிற நதி. மாவட்டத்தில் இருக்கும் பெரும்பான்மையோருக்கு இப்படியொரு நதி இருப்பதே தெரியாது. கெலமங்கலத்தைச் சுற்றி பட்டாளம்மன் ஏரி, நாயக்கன் ஏரி, ஜம்பணை ஏரி மற்றும் நஞ்சப்பன் கொட்டகை ஏரிகளின் உபரி நீர் சனத்குமார் நதியில் கலக்கிறது.

55. சூளகிரி-சின்னாறு அணை

இந்த அணை, சின்னாறு ஆற்றின் குறுக்கே எம்பள்ளி என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் உயரம் 32 அடிகள். இதில், 81.2 மில்லியன் கனஅடி தண்ணீரைச் சேமிக்க முடியும். பேரிகை ஏரி, பன்னப்பள்ளி ஏரி, அத்திமுகம் ஏரி, சின்னாறு ஆகியவற்றின் உபரி நீர், இந்த அணைக்கு முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது. இதன்மூலம் 871 ஏக்கர் விவசாய நிலங்கள் பலனடைந்து வருகின்றன.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #9 - கிருஷ்ணகிரி 200 - இன்ஃபோ புக்

56. கண்டர கூளி மாராயன் பெருவெளி வாய்க்கால்

கி.பி.13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பெண்ணேசுவர மட கோயில் கல்வெட்டு, பெரிய ஏரி எனப்படும் பாரூர் ஏரியில் நூறு குழி நிலம் கோயிலுக்கு வழங்கியதையும், தேவாரப்பள்ளி ஒன்று இருந்ததையும் குறிப்பிடுகின்றது. இந்த நிலங்களுக்கு பாரூர் ஏரியிலிருந்து நீர் கொண்டுசெல்வதற்காக கண்டரகூளி மாராயன் பெருவெளி வாய்க்கால் உருவாக்கப்பட்டது. கி.பி.1886 ல் ஆங்கிலேயர் இதை கான்கிரீட் கால்வாயாகவும், தடுப்பணையாகவும் கட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

57. பாரூர் ஏரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்று பாரூர் ஏரி. ஏரியின் நீர்ப்பிடிப்பு பரப்பளவு 688 ஏக்கர். இதன் நீர்ப்பிடிப்பு உயரம் 15.6 அடிகள். தென்பெண்ணை ஆற்றிலிருந்து தண்ணீர் பெற்று சுற்றியுள்ள பகுதிகளுக்கு பாசனம் அளிக்கும் அமைப்பாக இருந்துவருகிறது பாரூர் ஏரி. இந்த ஏரிமூலம் 4,729 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன.

58. கிருஷ்ணகிரி பெரிய ஏரி

கிருஷ்ணகிரி அருகே உள்ள கல்லுகுறுக்கி என்ற இடத்திலுள்ள படேதலாவ் ஏரி என்றழைக்கப்படும் பெரிய ஏரி சிறப்பு வாய்ந்தது. 269 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.

59. குட்டை

இம்மாவட்டதில் `குட்டை' என்ற சொல் புழங்குகிறது. பொதுவாகக் குட்டை என்பது சிறிய நீர்நிலைகளை குறிக்கும். ஆனால், குட்டை என்பது குன்று (சிறு குன்று) என்ற அர்த்தத்தில் இங்கே புழங்குகிறது. இதில் பையூருக்கு அருகேயுள்ள சொக்கன் குட்டை, பூலாகுட்டை, ராஜன் குட்டை என்று பல ஊர்பெயர்கள் குட்டை என்ற பெயரில் முடிகிறது.

60. நீர்ச் சுனைகள்

மாவட்டத்தில் மலைகள் நிறைந்திருப்பதால், ஒவ்வொரு மலையிலும் பல நீர்ச்சுனைகள் இருக்கின்றன. பாறைகளின் பள்ளங்களில் தேங்கும் நீர்தான் சுனைநீர். தெளிந்த, குளிர்ந்த நீர்தான் இந்த நீரின் தன்மை.

61. விவசாயம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேட்டு நில விவசாயத்தை (அதாவது மழைக்கு மட்டுமே பயிர் வைக்கும் விவசாயத்தை) `கொல்லை' விவசாயம் என்றும், ஆறு, ஏரி, கிணற்று நீரைக் கொண்டு செய்யப்படும் விவசாயத்தை `கழனி' விவசாயம் என்றும் அழைக்கிறார்கள்.

62. வனம்

வன நிலங்கள் நிறைந்துள்ள மாவட்டங்களில் கிருஷ்ணகிரியும் ஒன்று. இம்மாவட்டத்தில் 2,024 ச.கி.மீ பரப்பளவில் வன நிலங்கள் இருக்கின்றன. மலைத்தொடர் பகுதி மேலகிரி என்று அழைக்கப்படுகிறது. தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி பகுதிகளில் உள்ள மலைத்தொடர், மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக அடர்ந்த வனமாக இருந்துவருகிறது. மூங்கில் காடுகள், புதர்க்காடுகள் எனப் பலவகையான காடுகள் அடர்ந்துள்ளன.

63. முக்கிய கோட்டைகள்

தகனகிரி கோட்டை (பெரியமலை எனப்படும் மலைமீது அமைந்துள்ள கோட்டை), தட்டக்கல் கோட்டை, ஜெகதேவிக் கோட்டை, பால கொன்றாயன் துர்க்கம், கிருஷ்ணகிரி கோட்டை, நாகமலை கோட்டை, ராயக்கோட்டை, மல்லப்பாடி துர்க்கம், மகாராஜாக்கடை துர்க்கம், போளு திம்மராய துர்க்கம், வீரபத்திர துர்க்கம், மத்தூர் கோட்டை (தரைக் கோட்டை), தென்கரைக் கோட்டை, காவேரிப்பட்டணம் கோட்டை (தரைக்கோட்டை), ஓசூர்கோட்டை (தரைக்கோட்டை) ஆகியவையாகும்.

64. கோட்டைகளில் இருப்பவை

மலைக்கோட்டைகள் இன்றும் போரில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான வீரர்களுக்கு மௌன சாட்சியாக கம்பீரமாக நிற்கின்றன. இந்தக் கோட்டைகளில் சுவர், குதிரை லாயம், யானை லாயம், வீரர்கள் தங்கும் இடம், வெடிபொருள் கிடங்கு, ஆயுதக் கிடங்கு, தானியக் களஞ்சியம், கோட்டைக்கு நீர் தரும் சுனைகள், எதிரிகளைக் கண்காணிக்கும் மதில் சுவர் என்று வியக்கத்தக்க அமைப்புகள் இன்றும் கோட்டைகளில் இருக்கின்றன.

65.இருளர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மலைகள் அதிகமாக இருப்பதால், இருளர், குரும்பர் போன்ற பழங்குடி மக்கள் பரவலாக வசித்துவருகின்றனர்.

நிர்வாகம்

66. உருவாக்கம்

2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி உருவாக்கப்பட்டது கிருஷ்ணகிரி மாவட்டம். இதற்கு முன்பு தருமபுரி மாவட்டத்தில் இருந்தது. அலுவல் விஷயமாக மக்கள் தருமபுரிக்குச் செல்ல நீண்ட நேரம் ஆவதாலும், நிர்வாகக் காரணங்களாலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் 30-வது மாவட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.

67. மக்கள் தொகை   

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 18,79,809 பேர். இதில் ஆண்களின் எண்ணிக்கை 9,60,232, பெண்களின் எண்ணிக்கை 9,19,577 ஆகும். பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 956 பெண்களாக இருக்கிறது. பிறப்பு விகிதம் 15.6 ஆகவும் இறப்பு விகிதம் 4.7 ஆகவும் உள்ளது.

68. நகர்புற மக்கள் தொகை

கிருஷ்ணகிரி, ஓசூர் முக்கிய நகரங்கள். இதையடுத்து ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை, பர்கூர், காவேரிப்பட்டணம் சிறு நகரங்களாக உள்ளன. நகர்ப்புற பகுதிகளில் வசிப்போரின் எண்ணிக்கை 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 14,51,446 எனவும் கிராமப்புற பகுதிகளில் வசிப்போரின் எண்ணிக்கை 4,28,363 எனவும் உள்ளது.

69. எழுத்தறிவு விகிதம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் படித்தவர்களின் சதவிகிதம் 72.41 சதவிகிதமாக உள்ளது. இதில் ஆண்கள் 79.65 சதவிகிதமும் பெண்கள் 64.86 சதவிகிதமும் எழுத்தறிவு பெற்றவர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

70. வருவாய் கோட்டங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் நிர்வாக வசதிக்காக கிருஷ்ணகிரி, ஓசூர் என இரண்டு வருவாய் கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வருவாய் கோட்டம் சார் ஆட்சியர்,துணை ஆட்சியரின் தலைமையின் கீழ் இயங்குகிறது. கிருஷ்ணகிரி வருவாய்க் கோட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, பர்கூர், ஊத்தங்கரை ஆகியவை வருவாய் வட்டங்களாக இருக்கின்றன. ஓசூர் வருவாய் கோட்டத்தின் கீழ் ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி ஆகியவை வருவாய் வட்டங்களாக இருந்து வருகின்றன. மொத்தம் 7 வருவாய் வட்டங்கள் உள்ளன. இதோடு 636 வருவாய் கிராமங்கள் உள்ளன.

71. ஊராட்சி ஒன்றியங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை 10. கெலமங்கலம், தளி, கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, சூளகிரி, ஓசூர், காவேரிப்பட்டணம், பர்கூர், ஊத்தங்கரை, மத்தூர் ஆகியவையாகும்.

72. சட்டமன்றத் தொகுதிகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கிருஷ்ணகிரி, ஓசூர், தளி, ஊத்தங்கரை(தனி), பர்கூர், வேப்பனஹள்ளி ஆகியவையாகும். இதில் தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் ஊத்தங்கரை, வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதிகள் உருவாக்கப்பட்டன. காவேரிப்பட்டணம் சட்டமன்றத் தொகுதி நீக்கப்பட்டது.

73. நாடாளுமன்றத் தொகுதி

மாவட்டத்தில் ஒரேயொரு நாடாளுமன்றத் தொகுதிதான் உள்ளது. அது கிருஷ்ணகிரி தொகுதியாக உள்ளது. 1951 முதல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 16 நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் அதிக முறை காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது. மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறார் மறைந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி.


74. வாக்காளர்களின் எண்ணிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 14,99,992 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 7,60,473 ஆண் வாக்காளர்களும், 7,39,315 பெண் வாக்காளர்களும், 204 இதர வாக்காளர்களும் உள்ளனர்.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #9 - கிருஷ்ணகிரி 200 - இன்ஃபோ புக்

75. பேரூராட்சிகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர் என 2 நகராட்சிகளும், பர்கூர், காவேரிப்பட்டணம், ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், நாகோஜனஅள்ளி என 6 பேரூராட்சிகளும் உள்ளன.

76. 8-வது இடம்

மக்கள் தொகை அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழகத்திலேயே 8-வது மாவட்டமாக உள்ளது. மாவட்டத்தில் ஒரு சதுர கி.மீட்டருக்கு 367 பேர் வசிக்கின்றனர்.

77. அதிக கிராமங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 636 கிராமங்கள் உள்ளன. இவற்றில் அதிக கிராமங்களைக்  கொண்ட தாலுகாவாக ஊத்தங்கரை உள்ளது. இந்த தாலுக்காவில் 182 கிராமங்கள் உள்ளன. குறைந்த கிராமங்களைக் கொண்ட தாலுகாவாக போச்சம்பள்ளி உள்ளது. இந்த தாலுக்காவில் 39 கிராமங்கள் உள்ளன.

78. அதிக மக்கள்தொகை கிராமம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 16,578 பேர் வசித்துவரும் அஞ்செட்டி கிராமம், அதிக மக்கள்தொகை கொண்ட கிராமமமாக உள்ளது.

79. பெரிய கிராமம்

தேன்கனிக்கோட்டை தாலுகா தண்ணீர் பந்தல் என்கிற கிராமம், அதிக பரப்பளவு (6675.16 ஹெக்டேர்) கொண்ட கிராமமமாக உள்ளது.

80. 200 ஆண்டுகள் ஆன நீதிமன்றம்

கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை சாலையில் இயங்கிவரும் நீதிமன்றம், 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த நீதிமன்றம், சேலம் ஜில்லாவில்  முக்கிய நீதிமன்றமாக இருந்திருக்கிறது.

81. இசைப் பள்ளி

கிருஷ்ணகிரியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு இசைப் பள்ளி இயங்கிவருகிறது. இந்த பள்ளியில், குரலிசை, பரதநாட்டியம், மிருதங்கம், தவில், ஓதுவார் போன்ற இசைப் பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன.

82. ரயில் பாதை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சேலம்-பெங்களூரு, சேலம்-சென்னை என இரண்டு ரயில் பாதைகள் செல்கின்றன. மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரிக்கு ரயில் வசதி கிடையாது.

83. காவல் நிலையங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 34 காவல் நிலையங்கள் உள்ளன. இதில் அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் அடக்கம். இங்கு விபத்து, கொலை, கொள்ளை, வழிப்பறி என வழக்குகள் பதிவாகின்றன.

84. காவிரி-தென்பெண்ணை-பாலாறு இணைப்புக் கால்வாய்

காவிரி ஆற்றைத் தென்பெண்ணையாற்றோடு இணைத்துப் பிறகு அவற்றைப் பாலாற்றுடன் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை நீண்ட நாள்களாக இருந்துவருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்துக்குள் நுழையும் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது, உபரி நீரை தென்பெண்ணையாற்றில் கொண்டுவந்து சேர்க்க வேண்டும். இதன்மூலம் கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்கள் பயன்பெற வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்துவருகிறது.

85. பையூர் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையம்

இந்த ஆராய்ச்சி மையம் 1973 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. காவேரிப்பட்டணம்-காரிமங்கலத்துக்கு இடையே உள்ள பையூரில் அமைந்திருக்கிறது. இங்கு, நெல் ஆராய்ச்சிக்கு  முக்கியத்துவம் கொடுத்து அதிக நெல் ரகங்கள் உருவாக்கப்படுகிறது.

86. அரசுத் தோட்டக்கலைப் பண்ணை

காவேரிப்பட்டணம் அடுத்த திம்மாபுரம், ஜீனூரில்  அமைந்திருக்கிறது அரசுத் தோட்டக்கலைப் பண்ணை. இங்கு மா, பலா போன்ற பழ மர வகை கன்றுகளும், மரக்கன்றுகளும் உருவாக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது.

87. மாவட்ட மைய நூலகம்

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே பெங்களூரு சாலையில் அமைந்திருக்கிறது மாவட்ட மைய நூலகம். மாவட்டத்திலேயே பெரிய நூலகம் இது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 115 நூலகங்கள் இருக்கின்றன.

88. கால்நடைப் பயிற்சி மையம்

கிருஷ்ணகிரியில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இங்கு, விவசாயிகளுக்கு மாதந்தோறும் கால்நடை வளர்ப்பு தொடர்பான இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன.

89. ஆசிரியர் பயிற்சி நிறுவனம்

கிருஷ்ணகிரியில் 1989-90 ஆம் ஆண்டு காலத்தில் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் தொடங்கப்பட்டது. மாவட்டத்தில் இருக்கும் ஒரே ஒரு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் இது. கிருஷ்ணகிரியிலிருந்து 5 கி.மீ தொலைவில், சென்னை சாலையில் அமைந்திருக்கிறது.

90. அரசு கால்நடைப் பண்ணை

ஓசூரை அடுத்த மத்திகிரியில் 1,641.41 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது அரசு கால்நடைப் பண்ணை. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது. இந்தப் பண்ணை ஆசியாவிலேயே மிகப் பெரியது.

91. கோழியின ஆராய்ச்சி மையம்

ஓசூரை அடுத்த மத்திகிரியில் உள்ள அரசு கால்நடை பண்ணைக்கு அருகே அமைந்திருக்கிறது கோழி வளர்ப்பு மற்றும் மேலாண்மை கல்லூரி. இங்கு, கோழி வளர்ப்பு சம்பந்தமான படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

92. ஓசூர் நகராட்சி

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் வால்டன் லிலியட், ஓசூரை சேலம் மாவட்டத்தின் தலைமையகமாக மாற்றி சில ஆண்டுகள் ஆட்சி செய்தனர். சுதந்திரத்துக்குப் பிறகு 1962 ல் தேர்வுநிலை பேரூராட்சியாக ஆன ஓசூர், 1992 ல் நகராட்சியாக மாறியது.

93. கல்லூரிகள்

1964 ஆம் ஆண்டில், முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி. சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக இயங்கிவருகிறது.

94. பெரியார் பல்கலைக்கழகம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் அனைத்து அரசு மற்றும் தனியார் கலைக் கல்லூரிகளும் பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவருகின்றன. சேலத்தில் அமைந்திருக்கும் பெரியார் பல்கலைக்கழகம் 1997 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #9 - கிருஷ்ணகிரி 200 - இன்ஃபோ புக்

95. ஓசூர் அரசு கலைக் கல்லூரி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த தின்னூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி செயல்படுகிறது. இக்கல்லூரி, 2013 செப்டம்பர் மாதம் தமிழக அரசால் துவங்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு தின்னூரில் புதிதாகக் கட்டடங்கள் கட்டப்பட்டு செயல்படுகிறது.

96. மகளிர் கல்லூரிகள்

கிருஷ்ணகிரியில் அன்னை சந்தியா அரசு பெண்கள் கலைக் கல்லூரி என்ற பெயரில் 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது, அரசு மகளிர் கலைக் கல்லூரி என்று மாற்றம் பெற்று செயல்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் இக்கல்லூரி அமைந்துள்ளது. இதைத்  தவிர பர்கூரிலும் அரசு மகளிர் கலைக் கல்லூரி இருக்கிறது.

97. அரசு பொறியியல் கல்லூரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1994 ஆம் ஆண்டு முதல் அரசு பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. தற்போது பர்கூர் அருகேயுள்ள மாதேப்பள்ளியில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் அனைத்து வசதிகளுடன்கூடிய கட்டடங்களோடு 2000 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவருகிறது.

98. மாங்கனிக் கண்காட்சி

மாங்கனித் திருவிழா என்ற பெயரில் ஆண்டுதோறும் கிருஷ்ணகிரியில் மாங்கனிக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாம்பழ சீசன் காலமான ஜூன் மாதத்தில் இந்தக் கண்காட்சி நடத்தப்படும்.

தொழில்கள்

99. கிரானைட்

‘பாரடைஸ்’ என்று அழைக்கப்படும் பல வண்ண கிரானைட் கற்கள், கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதிலுமே கிடைக்கின்றன. அதேபோன்று ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் கருங்கற்கள் அதிகம் கிடைக்கின்றன. குவார்ட்ஸ் வகையான கற்கள் தேன்கனிக்கோட்டை பகுதியிலும், சுண்ணாம்புக் கற்கள் ஊத்தங்கரைப் பகுதியிலும் கிடைக்கின்றன.

100.கிரானைட் ஏற்றுமதி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உருவாக்கப்படும் ‘பாரடைஸ்’ வகையான கிரானைட் ஸ்லாப்ஸ் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

101.கிரானைட் ஆலைகள்

கிரானைட் கல்லை பாலிஷ் செய்து, ஸ்லாப்களாக மாற்றி விற்பனை செய்து வரும் ஆலைகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. சூளகிரி, பர்கூர், ஜெகதேவி, கன்னன்டஹள்ளி உள்ளிட்ட ஊர்களில் ஆலைகளை அமைத்துச் செயல்பட்டுவருகின்றன.

வேளாண்மை

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கியத் தொழில் வேளாண்மைதான். மாவட்டம் முழுவதும் நெல், கேழ்வரகு, காய்கறிகள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், மா, தென்னை ஆகியவை முக்கியப் பயிர்களாக உள்ளன.

102. மா சாகுபடி

கிருஷ்ணகிரி மாவட்டம் மாங்கனிக்குப் புகழ் பெற்றது. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்து சேலம் மாவட்டமாக இருந்தபோது கிருஷ்ணகிரியில் விளையும் மாங்கனிகளால்தான் சேலத்து மாங்கனி என்று பெயர் பெற்றிருந்தது. இம்மாவட்டத்தில், முப்பதுக்கும் மேற்பட்ட மாம்பழ ரகங்கள் 30,017 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

103. மாம்பழச் சுவைக்குக் காரணம்

மாவட்டம் முழுவதும் பெரும்பான்மையான மாம்பழச் சாகுபடி மானாவாரியில் நடப்பதால், இந்த மாம்பழங்களுக்கு சுவை அதிகம். அதேபோல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் சுண்ணாம்பு கலந்த மண்வகையும், வறட்சியான காலநிலையும் இந்தப் பழங்களுக்கு சர்வதேச அளவில் சுவைக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திருக்கிறது.

104. கேழ்வரகுச் சாகுபடி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகமாக சாகுபடி செய்யப்படும் சிறுதானியம் கேழ்வரகு. இம்மாவட்டத்தில் 48,944 ஹெக்டேர் பரப்பளவில் கேழ்வரகுச் சாகுபடி நடந்துவருகிறது.

105. பயறு வகைப் பயிர்கள்

துவரை, அவரை, காராமணி, உளுந்து, பாசிப்பயறு உள்ளிட்ட பயறுவகைப் பயிர்கள் கேழ்வரகுக்கு அடுத்தபடியாக சாகுபடி செய்யப்படும் பயிராக உள்ளது. குறிப்பாக தேன்கனிக்கோட்டை, தளி, வேப்பனஹள்ளி என மாவட்டம் முழுவதும் 48,749 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

106. பட்டுக்கூடு வளர்ப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பட்டுக்கூடு வளர்ப்பில் 24,345  பேர் ஈடுபட்டு வருகின்றனர். பட்டுக்கூடுக்கு நல்ல விலை இருப்பதால், கிருஷ்ணகிரியிலும் ஓசூரிலும் பட்டுக்கூடு வளர்ப்புக்கு பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் சுமார் 3,475 ஹெக்டேர் பரப்பளவில் மல்பெரிச் சாகுபடி நடைபெற்று வருகிறது.

107.தோட்டக்கலைப் பயிர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் பீன்ஸ், காலிஃபிளவர், முட்டைக்கோஸ், தக்காளி போன்ற தோட்டக்கலை பயிர்கள், அதிக அளவில் சாகுபடி  செய்யப்படுகின்றன. 38,248 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

108. நெல், தென்னை

கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், அகரம், அரசம்பட்டி ஆகிய பகுதிகளில் நெல், தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்றுவருகிறது. 20,687 ஹெக்டேர் பரப்பளவில் நெல்லும், 13,192 ஹெக்டேர் பரப்பளவில் தென்னையும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

109. விலங்குகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானை முக்கிய விலங்காக இருந்துவருகிறது. குறிப்பாக தேன்கனிக்கோட்டையை ஒட்டிய மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதி 450 சதுரகிலோமீட்டர் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதோடு புள்ளிமான்கள், கொம்புமான்கள், காட்டுப்பன்றி, சிறுத்தை, காட்டெருமைகளும் உள்ளன. 

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #9 - கிருஷ்ணகிரி 200 - இன்ஃபோ புக்

110. பறவைகள்

அஞ்செட்டி பெரிய ஏரி, ஓசூரைச் சுற்றியுள்ள ஏரிகளுக்கு சீசன் காலங்களில் பறவைகள் இடம்பெயர்ந்து வந்து செல்கின்றன. பாரடைஸ் பிளை கேட்ச்சர், பெயின்டட் ஸ்டார்க், டீல்(வாத்து) ஆகிய பறவைகள் வந்து செல்கின்றன. இதைத் தவிர்த்து கொக்கு, குருவி வகைகளும் அதிக அளவில் வருகின்றன.

111. ஓசூர் சிப்காட்

தொழில்துறை நகரமான ஓசூரில் 1974 ஆம் ஆண்டு சிப்காட் தொடங்கப்பட்டது. பெங்களூருவிலிருந்து 35 கி.மீ தொலைவில் இருக்கிறது ஓசூர்.

112. சிப்காட் பரப்பளவு

ஆரம்பத்தில் 1,236 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்டது ஓசூர் சிப்காட். இதற்கடுத்து761 ஏக்கரில் பேஸ்-2, 179 ஏக்கரில் பேஸ்-3, 224 ஏக்கரில் பேஸ்-4 என மொத்தம் 2,400 ஏக்கர் பரப்பளவில் ஓசூர் சிப்காட், பரந்த இடத்தில் இயங்கி வருகிறது.

113. தொழிற்சாலைகள்

மோட்டார், உதிரிப் பாகங்கள், வாட்ச்சுகள், மருந்துப் பொருள்கள் என சுமார் 8,533 தொழிற்சாலைகள் பதிவு செய்யப்பட்டு, ஓசூரில் இயங்கி வருகின்றன. பேஸ் 1-ல் தொடங்கி இன்று பேஸ் 4 வரை செயல்பட்டு வருகின்றன.

114. ஓசூரில் இயங்கும் முக்கிய கம்பெனிகள்

அசோக் லேலண்ட்(மோட்டார்ஸ்), டி.வி.எஸ் மோட்டார்ஸ், டைட்டன் இண்டஸ்ட்ரீஸ் (வாட்ச் & ஜூவல்லரி), சுந்தரம் கிளேட்டன் (இருசக்கர வாகன உதிரிப் பாகங்கள்), டனேஜா ஏரோ ஸ்பேஸ் & ஏவியேஷன் (கருவிகள் உற்பத்தி), ஏ.வி டெக், கார்போரண்டம் யுனிவர்சல், டி.டி.கே பிரஸ்டீஜ், இந்தியா பிஸ்டன், குளோபல் கால்சியம்(மருந்துப் பொருள்கள்), ஏ.டி.சி சிகரெட் தயாரிக்கும் கம்பெனி, கொசு வத்தி தயாரிக்கும் கம்பெனி, பேட்டா ஷூ கம்பெனி உள்ளிட்ட பல தொழிற்சாலை கள் இயங்கி வருகின்றன.

115. டி.வி.எஸ் மோட்டார் கம்பெனி

இந்த கம்பெனி 1978ஆம் ஆண்டு ஓசூரில் தொடங்கப் பட்டது. இதன் தலைமையகம் சென்னையில் உள்ளது. இதன்மூலம் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்துவருகிறது. இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய மோட்டார் நிறுவனமாக இருந்து வருகிறது டி.வி.எஸ்.

116. அசோக் லே லண்ட்

கமர்ஷியல் மோட்டார் தயாரிப்பில் இந்திய அளவில் இரண்டாவது இடமும், உலக அளவில் நான்காவது இடமும் பெற்றிருக்கிறது அசோக் லே லண்ட் நிறுவனம். இந்நிறுவனத்தின் இரண்டாவது பிளான்ட் 1980ல் ஓசூரில் நிறுவப்பட்டது. தற்போது ஓசூரில் பேஸ் 1, 2 என்ற இரண்டு பிளான்ட்கள் செயல்பட்டு வருகிறது.

117. டி.வி.எஸ் கிளேட்டன்

டி.வி.எஸ் நிறுவனம் 1962ல் கிளேட்டன் என்னும் ஐரோப்பிய நிறுவனத்துடன் இணைந்து இருசக்கர வாகன உதிரிப் பாகங்களை உற்பத்தி செய்து வருகிறது. பிரேக், கம்ப்ரஸர், எக்ஸாஸ்ட்ஸ் எனப் பல இருசக்கர வாகன பாகங்களை உற்பத்திசெய்கிறது. இந்த கம்பெனி 1978 ல் ஓசூரில் நிறுவப்பட்டது.

118. டி.வி.எஸ் 50

1980 களில் இந்தியாவையே கலக்கிய டி.வி.எஸ்50 என்ற இருசக்கர வாகனம் ஓசூரில் நிறுவப்பட்ட பிளான்ட்டிலிருந்து தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

119. டைட்டன் வாட்ச் கம்பெனி

இந்தியாவில் பிரபலமாக உள்ள வாட்ச் கம்பெனி டைட்டன். இந்த கம்பெனி 1984ல் ஓசூரில் நிறுவப்பட்டது. டைட்டன், ஃபாஸ்ட் டிராக் ஆகிய வாட்ச்சுகளைத் தயாரித்துவருகிறது. இதோடு டனிஷ்க் என்ற பெயரில் ஆபரணங்களையும் தயாரித்து வருகிறது.

120. பர்கூர் சிப்காட்

பர்கூர் சிப்காட் 1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பர்கூருக்கு அருகே ஜெகதேவி சாலையில் ஒரு பிரிவும், போச்சம்பள்ளியில் இருந்து கல்லாவி சாலையில் 8 கி.மீ தொலைவில் இன்னொரு பிரிவும் செயல்படுகிறது. சிப்காட், 1,393 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கிறது.

தொழில் வளங்கள்

121. தக்காளி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் காய்கறி வகைகளில் தக்காளியும் ஒன்று. சென்னை, தஞ்சாவூர், கேரளா, சிங்கப்பூர், துபாய் என்று பல இடங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

122. தக்காளிச் சாகுபடி பகுதிகள்

கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, காவேரிப்பட்டணம், வேப்பனஹள்ளி, சூளகிரி, தளி ஆகிய 6 ஒன்றியங்களில் 50 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக தக்காளி நடவு செய்யப்படுறது. எல்லாமே இறவைப் பாசன விவசாயம்தான். தக்காளியை எளிதில் விற்பனை செய்ய முடிவதாலும், இதற்கென சந்தை இருப்பதாலும் விவசாயிகளால் விரும்பி சாகுபடி செய்யப்படுகிறது.

123. பிரத்யேக சந்தை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் முக்கிய சந்தை ராயக்கோட்டை தக்காளி மார்க்கெட். சீசனில் நாள் ஒன்றுக்கு 200 லோடு தக்காளி இங்கு விற்பனைக்கு வரும். சென்னை, புதுச்சேரி தவிர ஆந்திரா, கர்நாடகம், கேரளா மாநில வியாபாரிகளும் இங்கு வந்து கொள்முதல் செய்கிறார்கள்.

124. நாற்றுகள்

ராயக்கோட்டை தக்காளி மார்க்கெட்டை ஒட்டிய பகுதிகளில் தக்காளி, முட்டைகோஸ், காலிஃபிளவர் நாற்றுகள் அதிக அளவில் உற்பத்தி செய்யும் நர்சரிகள் செயல்பட்டுவருகின்றன. ரெடிமேடாக நாற்றுகள் குறைந்த விலையில் கிடைப்பதால், தக்காளி விரும்பி சாகுபடி செய்யப்படுகிறது.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #9 - கிருஷ்ணகிரி 200 - இன்ஃபோ புக்

125. பத்தலப்பள்ளி காய்கறிச் சந்தை

ஓசூர் நகரில் அமைந்திருக்கும் பத்தலப்பள்ளி காய்கறிச் சந்தை பீன்ஸ், முட்டைகோஸ், கேரட், நூக்கல் போன்ற காய்கறிகளை அதிக அளவில் வெளியூர்களுக்கு அனுப்புவதில் முன்னணியில் இருக்கிறது.

126. புளி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,362 ஹெக்டேர் பரப்பளவில் புளி சாகுபடி செய்யப்படுகிறது. ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை போன்ற பகுதிகளில் அதிகம் புளி சேகரிக்கப்பட்டு, ஓடு நீக்கி, விதை நீக்கி விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

127. உரிகம் புளி

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் எல்லையில் உள்ள ஊர் உரிகம். வனப்பகுதிக்குள் அமைந்திருக்கும் இந்த ஊரில், பாரம்பர்ய பெருமைமிக்க புளிய மரங்கள் உள்ளன. இந்தப் புளியமரங்களில் காய்க்கும் புளி நீண்டதாகவும் சுவை மிக்கதாகவும் இருக்கின்றன. அதற்கு ‘உரிகம் புளி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் புளியை பரவலாக்கும் வகையில் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், புளிய மரக்கன்றுகளை உற்பத்திசெய்து பரவலாக்கி வருகிறது.இதற்குப் புவிசார் குறியீடும் பெறப்பட்டுள்ளது.

128. பிலிக்குண்டு

கர்நாடகத்திலிருந்து வரும் காவிரி ஆறு நுழையும் இடம் பிலிக்குண்டு. இந்தியாவின் நதிநீர்ப் பங்கீட்டில் துல்லியமாக நீரை அளவிடும் முறை எந்த மாநிலத்திலும் இல்லை. அது, பிலிக்குண்டுவில் அமைந்திருக்கிறது.

129. துரிஞ்சல் இலை மாடுகள்

அதிக மலைகளைக் கொண்ட மாவட்டமாக இருப்பதால், இந்த மலைகளில் துரிஞ்சல் இலை மரங்கள் பரவிக் காணப்படுகின்றன. இந்த இலைகளை பெரும்பான்மையான ஆடு, மாடுகள் சாப்பிடாது. ஆனால், துரிஞ்சல் இலை மாடுகள் என்றழைக்கப்படும் ஒருவகையான நாட்டு மாடு, இந்த இலைகளை விரும்பிச் சாப்பிடுகிறது.

130. மலர்ச் சாகுபடி

ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி பகுதிகளில் ரோஜா, சாமந்தி ஆகியவை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. காவேரிப்பட்டணம், வேலம்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் மல்லிகைப் பூ, முல்லைப் பூ அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மகராஜக்கடை, வேப்பனஹள்ளி பகுதிகளில் கனகாம்பரம், சாமந்தி அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

131. மலர் மகத்துவ மையம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தளி, தேன்கனிக்கோட்டை, ஓசூர், சூளகிரி பகுதியில் அதிக அளவில் மலர் சாகுபடி நடப்பதால், தளியில் மலர் மகத்துவ மையத்தை அமைக்க அரசு அறிவித்திருக்கிறது. மலர் சாகுபடி சம்பந்தமான விவரங்களை விவசாயிகளுக்கு இந்த மையம் வழங்கும்.

132. ஆடு வளர்ப்பு

வெள்ளாடு வளர்ப்பு, செம்மறியாடு வளர்ப்பு விவசாய உப தொழில்களில் முக்கிய இடம் பெறுகிறது. மலைகள் நிறைந்த மாவட்டம் என்பதால் வெள்ளாடு வளர்ப்பு முக்கிய அங்கம் வகிக்கிறது.

133. சந்தூர் மாங்கன்றுகள்

போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தூர் என்ற ஊரில் மாங்கன்றுகள், கொய்யா, பலா, தென்னங்கன்றுகள் அதிக அளவில் உற்பத்திசெய்யப்படுகின்றன. அதுவும் மாங்கன்றுகள் அதிக அளவில் ஒட்டுக்கட்டி விற்பனை செய்யப்படுகின்றன.

134. தட்டுவடை (நிப்பெட்டு)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அதிக அளவில் விரும்பி உண்ணப்படும் நொறுக்குத் தீனிகளில் நிப்பெட்டு என்றழைக்கப்படும் தட்டுவடை முக்கியமானது. குடிசைத் தொழிலாக காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி போன்ற ஊர்களில் தயாரிக்கப்படுகிறது. இங்கிருந்து புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம் ஆகிய ஊர்களுக்கு அனுப்பப்படுகிறது.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #9 - கிருஷ்ணகிரி 200 - இன்ஃபோ புக்

135. போச்சம்பள்ளி சந்தை

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வாரச்சந்தை நடைபெற்றுவருகிறது. தானியங்கள், நெல், காய்கறிகள் என்று பலவிதமான பொருள்கள் விற்பனையாகின்றன. இதோடு ஆடு, மாடுகளும் பெரும் அளவில் விற்பனையாகின்றன. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெற்றுவருகிறது.

136. ஆட்டுச் சந்தை

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெறும் கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப்பள்ளி ஆட்டுச் சந்தை பிரசித்திபெற்றது. இச்சந்தையில் வெள்ளாடுகள், செம்மறியாடுகள் விற்பனையாகின்றன. இதைத்தவிர மாடுகளும் அதிக அளவில் விற்பனையாகின்றன.

137. இன்னபிற சந்தைகள்

காவேரிப்பட்டணத்தில் சனிக்கிழமை சந்தை, பர்கூரில் செவ்வாய்ச் சந்தை, ஒரப்பத்தில் புதன்கிழமை சந்தை, கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை சந்தை, ஜெகதேவியில் திங்கள்கிழமை சந்தை என ஒவ்வொரு ஊரிலும் சந்தை நடைபெற்றுவருகிறது.

138. மாம்பழக் கூழ்

இந்தியாவிலேயே மாம்பழக் கூழ் அதிகமாக தயாரிப்பதில், கிருஷ்ணகிரி மாவட்டம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. மாம்பழக்கூழ் ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு 400-500 கோடி வர்த்தகம் நடைபெறுகிறது.  மாவட்டத்தில் 53 மாம்ழபழக் கூழ் தொழிற்சாலைகள் உள்ளன. நாட்டின் மாம்ழபழக் கூழ் உற்பத்தியில் 75 சதவிகித பங்களிப்பு இம்மாவட்டம் அளிக்கிறது.

139. பால்கோவா

காவேரிப்பட்டணத்தைச் சுற்றியுள்ள ஊர்களில் பால் உற்பத்தி அதிகம். அதனால், பாலை வாங்கி கோவாவாக கிண்டி, இங்கிருந்து நாள்தோறும் பெங்களூரு, புதுச்சேரி எனப் பல ஊர்களுக்கு அதிக அளவில் அனுப்பப்படுகிறது.

140. பனைவெல்லம்

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், பனைவெல்லம் தயாரிக்கும் தொழில் பரவலாக நடைபெற்று வருகிறது. மத்தூரைச் சுற்றியுள்ள கவுண்டனூர், கண்ணண்டஅள்ளி, கரடி கொல்லப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பனைமரங்கள் அதிக அளவில் உள்ளன.

141.ஆலம்பாடி மாடுகள்

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆலம்பாடி இன நாட்டு மாடுகள் பெருமளவில் உள்ளன. முகம், கழுத்தைச் சுற்றி வெள்ளைத் தழும்புகள், கோடுகளுடன் இந்த வகையான மாடுகள் இருக்கும். ஆலம்பாடி என்கிற ஊர், தமிழக கர்நாடக எல்லைப்பகுதியில் உள்ளது.

142.தொழிலாளர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 8,77,779 பேர். இதில் விவசாயம் செய்பவர்கள் 2,36,038 பேர். விவசாயக் கூலித் தொழிலாளர்கள் 2,63,328 பேர். தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் 21,918 பேர். இதர தொழில்களில் ஈடுபட்டுள்ளோர் 3,56,495 பேர்.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #9 - கிருஷ்ணகிரி 200 - இன்ஃபோ புக்

முக்கிய ஊர்கள்

143. காவேரிப்பட்டணம்

‘பட்டினம்’ என்பது கடற்கரை நகரங்களைக் குறிக்கும். ‘பட்டணம்’ என்பது ஆற்றங்கரையோரம் உள்ள ஊர்களைக் குறிக்கும். அந்த வகையில் தென்பெண்ணையாற்றங்கரையில் அமைந்துள்ள ஊர் காவேரிப்பட்டணம். ஊரைச் சுற்றிலும் நெல், மல்லி, காய்கறிகள், மாங்காய் ஆகியன சாகுபடி செய்யப்படுகின்றன. பேரூராட்சியான காவேரிப்பட்டணம், 0.91 சதுர கி.மீ பரப்பளவு கொண்டதாகும். 15,000 பேருக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

144. நெடுங்கல்

காவேரிப்பட்டணத்திலிருந்து பாரூர், பண்ணந்தூர் போன்ற ஊர்களுக்குச் செல்லும் வழியில் இருக்கிறது நெடுங்கல் கிராமம். இந்த ஊருக்கு அருகில் சுமார் 1,000 அடி உயரத்தில், ஒற்றைக்கல்லாக பிரமாண்டமாக நிற்கிறது நெடுங்கல். இந்த நெடுங்கல்லைச் சுற்றி குன்றுகள் அமைந்துள்ளன. இந்தக் கல்லால்தான் இந்த ஊருக்கே இந்தப் பெயர் வந்ததாகச் சொல்கிறார்கள்.

145. ஓசூர் பெயர்க் காரணம்

ஓசூரின் பெயர், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பெயரில் அழைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் செவிடபாடி, சூடாவாடி, முரசு நாடு என்று அழைக்கப்பட்டுள்ளது. கடைசியாக ‘ஹொசாவூரு’ என்று அழைக்கப்பட்டுள்ளது. கன்னடப் பெயரில் இருக்கும் ‘ஹொசவூரே’ பிறகு ‘ஓசூரு’ என்றாகி இப்போது ‘ஓசூர்’ என்று அழைக்கப்படுகிறது.

146. தேர்ப்பேட்டை

இன்றைய ஓசூரின் முகம், தொழிற்சாலைகளும், பரந்து விரிந்த நெடுஞ்சாலைகளாகவும் பார்க்கப்படுகிறது. ஓசூரின் பழைய இடம், தேர்ப்பேட்டை என்று அழைக்கப்படும் பகுதியாகும். இங்குள்ள மரகதம்பாள் தேரோட்டம் பிரசித்தி பெற்றது. அதனால்தான் தேர்ப்பேட்டை என்று அழைக்கப்படுகிறது.

147.பழைய பேட்டை

கிருஷ்ணகிரி சையத்பாஷா மலையை ஒட்டி இருக்கும் பகுதியே பழையபேட்டை என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் முஸ்லிம் மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். நெல், புளி, வெல்லம், மிளகாய் சந்தையும் நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரியின் பழைய பகுதி இதுவே. கிருஷ்ணகிரி நகர பேருந்து நிலையமும் இங்கேதான் அமைந்துள்ளது.

148. போச்சம்பள்ளி

கிருஷ்ணகிரியிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது போச்சம்பள்ளி. தருமபுரி-சென்னை சாலையில் அமைந்துள்ள முக்கிய ஊர். தற்போது தாலுகாவாக மாற்றப்பட்டுள்ளது. இங்கிருந்து மத்தூர், தருமபுரி, கல்லாவி, திருப்பத்தூர், ஊத்தங்கரை ஆகிய ஊர்களுக்கு போக்குவரத்து இணைப்பு உள்ளது.

149. தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை 1982 ல் தேர்வுநிலை பேரூராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. இப்பேரூராட்சியின் மொத்தப் பரப்பளவு, 13.26 சதுர கிலோமீட்டர். 18 வார்டுகளைக் கொண்ட இப்பேரூராட்சியில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 24,160 பேர் வசித்து வருகின்றனர். இந்நகரம், தளி சட்டமன்றத் தொகுதியின் கீழ் வருகிறது.

150. பர்கூர்

பர்கூா் பேரூராட்சியானது 1969ஆம் ஆண்டு முதல்நிலை பேரூராட்சியாக அறிவிக்கப்பட்டது. 1986ல் முதல் தோ்வு நிலை பேரூராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்டது. பர்கூரில் விவசாயம், துணி வியாபாரக் கடைகள், மாம்பழக்கூழ் ஃபேக்டரிகள், தேங்காய் நார் ஃபேக்டரிகள் மற்றும் கிரானைட் கற்களை பாலீஷ் செய்யும் ஃபேக்டரிகள் அமைந்துள்ள நகரமாகும்.

151. புதிய தாலுகா

பர்கூரின் பரப்பளவு 22.50 சதுர கி.மீ. 16,366 பேர் வசித்து வருகின்றனர். தற்போது புதிய தாலுகாவாக மாற்றப்பட்டுள்ளது. பர்கூரில் 1500-க்கும் மேற்பட்ட ஜவுளிக் கடைகள் அமைந்துள்ளன. 15 வார்டுகள் உள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜவுளித் துணிகளுக்கு ஃபேமஸ் இந்த பர்கூர்.

152. கெலமங்கலம்

ஓசூரிலிருந்து 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கெலமங்கலம். ஆங்கிலேய காலத்தில் கர்நாடகத் தலைநகரமான பெங்களூரிலிருந்து, வர்த்தக நகரமான சேலத்தை இணைக்கும் இரும்புப் பாலம் கெலமங்கலத்தில் அமைந்துள்ளது. கன்னடம், உருது, தெலுங்கு, தமிழ் என 4 மொழிகளில் பேசும் மக்கள் வாழ்ந்துவருகின்றனர்.

153. கெலமங்கலம் பேருராட்சி

13,294 பேர் வசிக்கும் கெலமங்கலம், 1925லேயே டவுன் பஞ்சாயத்து என்ற அந்தஸ்தைப் பெற்றது. பிறகு 1969 ல் தரம் உயர்த்தப்பட்டு, 1987 முதல் தேர்வுநிலை பேரூராட்சியாக செயல்பட்டுவருகிறது.

154. ஜமாபந்தி

1830ஆம் ஆண்டிலேயே கெலமங்கலம் வருவாய் கிராமமாக இருந்துள்ளது. ஆங்கிலேயர் காலத்திலேயே முதன்முதலாக ஜமாபந்தி நடைபெற்ற இடம் கெலமங்கலம்.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #9 - கிருஷ்ணகிரி 200 - இன்ஃபோ புக்

155. நாகோஜனஅள்ளி

கிருஷ்ணகிாி மாவட்டம், நாகோஜனஅள்ளி, இரண்டாம் நிலை பேரூராட்சியாக 1968 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. தந்தை பொியார் தொடங்கி வைத்த அரசு மேல்நிலைப் பள்ளி இந்த ஊரில் உள்ளது. 10,493 பேர் மக்கள்தொகை கொண்ட நாகோஜனஅள்ளி, போச்சம்பள்ளி தாலுகாவில் உள்ளது.

156. ஊத்தங்கரை

ஊத்தங்கரை 1970ல் தோ்வுநிலை பேரூராட்சியானது. 17 ச.கி.மீ பரப்பளவு கொண்ட இந்த ஊரில், 18,470 (2011 கணக்கின்படி) பேர் வசித்துவருகின்றனர். ஊத்தங்கரையிலிருந்து அரூர் செல்லும் சாலையில் 12 கி.மீ தொலைவில் ஹனுமன் தீர்த்தம் என்னும் சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது.

157. ஊர்ப் பெயர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊர்ப் பெயர்களுக்குப் பிறகு அள்ளி, பட்டி, கொட்டாய், துர்க்கம், கிரி, பள்ளி என்ற பெயர்கள் வரும். இதில் அள்ளி என்பது கன்னட வார்த்தை. மக்கள் கூடி வாழும் இடம் என்பது இதற்குப் பெயர். அதேபோன்று கொட்டாய் என்பது நாலைந்து குடும்பங்கள் சேர்ந்து வாழும் இடமாக இருந்து வருகிறது. துர்க்கம், கிரி என்பது மலை என்பதைக் குறிக்கும்.

158. பெரியமலை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி, பாலேகுளி,  ஐகுந்தம் புதூர், வெப்பாலம்பட்டி, கூச்சக்கல்லூர் ஊர்களை ஒட்டி நீண்டு செல்கிறது இந்த மலை.. இதன் உயரம் சுமார் 5,000 அடிகள். மிக உயரமான இந்த மலையின்மீது ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்த மலையின் பின்பக்கத்தில் மத்திய பகுதியிலும், கீழ்புறத்திலும் புண்ணிய தீர்த்தம் உள்ளது.

கோயில் மற்றும் திருவிழாக்கள்

159. காலபைரவர்

கிருஷ்ணகிரி பெரிய ஏரிக்கு அருகில் அமைந்திருக்கும் ஸ்ரீகாலபைரவர் கோயில் பிரசித்தி பெற்றது. 12 ஆம் நூற்றாண்டில் இந்தக் கோயில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கிருஷ்ணகிரியைக் காக்கும் எல்லை காவல் தெய்வமாக இது வீற்றிருக்கிறது. ஒவ்வொரு திங்கள்கிழமையும் இங்கே பூஜைகள் நடைபெறும்.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #9 - கிருஷ்ணகிரி 200 - இன்ஃபோ புக்

160. வேணுகோபால சுவாமி கோயில்

தளியில் பரந்து விரிந்து அமைந்திருக்கும் இத்திருக்கோயிலில், கிருஷ்ண பகவானின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இயற்கையோடு இணைந்து இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. தளியில் என்றாலே குளு குளு குளிரும், பசுமையான இடங்களோடு, இந்தக் கோயிலையும் கண்குளிர தரிசிக்கலாம். மே மாதங்களில், இந்தக் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெறும்.

161. பெரியமலை தீர்த்தம்

காவேரிப்பட்டணத்திலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது பாலேகுளி கிராமம். இந்தக் கிராமத்துக்கு அருகில் இருக்கும் மலை பெரியமலை. இந்த மலையிலிருந்து இறங்கும் ஊற்றே பெரியமலை தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. ஆடி, புரட்டாசி மாதங்களில் இங்கு கூட்டம் அதிகமாக வரும்.

162. பெண்ணேஸ்வர மடம்

13-15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தமிழ்நாட்டிலேயே பனை மரத்தை தலைவிருட்சமாகக் கொண்ட கோயில் இது. பனை என்னும் பெயரிலிருந்தே பெண்ணை என்பது வந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. அதனாலேயே இக்கோயிலில் உள்ள சிவபெருமானுக்கு பெண்ணேஸ்வரன் என்ற பெயர் வந்தது என்கிறார்கள். இந்தக் கோயில் சோழர் கால பாணியிலும், விஜயநகர நாயக்கர் கலைபாணியிலும் அமைந்திருக்கிறது. சோழர்கள், நுளம்பர்கள், விஜயநகர மன்னர்கள் ஆட்சி செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில் இது.

163. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிரிவலம்

கிருஷ்ணகிரியில் கிரிவலம் செல்லும் சிவபெருமான் கோயில்களில் பெண்ணேஸ்வரர் மடம் கோயிலும் முக்கியமானது. பௌர்ணமி நாள்களில் மக்கள் கோயிலுக்கு அருகே இருக்கும் மலையைச் சுற்றி வருகின்றனர்.

164. காட்டிநாயனம்பள்ளி முருகர் கோயில்

கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரி (ஆடவர்) அருகில் இருக்கும் இந்த முருகன் கோயில், திருமணம் நடத்துவதற்குப் பிரசித்தி பெற்றது. சீசன் காலங்களில் ஒரு நாளைக்கு 50 திருமணங்கள்கூட நடப்பதுண்டு. 

165. சந்தனக்கூடு திருவிழா

தேன்கனிகோட்டையில் உள்ள தர்காவில் ஆண்டுதோறும் சந்தனக்கூடு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில், முஸ்லிம்களைத் தவிர இந்துக்களும் பெருமளவில் கலந்துகொள்கின்றனர். கிருஷ்ணகிரி, ஜெகதேவி, ஓசூர் என மாவட்டம் முழுவதும் உள்ள தர்காக்களில் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

166. பார்சுவா பத்மாவதி சக்தி பீடம்

கிருஷ்ணகிரிக்கு அருகே உள்ள சுண்டம்பட்டியில், ஜைன மத துறவியான ஸ்ரீசுவாமி பார்சுவநாத பகவான் 24-வது தீர்த்தங்கரர் அவதாரங்களில், 23-வது அவதாரமாகக் கருதப்படும் பார்சுவ பத்மாவதி கோயில் அமைந்துள்ளது. இந்த சக்தி பீடம், உலகிலேயே உள்ள அதிக உயரம் உள்ள சிலைகளைக் கொண்ட ஜெயின் கோயிலாகத் திகழ்கிறது. 

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #9 - கிருஷ்ணகிரி 200 - இன்ஃபோ புக்

167. அனுமன் தீர்த்த கதை

இக்கோயில், ஊத்தங்கரையை அடுத்த தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ளது. இதிகாச காலத்தில், ராமன் தீர்த்தமலையில் வழிபட கங்கை தீர்த்தம் கொண்டு வர அனுமனுக்கு பணிக்கப்பட்டது. ஆனால், குறித்த நேரத்திற்குள் அனுமன் கங்கை தீர்த்தத்தைக் கொண்டு வர இயலாத காரணத்தினால் ராமன் அஸ்திரபிரயோகம் செய்து வழிபாட்டை நிறைவுசெய்தார். காலதாமதமாக வந்த அனுமன் கோபம்கொண்டு, தன் கையில் இருந்த கங்கா தீர்த்தத்தைக் கொட்டினார். அதுவே, இன்றைய அனுமன் தீர்த்தமாக மாறியுள்ளது என்று புராண கால கதைகள் கூறுகின்றனர்.

168. பேட்டராய சுவாமி தேர்த் திருவிழா

தேன்கனிக்கோட்டையில் ஆண்டுதோறும் நடக்கும் முக்கிய விழா, விஷ்ணு பகவான் பேட்டராய சுவாமி கோயில் தேர்த் திருவிழா. மார்ச் – ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் இவ்விழாவுக்கு, இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகைபுரிகின்றனர்.

169. அரியக்காள், பெரியக்காள் திருவிழா

கிருஷ்ணகிரி மாவட்டம், அகரம் அருகில் உள்ள தென்பெண்ணையாற்றங்கரையில், ஆவத்துவாடியை ஒட்டிய தோப்பு ஒன்றில், மாசிமாதம் யுகாதி பண்டிகையின்போது இந்தத் திருவிழா கொண்டாடுப்படுகிறது. இவ்விழா, இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறது.

170. அங்காளம்மன் திருவிழா

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் அமைந்துள்ள அம்மனுக்கு மலையனூர் கிராமமே பூர்வீக இருப்பிடமாகக் கூறப்படுகிறது. அங்குள்ள கோயிலின் புற்றுமண்ணைக் கொண்டுவந்து இந்த அங்காளம்மன் கோயில் அமைக்கப்பட்டுள்ளதாகச்சொல்லப்படுகிறது. இந்தக் கோயில் 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. கடந்த 60 ஆண்டுகளாக மக்கள் அதிகமாகக் கூடும் பிரசித்தி பெற்ற விழாவாக இது இருந்து வருகிறது. மாசி மாதம் மகாசிவராத்திரியன்று மயானக் கொள்ளை, தெருக்கூத்து, தீமிதித்தல் என விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

171. சுண்டகாப்பட்டி முருகன் கோயில் திருவிழா

ஆடி மாதத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் ஆடிக் கிருத்திகையன்று வெகுவிமரிசையாக விழாக்கள் கொண்டாடப்படும். ஜெகதேவி முருகன் கோயில், காட்டிநாயனம்பள்ளி முருகன் கோயில், பர்கூர் பாலமுருகன் கோயில், காரகுப்பம் முருகர் கோயில், சந்தூர் முருகர் கோயில் என்று இந்த வரிசையில், சுண்டகாப்பட்டி முருகர் கோயிலும் சிறப்பு பெற்றது.

172. வஜ்ஜரப்பள்ளம் முருகன் கோயில்

ராயக்கோட்டையிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது இக்கோயில். முருகன், சிவபெருமான், ஐயப்பன், ஆஞ்சநேயர் என எல்லா கடவுள்களின் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மலையை குடைந்ததுபோல் அமைந்திருக்கும் இக்கோயிலில், திருமணங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன.

173. கணவாய்ப்பட்டி பெருமாள் கோயில்

கிருஷ்ணகிரியிலிருந்து 7 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது கணவாய்ப்பட்டி (கண்ணம்பள்ளி) வெங்கட்ரமண சுவாமி கோயில். இந்தக் கோயில் மிகவும் பழைமை வாய்ந்தது. புரட்டாசி மாதத்தில் கூட்டம் அதிகமாக வரும். ஒவ்வொரு சனிக்கிழமையும் விஷேச நாள்களாகும்.

174. நாகலிங்கேஸ்வரர்

கெலமங்கலம்-ராயக்கோட்டை சாலையில் பயணம் செய்தால், ஒன்னுகுறுக்கி என்ற இடத்தில் இந்த நாகலிங்கேஸ்வரர் குகைக்கோயில் இருக்கிறது. ஒரு பாறையின் அடியில் ஒருவர் மட்டுமே குனிந்து செல்லும் வகையில் வழி அமைக்கப்பட்டுள்ளது. மிக அமைதியான இடத்தில் மலையை ஒட்டியுள்ள இக்கோயில், சிவபெருமான் தலங்களில் முக்கிமானது.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #9 - கிருஷ்ணகிரி 200 - இன்ஃபோ புக்

175. மண்டு கூடுதல் (அ) ஊரப்பம்

கிருஷ்ணகிரி-தர்மபுரி மாவட்டங்களில் மட்டுமே அறியப்பட்டிருக்கிற இத்திருவிழா 7 ஆண்டுகள், 9 ஆண்டுகள், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் விழாவாகும். 7 கிராமங்கள், 12 கிராமங்கள், 18 கிராம மக்கள் ஒன்றுக்கூடி இத்திருவிழாவை நடத்துவது வழக்கம். சில இடங்களில் ஒரே  கிராமத்தைச் சேர்ந்தவர்களும் நடத்துவார்கள். இந்த விழாவுக்கு அம்மன் முக்கிய தெய்வமாக இருந்து வருகிறது.

176. மண்டு நடக்கும் ஊர்கள்

வேலம்பட்டி மண்டு, உத்தேபள்ளி மண்டு, நெல்லூர் மண்டு, அனகோடி மண்டு முதலிய பெயர்களில் பல இடங்களில் நிகழ்த்தப்படுகிறது. `மண்டு' என்பது கன்னடத்தில் ஓபுளி என்று குறிக்கப்படுகிறது.

177. சொளுந்து பாட்டு (அ) சூந்து பாட்டு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கார்த்திகை தீப திருவிழாவின்போது, தீபம் ஏற்றிய நாளிலிருந்து தீபம் இறங்கும் வரை ஊருக்கு வெளியே இருட்டிய வேளையில் கரும்புத் தோகைகள், வைக்கோல், தென்னை ஓலையை ஓரிடத்தில் போட்டு நெருப்பு வைப்பார்கள். ஊர் எல்லையில், சிறு குன்றுகளின் மீது நடக்கும் இதில் அடுத்த ஊரைச் சேர்ந்த மாமன், மச்சான் முறையுள்ளவர்களைப் பார்த்து பாடல்கள் பாடுவர். தீக்கொளுந்து சுழற்றி ஆடுவதால், இது சொளுந்து பாட்டு எனப்படுகிறது.

178. தெருக்கூத்து

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களோடு ஒன்றோடு கலந்தது தெருக்கூத்து. இசை, நடனம், பாடல், ஒப்பனை என்று ஒருங்கே கொண்ட கலை இது. சித்திரை, வைகாசி மாதங்களில் கோயில்களில் `பாரதம்' என்ற பெயரில் தொடர்ந்து 9 அல்லது 14 நாள்களுக்கு தெருக்கூத்து நடைபெறும். அதேபோன்று தோட்டங்களில் மரங்களின்மீது இடித்தாக்கினாலும் அர்ஜுனன் தபசு என்ற தெருக்கூத்து நடத்துவது மக்களின் வழக்கமாக இருந்துவருகிறது.

179. குந்தாணி அம்மன்

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளிக்கு அருகே அமைந்துள்ளது சின்னக்கொத்தூர் கிராமம். இந்தக் கிராமத்தில் 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட குந்தாணி அம்மன் கோயில், குந்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. வட்டத்தில் உள்ள பழைமையான கோயில்களில் இதுவும் ஒன்று.

180. எருதுவிடும் திருவிழா

பொங்கலைத் தொடர்ந்து தை, மாசி, பங்குனி மாதங்களில் மாவட்டம் முழுவதும் எருதுவிடும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். எருதுகளை ஊரின் முகப்பிலிருந்து கடைசி வரை ஓட விடுவார்கள்.

181. திருவிழா சந்தை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தை, மாசி, பங்குனி மாதங்களில் மாட்டுச் சந்தை நடைபெறும். காட்டிநாயனம்பள்ளி கோயில் திருவிழாவோடு நடைபெறும் மாட்டுச் சந்தை பிரசித்திபெற்றது. ஆனால், தற்போது மாடுகள் குறைந்துவருவதால், சந்தைக்கு வரும் மாடுகளின் எண்ணிக்கையும் குறைந்துவருகிறது.

சுற்றுலா

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #9 - கிருஷ்ணகிரி 200 - இன்ஃபோ புக்

182. அரசு அருங்காட்சியகம்

1993 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகம், கிருஷ்ணகிரி காந்தி சாலையில் அமைந்திருக்கிறது. நடுகற்கள், மண்பானைகள், ஓடுகள், சிலைகள், வாள், ஈட்டி என கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டெடுத்த பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வரலாற்று தொடர்பான ஆவணங்களும் இங்கேயுள்ளன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்று பார்க்கலாம்.

183. தளி பெரிய ஏரி

குட்டி இங்கிலாந்து என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட ஊர் தளி. குளு குளு குளிருக்கும் பசுமை சூழ்ந்த காடுகளுக்கும் பெயர்பெற்றது. தளி அருகே அமைந்துள்ளது, பெரிய ஏரி. சுமார் 120 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த ஏரியில், 2009 ஆம் ஆண்டு படகு இல்லம் தொடங்கப்பட்டது. ஏரியைச் சுற்றி பூங்காக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

184. அய்யூர் வனத்துறை பங்களா

தேன்கனிக்கோட்டையிலிருந்து 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது, அய்யூர் வனத்துறை பங்களா. அடர்ந்த மூங்கில் தோப்புகளுக்கிடையில்  இருக்கும் வனக்குடில்களில் தங்கி, மலைப்பகுதிகளையும், வனவிலங்குகளையும் கண்டு களிக்கலாம்.
 
185. நவதர்ஷனம்

தளியிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் இருக்கிறது, கெங்கனஅள்ளி கிராமம். இந்த ஊரில் அமைந்திருக்கிறது நவதர்ஷனம். யோகா, தியானம், இயற்கை உணவு, பாரம்பர்ய வாழ்க்கை முறை, விவசாயம் என்று அனைத்துக்கும் வழிகாட்டுகிறது.

186. தேன் துர்க்கம் (துருக்கம்)

கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனபள்ளியிலிருந்து கெலமங்கலம் செல்லும் வழியில் 2 கி.மீ தூரத்தில் தேன்துர்க்கம் கோட்டை அமைந்திருக்கிறது. இந்த மலையின் உச்சியில், திப்புசுல்தான் காலத்தில் ஆயுதக் கிடங்காகப் பயன்படுத்திய இடங்கள், போர்வீரர்கள் தங்கி இருந்ததற்கான தடயங்கள் இருக்கின்றன். மலையின் உச்சியில் ஒரு அனுமார் கோயில் உள்ளது.

187. ராயக்கோட்டை

ராயக்கோட்டை ஊரின் அருகே இருக்கிறது ராயக்கோட்டை மலை. ஹைதர் அலி, திப்புவிற்கும், ஆங்கிலேயருக்கும் இடையே பல போர்கள் இங்கே நடந்துள்ளன. வீரர்கள் தங்கிய இடம், சிதிலமடைந்த கொத்தளங்கள், குதிரை லாயங்கள் என்று பழைய வாழ்க்கை முறைக்குச் சென்று திரும்பிய அனுபவத்தைக் கொடுக்கும். இது, தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டுவருகிறது.

188. கிருஷ்ணகிரி அணை பூங்கா

கிருஷ்ணகிரியிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது, கிருஷ்ணகிரி அணைப் பூங்கா. அணையையொட்டி சிறுவர் விளையாட்டுத் திடல்கள், பூங்கா, நீர்த்தேக்கம், அணையைச் சுற்றிலும் பசுமை சூழ்ந்த மலைகள் ஆகியவற்றைக் கண்டு ரசிக்கலாம்.

189. கெலவரப்பள்ளி அணை

ஓசூரிலிருந்து 10 கி.மீ தொலைவில் இருக்கிறது கெலவரப்பள்ளி அணை. 1995ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணையில் சிறுவர் விளையாட்டுத் திடல்கள், பூங்கா, நீர்த்தேக்கம், பசுமை சூழ்ந்த வயல்கள் என்று பார்ப்பதற்கே ரம்மியமாக இருக்கும்.

190. படகு சவாரி சிறுவர் பூங்கா

கிருஷ்ணகிரியிலிருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்தப் பூங்கா. அவதானப்பட்டி ஏரியின் ஒரு பகுதியில் செயல்படும் இந்தப் பூங்காவில், படகு சவாரியும் உண்டு. சிறுவர்கள், பெரியவர்கள் படகு சவாரி செல்ல ஏற்ற இடம். இதனால், ஆண்டு முழுவதும் படகு சவாரி நடைபெறுகிறது.

191. ஆவல்நத்தம் கோயில்

கிருஷ்ணகிரியிலிருந்து சுமார் 27 கி.மீ தொலைவில் உள்ளது ஆவல்நத்தம் தீர்த்தம். இங்கு, பசவேஸ்வரர் மற்றும் காசீஸ்வரர் திருக்கோயில்கள் அமைந்திருக்கிறது. பூமிக்கடியில் சுரங்கம் போன்று அமைந்திருக்கின்றன. இந்தக் கோயிலின் லிங்கம். இக்கோயிலில் உள்ள தீர்த்தக்குளத்தில் குளிப்பது சிறப்பு.
 
192. அனுமன் தீர்த்தம்

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #9 - கிருஷ்ணகிரி 200 - இன்ஃபோ புக்

ஊத்தங்கரையிலிருந்து அரூர் செல்லும் சாலையில் 7வது கிலோமீட்டரில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ளது, அனுமன் தீர்த்தம். ஆடி மாதத்தில் அதிக அளவில் மக்கள் வருகைபுரிந்து நீராடுவது வழக்கம். இங்கே நீராடிவிட்டு, தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் தீர்த்தமலைக்குச் செல்வது பக்தர்களின் வழக்கம். 

193. பெண்ணேஸ்வர மடம்

கிருஷ்ணகிரியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது பெண்ணேஸ்வர மடம் கோயில். 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த சிவபெருமான் கோயில் சிற்ப வேலைப்பாடுகள், கருவறைகள் மிகவும் பழைமையானவை.

194. சந்திர சூடேஸ்வரர் தேர்த் திருவிழா

சந்திரசூடேஸ்வரர் கோயில், ஓசூரில் மலை உச்சியில், தேசிய நெடுஞ்சாலைக்கு அருகாமையில் அமைந்துள்ளது. சந்திரசூடேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் அந்த மலையின் அடிவாரத்தில் மார்ச் – ஏப்ரல் மாதங்களில் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

195. எருதுவிடும் திருவிழா

தை பொங்கலன்று தொடங்கும் இந்த எருதுவிடும் திருவிழா ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதம் வரை ஒவ்வொரு ஊரிலும் எருதுவிடும் திருவிழா நடைபெறுகிறது. இதற்குப் பரிசுகளும் அறிவிக்கப்பட்டு ஓடும் எருதுகளுக்கு வழங்கப்படும். 

196. பாறை ஓவியங்கள், கற்திட்டைகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெருங்கற்படைக்கால கலாசாரம் பரவியிருந்ததை ஈமச் சின்னங்கள், பாறை மற்றும் கல்திட்டைகளில் காணப்படும் ஒவியங்கள், வாயிலாகத் தெரிந்துகொள்ளலாம். பெரியகோட்டப்பள்ளி, கிருஷ்ணகிரி மலை, மல்லசந்திரம், மல்லப்பாடி உள்ளிட்ட இடங்கள் சான்றுகளாக இருக்கின்றன.

197. விழுதுகள் கொண்ட ஆலமரம்

கெலமங்கலத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் ஒன்னுகுறுக்கி என்ற கிராமத்தில் 100 விழுதுகள்கொண்ட ஆலமரம் உள்ளது. மூன்று ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து நிற்கும் இந்த ஆலமரத்தின் வயது, சுமார் 500 வருடங்கள் இருக்கும்மென்று சொல்கிறார்கள்.

198. வௌவால் மரம்

கிருஷ்ணகிரி மாவட்டம், என்.தட்டக்கல் கிராமத்தில் திப்புசுல்தான் கோட்டை உள்ளது. அதில் வௌவால் மரம் என்று ஒன்று உள்ளது. அதில் எப்போதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வௌவால்கள் தொங்கி கொண்டிருக்கும்.

முக்கிய தலைவர்கள்

199. திப்பு சுல்தான்

ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் போராடி, தான் வாழ்ந்த வரையில் ஆங்கிலேயேர்களைத் தன் ஆட்சிப் பகுதிக்குள் உள்ளே நுழையவிடாமல் இருந்தவர் திப்பு சுல்தான். இவரின் வாழ்வோடு பிணைந்ததாக இருக்கிறது கிருஷ்ணகிரி மாவட்டம். இம்மாவட்டத்து மக்கள் திப்பு சுல்தான் நடத்திய போரில் பங்கு பெற்றுள்ளனர்.

200. மூதறிஞர் ராஜாஜி

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் தமிழ்நாட்டின் முதல்வராகவும் இருந்த மூதறிஞர் ராஜாஜி பிறந்த ஊர், ஓசூருக்கு அருகில் இருக்கும் தொரப்பள்ளி கிராமம். இந்த ஊரில் இருந்த ராஜாஜியின் வீடு நினைவகமாக மாற்றப்பட்டடுள்ளது. சுதந்திரப் போராட்ட காலத்தில் விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவர். ஒருங்கிணைந்த சேலம் நகரத்தின் சேர்மனாகவும் இருந்தார்.

தொகுப்பு: த.ஜெயகுமார்

தொகுப்பில் உதவி: ஞா.சக்திவேல் முருகன், கே.ஆர்.ராஜமாணிக்கம்

படங்கள்:
வ.யஸ்வந்த்   நன்றி: தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை