
தற்கொலைகளால் தடுமாறும் திருச்சி காவல்துறை!
திருச்சி மாவட்டத்தில் காவலர்கள் தற்கொலை செய்துகொள்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு திருச்சி ஆயுதப்படையில் பணியாற்றிய காவலர் சமீம்பானு, தமது காதலரைத் திருமணம் செய்து கொள்ள முடியாத சோகத்தில் தற்கொலை செய்துகொண்டார். மற்றொரு சம்பவமாக திருச்சி நவல்பட்டு காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் ஜெயதேவ் - திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையக் காவலர் செண்பகம் ஆகியோரின் காதலில் சாதி குறுக்கே வந்ததால், ஜெயதேவ் விஷம் குடித்து உயிரிழந்தார். இப்போது செந்தமிழ்ச்செல்வி என்ற பெண் காவலர் காதல் பிரச்னையால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கடலூர் மாவட்டம், பெரிய காட்டுப்பாளைத்தைச் சேர்ந்த செல்லப்பனுக்கு மூன்று பெண் பிள்ளைகள். இரண்டாவது மகள் செந்தமிழ்ச்செல்வி 2017-ம் ஆண்டு திருச்சி பெண்கள் சிறையில், காவலராகப் பணியில் சேர்ந்தார். அடுத்து வார்டனாக பதவி உயர்வும் பெற்றார். விளையாட்டில் ஆர்வம் கொண்ட செந்தமிழ்ச்செல்வியை சிறைத்துறை நிர்வாகம், விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அனுப்பியது. இவரைப் போல் திருச்சி மத்தியச் சிறையில் பணியாற்றும் அரியலூரைச் சேர்ந்த காவலர் வெற்றிவேலும் அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இந்நிலையில்தான் செந்தமிழ்ச்செல்வி, ஜனவரி 3-ம் தேதி மாலை அவர் தங்கியிருந்த அறையில் தூக்கில் தொங்கியபடிப் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

செந்தமிழ்ச்செல்வியின் தந்தை செல்லப்பனிடம் பேசினோம். மகளை இழந்த சோகத்திலிருந்து மீளாதவர், உடைந்த குரலில் பேசினார். “செல்வி அவருடன் வேலை பார்க்கும் வெற்றிவேலைக் காதலிப்பதாகக்கூறி சம்மதம் கேட்டுச்சு. ‘நமக்கும் அவங்களுக்கும் ஒத்து வராதுப்பா’ என்றேன். என்னிடம் போனில் பேசிய அந்தப் வெற்றிவேல், ‘நான் உங்க மகளைக் கைவிடமாட்டேன். என்னை நம்புங்க’ என்றார். அதனால், ‘உங்க வீட்டுல சம்மதம் வாங்குப்பா, பிறகு பேசிக்கலாம்’ என்று சொன்னேன்.
இடையே செல்வியைப் பார்க்க திருச்சி போயிருந்தேன். அப்போது, அதே பெண்கள் சிறையில் வார்டனாக இருக்கும் வெற்றியின் அண்ணி ராஜசுந்தரியும், சிறைத்துறை விஜிலென்ஸில் வேலைப் பார்க்கும் அவரது அண்ணன் கைலாசமும் என்னிடம், ‘நீங்க என்ன சாதி’ன்னு கேட்டாங்க. நான் சொன்ன பிறகு, ‘உங்க பொண்ணுக்கு எங்க பையன் கேக்குதா... உங்கபெண்ணை ஒழுங்கா இருக்கச் சொல்லுங்க’ என்று மிரட்டினாங்க. என் பொண்ணுக்கும் அவங்க கடுமையாகத் தொந்தரவு கொடுத்திருக்காங்க. அதனால்தான் என் மகள் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறாள்” என்றார் அழுகையுடன்.

தொடர்ந்து நம்மிடம் பேசிய அவரது மனைவி சத்தியவதி, “எங்க பொண்ணு, வெற்றியிடம், ‘உங்க அண்ணிதான் பிரச்னை செய்கிறார்’ என்று சொல்லி யிருக்கிறார். அதுக்கு வெற்றி, ‘நாம ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்குவோம். தேவையான ஆவணங்களை ரெடி பண்ணு’ன்னு சொல்லியிருக்கிறார். அதுக்குப் பிறகு திடீர்ன்னு வெற்றிக்கும் வேறு பெண்ணுக்கும் கடந்த 6-ம் தேதி சுவாமிமலையில் வைத்துத் திருமணம் செய்ய ஏற்பாடு நடப்பதாகத் தகவல் வந்தது. அதிர்ச்சி அடைஞ்ச என் பொண்ணு, வெற்றியிடம் போனில் கேட்டபோது, அவரும் கடுமையாகப் பேசியிருக்கிறார். இதனால்தான் வேறுவழியில்லாமல் செல்வி சாகத் துணிஞ்சிட்டா” என்று கதறினார்.
நம்மிடம் பேசிய காவலர்கள் சிலர், “வெற்றியின் அண்ணனும் அண்ணியும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனாலும், காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்கள். இருந்தாலும், செந்தமிழ்ச்செல்வி - வெற்றிவேலின் காதலைச் சாதியைக் காரணம் காட்டி எதிர்த்ததுடன், வெற்றிக்கும் வேறு பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் செய்தனர். இவ்வளவுப் பிரச்னைக்கும் காரணம் இதுதான்” என்றார்கள்.

வெற்றிவேல், ராஜசுந்தரி, கைலாசம் ஆகியோர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல், இழிவாகப் பேசுதல், அச்சுறுத்துதல், வன்கொடுமைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர் போலீஸார். வெற்றிவேல் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள மற்ற இருவரை யும் தேடி வருகிறார்கள். வெற்றி வேல் குடும்பத்தினரிடம் பேசினோம். “சுவாமி மலையில் நடக்க இருந்த திருமணம் நின்று விட்டது. மற்றபடி இப்போதைய சூழலில் வேறு எதுவும் பேசவிரும்ப வில்லை” என்றனர்.
- சி.ய.ஆனந்தகுமார்
படங்கள்: அ.குரூஸ்தனம்
தொடரும் தற்கொலைகள்
கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் 211 காவலர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர், குறிப்பாக, 2012-ம் ஆண்டு அதிகபட்சமாக 51 காவலர்கள் தற்கொலை செய்திருக்கின்றனர். கடந்த பத்து ஆண்டுகளில் 8,158 காவலர்கள் பணியிலிருந்து விலகியிருக்கின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவலர்களுக்காகக் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கிவைத்த ‘நலவாழ்வு பயிற்சி’ திட்டம் பெயரளவுக்குத்தான் உள்ளது என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள்.