
விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20


இளமையின் விசையை, திறமையின் திசையைத் தீர்மானிக்கும் ஒரு தங்கத் தருணம்... இதோ!
சமூக மாற்றத்துக்கு விதையாக, சமூக வளர்ச்சிக்குப் பாதையாக இருக்க விரும்பும் கல்லூரி மாணவர்களுக்குக் களம் அமைக்கிறது விகடன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அச்சு மற்றும் காட்சி ஊடகத்தில் பயிற்சிபெற வாய்ப்பளித்து, பட்டை தீட்டிப் பயிற்சிதரும் விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் அடுத்த அத்தியாயம் ஆரம்பம்.
கையில் இருக்கும் செல்போனே தலைசிறந்த தகவல்தொடர்பு ஊடகமாக மாறியிருக்கும் இந்த நவீன காலத்தில் யூடியூப், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் எனப் பல வழிகளில் ஒவ்வொருவருக்கும் ஏராளமான செய்திகள் வந்து சேர்கின்றன. அந்தச் செய்திகளைப் படிக்கும் ‘வாசகர்’ நிலையில் இருந்து, செய்தியை உருவாக்கி உலகத்துக்கு வழங்கும் ‘செய்தியாளர்’ நிலைக்கு உங்களை உயர்த்த, களம் அமைத்துத்தருகிறது இந்தத் திட்டம். விகடன் பத்திரிகையாளர் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள், பல துறைகளில் தங்களுக்கெனத் தனி முத்திரை பதித்து, வெற்றிப்பாதைகளில் பயணிக்கிறார்கள். பத்திரிகை, தொலைக்காட்சி, சினிமா, சட்டம், இலக்கியம், தொழில்நுட்பம் என, தாங்கள் தடம் பதிக்கும் அனைத்துத் துறைகளிலும் வெற்றியாளர்களாக வலம்வருகிறார்கள். இதோ, இது உங்களுக்கான நேரம்.
இளமைக்கு ‘ஆ.வி’, உண்மைக்கு ‘ஜூ.வி’, பெண்மைக்கு ‘அவள்’, அறிவுக்கு ‘சுட்டி’, அருளுக்கு ‘சக்தி’, பொருளுக்கு ‘நாணயம்’, பயணத்துக்கு ‘மோட்டார்’, வளமைக்கு ‘பசுமை’, நலத்துக்கு ‘டாக்டர்’, அறுசுவைக்கு ‘அவள் கிச்சன்’, இல்லறம் சிறக்க ‘அவள் மணமகள்’ இலக்கியத்துக்கு `தடம்', இணையத்தில் ‘விகடன் டாட் காம்’, வைரல் களமான யூடியூபில் ‘விகடன் டி.வி’ என உலகின் கடைக்கோடி தமிழன் வரை நீண்டிருக்கின்றன விகடனின் கரங்கள். அவற்றைப் பற்றிக்கொண்டு இணைந்து பயணிக்க, இது ஓர் அட்டகாசமான வாய்ப்பு.
1.7.2001-க்கு முன் பிறந்த அனைத்துக் கல்லூரி மாணவ - மாணவிகளும் இந்தத் திட்டத்தில் பங்கேற்கலாம். இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ- மாணவியர், தற்போது (2018 - 2019) கல்லூரியில் படிப்பவராகவும், அடுத்த ஆண்டு (2019 - 2020) கல்லூரிப் படிப்பைத் தொடர்பவராகவும் இருக்க வேண்டும். அதாவது, 2018 - 2019-ம் ஆண்டில் பள்ளி இறுதி ஆண்டு படிப்பவர்களோ அல்லது கல்லூரியில் எந்தப் பிரிவிலும் இறுதி ஆண்டு படிப்பவர்களோ, விண்ணப்பிக்க இயலாது. தபால் மூலம் கல்வி பயில்பவர்கள் இந்தத் திட்டத்தில் கலந்துகொள்ள இயலாது.
இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தாளைத் தமிழில் பூர்த்திசெய்து, கோரப்பட்டிருக்கும் இணைப்புகளோடு 20.03.2019-க்குள் எங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும் (விண்ணப்பத்தைப் பிரதி எடுத்தும் பயன்படுத்தலாம்). தகவல்தொடர்புக்காக உங்களுடைய அலைபேசி எண் அவசியம் தேவை. விண்ணப்பம் குறித்த முழு விவரங்களை, அடுத்து வரும் பக்கங்களில் காணலாம்.
ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் புகுந்து விளையாடும் த்ரில்லான களம் இது. உற்சாகமாகக் களம் இறங்க உங்களையும் அழைக்கிறோம். வாழ்த்துகள்!
- ஆசிரியர்


விண்ணப்பத்துடன் தவறாமல் அனுப்பவேண்டியவை:
(அ) கீழ்க்காணும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றை, சொந்தக் கையெழுத்தில் தெளிவாகப் புரியும்படி தமிழில் கட்டுரையாக எழுத வேண்டும். கட்டுரை நான்கு பக்கங்களுக்கு மேல் இருக்கக் கூடாது. தாளின் ஒரு பக்கத்தில் மட்டுமே எழுதவும். இணையத்திலோ, வேறு புத்தகத்திலிருந்தோ எடுத்து எழுதக்கூடாது. அப்படி எழுதியது கண்டறியப்பட்டால், உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
1) பப்ஜி (Pubg) போன்ற ஆன்லைன் விளையாட்டுகள் என்ன மாதிரியான மாற்றங்களை இளைய தலைமுறையினரிடத்தில் உருவாக்கியிருக்கின்றன...அதன் சாதக பாதகங்கள் என நீங்கள் நினைப்பவை எவை?
2) ஆண் - பெண் நட்பு பற்றி உங்கள் வயதினர் மற்றும் உங்கள் பெற்றோர்களின் எண்ணங்கள் என்ன? அவர்கள் யோசிப்பதில் எவையெல்லாம் சரி, எவையெல்லாம் தவறு என நினைக்கிறீர்கள்?
3) விஜய் - அஜித் ரசிகர்களின் மோதல் இணையத்தில் பிரபலம். நீங்கள் யாருக்கு ரசிகர் ஏன்?
4) கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் போன்ற முக்கியமான தலைவர்கள் தமிழக அரசியலில் ஒரே காலகட்டத்தில் இல்லாமற்போயிருக்கிறார்கள். இளைஞர்களின் அடுத்த தலைவராக யார் உருவாகக்கூடும், ஏன்?
5) நமது கல்விமுறை நம் வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களைச் சொல்லிக் கொடுக்கிறதா, அதில் என்னென்ன மாற்றங்கள் தேவை?
6) தமிழ் சினிமா ஆரோக்கியமான பாதையில் செல்கிறதா? 2018-ல் வெளியான படங்களை முன்வைத்து உங்கள் தரப்பு நியாயங்களைத் தொகுத்து எழுதுங்கள்.
7. அதிக இதய நோயாளிகளைக்கொண்ட நாடாக இந்தியா மாறியிருக்கிறது. இதற்கான காரணங்கள், பின்னணி, தீர்வு குறித்து ஒரு கட்டுரை எழுதுங்கள்.
8. 2019 கிரிக்கெட் உலகக்கோப்பையை எந்த அணி வெல்லும், காரணம் என்ன, யார் யார் முக்கிய வீரர்களாக இருப்பார்கள்? தொகுத்து ஒரு கட்டுரை எழுதுங்கள்.
9. விரைவில் இந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் வரவிருக்கிறது. இந்தத் தேர்தலில் கூட்டணிகள் எப்படி அமையும், எந்தக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்? இதுபற்றி காரண காரியங்களுடன் எழுதவும்.
(ஆ) புகைப்படத் துறையில் மட்டும் பயிற்சிபெற விரும்பும் மாணவ - மாணவியர், இந்தக் கட்டுரையை அனுப்பத் தேவை யில்லை. அதற்குப் பதிலாக, எதிர்வரும் நாள்களில், உங்கள் பகுதியில் நடக்கும் ஏதாவது ஒரு சம்பவத்தைப் படங்களாக, வீடியோவாக எடுத்து, அவற்றுக்கான குறிப்புகளோடு அனுப்புங்கள். ஒவ்வொரு புகைப்படத்தின் பின்புறத்திலும் உங்களின் பெயரையும் முகவரியையும் குறிப்பிட வேண்டும்.
(இ) ‘நிருபர் + புகைப்படக்காரர்’ பிரிவுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் மேற்கூறிய (அ, ஆ) இரண்டையும் செய்து அனுப்ப வேண்டும்.
(ஈ) வீடியோ எடிட்டர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள், தாங்கள் பங்களித்த வீடியோக்களை சி.டி./டி.வி.டி வடிவில் அனுப்ப வேண்டும் (இதே விண்ணப்பத்தை ஆன்லைனில் பூர்த்திசெய்தால், அதற்கான லிங்க்குகளை (Link) குறிப்பிட்டால் போதும்).
* வீடியோ எடிட்டர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் பிரிவுகளுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் படிப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தில் பங்குபெற விரும்பும் மாணவ - மாணவியர், விண்ணப்பத்தாளை உண்மையாகவும் முழுமையாகவும் பூர்த்திசெய்து, 20.03.2019 -க்குள் எங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் கட்டுரைகளையும் புகைப்படங்களையும் திருப்பி அனுப்ப இயலாது. அஞ்சல்தலைகளை இணைக்கத் தேவையில்லை. இந்தத் திட்டம் சம்பந்தமாக எந்தக் கடிதப் போக்குவரத்தும் வைத்துக்கொள்ள இயலாது.
அடுத்தகட்டமாக சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை ஆகிய ஐந்து ஊர்களில் எழுத்துத் தேர்வு நடக்கும். இது குறித்த தகவல் தங்களுக்குக் கடிதம் மூலம் அனுப்பிவைக்கப்படும். முதல் கட்டத்தில் தேர்வுபெறும் மாணவமணிகள், மேற்கண்ட ஊர்களில் ஏதாவது ஒன்றில் தேர்வு எழுத அழைக்கப்படுவார்கள். எங்களிடமிருந்து எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் கிடைக்கப்பெறாதவர்கள், முதல் கட்டப் பரிசீலனையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.
விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி: மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம், ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002.