
கழுகார் பதில்கள்!
@பி.எஸ்.எ. ஜெய்லானி, கடையநல்லூர்.
ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை நடத்துவதற்காக ஆணையத்தை அமைக்கச் சொன்ன ஓ.பன்னீர்செல்வம், அதன் விசாரணைக்கு ஆஜராகாமல் பதுங்குவதேன்?
புலி என்றால், பாயப்போகிறது என்று பதில் சொல்லிவிடலாம்!

@ஆர்.ஆர்.ராஜா, விருதுநகர்.
தமிழகத்தில் சிறுபான்மையினர் கொல்லப்பட்டால் உடனடியாக அதைக் கண்டிக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள், இந்துக்கள் கொல்லப்பட்டால் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். அதேபோல ஊடகங்களும் பாரபட்சம் காட்டுகின்றனவே?
பறிபோனது ஓர் உயிர். இதில் சாதி, மத வித்தியாசத்தை எல்லாம் யாருமே பார்க்கக் கூடாது என்பதுதான் உண்மை. அதேசமயம், ஒரு சம்பவம் நடந்ததுமே முழு விவரங்களையும் தெரிந்துகொள்ளாமல் கண்டனங்களைத் தெரிவிப்பதும், கட்டுரைகளை வார்ப்பதும் ஆபத்தானதே. சொந்தப் பகை காரணமாக நடக்கும் கொலைகளுக்கும் சாதி, மதச் சாயம் பூசப்படுவதுதான் இங்கே அதிகமாக நடக்கிறது. அத்தனை அரசியல் தலைவர்களுமே பாரபட்சம் பார்க்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. அதேபோல மீடியாக்களைப் பொறுத்தவரை, எரியும் தீயில் எண்ணெய் வார்த்துவிடக் கூடாது என்பதற்காக சாதி, மத அடையாளங்களை மறைத்துச் செய்திகளை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளன. சில தலைவர்களும், சில ஊடகங்களும் எல்லை மீறலாம். அதற்காக ஒட்டு மொத்தமாக அப்படித்தான் என்று சொல்வது தவறு.

@இளங்கோ.ஆர்.
மற்ற பரபரப்புகளுக்கு நடுவே, #மீடூ இயக்கம் மறக்கடிக்கப்பட்டு விட்டதே?
ஒருபோதும் மறக்கடிக்கப்படக் கூடாத இயக்கம் இது. சில தினங்களுக்கு முன், இந்தி நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சத்ருகன் சின்ஹா, ‘நான் எத்தனையோ அனுபவித்திருக்கிறேன். ஆனால், #மீடூ புகார்களில் சிக்கவே இல்லை’ என்று வாய்க்கொழுப்புடன் கூறியிருக்கிறார். இதுபோன்ற பேச்சுக்கள், இந்த இயக்கம் மிகக்கடுமையான வேகத்தில் சுழலவேண்டிய தேவை இருக்கிறது என்பதையே காட்டுகிறது.
@வடபழனி ஆர்.கே.எஸ்.மகேஷ், சென்னை.
திருமாவளவன் - ரஜினி திடீர் சந்திப்பு மு.க.ஸ்டாலினுக்கான மறைமுக எச்சரிக்கையா?
‘கூட்டணியில் பா.ம.க-வைச் சேர்த்தால், நாங்கள் அந்தக் கூட்டணியில் இருக்க மாட்டோம்’ என்று வெளிப் படையாகவே எச்சரிக்கை விட்டிருக்கிறார் திருமாவளவன். அதுமட்டுமல்ல, ‘சிதம்பரம் தொகுதி எனக்குத்தான்’ என்றும் தன்னிச்சையாக அறிவித்திருக்கிறார். ஆக, கூட்டணிக்குள் நடக்கும் குஸ்தி பற்றி கடந்த இதழ் ஜூ.வி-யில் வெளியான செய்திகள் உறுதிப்படுத்தப்படுகின்றன. இன்னொரு பக்கம் ‘காலா’, ‘கபாலி’, ‘அடங்குற ஆளா நீ’ என்றெல்லாம் திருமா வளவனுக்கு அடைமொழிகள் கொடுத்து ரீரெக்கார்டிங் ஓட ஆரம்பித்திருப்பதிலும், ரஜினி முகாமின் உள்குத்து இருக்குமோ என்கிற சந்தேகமும் எழாமல் இல்லை!

@கொ.மூர்த்தி, குட்டலாடம்பட்டி.
‘தேர்தலில் போட்டியிட மாட்டேன்’ என்று சொல்லி பி.ஜே.பி-யின் அழைப்பை நிராகரித்திருக்கிறாரே நடிகர் மோகன்லால்?
ரசிகர்கள் தன் மீது எதற்காக நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ... அதற்கு மட்டுமே மரியாதை கொடுப்பேன் எனும் வகையில், ‘எனக்குத் தொழில் நடிப்பு மட்டுமே’ என்று கூறி, கும்பிடு போட்டிருக்கும் லாலேட்டன்... உயர்ந்து நிற்கிறார்.

@வி.ஆர்.கிட்டுசாமி.
விவசாய நிலத்தில் உயர் அழுத்த மின்கோபுரம், எண்ணெய்க் குழாய், எட்டு வழிச்சாலை என்று நிலத்தை விலைக்கு வாங்குவதைவிட, விவசாயிகளையும் பங்குதாரராகச் சேர்த்துவிட்டால் பிரச்னைகள் தீர்ந்துவிடும்தானே?
நல்ல யோசனைதான். தவிர்க்கவே முடியாத வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கும்போது, இதையும் கட்டாயம் யோசிக்கலாம். ஆனால், ‘யானைப் பசிக்குச் சோளப்பொரி’ என்பதுபோல விவசாயிகளை ஏமாற்றுவதாக இது இருந்துவிடக் கூடாது என்பதுதான் முக்கியம். பொதுவாகவே, விவசாயிகளிடம் நிலத்தை வாங்குவது மட்டுமே பிரச்னை இல்லை. விவசாய நிலங்களை அழித்து, வளர்ச்சி என்பதை உயர்த்திப்பிடிக்க வேண்டுமா என்பதுதான் மிக முக்கியமான பிரச்னை. நெடுஞ்சாலைகளின் ஓரத்தில், பூமியில் கேபிள்களைப் பதித்து மின்சாரத்தைக் கொண்டுசெல்ல முடியும். எண்ணெய்க் குழாய் களையும் இதேபோல கொண்டுசெல்ல முடியும். அப்படி இருக்கும்போது, அனைத்துத் திட்டங்களுக்கும் விவசாய நிலங்கள்தான் வேண்டும் என்று ஏன் அடம்பிடிக்க வேண்டும். மாற்று வழிகளையும் யோசிக்கலாமே!
ஜி.குணசேகரன், செங்கல்பட்டு.
மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்துச்செல்ல முயன்ற குற்றச் சாட்டில் சிக்கிய நிர்மலாதேவிக்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்படுகிறதே?
கொடூரக் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எல்லாம் கூட 90 நாள்களில் ஜாமீனில் உலாவுகிறார்கள். ஆனால், 300 நாள்களாகியும் நிர்மலாதேவிக்கு ஜாமீன் மறுக்கப்படுகிறது. இதிலிருந்தே வழக்கின் வீரியத்தைப் புரிந்து கொள்ளலாம். பின்னணியில் இருப்பவர்களையும் தெரிந்து கொள்ளலாம்.

@இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.
வரவரக் காவல்துறையினர் மத்தியில் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனவே?
எல்லா இடங்களிலுமே இது அதிகரிக்கத்தான் செய்கிறது. காவல்துறை, திரைப்படத்துறை, அரசியல்துறை எனும்போது... உடனே பெரிதாகப் பேசப் படுகிறது. இது தனி மனிதர்கள் சார்ந்த விஷயமல்ல. சமூகத்தின் குற்றம். இந்தப் பிரச்னைக்கு சமூக அந்தஸ்து தொடங்கி, பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இதற்குத்

தீர்வு, தனிப்பட்ட மனிதர்களிடம்தான் இருக்கிறது. ‘மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ’ என்பதற்காக நம்முடைய இயல்பைத் தொலைக்கும் நொடிகளில்தான் பிரச்னைகள் ஆரம்பமாகின்றன. ‘நாம் வாழ வேண்டும்... சுயநலமில்லாமலும் வாழ வேண்டும்’ என்று நினைத்தாலே போதும்; அத்தனைப் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும். குழந்தைப் பருவத்திலிருந்தே இதைக் கற்றுக்கொடுத்து வளர்த்தால், பிரச்னையே இருக்காது.
‘வண்ணை’ கணேசன், சென்னை-110.
‘தன் குடும்பத்தை யாரால் சரிவர நிர்வகிக்க முடியவில்லையோ, அவரால் நாட்டையும் நிர்வகிக்க முடியாது’ என்று நிதின் கட்கரி கூறியிருப்பது யாரை மனதில் கொண்டு?
தெரிந்துகொண்டே கேள்வி கேட்டால் எனக்குப் பிடிக்காது... ஆமாம் சொல்லிவிட்டேன்!
@நீலன், கோவை.
நியாயமாகப் பார்த்தால், காடுகளை அழித்தவர்களைத்தானே விரட்ட வேண்டும். அதை விட்டுவிட்டு, காட்டைக் காப்பாற்றிக்கொண்டிருக்கும் சின்னத்தம்பி யானையை விரட்டுவது எந்த வகையில் நியாயம்?
நாம்தான் உலகத்துக்கே ‘பெரியதம்பி’களாயிற்றே! நாம் செய்வது மட்டும்தானே நியாயம். அவற்றின் வாழ்விடம், வழித்தடம், உணவு எல்லாவற்றையும் நாம் அழித்துக்கொண்டிருக்கும்போது, அவற்றுக்கு ஏது போக்கிடம் என்று யோசிக்கக்கூட மறுக்கிறோம். நுகர்வு கலாசாரம், அத்தனை தூரம் நம் மனங்களை மழுங்கடித்துவிட்டது.
@ஜான்செல்வராஜ்.
ஜூனியர் விகடனில் 40 எம்.பி-க்களின் செயல்பாடுகள் குறித்தும் எழுதப்பட்டுவிட்டது. அத்தனையும் படித்ததில் ஒருவர்கூட தேறவில்லையே. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எதைக் கொண்டு இவர்களுக்கு ஓட்டுப்போடுவது?
இவர்களின் வண்டவாளங்கள் தெரிந்துவிட்டதால், வேறு கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டுப்போடுங்கள் என்று சொல்லத்தான் ஆசை. ஆனால், முடியவில்லையே. உங்களின் இதே கேள்வி, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் வந்து நிற்குமே!
கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757,
அண்ணா சாலை, சென்னை- 600002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!