
வயது 9, உலகச் சாதனை 14 - ‘யோகா’ பிரிஷா
9 வயதில் 14 உலகச் சாதனைகளை நிகழ்த்தி பிரமிக்கவைத்துள்ளார் பிரிஷா.

திருநெல்வேலியைச் சேர்ந்த பிரிஷாவின் அம்மா மற்றும் பாட்டிக்கு யோகாவில் ஆர்வம் இருந்ததால், பிரிஷாவும் யோகக் கலையை ஒரு வயதிலேயே கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டார். கடந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தில் 8 உலகச் சாதனைகளை 2 மணி நேரத்துக்குள் நிகழ்த்தினார். இதனுடன் சேர்த்து இதுவரை 14 சாதனைகளைப் படைத்துள்ளார்.
‘‘கண்டபேருண்டாசனத்தை ஒரு நிமிடத்தில் 16 முறை செய்திருக்கேன். ஏகபாத வாமதேவசானத்தை 100 மீட்டர் முன்பக்கமாகவும் பின்பக்கமாகவும் தண்ணீரில் செஞ்சிருக்கேன். சுப்த பத்மாசனம் மற்றும் குப்த பத்மாசனத்தை தண்ணீரில் 100 மீட்டர் நீச்சல் அடித்தபடி செஞ்சிருக்கேன். நீருக்கடியில் 50 யோகாசனங்களையும் செய்திருக்கேன்’’ என்று பிரிஷா சொல்லிக்கொண்டே போக, நமக்குத்தான் மூச்சு முட்டுகிறது.

மிக இளம் வயதில் 14 உலகச் சாதனைகளை நிகழ்த்திய காரணத்துக்காக, நியூ ஜெருசலேம் பல்கலைக்கழகம் பிரிஷாவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை அளித்துள்ளது. இது, புது தில்லியை மையமாக்கொண்டு செயல்படும் ஒரு பல்கலைக்கழகம்.
பிரிஷாவின் அம்மா பிரியா, “நான் யோகாவில் எம்.எஸ்.சி பண்ணியிருக்கேன். என் மகளின் ஆர்வத்தைப் பார்த்து சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சேன். கராத்தே, டான்ஸ், டிராயிங் எனப் பல விஷயங்களிலும் ஆர்வமுண்டு. ஆனாலும், யோகாவில் அதிக ஈடுபாடு.
பிரிஷா, நான், என் அம்மா மூணு பேரும் சேர்ந்து தண்ணீருக்கடியில் யோகாசனம் பண்ணி உலகச் சாதனை நிகழ்த்த திட்டமிட்டிருக்கோம். கிராமங்களுக்குச் சென்று, இலவசமாக யோகா கற்றுக்கொடுக்க திட்டமிட்டிருக்கிறோம். எல்லோரையும் யோகா சென்றுசேரணும்’’ என்றார்.

“யோகாவில் இன்னும் பல சாதனைகள் செய்யணும். மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்து எல்லோருக்கும் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தணும்’’ எனப் புன்னகைத்தார் .பிரிஷா.
நிகழ்த்தி காட்டுங்க பிரிஷா!
- ச.முத்துகிருஷ்ணன்
படங்கள்: எல்.ராஜேந்திரன்