
நம்பிக்கை நட்சத்திரங்கள்!

‘தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக நாங்களும் புராஜெக்ட்களில் அசத்துவோம்’ என நிரூபித்திருக்கிறார்கள் அரசுப் பள்ளி மாணவர்கள்.

‘I CAN - School Challenge’ என்ற பெயரில் பள்ளிகளுக்கிடையேயான தேசிய புராஜெக்ட் போட்டியை, Design For Change அமைப்பு ஒவ்வோர் ஆண்டும் நடத்திவருகிறது. இந்த ஆண்டு, பரிசுப் பெற்றவர்களில் தமிழகத்தின் 4 பள்ளிகள் அடக்கம். இவர்கள் அனைவருமே அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் என்பது சிறப்பு.


வினோத் (ஆசிரியர்), நகராட்சி நடுநிலைப் பள்ளி, திருவாரூர்
‘‘மாணவர்களிடையே கிண்டல் செய்து பட்டப் பெயர்வெச்சுக் கூப்பிடறது வழக்கம். இதையே பாசிடிவ்வான விஷயமா எடுத்து, உருவாக்கிய புராஜெக்ட்டை இது. வெளித்தோற்றத்துக்குப் பட்டப் பெயர் வைக்காமல், அவங்க திறமையையே பட்டப் பெயராக வைக்கிறதுதான் திட்டம். வகுப்பில் ரொம்ப ஒல்லியா இருக்கும் ஒரு பொண்ணை, ‘மஸ்கிட்டோ’ எனக் கிண்டல் பண்ணுவாங்க. அவள் சூப்பரா கிராஃப்ட்ஸ் பண்ணுவா. அதனால், ‘கிராஃப்ட் தாரணி’ எனக் கூப்பிட ஆரம்பிச்சோம். இந்த கான்சப்ட்தான் எங்களின் ‘The Beauty Begins’ புராஜெக்ட். இதுக்கு நேஷனல் லெவலில் டாப் 4-ல் முதல் பரிசு கிடைச்சது’’ என்றார்.

உமா மகேஸ்வரி (ஆசிரியை), பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளி, ஜெயங்கொண்டம்.
‘‘பிரதமரின் ‘கிளீன் இந்தியா’ திட்டத்தையே எங்க புராஜெக்ட்டாக எடுத்துக்கிட்டோம். பென்சில் சீவும் குப்பை வகுப்பறையில் அதிகமா இருக்கும். அதுக்குத் தீர்வாக, வாட்டர் கேன் மூடியில் ஸ்க்ரூவை ஃபிக்ஸ் செஞ்சோம். பென்சில் சீவும்போது அந்தக் குப்பை வாட்டர் கேனுக்கு உள்ளே விழுந்துடும். எங்க புராஜெக்ட் டாப் 20-ல் செலக்ட் ஆச்சு’’ என்றார்.



மேரி மெரிலேண்ட் அரிஸ்டா (ஆசிரியை), மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, பெரம்பூர்.
‘‘அயனாவரத்தில் காது கேட்காத, வாய் பேச முடியாத குழந்தைக்கு நடந்த பாலியல் வன்புணர்வு மனசை ரொம்ப பாதிச்சது. எங்க வகுப்பிலும் ஒரு செவித்திறன் மாற்றுத்திறனாளி மாணவி உண்டு. அவளுக்காக புராஜெக்ட் பண்ணினோம். ‘எனக்கு ஆபத்து என்னைக் காப்பாத்துங்க’ எனப் பேசி, மெமரிகார்டில் ரெக்கார்டு பண்ணின ஒரு ப்ளூ டூத்தை அவளிடம் கொடுத்தோம். ஆபத்து நேரத்தில் அதை அழுத்தினால் 100 மீட்டர்வரை அவளைச் சுற்றி இருக்கிறவங்களுக்கு அந்தக் குரல் கேட்கும். இதைப் பார்த்து அவள் அப்பா நெகிழ்ந்து அழுதுட்டாரு. இந்த ‘My Voice’ புராஜெக்ட் டாப் 20-ல் செலக்ட் ஆச்சு’’ என்றார்.

ஆசிரியை வசந்தி, பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளி, நெய்வேலி
‘‘போன வருஷம் இதே திட்டத்தில் நாங்க ஜெயித்த பணத்தில் பள்ளியின் சில தேவைகளைப் பூர்த்தி பண்ணினோம். கம்ப்யூட்டர் லேப், நூலகம் இரண்டும் ஒரே அறையில் செயல்பட்டு வந்துச்சு. பரிசுத்தொகையில் பூட்டியிருந்த பழைய அறையைப்

புதுப்பிச்சோம். ‘Aashaa’ என்கிற தொண்டு நிறுவனம் கம்ப்யூட்டர் ஆசிரியரை நியமித்துக் கொடுத்தாங்க. நூலகமும் உருவாக்கினோம். தவிர, ‘Mobile Library’ என்ற புராஜெக்ட்டையும் ரெடி பண்ணினோம். ‘Thank You DFC’ என்ற பெயரில் உருவாக்கின கம்ப்யூட்டர் அறை, டாப் 20-ல் தேர்வானது. ‘Mobile Library’ டாப் 100-ல் தேர்வானது. நாங்க டபுள் குஷியில் இருக்கோம்!” என்றார் உற்சாகமாக.
வாழ்த்துகள் நம்பிக்கை நட்சத்திரங்களே!
-வெ.வித்யா காயத்ரி
படங்கள்: தே.அசோக் குமார்