
மனசு குளிர்ந்து, வர்றவுக போறவு களுக்கெல்லாம் வரம் கொடுத்து வாழ்த்திக்கிட்டிருக்காக ரெண்டு பேரும்!
சங்கரனுக்கும் அமிர்தத்தாயிக்கும் கலியாணமாகி ஏழெட்டு வருஷங்களாச்சு. இன்னும் கடவுள் கண்ணைத் திறக்கலே. பாக்கறவுகள்லாம் கேக்குறாக... `இன்னும் குளிச்சுக்கிட்டுத்தான் இருக்கியா தாயி'னு. அந்த வார்த்தைகளைக் கேக்குறபோதெல்லாம் அமிர்தத்தாயிக்கு காதுல ஈயத்தைக் காச்சி ஊத்துன மாதிரி வலிக்கும். வேண்டாத சாமியில்லை. இருக்காத விரதமில்லை. அமிர்தத்தாயி வயித்துல இன்னும் உசுரு வாய்க்கலே.
தனக்கு ஒரு வாரிசு இல்லேங்கிற கவலை சங்கரனுக்கும் மனசுக்குள்ள முள்ளாக் குத்திக்கிட்டிருக்கு. ஒருநாளு, அமிர்தத்தாயி குளிக்கப்போன இடத்துல, பெரிய வீட்டு காத்தாயி கிழவி பாத்து, `ஒருக்கா அழகர் கோயிலுக்குப் போயி ஒரு ராத்திரி தங்கி வேண்டிக்கிட்டு வா தாயி. நல்லது நடக்கும்'னு சொல்லிட்டுப் போனா. ரெண்டு பேரும் கிளம்பிட்டாக.

அழகர் கோயில் முகப்புல புருஷனும் பொண்டாட்டியும் தங்கியிருந்தாக. `நாங்க செஞ்ச பழி பாவங்களைப் பொறுத்து எங்களுக்கு ஒரு வாரிசைக் குடு மாயக்கண்ணா’னு மனமுருகி ரெண்டு பேரும் வேண்டிக்கிட்டாக. அமிர்தத்தாயி பச்சைத் தண்ணிகூட குடிக்காம விரதம் இருந்தா.
காத்தாயி கிழவி சொன்ன உபாயம் பலிச்சிருச்சு. சங்கரனும் அமிர்தத்தாயும் வடிச்ச கண்ணீரு அந்த அழகன் கண்ணைத் தெறந்திருச்சு. முழுகாம இருந்தா அமிர்தத்தாயி. சங்கரன் பொண்டாட்டியை ஈ, கொசுகூட அண்டாம நல்லாக் கவனிச்சுக்கிட்டான்.
பத்தாம் மாசம் சொகப் பிரசவமா பொம்பளப் புள்ளையைப் பெத்தெடுத்தா அமிர்தத்தாயி. ஊரே வந்து தாயையும் புள்ளையையும் வாழ்த்திட்டுப் போச்சு. `சாமாயி’னு புள்ளைக்குப் பேரு வெச்சாக.
ஒத்தை மக சாமாயியை தங்கம் கணக்கா பாத்துப் பாத்து வளத்தாக. அவளும் பெத்தவுக சொல் தட்டாத புள்ளையா வனப்பா வளந்தா. சமைஞ்சு ஆறேழு மாசத்துலயே ‘எனக்குக் கொடு’, ‘உனக்குக் கொடு’னு ஏகப்பட்ட சம்மந்தக்காரங்க வரத் தொடங்கிட்டாக.
ஒருக்கா, பாண்டிக்கோயில் திருவிழா நடந்துச்சு. சாமாயி குடும்பத்தோடு போயிருந்தா. ரெட்டைச் சடை போட்டுக்கிட்டு பாவாடை தாவணியில தேவதை மாதிரி சுத்திச்சுத்தி வந்தவ மேல ஊரு கண்ணு, உலக கண்ணே விழுந்துச்சு. மாயன் கண்ணும் அங்கதான் விழுந்துச்சு.
மாயன் பக்கத்தூருக்காரன். அவனும் வரம் வாங்கிப் பெறந்த பயதான். சாமாயிக்கு ஒருவகையில உறவு. எந்த வம்புதும்புக்கும் போகாம அப்பன் ஆத்தா பேரைக் காப்பாத்துற பய. குலத்தொழிலையே புள்ளைக்கும் கத்துக்குடுத்தாரு சங்கரன். காலையில உக்காந்தா ராத்திரி வரைக்கும் சளைக்காம வேலை பாப்பான் மாயன். அப்பப்போ விவசாய வேலைக்கும் போறதுண்டு. `மாயன் வயலுக்குள்ள இறங்கிட்டா வேலை தானா நடக்கும்’னு ஆண்டைகள்லாம் பெருமையாப் பேசுவாக. பாக்குற கண்ணெல்லாம் மயங்குற மாதிரி ஆளு திடகாத்திரமா, வடிவா இருப்பான். நிறைய பேரு பொண்ணு தர சம்மதிச்சும் கலியாணத்துல பெருசா விருப்பமில்லாம இருந்தான் பய.
ஒருக்கா, கொல்லைக் காட்டுக்குப் போயிட்டு வரும்போது, கால் அடிப்பட்டுக் கெடந்த ஒரு கௌதாரி குருவியை எடுத்துக்கிட்டு வந்து வீட்டுல வளத்தான் மாயன். அவன் எங்கே போனாலும் தோள்ல உக்காந்துக்கிட்டு கூடவே போகும் அந்தக் குருவி. அவன் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நிக்கும்.
வருஷாவருஷம் சாமாயி குடும்பம் பாண்டிக்கோயில் திருவிழாவுல அன்னதானம் போடுவாக. பந்தியில உக்காந்து சாப்பிட்டுக்கிட்டிருந்தான் மாயன். துருதுருன்னு ஓடியாடி பரிமாறின சாமாயியைப் பார்த்து அசந்துபோனான். இப்படியொரு பொண்ணு நம்ம வாழ்க்கைத்துணையா வந்தா எப்படியிருக்கும்னு மனசுல கற்பனை றெக்கை கட்டி நிக்குது. திருவிழா முடியிற வரைக்கும் அவ பின்னாடியே அலைஞ்சான் மாயன். அவன் மனசுல பூவா பூத்து நின்னா சாமாயி.
சாமாயிக்கும் மாயன் முகம் மனசுல பதிஞ்சு போச்சு. ஓரக்கண்ணால அவனைத் தேட ஆரம்பிச்சா. கள்ளங்கபடமில்லாத அவன் சிரிப்பும் கம்பீரமும் அவளுக்கு ரொம்பவே புடிச்சுப்போச்சு. கூடவே அவன் தோள்லயே உக்காந்துக்கிட்டுத் திரியுற கௌதாரியையும். வீட்டுக்கு வந்தும் இருப்புக்கொள்ளலே.
மாயனாலயும் இருக்க முடியலே. கிளம்பி சாமாயியோட ஊருக்குப் போனான். மாயனைப் பாத்த சாமாயி, தண்ணி எடுக்கிற சாக்குல குடத்தை எடுத்துக்கிட்டு கெணத்துக்குக் கிளம்புனா. வழியில ரெண்டு பேரும் சந்திச்சுக்கிட்டாக. மாயன்தான் முதல்ல பேசுனான்... ``ஏம்புள்ள... ஒம் பேரென்ன?”
``அய்யாரு பேரு தெரியாமயா இவ்வளவு தூரம் தேடி வந்திருக்கிய... எம்பேரு, எம் அப்பன் பேரு... எல்லாத்தையும்தான் விசாரிச்சுத் தெரிஞ்சுக்கிட்டீரே”னு குத்தலா சொன்னா சாமாயி... ரெண்டு பேரும் ஓரக்கண்ணால பாத்துப்பாத்து சிரிச்சபடி நடந்தாக.
திடீர்னு சாமாயி கையப்புடிச்சான் மாயன்... ``என்னைக் கலியாணம் கட்டிக்கிறியா சாமாயி. நீ இல்லாம என்னால வாழ முடியாது”னான். சாமாயிக்கு வெட்கத்துல முகம் சிவந்துபோச்சு. வார்த்தை வரலே அவளுக்கு. அப்படியே அவன் தோள்ல சாஞ்சுக்கிட்டா. அந்தப் பொழுதுக்கு றெக்கை முளைச்சிருச்சு. ரெண்டு புள்ளைகளும் கனவுலகத்துல பறக்குதுக.

வீட்டுக்கு வந்து ஆத்தா அப்பங்கிட்ட சாமாயி பத்திச் சொன்னான் மாயன். ’எப்படியோ புள்ளை கல்யாணத்துக்குச் சம்மதிச்சுட்டானே’னு சந்தோஷம். அவன் ஆசைப்பட்டவளையே அவனுக்குக் கலியாணம் கட்டி வச்சிரலாம்னு கௌம்பி சாமாயி வீட்டுக்குப் போனாக. திடீர்னு வந்து நின்னவுகளை `வாங்க'னு வாய் நிறையச் சொல்லி உள்ளே கூப்பிட்டாக சாமாயியோட அப்பனும் ஆத்தாவும்.
``ஏதோ சின்னஞ்சிறுசுக ஒண்ணுக்கொண்ணு பாத்து பழகிருச்சுக. உறவுமுறையிலயும் பங்கமில்லை. பெரியவுக நாமளே சேந்து கலியாணம் முடிச்சு வெச்சிருவோம்”னாரு மாயனோட அப்பா. சாமாயியோட அப்பங்காரனுக்கு கொஞ்சம் யோசனை. மகளோட முகத்தைப் பாத்தான். கண்ணு விரிய மாயனைப் பாத்துக்கிட்டு நின்னா. அதுக்குமேல யோசிக்க ஒண்ணுமில்ல. “சரிங்கய்யா... வர்ற சித்திரை திருவிழாவுல நிச்சயதார்த்தம் பண்ணி கலியாணத்துக்கு நாள் குறிச்சிருவோம்”னு சொல்லிட்டாரு.
தொடங்கிருச்சு சித்திரை திருவிழா. ஊரே களைகட்டிக் கிடக்கு. சண்டை, சச்சரவு, சோகம், கோபம் எல்லாத்தையும் மறந்துட்டு மக்கள் கொண்டாட்டமா திரியிறாக. வைகையாத்து மணல் திட்டுல சாமாயியும் மாயனும் புத்தாடை உடுத்தி உக்காந்திருக்காக. சுத்திலும் சாதி சனங்க கூடி நிக்குது. பாக்கு மாத்தி ரெண்டு பேருக்கும் பரிசம் போட்டு, கலியாணத்தை நிச்சயம் பண்ணிட்டாக. நிறைஞ்ச வைகாசி வளர்பிறையில கலியாணம்.
நாளு போறதும் தெரியலே. நேரம் போறதும் தெரியலே. ஒருத்தருக்குள்ள ஒருத்தரு வாழ்ந்துக்கிட்டிருக்காக. சாமாயி ஒவ்வொரு நாளா எண்ணிக்கிட்டிருக்கா.
அன்னிக்கு பெரியாண்டை வீட்டுல கருதறுப்பு. கடுமையான வேலை. முடிச்சுட்டு குளிக்கப்போனான் மாயன். கூடவே அந்தக் கௌதாரியும் அவன் தோள்ல உக்காந்துக்கிட்டு வந்துச்சு. அமைதியா உக்காந்து வந்துக்கிட்டிருந்த குருவி திடீர்னு கத்த ஆரம்பிச்சுச்சு. படபடன்னு சிறகை அடுச்சுக்கிச்சு. மாயனுக்கு ஒண்ணும் புரியலே. குருவியை அணைச்சு அமைதிப்படுத்துறான். ஆனா, அடங்கலே. திடீர்னு அவன் பிடியில இருந்து பறந்த குருவி பக்கத்துல இருந்த மரப்பொந்துல போயி உக்காந்துச்சு.
மாயன் மரத்துல ஏறி, கௌதாரி உக்காந்த பொந்துக்குள்ள கைய விட்டான் பாருங்க... உள்ளே உக்காந்திருந்த ஒரு நாகம் படுகோபமா கையில ஒரு போடு போட்டுச்சு. வலி உசுரு போச்சு. கையை உதறிக்கிட்டு அப்படியே மரத்துல இருந்து விழுந்தான். ரத்தம் வடியுது. எழுந்து வீட்டுக்கு ஓடினான். மகன் ரத்தம் வடிய ஓடியாறதைப் பாத்து அம்மா பதறிப்போனா. அவ காலடியில விழுந்தான் மாயன். அவனைத் தூக்கி மடியில போட்டா மகராசி. ``அம்மா... எனக்கு சாமாயியைக் கொள்ளிவைக்கச் சொல்லு...”னு பாதி பாதியா வார்த்தை வந்து விழுவுது. அடுத்த நிமிஷம் மாயன் கண்ணை மூடிட்டான். பெரிய குரலெடுத்து ஒப்பாரி வைக்கிறா ஆத்தாகாரி.
ஊரு கூடிருச்சு. சாதி சனமெல்லாம் வந்துட்டாக. `கலியாணத்துக்கு நாளு குறிச்ச நேரம் இப்படி ஆகிப்போச்சே’னு ஊரே வருந்தி நிக்குது. சாமாயி வீட்டுக்கு ஆளு அனுப்பி விட்டாக. `அய்யோ... மனசுக்குள்ள புருஷன் பொண்டாட்டியா வாழ்ந்தமே... இப்படி நட்டாத்துல விட்டுட்டுப் போயிட்டானே’னு கதறி அழுவுறா. அப்பங்காரனும் ஆத்தாவும் தேத்தமாட்டாம கலங்கிப்போய் நிக்குறாக.
`மாயனோட கடைசி ஆசைப்படி சாமாயிதான் கொள்ளிவைக்கணும்’னு மாயனோட அப்பங்காரன் சொல்றான். பெரியவுகள்லாம் ஒப்புக்கலே. ``சம்பிரதாயத்துல அதெல்லாம் இல்லை... பொம்பளைக கொள்ளிவைச்சா ஊரழிஞ்சு போயிரும்”னு மல்லுக்கு நிக்குறாக.
வேற வழியில்லை. மாயன் உடலை தேர்ல வெச்சு எடுத்துக்கிட்டுக் கிளம்பிட்டாக. இடுகாட்டுல வெச்சு சாங்கியம் தொடங்கிருச்சு. சாமாயியை கைத்தாங்கலா அழைச்சுக்கிட்டு அவ ஆத்தா அப்பன் கிளம்புறாக. காத தூரம் நடந்திருப்பாக. திடீர்னு அவுக கையை உதறிவிட்டுட்டு மாயன் உடல்போன திசையில ஓடுனா சாமாயி. மாயனோட அப்பன், மகன் உடலுக்குத் தீமூட்ட தயாரா நிக்குறான். ஓடுன வேகத்துல அவங்கையில இருந்து கொள்ளிக்கட்டையைப் பறிச்சா சாமாயி. மாயன் சொன்ன மாதிரி, அவன் உடலுக்கு தீ மூட்டுனா. எல்லாரும் விக்கிச்சுப் போய் நின்னாக.
தீ கொளுந்துவிட்டு எரியுது. அடுத்த நொடி, அந்தத் தீக்குள்ள பாஞ்சா சாமாயி. எரிஞ்சுக்கிட்டிருந்த மாயனோட உடம்போட கலந்து அவ உயிரும் எரியுது. மாயன் உடம்பு வேகவேகமா எழுந்து எழுந்து அடங்குது. பாத்துக்கிட்டிருந்த சனங்க விறுவிறுத்துப் போனாக.
இந்தச் சம்பவத்துக்கு அப்புறம் ஊரே வெம்மைக்காடாகிப் போச்சு. தண்ணிப் பஞ்சம் தலையெடுத்து நின்னுச்சு. வானம் பொய்யாப் போச்சு. தீனி கெடைக்காம மாடு கன்னெல்லாம் செத்துச் செத்து விழுந்துச்சு. புள்ளைகளுக்கெல்லாம் நோய் வந்து அப்புது. மக்கள்லாம் பஞ்சம் பிழைக்க வெளியூர் போற நிலைமை வந்திருச்சு. சாமாயி அப்பனும் மாயன் அப்பனும் ‘இந்த நிலைக்கெல்லாம் காரணம் புள்ளைக ரெண்டும்தான்’னு புரிஞ்சுக்கிட்டாக. ரெண்டு பேரும் சேந்து மாயனுக்கும் சாமாயிக்கும் சிலையெடுத்து சாமியாக் கும்பிட ஆரம்பிச்சாக. அதுக்கப்புறம் எல்லாம் குளிர்ந்து போச்சு.
சாமாயியும் மாயனும் சிவகங்கைக்குப் பக்கத்துல முக்குடிங்கிற ஊர்ல இப்போ குடியிருக்காக. அவுகளுக்குக் கலியாணம் நிச்சயம் பண்ணின வைகாசி மாசத்துல புதுசா சிலையெடுத்து மக்கள் கொடை நடத்திக் கொண்டாடுறாக. மனசு குளிர்ந்து, வர்றவுக போறவு களுக்கெல்லாம் வரம் கொடுத்து வாழ்த்திக்கிட்டிருக்காக ரெண்டு பேரும்!
-வெ.நீலகண்டன்
படம் : ரா.ராம்குமார்
ஓவியம் : ஸ்யாம்