
உறவுகள்... உணர்வுகள்...வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி
‘‘மும்பையைச் சேர்ந்த ஒரு தம்பதி சமீபத்தில் ஒரு பார்ட்டி கொடுத்தார்கள். பரஸ்பர சம்மதத்தின் பேரில் அவர்கள் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தார்கள். பிரிவுக்கான பார்ட்டி அது.
‘நண்பர்களாக இருந்த நாங்கள் தம்பதியானோம். தம்பதியான பிறகு எங்களுக்குள் புரிந்துணர்வோ, இணக்கமோ இல்லை. அதனால் பிரிகிறோம். மீண்டும் நண்பர்களாகவே இருப்பதென முடிவு செய்திருக்கிறோம்’ என்று அதில் அறிவித்தார்கள்.
நல்ல நண்பர்களாக இருக்கும் இருவரால் ஏன் நல்ல கணவன் மனைவியாக இருக்க முடிவதில்லை?
திருமணத்துக்குப் பிறகு ஒருவரின் ரோல் ப்ளே மாறுகிறது. திருமண உறவுக்கு நட்பைத் தாண்டிய பக்குவமும் மன முதிர்ச்சியும் தேவைப்படுகிறது. பெரும்பாலான காதல் திருமணங்கள் தோற்றுப் போகவும் இந்தப் பக்குவமின்மைதான் காரணம். திருமண உறவுக்குள் சிக்கிக்கொள்வதைவிட, `லிவ்இன் ரிலேஷன்ஷிப்' சிறந்தது என்கிற மனநிலையும் இன்று அதிகரித்துவருகிறது. அதற்கு கமிட்மென்ட் தேவையில்லை என நினைக்கிறார்கள். ஆனால், அதிலும் பிரச்னைகளுக்குப் பஞ்சமே இல்லை. இருவரை இணைத்திருக்கும் எந்த உறவானாலும், அடிப்படை மரியாதையும் ஈகோ பார்க்காத மனநிலையும் அவசியம்’’ என்கிறார் வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி.
நாளுக்குநாள் விவாகரத்து எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், பிரிவுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிற விஷயங்கள் அற்பத்தனமாக இருப்பதை, தான் சந்தித்த வழக்குகளின் உதாரணங் களோடு முன்வைக்கிறார் அவர்.

‘`எந்த உறவுக்கும் அன்புதான் அடிப்படை. ஆனால், அந்த அன்பே ஓர் எல்லையைத் தாண்டும்போது வன்முறையாகவும் மாறுவதுண்டு. ரம்யா-கதிரின் திருமண உறவில் சிக்கல் ஏற்படவும் அந்த அன்பு, வன்முறையானதுதான் காரணம்.
அன்பு என்கிற பெயரில் கணவரை அளவுக்குமீறிக் கண்காணித்ததும் கட்டுப்படுத்தியதும் பிரச்னையைத் தொடங்கிவைத்தது. தனக்குத் தெரியாத எந்த ரகசியமும் கணவரிடம் இருக்கக் கூடாது என்கிற நினைப்பு ரம்யாவுக்கு. கணவரின் மெயில்களை செக் செய்வது, வாட்ஸ்அப் மெசேஜ்களை படிப்பது, எப்போது எங்கே இருக்கிறார், என்ன சாப்பிட்டார் என ஆராய்வது என எல்லைமீறியிருக்கிறார் மனைவி. ஆறே மாதங்களில் திருமண உறவு வெறுத்துப்போய், விவாகரத்து கேட்டு வந்தார் கதிர். இருவருக்குமிடையில் எந்தப் பிரச்னையும் இல்லை, பொசசிவ்னெஸ்ஸைத் தவிர.
‘இது வெறும் பொசசிவ்னெஸ்தான். சந்தேகமில்லை. உங்கள்மீதான அதீத அன்பின் வெளிப்பாடு’ என கதிருக்கும், ‘பொசசிவ்னெஸ்தான் என்றாலும், அது அளவுக்கு மிஞ்சிவிட்டதால் ஏற்பட்ட ஆபத்து இது’ என்பதை ரம்யாவுக்கும் புரியவைத்தேன். எந்த உறவிலும் அந்தரங்க இடைவெளி என ஒன்று இருக்கும். கணவன் மனைவியானாலும், அம்மா மகளானாலும் அந்த இடைவெளியை எட்டிப் பார்க்க நினைப்பது அநாகரிகம். பல மாதப் போராட்டத்துக்குப் பிறகு ரம்யாவும் கதிரும் இணைந்தனர். காதலிக்கிற காலத்தில் ரசிக்க வைக்கிற பொசசிவ்னெஸ், கல்யாணத்துக்குப் பிறகு பிரிவுக்கே காரணமாகலாம், கவனம்!’’ என்று எச்சரிப்பவர், தன் ஆரம்பகால வழக்கறிஞர் பணியில் விவாகரத்து வழக்குகளை எடுப்பதில்லை என்கிற கொள்கையோடு இருந்தவர்.
‘`இரண்டு குடும்பங்களைப் பிரித்துவைத்து நாம் ஏன் சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணம். அடிக்கடி இது தொடர்பாக எனக்கும் என் கணவருக்கும் விவாதங்கள் நடக்கும். என் கணவர் மருத்துவர். திடீரென ஒருநாள் என்னை அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். படுக்கையில் இருந்த ஒருவருக்கு என்னை அறிமுகப்படுத்தினார். அந்த நபருக்கு நீரிழிவு தீவிரமாகி, ஒரு காலை அகற்றியிருந்தார்கள். அந்த நிலையிலும் அவர் ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தார். ‘காலையே வெட்டியெடுத்திருக்காங்க. உங்களால எப்படி சந்தோஷமா இருக்க முடியுது’ என அவரிடம் கேட்டேன். `காலை எடுக்கலைனா எனக்கு உயிரே போயிருக்கும். இப்போ நான் என் வாழ்க்கையை இழக்காமலிருக்கேனே’ என்றார். தேவைப்படும் இடங்களில் விவாகரத்து வாங்கிக்கொடுப்பது தவறில்லை என எனக்குப் புரியவைக்கத்தான் அந்த நபரை என் கணவர் சந்திக்கவைத்திருக்கிறார். விவாகரத்து முடிவே தவறானது என்கிற என் பார்வையும் அன்றிலிருந்து மாறியது. விவாகரத்து என்பதே சமூகத்துக்கு விரோதமானது என அர்த்தமில்லை.
விவாகரத்து கோரி அணுகுபவர்களை எப்படியாவது சேர்த்துவைத்துவிட முடியாதா என்பதுதான் என் முதல் எண்ணமாக இருக்கும். எல்லா வழக்குகளிலும் அப்படிச் சேர்த்துவைப்பது சாத்தியமில்லை. மனைவியின்மீது உச்சகட்ட வன்முறையைக் காட்டிய வழக்கில் அவளைக் கணவனுடன் சேர்த்துவைக்க நினைப்பது நியாயமுமில்லை. சேர்த்துவைப்பது சாத்தியமில்லை என்பது சில வழக்குகளில் முதல் நாளே தெரிந்துவிடும். சிலவற்றில் முயற்சி செய்து பார்க்கலாம் எனத் தோன்றும். அத்தகைய வழக்குகளுக்கு மெனக்கிடுவேன்.
‘கணவர் என்னுடன் தாம்பத்ய உறவே வெச்சுக்கிறதில்லை’, ‘மனைவி என்னைத் தவிர்க்கிறாள்’ எனச் சொல்லிக்கொண்டு விவாகரத்து கோருபவர்கள் அதிகரித்திருக் கிறார்கள். சம்பந்தப்பட்ட அந்தக் கணவருக்கு ஆண்களிடம் மட்டும் ஈர்ப்பு இருக்கலாம். மனைவிக்குப் பெண்களிடம் மட்டும் ஈர்ப்பு இருக்கலாம். இந்த உறவு சமூகத்துக்குப் புறம்பானது என்று சொல்லப்பட்ட காலம் மாறிவிட்டது. இவர்களைக் குற்றவாளிகளாகப் பார்க்க வேண்டியதில்லை. தன்பாலின ஈர்ப்பு என்பது இன்று பரவலாகப் பேசப்படுகிறது. அப்படிப்பட்ட ஈர்ப்பு உள்ளவர்களைக் கட்டாயப்படுத்தி, திருமண பந்தத்துக்குள் தள்ளும்போது அவர்களுக்குள் உறவுச்சிக்கல் வரும். சிலருக்கு இருபாலினத்தாரிடமும் ஈர்ப்பு இருப்பதையும் பார்க்கிறோம். தன்னால் இயல்பான தாம்பத்ய உறவு வைத்துக்கொள்ள முடியும் என்கிற பட்சத்தில் திருமணத்துக்குச் சம்மதிக்கலாம். தன் பாலினத்தவரோடு அல்லது இருபாலினத்தவரோடு உறவு வைத்துக்கொள்கிற மனநிலை இருந்தால் திருமணத்தைத் தவிர்ப்பதே நல்லது. செக்ஸ் உறவு குறித்த சரியான புரிந்துணர்வு இல்லாதவர்கள், திருமணத்துக்கு முன்பே கவுன்சலிங் போகலாம்’’ - விவாகரத்து தேவையா என்று யோசிப்பதைவிடவும் திருமணம் தேவையா என்று யோசிக்க வேண்டியதன் அவசியம் உணர்த்துகின்றன ஆதிலட்சுமியின் வார்த்தைகள்.

‘`கல்யாண வயதில் மகள் இருக்கிறார் அந்தப் பெண்ணுக்கு. விவாகரத்து வேண்டும் என்கிற முடிவோடு என்னைச் சந்திக்க வந்தார். ‘இத்தனை வருஷங்களா என் மகளுக்காக இந்த உறவை சகிச்சுக்கிட்டு வாழ்ந்தேன்’ என அவரும், ‘இந்த முடிவை அவங்க நான் பிறந்தபோதே எடுத்திருக்கலாம். இத்தனை வருஷங்கள் சண்டைகளையும் சச்சரவுகளையும் பார்த்து நான் நிம்மதியில்லாம வளர்ந்ததுதான் மிச்சம்’ என மகளும் சொன்னார்கள். குழந்தைக்காக இனிமையாகச் சேர்ந்து வாழ முடியும் என்றால் மட்டுமே அந்த உறவில் தொடருங்கள். அந்த இனிமை இல்லையென்றால் திருமண உறவே வேண்டாம். உங்கள் பிரச்னைக்குக் குழந்தைகளின் நிம்மதியையும் சந்தோஷத்தையும் பலிகொடுக்காதீர்கள்.
விவாகரத்து என்பது பிரச்னைக்கான முடிவே இல்லை. மாறாக பல புதிய பிரச்னைகளுக்கான தொடக்கம். விவாகரத்துக்குப் பிறகு அமைத்துக்கொள்கிற இன்னொரு வாழ்க்கை பேரன்பும் பெருமகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும் என கனவு காண்கிறார்கள். ஆனால், முந்தைய உறவின் கசப்பும் அது தந்த மிச்சங்களும் எச்சங்களும் அடுத்த உறவையும் விட்டுவைக்காது. இன்னும் சொல்லப்போனால், மறுமணத்துக்குப் பிறகு எங்களிடம் கவுன்சலிங் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ‘அவர் பண்ணினதையேதான் இவரும் பண்றாரு’ என்றோ, ‘அவ பேசினதையேதான் இவளும் பேசறா’ என்றோ புலம்புகிறார்கள். முதல் திருமணத்திலேயே கொஞ்சம் அனுசரித்துப் போயிருக்கலாமோ என நினைக்கிறார்கள். எனவே, திருமண உறவில் பிரச்னைகள் வருவது சகஜம்தான். ஆறப்போடுங்கள். அவசரப்படாதீர்கள்’’ - அறிவுறுத்துகிறவர், விரிசல் கண்ட உறவு, விவாகரத்தை நோக்கி நகராமலிருக்க அவசிய ஆலோசனைகளைச் சொல்கிறார்.
* திருமணமான சில வருடங்களில் அந்த உறவில் ஒருவித சலிப்பு தட்டும். அது சிலருக்கு நான்கு வருடங்களில் வரலாம், சிலருக்கு ஏழு வருடங்களில் வரலாம். அதைத் தாண்டக் கற்றுக்கொள்வதுதான் உறவைத் தக்கவைத்துக்கொள்வதில் முக்கியம். கணவன் மனைவிக்குள் தகவல் பரிமாற்றம் சரியாக இருந்தாலே இந்த சலிப்பைக் கடக்கலாம். அதற்காக தினமும் கொஞ்சிப் பேச வேண்டும், ரொமான்ஸ் செய்ய வேண்டும் என்றில்லை. தினமும் ஒருவேளையாவது சேர்ந்து சாப்பிடுவது, வாரம் ஒருமுறையாவது சேர்ந்து வெளியே போவது, அடிக்கடி போனில் பேசுவது... இவையெல்லாம் போதும்.
* அடுத்தது எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்வது. திருமணமான முதல் நாளிலிருந்தே இதற்குப் பழக வேண்டும். வாழ்க்கைத் துணைதான் என்றாலும் அவருக்கான இடைவெளியை அனுமதிக்க வேண்டும். அன்பு, பொசசிவ்னெஸ் என்கிற பெயர்களில் அதீத தலையீடு கூடாது.
* கோபம் வந்தால் வெளிப்படுத்துங்கள். சண்டை போடுங்கள். உங்கள்மீது தவறு எனத் தெரிந்தால் தயங்காமல் மன்னிப்பு கேளுங்கள்.

* அன்றைய பிரச்னைகளை அன்றைக்கே முடிவுக்குக் கொண்டுவரப் பழகுங்கள். தூங்கப் போகும்போது எந்த மனக்கசப்பும் வேண்டாம்.
* திருமணம் என்பது ஆணும் பெண்ணும் இணைவது மட்டுமில்லை, இரு குடும்பங்கள் இணைகிற நிகழ்வு. கல்யாணத்துக்குப் பிறகு இரண்டு குடும்பத்து உறவுகளையும் தம் உறவுகளாகவே பார்க்க வேண்டும். இரண்டு குடும்பத்து உறவுகளுக்கும் கொடுக்கவேண்டிய மரியாதையையும் செய்யவேண்டிய கடமைகளையும் தவறவிடக் கூடாது. ‘உன் குடும்பம், என் குடும்பம்’ என்கிற பிரிவினைகள் தவிர்த்து ‘நம் குடும்ப'மாகப் பார்க்கப் பழகுங்கள்.
* துணையைத் தாண்டிய வேறொருவருடன் உறவு ஏற்படுவதால் முடிவுக்கு வரும் திருமண உறவுகளின் எண்ணிக்கையும் இன்று அதிகரித்திருக்கின்றன. திருமண உறவு சரியாக அமையாதபட்சத்தில் அப்படி இன்னொருவருடன் உறவு ஏற்பட்டால், திருமண உறவிலிருந்து வெளியேறி விடுங்கள். அதே நேரம் அந்தத் தகாத உறவுதான் உங்கள் திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்படவே காரணம் என்றால், அது நியாயமானதல்ல. தகாத உறவிலிருந்து உடனடியாக வெளியே வாருங்கள்.
* உங்கள் உறவுச் சிக்கல் தெரிந்து அதை ஊதிப் பெரிதாக்கும் நபர்களிடமிருந்து விலகி இருங்கள், அவர்கள் பெற்றோராகவே இருந்தாலும் சரி. பாசிட்டிவாக அட்வைஸ் செய்கிறவர்களைப் பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கைக்கு நட்பு முக்கியம்தான். அதுவும் ஓர் எல்லையுடன் இருக்கட்டும். தன்னைவிடவும் நண்பர்கள் முக்கியம் என்கிற எண்ணத்தை உங்கள் துணையிடம் ஏற்படுத்தாதீர்கள். உங்கள் அந்நியோன்யத்துக்குள் மூன்றாம் நபருக்கு ‘நோ என்ட்ரி’ சொல்லுங்கள்.
-ஆர்.வைதேகி
படம் : ஆ.வள்ளி செளத்திரி