மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சட்டம் பெண் கையில்! - குழந்தைகள்மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்கள்

சட்டம் பெண் கையில்! - குழந்தைகள்மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
சட்டம் பெண் கையில்! - குழந்தைகள்மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்கள்

வழக்கறிஞர் வைதேகி பாலாஜி

சட்டம் பெண் கையில்! - குழந்தைகள்மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்கள்

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை செய்திகளைப் பற்றி கேட்கவே மனம் பதறுகிறது. தனக்கு என்ன நிகழ்கிறது என்பதையே அறியாமல் சாக்லேட்டுகளுக்கு ஆசைப்பட்டும், எதிர்த்துப் போராட முடியாமல் பயமுறுத்தல்களுக்கு ஒடுங்கியும் அவர்கள் துன்புறும் அவலம் காலம் காலமாகத் தொடர்கிறது. என்றாலும், சமீபத்திய ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கான சட்டங்களும் தண்டனைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன என்பது மட்டுமே ஆறுதல். அவற்றை விளக்குகிறார், வழக்கறிஞர் வைதேகி பாலாஜி.

‘`குழந்தைகள்மீது தொடரும் பாலியல் வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் அவசரச் சட்டம் 2018-ல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி, அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ‘மரண தண்டனை விதித்தால் குற்றங்கள் குறைந்துவிடுமா?’ என்று மனித உரிமை ஆர்வலர்கள் ஒருபக்கம் தங்களது விமர்சனங்களை முன்வைக்கின்றனர். சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதுதான் குறைந்தபட்ச ஆறுதல் என்பது மக்களின் கருத்தாக இருக்கிறது. சென்னையில் ஏழு வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த தஷ்வந்த் மீதான வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, பலதரப்பட்ட பிரிவுகளின் கீழ் குற்றவாளிக்குச் சிறைத் தண்டனையும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302-ன்படி அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனையையும் நீதிமன்றம் விதித்தது. மேல்முறையீட்டு வழக்கில் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதிசெய்தது. இதுபோல ஓர் அவலம் இனியும் நடக்காமல் தடுப்பதே எல்லோரின் நோக்கமும்.

சட்டம் பெண் கையில்! - குழந்தைகள்மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்கள்

போக்சோ சட்டம்

குழந்தைகள்மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்கள் வீடுகள், பொது இடங்கள், பள்ளிகள் ஆகிய மூன்று இடங்களில்தான் அதிகளவில் நடக்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்டதுதான் `போக்சோ சட்டம் 2012' (POCSO - The Protection of Children from Sexual Offences). சட்டப்படி ‘குழந்தைகள்’ என்பவர்கள் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் இருபாலரையும் குறிக்கும்.

* சிறுமிகள், சிறுவர்கள் பாதிக்கப்பட்டால் போக்சோ சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம்.

* குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லைகள் உண்டாக்கும் விதமான அனைத்து செயல்களும் குற்றமே. அந்தக் குற்றத்துக்கு குறைந்தது ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அதிகபட்சமாக ஆயுள் தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும்.

* காவல்துறை அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் அல்லது ஆயுதப்படையினர், மருத்துவமனைப் பணியாளர்கள், அரசு அலுவலர்கள், சிறைப் பாதுகாவலர்கள், பாதுகாப்பு இல்லங்கள், கல்வி நிறுவனங்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் இல்லங்களின் ஊழியர்கள் என, இந்த இடங்களில் இவர்களால் குழந்தைகளுக்குப் பாலியல் தொந்தரவுகள் ஏற்பட்டால்...

பாதிக்கப்பட்ட குழந்தை வசிக்கும் வீட்டிலேயே வசிக்கும் உறவினரால் குழந்தைக்குப் பாலியல் தொல்லை ஏற்பட்டிருந்தால்...

குழந்தைகளைப் பாதுகாக்கும் அல்லது பராமரிக்கும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அங்கிருக்கும் குழந்தைகளிடம் பாலியல், தொந்தரவு செய்திருந்தால்...
 

*குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இவர்களுக்கு அபராதம் மற்றும் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும். குற்றத்தின் தன்மையைப் பொறுத்து அது ஆயுள் தண்டனையாக நீட்டிக்கப்படும்.

* குழந்தைகள்மீது பாலியல் தாக்குதலில் ஈடுபடுவோருக்குக் குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் சிறைத் தண்டனையும், அதிகபட்சமாக ஐந்து வருடங்கள் சிறைத் தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும்.

* பாலியல் துன்புறுத்தல் செய்வோருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

* குழந்தைகளை ஆபாசமாகப் படமெடுத்து இணையதளங்கள், விளம்பரங்கள், தொலைக்காட்சிகள் ஆகிய எலெக்ட்ரானிக் ஊடகங்களில் காட்சிப்படுத்தும் குற்றத்துக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

* பாலியல் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ளும் குற்றச்செயலில் ஈடுபட்டு, குழந்தைகளுக்குப் பால்வினை நோய் மற்றும் தொற்றுநோய் உண்டாக்கும் நபர், மாற்றுத்திறனாளி/மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் பாலியல் தொந்தரவு செய்யும் நபர், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் பாலியல் தொந்தரவு செய்யும் நபர் (aggravated sexual assault)... இவர்களுக்கெல்லாம் ஐந்து வருடங்கள் சிறைத் தண்டனை, அதிகபட்சமாக ஏழு வருடங்கள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

விசாரணைக்கான நடைமுறைகள்

* பெண் காவலர்கள், பாதிக்கப்பட்ட குழந்தையின் வசிப்பிடத்துக்குச் சென்றுதான் விசாரிக்க வேண்டும். அவ்வாறு சாட்சியங்கள் சேகரிக்கும் காவல்துறை அதிகாரி, சீருடையில் செல்லக் கூடாது.

* குழந்தையிடம் நிகழ்ந்த சம்பவத்தைப் பற்றிய செய்தியைக் கேட்டறியும்போது அல்லது விசாரணையின்போது, எக்காரணத்தைக் கொண்டும் குற்றவாளியைப் பாதிக்கப்பட்ட குழந்தை கண்டுவிடாதபடி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

* எக்காரணத்துக்காகவும் பாதிக்கப்பட்ட குழந்தையை இரவு நேரங்களில் காவல் நிலையத்தில் வைத்திருக்கக் கூடாது.

* பாதிக்கப்பட்ட குழந்தையின் அடையாளத்தை ஊடகத்தில் எந்த வகையிலும் வெளியிடக் கூடாது.

* சம்பவம் நடந்த 30 நாள்களுக்குள் பாதிக்கப்பட்ட குழந்தையிடம் ஆதாரத்தைப் பெற்றுப் பதிவுசெய்திருக்க வேண்டும்.

* ஒரு வருட காலத்துக்குள் வழக்கை நடத்தி முடிக்க வேண்டும்.

 *வழக்கு விசாரணையின்போது குழந்தையின் பெற்றோரோ, குழந்தையின் நம்பிக்கைக்குரிய ஒருவரோ உடனிருக்கலாம்.

* பாலியல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். சிறப்பு நீதிமன்றத்தின் நடைமுறைகள், கேமரா மூலம் பதிவு செய்யப்படும்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களின் நோக்கம், வரையறை மற்றும் நடைமுறை பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.

 - ஓவியம் : ஹாசிப்கான்

முதல் மரண தண்டனை!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை ஒடுக்குவதற்காக ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வந்த இந்திய தண்டனைச் சட்டம், போக்சோ சட்டம் போன்ற பல்வேறு சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அமல்படுத்தப்பட்ட அவசரச் சட்டம் 2018-ன் கீழ் 12 வயதுக்குட்பட்ட குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்கு உச்சபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்படும்.

அதன்படி முதல் மரண தண்டனையாக, மத்தியப்பிரதேசத்தில் நான்கு வயது மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் மகேந்திர சிங்குக்கு சாகும் வரை தூக்குத் தண்டனை, ஜபல்பூர் மத்திய சிறைச் சாலையில் மார்ச் 2 அன்று நிறைவேற்றப்பட உள்ளது. சென்ற வருடம் ஜூன் 30 அன்று, அந்தக் குழந்தையைக் காட்டுக்குள் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி, அவள் இறந்ததாக நினைத்து அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டான்.

சிறுமியைத் தேடிக் கண்டுபிடித்த அவளின் குடும்பம், குற்றுயிராகக் கிடந்த அவளை மருத்துவமனைக்கு அள்ளிச் செல்ல, கொடூரமான காயங்கள் காரணமாக அவளை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தது அம்மாநில அரசு. பலகட்ட அறுவைசிகிச்சைகளுக்குப் பிறகு, அவள் குடல்கள் காப்பாற்றப்பட்டன; உயிர் மீட்கப்பட்டது. சாட்னா மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று, குற்றவாளிக்கு மரண தண்டனை தீர்ப்பானது.

தண்டனைக்கு எதிராகக் குற்றவாளியின் மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த மத்தியப்பிரதேச உயர் நீதிமன்றம், குற்றத்தின் குரூரத்தையும் குற்றவாளி ஓர் ஆசிரியராக இருப்பதையும் சுட்டிக்காட்டி, மகேந்திர சிங்குக்கு சாகும்வரை தூக்குத் தண்டனை எனத் தீர்ப்பளித்தது.

குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் அல்லது குடியரசுத்தலைவரிடம் கருணை மனு கொடுத்தால், விசாரணை மற்றும் சூழ்நிலைகளைப் பொறுத்து தண்டனையில் மாற்றம் ஏற்படலாம். 

2018-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டத்தின் சிறப்பம்சங்கள்

* 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்த நபருக்குக் குறைந்தது 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கப்படும்.

* 16 வயதுக்குட்பட்ட சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்படும்.

* காவல்துறை அதிகாரி பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் 10 வருடங்கள் சிறைத் தண்டனை.

* இந்தப் புதிய சட்டத்தின்படி, பாலியல் குற்ற வழக்குகளின் விசாரணையை இரண்டு மாத கால அவகாசத்துக்குள் முடிக்க வேண்டும்.

* 16 வயதுக்குட்பட்ட சிறுமியை வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது.

* மேல் முறையீடு செய்யும் பாலியல் வழக்குகளை ஆறு மாத காலத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.