அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

“அம்மாவை மறந்த அ.தி.மு.க!” - பிறந்தநாள் கூட்டங்கள்கூட நடக்கவில்லை...

“அம்மாவை மறந்த அ.தி.மு.க!” - பிறந்தநாள் கூட்டங்கள்கூட நடக்கவில்லை...
பிரீமியம் ஸ்டோரி
News
“அம்மாவை மறந்த அ.தி.மு.க!” - பிறந்தநாள் கூட்டங்கள்கூட நடக்கவில்லை...

“அம்மாவை மறந்த அ.தி.மு.க!” - பிறந்தநாள் கூட்டங்கள்கூட நடக்கவில்லை...

ம்மா, தங்கத்தாரகை என்றெல்லாம் ஜெயலலிதாவைப் போற்றித் துதித்தவர்களும், அவரது கடைக்கண் பார்வைக்காக ஏங்கிக்கிடந்தவர்களும், அவரது கார் டயர்களோடு உருண்டவர்களும் ஏராளம். ஆனால், ஜெயலலிதா மறைந்து இரு ஆண்டுகள் கடந்த நிலையில், அவரது பிறந்தநாள் பொதுக்கூட்டத்துக்கான அறிவிப்பை பிப்ரவரி 20-ம் தேதிதான் ‘நமது அம்மா’ நாளிதழில் அ.தி.மு.க தலைமை வெளியிட்டுள்ளது. கடைசிநேர இந்த அறிவிப்பால் கழகத் தொண்டர்களும், பேச்சாளர்களும் அதிருப்தியடைந்துள்ளனர்.

ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை, அவரது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடுவதில் மாவட்டச் செயலாளர்களுக்குள் கடும் போட்டி நடக்கும். தீச்சட்டி ஏந்துவது, பால் காவடி எடுப்பதுவரை கோயில்களில்  சிறப்புப் பூஜைகள் நடைபெறும். ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, தங்கள் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதிலும், வருவாயைப் பெருக்கிக் கொள்வதிலுமே அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் ஆர்வம் காட்டுகிறார்கள். இதுவரை ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டங்களுக்கான தேதி மற்றும் பேச்சாளர்கள் பட்டியல் ஆகியவற்றை அ.தி.மு.க தலைமை வெளியிடவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

“அம்மாவை மறந்த அ.தி.மு.க!” - பிறந்தநாள் கூட்டங்கள்கூட நடக்கவில்லை...

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க பேச்சாளர்கள் சிலர்,  “பேசிப்பேசியே வளர்ந்த கட்சி தி.மு.க என்றால், அவர்களை எதிர்த்துப் பேசியே வளர்ந்த கட்சி அ.தி.மு.க. கட்சி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டங்கள்தான், கட்சியில் இருக்கும் 400-க்கும் அதிகமான பேச்சாளர்களின் வாழ்வாதாரம். வழக்கமாக, ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதிக்குப் பத்து நாள்கள் முன்னதாகப் பொதுக்கூட்டத்துக்கான அறிவிப்பு வந்துவிடும். ஸ்டார் பேச்சாளர்களுக்கு டிக்கெட் போடுவது, தங்குமிடம் என மாவட்டச் செயலாளர்கள் ஏற்பாடு செய்வதற்கும் நேரம் கிடைக்கும். ஆனால், பிறந்தநாளுக்கு ஓரிரு நாள்களே உள்ள நிலையில், ஆலோசனைக் கூட்டத்தை மட்டுமே நடத்திவிட்டு மிகத் தாமதமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

“அம்மாவை மறந்த அ.தி.மு.க!” - பிறந்தநாள் கூட்டங்கள்கூட நடக்கவில்லை...

கடந்த எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி அறிவிக்கப்பட்ட 80 சதவிகிதப் பொதுக்கூட்டங்கள் நடைபெறவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு மாவட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என்றால், பக்கத்தில் இருக்கும் நான்கு, ஐந்து மாவட்டங்களிலிருந்து ஆட்களைத் திரட்டிச் செல்வதிலேயே அந்தந்த மாவட்டச் செயலாளர்களின் பணி ஓய்ந்துவிடுகிறது. பிறகு எம்.ஜி.ஆர் மீது ஏன் கவனம் செலுத்தப்போகிறார்கள்? பேனர்களில் பிரமாண்டமாக இடம்பெற்றுவந்த ஜெயலலிதாவின் உருவம், ஸ்டாம்ப் சைஸுக்குச் சுருங்கிவிட்டது. இப்போது அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தையும் சுருக்கிவிட்டனர்” என்று பொரிந்துதள்ளினர்.

அ.ம.மு.க அமைப்புச் செயலாளரும், அம்மா பேரவை துணைச் செயலாளருமான தாம்பரம் நாராயணன், “ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள ஆலாய்ப் பறப்பவர்களுக்கு, அம்மாவின் பிறந்தநாள் எங்கே ஞாபகம் இருக்கப்போகிறது? ‘போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றினால், ஊழலின் ஞாபகச் சின்னமாகிவிடும்’ என்று பேசிய ராமதாஸுடன் கூட்டணி ஒப்பந்தம் செய்கிறார்கள். 1999, ஜூலை 4-ம் தேதி, சென்னை சீரணி அரங்கத்தில் நடைபெற்ற முஸ்லிம்கள் வாழ்வுரிமை மாநாட்டில், ‘நான் முன்பு ஒரு தவறு செய்துவிட்டேன். நான் செய்த தவற்றை ஒப்புக்கொள்ளும் துணிச்சல் எனக்கு உண்டு. அந்தத் தவறுக்குப் பரிகாரமாகத்தான், பி.ஜே.பி ஆட்சியைக் கவிழ்த்தேன். இனி ஒருபோதும்அ.தி.மு.க., பி.ஜே.பி-யுடன் தொடர்பே வைத்துக்கொள்ளாது’ என்று ஜெயலலிதா பேசினார். அவர் அறிவித்ததற்கு முரணாக பி.ஜே.பி-யுடன் கூட்டணி போடுகிறார்கள். அம்மாவின் கொள்கைகளையே மறந்தவர்களுக்குப் பிறந்தநாள் பொதுக்கூட்டங்களை மறப்பது எம்மாத்திரம். அ.ம.மு.க-வின் சார்பில் 24, 25, 26 ஆகிய மூன்று நாள்களும் பிறந்தநாள் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. நானே மூன்று இடங்களில் பேசுகிறேன்” என்றார்.

அ.தி.மு.க தரப்பில் பேசினோம். “நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தை காரணமாக, அம்மாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்களுக்கான அறிவிப்பை வெளியிடுவதில் சற்று தாமதம் ஏற்பட்டது. அதை மூன்று நாள்களுக்கு முன்பாகவே அறிவித்துவிட்டோமே...” என்றனர்.

- ந.பொன்குமரகுருபரன்

சசிகலா மவுன விரதம்!

“அம்மாவை மறந்த அ.தி.மு.க!” - பிறந்தநாள் கூட்டங்கள்கூட நடக்கவில்லை...

ஜெயலலிதாவின் மகம் நட்சத்திரப்படி, கடந்த பிப்ரவரி 19-ம் தேதி அவரது பிறந்தநாள் வந்தது. அன்று மாசி மகம் என்பதால், கூட்டணி அமைப்பதில் அ.தி.மு.க தலைவர்கள் பிஸியாகிவிட்டனர். அன்றைய தினத்தில், ஏழைகளுக்கு உணவிட்டு மவுனவிரதம் இருப்பது சசிகலாவின் வழக்கம். பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா, காலையில் முருகனை செவ்வரளிப் பூக்களால் வழிபட்டுவிட்டு, மவுனவிரதம் இருந்துள்ளார். மாத்திரை போட வேண்டியிருந்ததால், பால் மட்டும் அருந்திவிட்டு மாலை 5 மணிக்கு மேல்தான் சாப்பிட்டாராம்.

“சோத்துக்கு வழியில்லாதவர்களுக்கு ரூ.2,000!”

னத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனையும், சர்ச்சை பேச்சுகளையும் பிரிக்க முடியாது. சமீபத்தில் மேலூரில் நடந்த அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டத்திலும் சர்ச்சைகளைப் பற்றவைத்திருக்கிறார். ஆரம்பத்தில் ஸ்டாலினைக் கடுமையாகப் பேசியவர் அடுத்து, கஜா பற்றிப் பேசத் தொடங்கினார்.

“அம்மாவை மறந்த அ.தி.மு.க!” - பிறந்தநாள் கூட்டங்கள்கூட நடக்கவில்லை...

“கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்கள் சோற்றுக்கே வழியில்லாமல் இருந்தனர். இரண்டாயிரம் ரூபாயை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கு மூலம் அனுப்பத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் போராட்டத்தை மக்கள் விரும்பவில்லை. ஸ்டாலின் தூண்டுதல் இருந்தும் போராட்டம் வெற்றிபெறவில்லை. பத்தாயிரம் ரூபாய்க்குப் பாடம் எடுக்க லட்சக்கணக்கான இளைஞர்கள் முன்வந்தனர். தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்கள் டி.டி.வி.தினகரனை நம்பி ரோட்டில் பிச்சை எடுக்கின்றனர். அவரை நம்பி நாசமாகப் போய்விட்டனர்” என்றார்.

- அருண் சின்னதுரை, படங்கள்: வி.சதிஷ்குமார்