சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“சேர்ந்து படிச்சோம்! சேர்ந்து ஜெயிச்சோம்!’’

“சேர்ந்து படிச்சோம்! சேர்ந்து ஜெயிச்சோம்!’’
பிரீமியம் ஸ்டோரி
News
“சேர்ந்து படிச்சோம்! சேர்ந்து ஜெயிச்சோம்!’’

“சேர்ந்து படிச்சோம்! சேர்ந்து ஜெயிச்சோம்!’’

“எனக்கு 47 வயசு, என் மகளுக்கு 27 வயசு. போன வருஷம் பிப்ரவரி மாசம் நடந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு ரெண்டு பேரும் சேர்ந்து படிச்சோம்; பரீட்சை எழுதினோம். இப்போ ஜோடியா பாஸாகிட்டோம். எனக்குப் பொது சுகாதார மருந்தகத் துறையிலும், என் பொண்ணு தேன்மொழிக்கு இந்துசமய அறநிலையத்துறையிலும் வேலை கிடைச்சிருக்கு’’ - தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த சாந்தலெட்சுமியின் குரலில் மகிழ்வும் நெகிழ்வும். கணவரின் இழப்பு, மூன்று பெண் பிள்ளைகள், மாற்றுத்திறனாளி மகளுக்குண்டான தன் கடமைகள் என்று அனைத்தையும் கடந்து சாந்தலெட்சுமி பெற்றிருக்கும் வெற்றி இது.

“எங்க வீட்ல மூணு பெண் பிள்ளைங்க. நான்தான் மூத்தவ’’ என்ற தேன்மொழி,  ‘`என் முதல் தங்கச்சி கல்லூரியில படிக்கிறா. ரெண்டாவது தங்கச்சிக்கு மூளைவளர்ச்சி இல்லை. நான் ப்ளஸ் டூ முடிச்சிட்டு, `D.T.Ed’ படிச்சேன்; தொலைதூரக் கல்வியில் `B.Lit’ முடிச்சேன். இன்னொரு பக்கம், எங்கம்மாவும் என் கூட சேர்ந்து படிக்க ஆரம்பிச்சாங்க. பத்தாவதுவரை படிச்சிருந்த எங்கம்மா, டுட்டோரியலுக்குப் போய் ப்ளஸ் டூ முடிச்சு, பி.ஏ.தமிழ், பி.எட் முடிச்சாங்க. 2014-ம் வருஷம் எங்கப்பா இறந்தபிறகு, எங்கம்மாவுக்கான பொறுப்புகளும் சுமைகளும் கூட, எல்லாரும் தாத்தா - பாட்டி வீட்டுக்கு வந்துட்டோம்.

“சேர்ந்து படிச்சோம்! சேர்ந்து ஜெயிச்சோம்!’’

ரெண்டு பேரும் சேர்ந்து போட்டித் தேர்வுகளுக்கான ‘திண்ணை பயிற்சிப் பட்டறை’யில் சேர்ந்தே படிப்போம். சில நாள்கள், வீட்டில் தாத்தா, பாட்டி, தங்கச்சியை எல்லாம் பார்த்துக்கிட்டு அம்மாவுக்கு கிளாஸுக்கு வர நேரமாகும். அப்போ உட்கார இடமில்லாமப்போக, நின்னுட்டே கவனிப்பாங்க. அவங்களால கிளாஸுக்கு வர முடியாமப்போற நாள்கள்ல நான் வீட்டுக்கு வந்து சொல்லிக்கொடுக்கும்போது, ஒரு தடவை சொல்லிக்கொடுத்தாலே கற்பூரமா கத்துக்குவாங்க. இப்போ ரெண்டு பேருமே பாஸாகி வேலைக்குப் போகப்போறோம்’’ என்கிறார் தன் அம்மாவை அணைத்தபடி.

‘திண்ணை பயிற்சிப் பட்டறை’யின் ஒருங்கிணைப்பாளர் செந்தில், ‘`பொண்ணை கிளாஸ்ல சேர்த்துவிட வந்து தானும் சேர்ந்தவங்க சாந்தலெட்சுமி. அம்மா, மகள் என்ற உறவையும் தாண்டி ரெண்டு பேரும் ஒரு நட்போடு இருப்பாங்க. சாந்தலெட்சுமி, `தனக்கு இது தெரியலையே, எல்லார் முன்னாடியும் இதைக் கேட்கலாமா?’ன்னு எல்லாம் தயங்காம நிறைய கேள்விகள் கேட்பார். அவரோட தன்னம்பிக்கைதான் அவருக்கு இந்த வெற்றியைக் கொடுத்திருக்கு’’ என்கிறார் பெருமையுடன்.

வாழ்வும் பணியும் சிறக்க வாழ்த்துகள்!

- எம்.கணேஷ்,  படம்: வீ.சக்தி அருணகிரி