
ஓவியம்: கார்த்திகேயன் மேடி
பிப்ரவரி 26. அதிகாலை 3:30 மணி...
பாகிஸ்தானின் கைபர் பக்டுன்கவா மாநிலத்திலுள்ள பாலாகோட் நகரம், இன்னும் சிறிது நேரத்தில் உலகத் தலைப்புச் செய்திகளில் இடம்பெறப்போவதை அறியாமல் உறங்கிக்கொண்டிருந்தது. இரையை நோக்கி நகரும் புலிகளாக, ரேடாரில் எந்த சத்தமும் எழுப்பாமல், இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் ஊடுருவின.
பாலாகோட் அருகேயிருந்த ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தீவிரவாத முகாம்கள்தாம் இலக்கு. இஸ்ரேல் தயாரிப்பான ‘ஸ்பைஸ் 2000’ ரக ஏவுகணைகளை, கண்ணிமைக்கும் நேரத்துக்குள் செலுத்திய நான்கு மிராஜ் விமானங்கள், தீவிரவாதிகளின் முகாம்களைத் துவம்சம் செய்தன. பேய் வேகத்தில் நடைபெற்ற இத்தாக்குதலால் நிலைகுலைந்துபோன பாகிஸ்தான் விமானப்படை, சுதாரித்து எழுவதற்குள் இந்திய விமானப்படையின் விமானங்கள் நமது வான் எல்லையில் பறந்து கொண்டிருந்தன.

“எல்லைதாண்டிய தாக்குதலை பாகிஸ்தான் ஒருபோதும் அனுமதிக்காது. தக்க பதிலடி கொடுப்போம்’’ என்று பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் கொக்கரித்த சில மணிநேரத்திலேயே, எல்லைப் பாதுகாப்புப் பகுதியில் துப்பாக்கிச் சண்டை தீவிரமாகிவிட்டது. பிப்ரவரி 27-ம் தேதி காலை, இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானின் எப் - 16 ரக போர் விமானங்களை, இந்திய விமானப்படை துரத்தியது. இந்த ரேஸில், சக்தி வாய்ந்த எப் - 16 போர் விமானத்தை, இந்தியாவின் மிக் 21 ரக விமானம் சுட்டு வீழ்த்தியது. எதிர்பாராத விதமாக மிக் 21 விமானம் விபத்துக்குள்ளாக, அதிலிருந்து பாராசூட் உதவியுடன் தப்பிய இந்திய விமானி அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தானியர்களிடம் பிடிபட்டார்.
உள்ளூர் பாகிஸ்தானியர் சிலர் அபிநந்தனைத் தாக்கினர். முகத்தில் ரத்தம் வடிய சிக்கியிருந்தவரை மீட்ட பாகிஸ்தான் ராணுவத்தினர், அவரைப் பத்திரமாக மீட்டு ராணுவ முகாமுக்குக் கொண்டு சென்றனர்.
ஒரு கோப்பைத் தேநீருடன் அபிநந்தன் பாகிஸ்தான் வீரர்களுடன் சகஜமாக உரையாடும் வீடியோக்கள் வைரலாகின. அபிநந்தன் சிறைப்படுவது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக, ஜெனிவா ஒப்பந்தப்படி அபிநந்தனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று உலக நாடுகளிடமிருந்து பாகிஸ்தான் அரசுக்கு அழுத்தம் ஏற்பட்டது.

இவ்விவகாரத்தில் மோடி ‘ஸ்கோர்’ செய்வதற்குள் எதையாவது செய்தாக வேண்டிய நெருக்கடி, பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கானுக்கும் எழுந்தது. பிப்ரவரி 28-ம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய இம்ரான்கான், சமாதானத்தின் அடிப்படையில் அபிநந்தனை பாகிஸ்தான் அரசு விடுவிப்பதாக அறிவித்தார். இதற்குக் கண்டனக் குரல்களும் பாகிஸ்தானுக்குள் எழுந்தன. அபிநந்தனை விடுவிப்பதை எதிர்த்து பாகிஸ்தான் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தொடரப்பட்டது. மார்ச் 1-ம் தேதி மாலை 4 மணிக்கு வாகா எல்லை வழியாக, இந்தியாவிடம் அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டவுடன் இரு நாடுகளும் பரபரப்பாகின.

அபிநந்தனை விடுவிப்பதில் பாகிஸ்தான் தரப்பில் வேண்டுமென்றே காலதாமதம் ஏற்படுத்தப்பட்டதாக, இந்திய ராணுவ அதிகாரிகள் கருதுகின்றனர். மாலை 4 மணிக்கு விடுவிக்கப்படுவதாக அறிவித்துவிட்டு, இரவு 9 மணியளவில்தான் இந்தியாவிடம் அபிநந்தனை பாகிஸ்தான் அரசு ஒப்படைத்தது.
வழக்கமாக எதிரி நாட்டில் சிக்கியவர்கள் மீட்கப்படும்போது, அந்நாட்டு அதிகாரிகள் மூளைச்சலவை செய்துள்ளனரா, துன்புறுத்தல் ஏதும் நடந்ததா என்பது குறித்து விசாரிக்கப்படும். வாகா எல்லையைக் கடந்து வந்த அபிநந்தனை விசாரித்த ராணுவ மற்றும் உளவுத்துறையின் மூத்த அதிகாரிகள், பாகிஸ்தான் அரசிடம் அபிநந்தன் ஏதும் கூறினாரா என்பதைக் கேட்டறிந்தனர்.

டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அபிநந்தனுக்கு, நோய்த் தொற்று சோதனை, உளவுக் கருவிகள் உடலில் செலுத்தப்பட்டதா போன்ற சோதனைகள் செய்யப்பட்டன. மனைவி தன்வி மார்வா, ஏழு வயது மகன் தவிஷ், தங்கை அதிதியுடன் ராணுவ மருத்துவமனையில் ஓய்வெடுக்கும் அபிநந்தன், இன்னும் சில நாள்களில் தனது வழக்கமான பணிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
அபிநந்தனின் பூர்வீகம் கேரளா என்றாலும், அவர் வளர்ந்தது எல்லாமே திருவண்ணாமலையில் தான். அவர் தந்தை சிம்மக்குட்டி வர்த்தமானும் விமானப்படை அதிகாரியாகப் பணியாற்றியவர் தான். இப்போது அவரது ஹேர்ஸ்டைல், மீசை எல்லாம், இளைஞர்களிடம் ‘டிரெண்ட்’ ஆகப் பரவுகிறது. அவரை நிஜ நாயகன் என்று கொண்டாடுகிறது இந்தியாவின் இளைய தலைமுறை.
அபிநந்தனை மையமாக வைத்துத் திரைப்படமெடுக்கவும் சிலர் தயாராகிவருகின்றனர். எப்படியோ இந்த ஆண்டின் வைரல்களில் அபிநந்தனுக்கும் முக்கியமான இடமுண்டு.

“200 மீட்டரில் மிஸ்ஸான டார்கெட்!”
பாகிஸ்தானில் இந்திய விமானப்படை நிகழ்த்திய தாக்குதல் குறித்து, லண்டனில் அமைந்திருக்கும்
ஐ.டி.சி.டி. தீவிரவாத ஒழிப்பு மையத்தின் துணை இயக்குநர் பரான் ஜெப்ரி, “மிகக் கவனத்துடன் நடத்தப்பட்ட இத்தாக்குதல், 200 மீட்டரில் இலக்கைத் தவறிவிட்டது. ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் பயிற்சிப் பட்டறைகள் உள்ள இடத்திலிருந்து, மேற்குப் புறமாக 200 மீட்டர் தள்ளி இந்தியாவின் குண்டுகள் விழுந்துள்ளன. இதனால், பாகிஸ்தான் கிராமவாசி ஒருவருக்குக் காயம் ஏற்பட்டதே தவிர, தீவிரவாதிகள் யாரும் இறக்கவில்லை’’ என்றார். இந்திய விமானப்படைத் தளபதி அளித்துள்ள பேட்டியில், ‘`நாங்கள் தீவிரவாத முகாம்களை அழித்ததால்தான் பாகிஸ்தான் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது. வெறும் காட்டில் குண்டு போட்டதற்காக எங்களைத் தாக்கவில்லை. இந்திய விமானப்படையின் தாக்குதலில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பதைத் துல்லியமாகக் கூற முடியாது’’ என்றார்.
“இந்தியாவின் குறி தப்பிவிட்டது!”
- பரபரக்கும் மசூத் அசார் கடிதம்
ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசார், கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரகப் பிரச்னையால் அவதிப்பட்டுவருகிறார். பாகிஸ்தான் ராணுவ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மசூத் அசார், உடல்நலக் குறைவால் இறந்துவிட்டதாக, கடந்த வாரம் செய்தி பரவியது. அதேவேளையில், இந்திய விமானப்படையின் பாலாகோட் தாக்குதலில் மசூத் அசார் இறந்துவிட்டதாகவும் மீடியாக்கள் செய்தி பரப்பின. இந்நிலையில், பிப்ரவரி 3-ம் தேதி மசூத் அசார் பெயரில் கடிதம் ஒன்று வெளியானது.

அதில், “இஸ்ரேல் நாட்டு ஏவுகணைகளை இந்திய விமானங்கள் வீசின. ஆனால், அல்லாவின் தேவதைகள் அவற்றையெல்லாம் தூர எறிந்துவிட்டு, குரான் ஓதும் மாணவர்களைக் காப்பாற்றிவிட்டார்கள். இந்தியாவின் குறி தப்பிவிட்டது. இந்திய ராணுவத்தின் கௌரவத்தை அல்லா அழித்ததோடு, அவர்களின் விமானத்தையும் தவிடு பொடியாக்கிவிட்டார். முன்னாள் அதிபர் பர்வேஸ் முஸ்ரப்பின் பாதையில் பயணிக்கும் இந்நாளைய பாகிஸ்தான் அரசு, இந்திய விமானியை விடுவித்ததோடு, நம்மைத் தடை செய்யவும், கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கிறார்கள். நாம் இடம்பெயர வேண்டிய நெருக்கடியில் உள்ளோம். தயாராக இருங்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார். மசூத் அசார் உயிரோடு இருப்பதை பாகிஸ்தான் ஊடகங்களிடம் அவரின் குடும்பத்தினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.