மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எனது இந்தியா!

எனது இந்தியா!

எனது இந்தியா!

இரண்டு வாரிசுகள்  

##~##

வரலாற்றுச் சோகம் என்ற வார்த்தையை இன்று எளிதாகப் பயன்படுத்துகிறோம். நம் வரையில் அது ஒரு சொல் மட்டுமே. ஆனால், தன்னைப் பலி கொடுத்து வரலாற்றுச் சோகத்துக்கு ஆளானவர்கள் பற்றி நாம் அதிகம் அக்கறைகொள்வது இல்லை.

அந்த வகையில், இரண்டு சம்பவங்கள் என் மனதில் அழியாச் சுடரென எரிந்துகொண்டே இருக்கின்றன.

ஒன்று... மருது சகோதரர்கள் கொல்லப்பட்டு, வெள்ளைக்​காரர்களால் பினாங்குக்கு நாடு கடத்தப்​பட்ட சின்னமருதுவின் மகன் துரைச்சாமியின் வாழ்க்கை. இரண்டு... 3.3 கோடி வராகன்கள் இழப்பீட்டுத் தொகை தரும் வரை, பிணையக் கைதியாக பிடிக்கப்பட்டுச் சென்ற திப்பு சுல்தானின் பிள்ளைகள் அப்துல் காலிக் மற்றும் மொய்சுதீனின் பிணைய வாழ்க்கை.

கல்வெட்டுக்கள் மற்றும் கோட்டை கொத்தளங்கள் மட்டுமே வரலாற்றை நினைவுபடுத்துவன இல்லை. ஓவியமும் இலக்கியமும் பல நேரங்களில் வரலாற்று உண்மைகளைத் துல்லியமாக வெளிப்படுத்துகின்றன. திப்புவின் மகன்களை காரன்வாலிஸ் பிரபுவிடம் ஒப்படைத்தல் என்ற ராபர்ட் ஹோம் வரைந்த ஓவியம் ஒரு வரலாற்றுச் சாட்சி போல் இருக்கிறது. ராபர்ட் ஹோம், இங்கிலாந்தில் பிறந்த ஓவியர். 1791-ம் ஆண்டு காரன் வாலிஸ் பிரபுவின் கூடவே பயணம் செய்து, அவரது முக்கிய நிகழ்வுகளை ஓவியமாக வரைவதற்காக ராபர்ட் ஹோம் நியமிக்கப்பட்டார். அதனால், படைப்பிரிவு செல்லும் இடங்களுக்கு எல்லாம் ஓவியர் ஹோம் கூடவே சென்று, படங்களை வரைந்து கொண்டு இருந்தார்.

எனது இந்தியா!

மூன்றாம் மைசூர் போரில் ஆங்கிலேயர்களிடம் திப்பு தோற்றுப்போகவே, அதற்கு நஷ்ட ஈடாக அவரது ராஜ்ஜியத்தில் ஒரு பகுதியும் 3.3 கோடி வராகன் பணமும் கொடுக்கும்படி ஒப்பந்தம் ஏற்படுத்தப்​பட்டது. இந்தப் பணம் செலுத்தப்படும் வரை பிணையம் தேவை என்று கூறிய காரன் வாலிஸ், கடனைத் தீர்க்கும் வரை திப்புவின் பிள்ளைகள் இருவரையும் ஆங்கிலேய அரசு பிடித்துவைத்துக் கொள்ள உத்தரவிட்டார். வேறு வழி இல்லாமல் அதற்கு திப்பு சுல்தான் சம்மதம் தெரிவித்தார். 1792 பிப்ரவரி 26-ம் தேதி பேசி முடிவு செய்த ஒப்பந்தம், மார்ச் 19-ம் தேதி கையெழுத்தானது. இதன்படி, நிஜாம், மராட்டியர் மற்றும் ஆங்கிலேயர் ஆகிய மூவருக்கும் மைசூர் ராஜ்ஜியத்தில் பாதி பகிர்ந்து அளிக்கப்பட்டது.

முதல் தவணையாக, 1 கோடியே 65 லட்சம் வராகனும், 10 வயதான அப்துல் காலிக் சுல்தான், 8 வயதான மொய்சுதீன் சுல்தான் ஆகிய இருவரையும் ஆங்கிலேயர் பிணையாகப் பெற்றனர். மீதியுள்ள 1 கோடியே 65 லட்சம் வராகனை மூன்று தவணைகளில் தருவது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தம் காரணமாக திப்பு வசம் இருந்த திண்டுக்கல், கோவை, சத்தியமங்கலம், தேன்கனிக்கோட்டை, சேலம், மற்றும் கிருஷ்ணா நதியை ஒட்டிய பகுதிகள் ஆங்கிலேயர் வசமானது.

பிணையக் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்ட திப்புவின் இரண்டு பிள்ளைகளும் சென்னை கோட்டையில் தங்க வைக்கப்பட்டனர். 'இளவரசர்​களைப் போல அவர்களைக் கவனமாக வளர்ப்பேன்’ என்று, காரன் வாலிஸ் உறுதி அளித்திருந்தார். ஆனால், அப்படி நடத்தவில்லை. மாறாக, அவர்களுக்குப் பிரிட்டிஷ் கனவான்களைப் போல உணவு, உடை மற்றும் கலாசாரப் பழக்க வழக்கங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டன. வெள்ளைக்காரர்கள் மீது அபிமானம் உண்டாகும்படி போதனை செய்யப்​பட்டது. அதுவும் ஒருவகை அரசியல் செயல்பாடே!

சென்னைக் கோட்டையில் இரண்டு ஆண்டுகள் வீட்டுச்சிறை போல அவர்களைப் பிரிட்டிஷ் நிர்வாகம் வைத்திருந்தது. 1794 பிப்ரவரி 29-ம் தேதி, தேவனஹள்ளியில் மூன்றாவது தவணை செலுத்திவிட்டு திப்பு சுல்தான் தனது புதல்வர்களை மீட்டுக்கொண்டார்.

எனது இந்தியா!

அப்துல் காலிக் மற்றும் மொய்சுதீன் ஆகிய இருவரும் வீடு திரும்பிய நிகழ்வு பெரும் கொண்டாட்டமாக நிகழ்ந்தது. இரண்டு ஆண்டுகளில் அந்தப் பிள்ளைகள் தங்களது மத நம்பிக்கைகளைக் கைவிட்டவர்களாக  ஆக்கப்பட்டு இருந்ததைப் பார்த்து திப்பு மனம் வருந்தினார்.

பிரிட்டிஷ் கலாசாரத்தில் அதிக ஈடுபாடு காட்டிய தனது பிள்ளைகளைத் திருத்துவதற்காக மேற்படிப்பு படிக்க பிரான்சுக்கு அனுப்பி வைத்தார் திப்பு. கல்வி கற்றுத் திரும்பிய அப்துல் மாலிக், பின்னாளில் ஆரக்கல் பீவியின் மகளைத் திருமணம் செய்துகொண்டார். திப்புவின் மரணத்துக்குப் பிறகு, அவரது பிள்ளைகள் அனைவரும் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

அங்கே அவர்கள் அரசியல் கைதிகளாக நடத்தப்பட்டார்கள். அரச குடும்பத்துக்குள் உட்பூசலை உருவாக்கி, ஒருவருக்கொருவர் பகைகொள்ளச் செய்தது ஆங்கிலேய நிர்வாகம். வேலூர் சிறைச்சாலையில் ஏற்பட்ட சுதந்திரக் கிளர்ச்சி காரணமாக, திப்புவின் வாரிசுகளை இடமாற்றம் செய்து கல்கத்தாவுக்குக் கொண்டுசென்றார்கள். கல்கத்தாவில் அவர்கள் பிரிட்டிஷ் ஒதுக்கீடு செய்த குடியிருப்பில் தங்கி, அரசு கொடுத்த மானியத்தில் வாழ்ந்து மடிந்தனர். இன்று, திப்புவின் சந்ததிகளில் ஒருவர் கல்கத்தாவில் ஆட்டோமொபைல் ஷாப் நடத்துகிறார் என்ற செய்தியை ஒருமுறை பத்திரிக்கையில் வாசித்தேன்.

ஆங்கிலயேர்களை எதிர்த்துப் போராடி வீழ்ந்த திப்புவின் வாரிசுகள் அடையாளம் அற்றவர்களாக ஆக்கப்பட்டு காலத்தில் கரைந்து போய்விட்டார்கள். அதைத்தான் ஆங்கில அரசும் விரும்பியது. திட்டமிட்டு அதைச் சாதித்தும் காட்டியிருக்கிறது. பிணையக் கைதிகளாக இரண்டு ஆண்டுகள் வாழ்ந்த அந்த சிறுவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? சொந்தப் பிள்ளைகளைப் பணயம் வைத்த திப்புவின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்? விடுதலை வரலாற்றின் கொந்தளிப்பில் சொந்த வேதனைகள் ஒன்றும் இல்லாமல் ஆகிவிடுகின்றன என்பதுதான் உண்மையா? ஆனால், வெள்ளை அதிகாரத்தின் மீது திப்புவுக்குத் தாங்க முடியாத கோபம் உருவாவதற்குத் தன் பிள்ளைகளைக் கைதிகளாக்கியது முக்கியக் காரணம் என்பதில் சந்தேகம் இல்லை.

திப்பு சுல்தானுக்கு நிறைய மனைவிகள் இருந்தார்கள். அவரது மனைவிகளில் ஐரோப்பியர், துருக்கி, ஜார்ஜிய, மற்றும் பெர்ஷியப் பெண்களும் உண்டு. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என்று பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களும் அதில் இருந்தனர். அவரது அதிகாரப்பூர்வ மனைவிகளாகப் பட்டியல் இடப்பட்டவர்கள் ருக்கையா பானு, ஆற்காடு ரோஷன் பேகம், புரந்தி பேகம், கதீஜா ஜமானி பேகம் ஆகிய நால்வர்தான்.

எனது இந்தியா!

திப்புவுக்கு ஃபத்தே ஹைதர், அப்துல் காலிக், முஹ்யித்தீன், மொய்சுதீன்கான், முஹம்மது யாசீன், முகம்மது சுபான், ஷ்ருக்கில்லாஹ், சிர்ருதீன், குலாம் முஹம்மது, குலாம் ஹமீது, முனீருத்தீன், ஜமீயுத்தீன் ஆகிய 12 ஆண் பிள்ளைகள். பீவி பேகம், அஸ்முலுன்னிஸா பேகம், உமருன்னிஸா பேகம், பாத்திமா பேகம், பதீயுன்னிஸா பேகம், நூருன்னிஸா பேகம், குலூமா பேகம், கதீஸா பேகம் ஆகிய எட்டு பெண் பிள்ளைகள்.

அவரது ராணுவத்தில் மூன்று லட்சத்து இருப​தாயிரம் வீரர்கள் இருந்தனர். யானைகள் 900, ஒட்டகங்கள் 6,000, அரபுக் குதிரைகள் 25,000, மூன்று லட்சம் துப்பாக்கிகள், இரண்டு லட்சத்து இருபத்து நாலாயிரம் வாள்கள், 929 பீரங்கிகள் மற்றும் ஏராளமான வெடி மருந்துக் குவியல்கள் இருந்தன என்கிறது ஒரு புள்ளிவிவரம். ராணுவத்தில் ஏவுகணைத் தொழில்நுட்பத்தைப் புகுத்தியதில் திப்புதான் முன்னோடி.

மைசூர் சாம்ராஜ்ஜியத்தில் இந்துக்கள் அதிகம். குறைவான சதவீதமே முஸ்லிம்கள் வாழ்ந்தனர். ஓர் ஆண்டில் இந்துக் கோயில் மற்றும் அற நிலையங்களுக்கு 1,93,959 வராகன்களும், பிராமண மடங்களுக்கு 20,000 வராகன்களும், முஸ்லிம் ஸ்தாபனங்களுக்கு 20,000 வராகன்களுமாக மொத்தம் 2,33,959 வராகன்கள், சர்க்கார் கஜானாவில் இருந்து வழங்கப்பட்டு இருக்​கின்றன. இது, அவரது மத ஒற்றுமையின் அடையாளம் போலவே உள்ளது.

மலபார் பகுதியில், பெண்கள் மேலாடை அணி யாமல் இருந்த முறையை மாற்றி, மேலாடை அணியும் பழக்​கத்தை உருவாக்கினார் திப்பு சுல்தான். அதுபோலவே, குடகு பகுதியில் ஒரே பெண்ணைப் பல ஆண்கள் மணந்துகொள்ளும் பழக்கத்தைத் தடுத்து சட்டம் இயற்றியுள்ளார். கோயில்களில் இருந்த தேவதாசி முறையையும் ஒழிக்கச் சட்டம் போட்டதுடன், மதுவிலக்கை அமல்படுத்தி, அதைத் தீவிரமாகக் கண்காணித்தார்.

1750 நவம்பர் 20-ல் ஹைதர் அலி - ஃபக்ருன்னிஸா தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்த திப்பு சுல்தான், தனது 17-ம் வயதிலேயே போர்ப் படைத் தளபதியாக நின்று, வாணியம்பாடி யுத்தத்தில் ஜோசப் ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப் படையை வென்றார். 1782 டிசம்பர் 6-ல் தந்தை ஹைதர் அலி மரணத்​தைத் தொடர்ந்து, 1782 டிசம்பர் 26-ல் தமது 32-ம் வயதில் திப்பு சுல்தான் மைசூர் மன்னரானார். மேற்குக் கடற்கரையில் இருந்து, ஆங்கிலேயர்களைத் துரத்த வேண்டும் என்று சபதம் ஏற்று, பிரெஞ்சுப் படையினரையும் சேர்த்துக்கொண்டு போராடியவர் திப்பு சுல்தான்.

ஆனால், பிரெஞ்சு மன்னன் 16-ம் லூயி, பிரிட்ட​னுடன் சமரசம் செய்துகொண்டதால், திப்பு நிர்க்கதிக்கு ஆளானார். 1784-ம் ஆண்டு மைசூர் போரில் ஆங்கிலேய தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள், திப்புவால் யுத்தக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

கி.பி. 1790 முதல் 1792 வரை நடந்த மூன்றாவது மைசூர் போரில், ஜெனரல் கார்ன் வாலிஸ் திப்பு சுல்தானுக்கு எதிராகப் போர் நடத்தினார். திப்புவுக்கு எதிராகப் போர் புரிய ஆற்காடு நவாப், தொண்டைமான், ஹைதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள் அனைவரும் ஆங்கிலேயருடன் இணைந்துகொண்டனர். அதனால், சற்றும் கலங்காத திப்பு, எதிரிகளைத் தன்னந்தனியாகத் துணிச்சலுடன் எதிர்கொண்டார். ஆனால், போரின் முடிவில் தோற்றுப்போனார். இழப்பீடு கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

எனது இந்தியா!