
சூப்பர் ஹீரோஸ் - கல்வி வள்ளல்! சுதன்ஸு பிஸ்வாஸ்
1939...
பரீட்சை எழுதிக்கொண்டிருந்தார் பிஸ்வாஸ். அப்போது, தடதடவென பூட்ஸ் சத்தம், சலசலப்பு கேட்டு நிமிர்ந்தார். பிரிட்டிஷ் போலீஸார் அவரை நோக்கித்தான் வந்தனர். அவரைப் பிடித்து தரதரவென இழுத்துப்போனார்கள்.

அந்தப் பரிட்சையை முழுதாக எழுத முடியவில்லை. அடுத்தடுத்த பரிட்சைகளை போலீஸ் காவலில் எழுதினார். சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்தான்.

1917-ஆம் ஆண்டு (பிரிவினைக்கு முந்தைய) வங்காளத்தில் பிறந்தவர், சுதன்ஸு பிஸ்வாஸ். 8 ஆம் வகுப்பு படிக்கும்போதே, வங்க மண்ணின் முக்கியப் போராளியான நிருபன் சக்ரவர்த்தியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிஸ்வாஸுக்கு வகுப்பெடுத்த ஆசிரியர்கள் சிலரும் சுதந்திரப் போராட்ட வீரர்கள். எனவே, பிஸ்வாஸும் மிக இளம் வயதிலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் குதித்தார். பள்ளிப் படிப்பை முடித்தபின், புரட்சிகர அமைப்பான ‘அனுஷிலன் சமிதி’யில் உறுப்பினராகச் சேர்ந்து இயங்க ஆரம்பித்தார்.
ஆங்கிலேயர்களுக்கு எதிரான தாக்குதல்களில், சிலமுறை தப்பித்திருக்கிறார். சிலமுறை பிடிபட்டு, சிறையில் கொடூரமான தண்டனைகளுக்கு ஆளாகியிருக்கிறார். விடுதலை வேட்கையைத் தூண்டும் ரகசிய பத்திரிகை ஒன்றின் ஆசிரியர் குழுவிலும் இருந்திருக்கிறார்.

இந்தியாவின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட லட்சக்கணக்கான ஹீரோக்களில் சுதன்ஸு பிஸ்வாஸும் ஒருவர். இவர் சூப்பர் ஹீரோ ஆனது எப்படி? சிறுவயது முதலே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் போராட்ட முறைகளில் நாட்டம் உண்டு.
நாடு விடுதலை அடைந்ததும் விவேகானந்தரின் சீடரான ராமானந்தா என்பவரைச் சந்தித்தார். அவரிடம் பேசப் பேச ராமகிருஷ்ணரின் கொள்கைகள் மீதும் விவேகானந்தர் மீதும் அதிக நாட்டம் ஏற்பட்டது. சந்நியாசியாகப் போய்விடலாம் என்று வீட்டை விட்டுக் கிளம்பினார்.
இமயமலையில் பல்வேறு சாமியார்களுடனும் சாதுக்களுடனும் சுற்றித் திரிந்தார். சுமார் 15 ஆண்டுகள் வெளியுலகத் தொடர்பே இல்லை. 1960-களில் தெளிவான மனதுடன் கல்கத்தாவுக்கு வந்தார் பிஸ்வாஸ்.

தன் வாழ்க்கையில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தீர்க்கமான லட்சியம் பிஸ்வாஸுக்குள் உருவாகியிருந்தது. சுதந்திரப் போராட்டத் தியாகி என்ற அடையாளம் பிஸ்வாஸுக்குக் கைகொடுத்தது.

சில வணிகங்களில் ஈடுபட்டார். பணம் சம்பாதிப்பதுதான் நோக்கம். அந்தப் பணம் எதற்காக என்பதையும் திட்டமிட்டிருந்தார்.
கல்கத்தாவின் வீதிகளில் ஆதரவற்ற வயதான ஆண்களும் பெண்களும் பசியுடனும் நோயுடனும் சுற்றித் திரிவதைத் தன் சிறுவயதிலேயே கண்டவர் பிஸ்வாஸ். அவர்களுக்காக ‘இல்லம்’ ஒன்றை அமைக்க, கல்கத்தாவின் டைமண்ட் ஹார்பர் பகுதியில் இடம் பிடித்தார். ஆண்களுக்கு, பெண்களுக்கு எனத் தனித்தனி இல்லங்களைத் தொடங்கினார். ஸ்ரீ ராமகிருஷ்ண சேவாஸ்ரமம்’ என்ற அமைப்பை 1973-ல் ஆரம்பித்தார்.
‘தேசத்தின் வருங்காலம், நாளைய இளைஞர்கள் கையில் உள்ளது. நாளைய இளைஞர்கள், இன்றைய சிறுவர்கள். அவர்களில் பெரும்பாலானோருக்குக் கல்வி வாய்ப்பே இல்லை’ என உணர்ந்தார்.

குறிப்பாக, மேற்கு வங்கத்தின் சுந்தரவனக்காடுகள் (Sundarbans) பகுதியைச் சுற்றியிருந்த கிராமங்கள் பலவும் அடிப்படை வசதிகளே இல்லாமல் இருந்தன. அங்கே வாழ்ந்த மக்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தார்கள். அங்கே பள்ளிக்கூடங்களே இல்லை. கற்றவர்கள் சதவிகிதம் என்பது பூஜ்ஜியம்.
‘ஒரு தேசத்தின் வருங்கால வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைவது குழந்தைகளின் கல்வியே. அதை வழங்க முடிவெடுத்தேன்’ என்கிறார் பிஸ்வாஸ்.
சுந்தரவனப் பகுதியின் பல இடங்களில் இலவசப் பள்ளிக்கூடங்களை ஆரம்பித்தார் கற்பிக்கச் சிறந்த ஆசிரியர்களை நியமித்தார். அப்படியாக பிஸ்வாஸ் தொடங்கிய பள்ளிகளின் எண்ணிக்கை 18.

இன்றைக்கு அந்தப் பள்ளிகள் அனைத்தும் மிகச்சிறப்பாகச் செயல்படுகின்றன. இங்கே பயின்றவர்கள் பலரும், மருத்துவர்களாக, பொறியியலாளர்களாக, பல்துறை வல்லுநர்களாக உள்ளனர்.
இலவச மருத்துவமனை ஒன்றையும் ‘ஸ்ரீ ராமகிருஷ்ண சேவாஸ்ரமம்’ சார்பில் நடத்திவருகிறார் பிஸ்வாஸ். ஆதரவற்ற சிறுவர், சிறுமியர்களுக்கான இல்லம் ஒன்றையும் பராமரித்து வருகிறார். அங்கே குழந்தைகளுக்குக் கல்வியும், பல்வேறு பிரிவுகளில் தொழிற்பயிற்சியும் வழங்கப்படுகிறது. இந்த இல்லத்தில் கல்வி பயின்று, தொழிற்பயிற்சி பெற்று பலரும் மேன்மையான நிலையை அடைந்துள்ளனர்.

இப்போது, கோயில் கட்டும் பணி ஒன்றைத் தொடங்கியிருக்கிறார் பிஸ்வாஸ். அது எல்லா மதத்தினருக்குமான ‘அன்புக் கோயில்’. யார் வேண்டுமானாலும் எந்தவிதப் பாகுபாடும் இன்றி அங்கே வழிபாடு நடத்தலாம். அங்கே எல்லா மதத்துக்குமான பண்டிகைகளும் உற்சாகமாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் தம் பள்ளிகளின் மூலம் கல்விப் புரட்சியையும், தம் இல்லங்களின் மூலம் அன்பின் மலர்ச்சியையும் உருவாக்கிய சுதன்ஸு பிஸ்வாஸுக்கு 2018-ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவத்திருக்கிறது இந்திய அரசு.100 வயதைத் தொட்டிருக்கும் சூப்பர் ஹீரோ, பிஸ்வாஸ். அமைதியான புன்னகையுடன் இந்த உலகத்துக்கு இவர் சொல்லும் செய்தி ஒன்றுதான்...
‘ஏழைகளுக்குச் செய்யும் சேவை என்பது இறைவனுக்குச் செய்யும் சேவை!’
-முகில்