
சதமடிக்கும் வேளையில் கொளுத்தும் வெயில்!
ஆண்டுத் தேர்வில் சதம் அடிக்கப் பரபரக்கும் வேளையில், வெயிலும் சதம் அடிக்கத் தயாராகி வருகிறது.
`இனிவரும் நாள்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து, வெப்பக்காற்று வீசும். இதன் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கையோடு இருங்கள்’ என்கிறது இந்திய வானிலை மையம். இந்த நேரத்தில், செய்யவேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை என்று பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அவற்றைப் பார்க்கலாமா?

செய்ய வேண்டியவை
*தாகம் இல்லையென்றாலும் குறிப்பிட்ட இடைவெளியில், தண்ணீர் குடிக்க வேண்டும். பகலில் இளநீர், மோர், லஸ்ஸி, எலுமிச்சை ஜூஸ் போன்றவற்றை அருந்தவும். வெளியே செல்கையில் மறக்காமல் தண்ணீரையும் எடுத்துச்செல்லவும்.
*வெளிர் நிற, தளர்வான, பருத்தி ஆடைகளை அணியுங்கள். இறுக்கமான உடைகளைத் தவிர்க்கவும்.
*தொப்பி அணிந்தோ, குடை பிடித்தோ செல்லுங்கள். வெளி வேலைகளை காலையிலும் மாலையிலும் திட்டமிடுங்கள்.

*ஏதேனும் மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தால், வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்படாமல் எச்சரிக்கையாக இருங்கள். செல்லப் பிராணிகளை நிழல்களில் குடில் அமைத்து, சரியான குடிநீர் வசதியையும் செய்துகொடுங்கள்.
செய்யக் கூடாதவை
*வெயிலிலிருந்து இளைப்பாற, வண்டிகள் நிறுத்தும் அறைகளில் ஒதுங்காதீர்கள். மதிய நேரத்தில் வெளியே சென்று விளையாடுவதையும், வேலைகள் செய்வதையும் தவிருங்கள்.
*வெயில் காலத்துக்கு ஏற்ற உணவுகளை தேர்வுசெய்து சாப்பிட வேண்டும். எண்ணெய்யில் பொரித்த, வறுத்த, கொழுப்பு அதிகமுள்ள உணவுகள், அசைவ உணவுகள், கார உணவுகள், சூடான, காரமான, மசாலா கலந்த உணவு வகைகளைத் தவிர்க்கவும்.

*இனிப்புப் பலகாரங்கள், க்ரீம் நிறைந்த பேக்கரி நொறுக்குத்தீனிகள், பர்கர், பீட்சா, ஐஸ்க்ரீம் போன்றவற்றையும் தூர வையுங்கள்.
*தூங்குவதற்கு மெத்தை பயன்படுத்துவதை முடிந்தளவுக்குத் தவிருங்கள். வெறும் தரையிலோ, மெலிதான போர்வையை விரித்தோ படுத்து உறங்குங்கள். காலை மட்டுமன்றி, மாலை வேளையிலும் ஒருமுறை குளியுங்கள்.
*பாட்டிலில் அடைத்த குளிர்பானங்களைப் பருக வேண்டாம். குளிர்பானம் குடிப்பதால் உடல் வெப்பம் அதிகரிக்கும். எனவே, இயற்கை பானங்கள், பழங்களைத் தேர்வுசெய்து சாப்பிடுங்கள். ஜூஸாகச் சாப்பிடுவதைவிட, பழங்களாகச் சாப்பிடுவதே நல்லது.

*வெப்பக்கதிர்களால் களைப்பு, தலைச்சுற்றல், தலைவலி, குமட்டல், அதிக வியர்வை, வலிப்பு, மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல் போன்ற உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படி அறிகுறிகள் தென்பட்டால், உடனே மருத்துவரை அணுகவும்.
-ஞா.சக்திவேல் முருகன்