
நம்ம கோவையை நல்லா தெரிஞ்சுப்போம்!

உங்கள் மாவட்டத்தை அறிந்துகொள்ளுங்கள் (Know your District) என்ற தலைப்பில் சுட்டி விகடன் அளித்துவரும் 200 தகவல்கள் கொண்ட இணைப்பிதழ், அதையொட்டிய மாணவர்களுக்கான தேர்வு மற்றும் பரிசளிப்பு விழா வரிசையில், இதோ... கொஞ்சு தமிழ் கோவையில்.

இணைப்பிதழிலிருந்து OMR ஷீட் முறையில் நடத்தப்பட்ட தேர்வில் கோயமுத்தூரின் 80 க்கும் மேற்பட்ட சிறப்பு மிகு பள்ளிகளைச் சேர்ந்த 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில் பள்ளிகள் அளவில் முதல் மூன்று இடங்களைக் கைப்பற்றிய மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு விழா கோவை நிர்மலா கல்லூரியில் 02.03.2019 அன்று நடைப்பெற்றது.

பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கொண்டு பள்ளி மாணவர்களுக்கு பரிசளித்தார் சந்திராயன்-1, மங்கள்யான் செயற்கைக்கோள் திட்டங்களின் முன்னாள் இயக்குநர், இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் முன்னாள் தலைவர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப கழகத்தின் துணைத்தலைவர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை.

விழாவில் பேசிய விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, “நீங்களும் மங்கள்யான், சந்திராயன் போல உயர பறக்க வேண்டும். கதைகளிலும் விளையாட்டுகளிலும் வாழ்க்கை பாடம் இருக்கிறது. அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். சுட்டி விகடன் குழந்தைகளின் அறிவை வளர்ப்பதுடன் அவர்களுக்கு வாழ்க்கையை கற்றுத்தருகிறது. பாடங்களை கற்றுகொள்ளும்போது நிறைய தோல்விகளையும் தவறுகளையும் செய்கிறோம். தோல்விகளிலிருந்து கற்றுக்கொண்டு, தவறுகளை ஒப்புக்கொள்ளுதலிருந்துதான் வெற்றிக்கான முதல் படியை அடைய முடியும்” என்றார்.

இந்தியாவின் விண்வெளி ஆய்வுகளின் அனுபவங்களைச் சுட்டிகளுடன் பகிர்ந்துக் கொண்ட அவர், “ஐந்தாவது முறை அமெரிக்காவும், ஒன்பதாவது முறை ரஷ்யாவும் முயற்சி செய்த பிறகே செவ்வாய்க்கு தங்கள் செயற்கைக்கோள்களை அனுப்ப முடிந்தது. ஆனால் இந்தியா மற்றவர்கள் செய்த சிறு தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு அதிலிருந்து வேறுபட்டு மங்கள்யானை தனது முதல் முயற்சியில் செய்வாய்க்கு அனுப்பி வெற்றிவாகை சூடியது” என்று அனுபவங்களை பகிர்ந்துகொண்டபோது சுட்டிகள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

நிகழ்ச்சியில் சுட்டிகளின் ஏராளமான கேள்விகளுக்கு அறிவியல் பூர்வமான பதில்களை வழங்கி தெளிவை ஏற்படுத்தினர். ``டைம் ட்ராவல், இந்தியா அடுத்து ஜூபிடருக்கு செயற்கைக்கோள் அனுப்பினால் என்ன பெயர் வைக்கலாம்?” என ஆச்சர்யமான கேள்விகள் கேட்டு அசத்தினர்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை மொபைல்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சம்சு அலி, ஜெகே.கோவிந்தராஜுலு, CEO-Orange yard ஆகியோரும் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.
திவான் சமத்தூர் அரசு பள்ளியில் முதல் பரிசு பெற்ற ஸ்ரீ ஹரிணி, ``கோவை மாவட்டத்தைக் குறித்து நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டோம். நிறைய விஷயங்கள் தெரிந்துக்கொண்டதை போட்டித்தேர்வின் மூலமும் நிரூபித்திருக்கிறோம்” என்றார் ஹேப்பியாக !

ஸ்ரீ லக்ஷ்மி மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர் கதிரவன், “எங்க ஸ்கூல் பிரண்ட்ஸ் 9 பேருக்கு பரிசு கிடைச்சிருக்கு. சுட்டி விகடன் கோவை 200 படிக்கிறப்போ தான் நம்ம ஊர்ல இவ்ளோ இருக்கான்னு தெரிஞ்சுகிட்டோம். ஆர்வமா படிச்சோம். ஓ.எம்.ஆர் ஷீட்டில் பதிலளிப்பது புதுசா இருந்துச்சு. இனி வர போட்டி தேர்வுக்கு இது ஒரு ஜாலியான பயிற்சி” என்று சொல்லி தன் நண்பர்களுடன் போஸ் கொடுத்தார்!
ஒவ்வொரு சுட்டியின் மனமும் முகமும் நிறைந்திருப்பது, அவர்களின் வெற்றி நடையில் தெரிந்தது!
-ச.கார்த்திகா, சு.உ.சம்யுக்தா
படங்கள்: சே.ஆயிஷா அஃப்ரா