
நிஜங்கள் சொல்லும் கதை ராணி!

‘நான்யாரைப் பார்த்தாலும் அவங்ககிட்ட இருக்கும் ஒரு நல்ல விஷயத்தை எடுத்துப்பேன். அதுபற்றி என் ஃப்ரெண்ட்ஸுக்கும் சொல்வேன். அதுதான் என் பிளஸ்’’ என்று புன்னகையுடன் ஆரம்பிக்கிறார் அதிதி.
ஆறாம் வகுப்பு மாணவியான இவர், `டைம்பஸ்’ என்ற ஆன்லைன் நிறுவனத்தைத் தொடங்கி, சிஇஓ-வாகச் செயல்பட்டு வருகிறார். சிறிய அளவில் வணிகம் செய்பவர்களுக்கான விளம்பரங்களை, வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப படங்கள், கதைகளாக உருவாக்கித் தருவதே அதிதியின் பிசினஸ். அதற்காக, CIMSE (Chamber of Indian Micro Small and Medium Enterprises) வழங்கிய இளம் தொழில்முனைவோருக்கான விருதையும் பெற்றுள்ளார் இந்தச் சுட்டி.

“எல்லோரும் மால், ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்களில் பொருள்களை வாங்க ஆரம்பிச்சுட்டாங்க. அதனால் முடங்கும் உள்ளூர் வியாபாரிகளை, எளிய விளம்பரங்கள் மூலம் உயர்த்துவதே என் நோக்கம்.
எனக்குச் சின்ன வயசிலிருந்தே படம் வரையப் பிடிக்கும். பீச், பார்க் போகும்போது அங்கே நடக்கும் சின்னச் சின்ன விஷயங்களை, கார்ட்டூன் படங்களாக வரைந்து, அதற்கேற்ற கதைகளை உருவாக்குவேன். ‘சூப்பரா இருக்கு’ன்னு எல்லோரும் பாராட்டுவாங்க. ஏதாவது ஒரு கான்செப்ட்டை மையமாக வெச்சு செய்வேன். என் கதைகளைப் பாராட்டி அம்மா நிறைய பரிசு கொடுப்பாங்க’’ என்று அம்மா ரம்யாவை அணைத்துக்கொள்கிறார் அதிதி.
“அதிதி தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை உன்னிப்பாகக் கவனிப்பாள். மற்றவர்களின் உணர்வுகளையும் உள்வாங்குவாள். அவளுடைய அதீத ஆர்வம் ஆச்சர்யப்படுத்தியது. ஆரம்பத்தில், நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை மையமாக்கி கதை எழுதினாள். அதை சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்தோம். அதைப் பார்த்து பலரும் போன் செய்து பாராட்டுவார்கள்.
ஒரு நாள் கடற்கரைக்குச் சென்றிருந்தபோது, அங்கிருந்த தள்ளுவண்டிகளைப் பார்த்த அதிதி, ‘இந்தக் கடைக்காரங்க எல்லாம் எந்தச் சேனலில் அவங்க கடைகளுக்கு விளம்பரம் கொடுப்பாங்க?’ என்று கேட்டாள். ‘இவங்க வருமானம் குறைவு. விளம்பரமெல்லாம் பண்ணமுடியாது’ என்றோம்.

மறுநாளே, ‘சின்னச் சின்னக் கடைகளுக்கு நாமே விளம்பரங்கள் செய்து கொடுப்போம். இனி நான் சின்ன அளவில் தொழில் செய்றவங்களைப் பற்றிதான் கதைகள் எழுதப்போறேன். அதில் கார்ட்டூன்களுக்குப் பதில், சம்பந்தப்பட்டவங்க புகைப்படங்களைச் சேர்க்கப்போறேன். அதை சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்தால், அவங்களுக்கு விளம்பரம் கிடைக்கும்’ என்றாள். அதற்காக, அதிதியை பேஸிக் பிசினஸ் கோர்ஸில் சேர்த்துவிட்டோம். கூகுள் சர்டிஃபிகேட் கோர்ஸ்களும் படித்தாள்’’ என்று பெருமிதத்துடன் சொன்னார் அம்மா.
“கோர்ஸ் முடிச்சதும் ஒரு தெளிவு கிடைச்சது. தினமும் ஸ்கூல்விட்டு வந்து, ஹோம் வொர்க் முடிச்சுட்டு அம்மாவுடன் போய் சிறு வியாபாரிகளிடம் பேசுவேன். அதையே கதையாக எழுதி அவங்க அனுமதியுடன் சமூக வலைதளங்களில் வெளியிடுவேன்.
இதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. அடுத்து, யுனீக்கா பிசினஸ் செய்பவர்களைப் பற்றி எழுத ஆரம்பிச்சேன். கொஞ்சம் பெரிய அளவில் பிசினஸ் செய்பவர்கள், பணம் கொடுத்து தங்களைப் பற்றி எழுதச் சொன்னாங்க. படிப்பு, பிசினஸ் இரண்டிலும் நான் பிஸி’’ என்று தொடர்கிறார் அதிதி.
“மிகச் சிறிய அளவில் தொழில் செய்பவர்களையும் சமூகத்துக்கு அடையாளம் காட்டி அவர்களின் வளர்ச்சிக்கு உதவியதால், CIMSE விருது கிடைச்சது. என் பிசினஸ் மூலம் கிடைச்ச தொகையைச் சேமிச்சு வெச்சு என்னுடைய கதைத் தொகுப்பை புத்தகமாகப் வெளியிடப்போறேன்’’ என்கிறார் இந்தச் சுட்டி வெற்றியாளர்!
-சு.சூர்யா கோமதி
படங்கள்: ஆ.வள்ளி சௌத்திரி