
இசை நாயகன் லிடியன்! - நேற்று... இன்று... நாளை...

ஒட்டுமொத்த இசை உலகையும் திரும்பிப் பார்க்கவைத்து, கடந்த பல நாள்களாகப் பேசப்படுபவர், 13 வயது லிடியன் நாதஸ்வரம். உலகளவில் நடைபெற்ற ‘தி வேல்ர்ட்'ஸ் பெஸ்ட்' (The World's Best) என்ற நிகழ்வில், தன் பியனோ இசைத் திறமையால் டைட்டில் வென்று, சர்வதேச அரங்கில் மிளிர்ந்தவர். அவரது நேற்று... இன்று... நாளை பற்றி அவரே சொல்கிறார்.

நேற்று
‘‘என் அப்பா வர்ஷன், இசையமைப்பாளர். அம்மா, ஜான்சி. அக்கா, அமிர்தவர்ஷினியும் இசையில கலக்குவாங்க. நாங்க வீட்டிலிருந்தே படிக்கும் ஹோம் ஸ்கூலிங் பண்றோம். எங்களுக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அதை எந்த நிர்பந்தமும் இல்லாமல் கத்துக்கிறோம். அப்பா இசையமைப்பாளர் என்பதால், சின்ன வயசிலேயே ஆர்வம் உண்டாகிடுச்சு. ரெண்டு வயதிலேயே டிரம்ஸ் வாசிப்பேன். 10 வயதில், லண்டன் ட்ரினிட்டி மியூசிக் கல்லூரியில், எட்டாவது கிரேட்டில் ஆல் இந்தியா அளவில் முதல் இடம் பிடிச்சேன்.


மிருதங்கம், கிடார், புல்லாங்குழல், பியானோ என எல்லாவற்றிலும் ஃபேஸிக் மட்டுமே வெளிய கத்துக்குவோம். அப்புறம், நாங்களே டிரெய்ன் பண்ணிக்குவோம். அப்பா கைடன்ஸ் கொடுப்பாங்க. காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை இசையைப் பற்றி நானும் அக்காவும் யோசிச்சுட்டே இருப்போம். புதுசு புதுசா மெட்டுகள் உருவாக்குவோம்.
என் நண்பன் ஸ்டீவன் சாமுவேல் உடன் இணைந்து உருவாக்கின ஒரு மியூசிக் வீடியோவைப் பார்த்துட்டு, கவர்னர் நேரில் கூப்பிட்டுப் பாராட்டினார்’’ என்று புன்னகைக்கும் லிடியன், உலக வெற்றி தருணத்தைச் சொல்கிறார்.

இன்று

‘தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட்’ போட்டி பற்றி நண்பர்கள் மூலம்தான் தெரிஞ்சது. நிகழ்ச்சியில் பல சுற்றுகள் இருந்துச்சு. 196 நாடுகளிலிருந்து போட்டியாளர்கள், வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 53 நடுவர்கள் என ரொம்ப கடுமையான போட்டி. ஆனாலும், எனக்கு பயமோ, பதற்றமோ இல்லை. ஜெயிக்கணும் என்பதைவிட, அவ்வளவு பெரிய மேடையில் பங்கேற்பதையே நிறைவா, சந்தோஷமா நினைச்சேன். முதல் சுற்றில், முழு எனர்ஜியுடன் அதிவேகத்தில் பியானோவை இசைத்தேன். அந்த வீடியோ பயங்கர வைரல் ஆச்சு. ஏ.ஆர் ரஹ்மான் அங்கிள், அமிதாப் பச்சன் சார், யுவன் அங்கிள், அனிருத் அண்ணா எல்லாரும் வீடியோவைப் பாராட்டி ஷேர் பண்ணியிருந்தாங்க. அடுத்தடுத்த சுற்றுகளில், கண்ணைக் கட்டிட்டு பியானோ வாசிப்பது, ரெண்டு பியானோவை ஒரே நேரத்தில் வாசிப்பதுன்னு வெரைட்டி காட்டினேன். அதுக்கான பலன்தான், ‘தி

வேர்ல்ட்’ஸ் பெஸ்ட்’ டைட்டில் வின்னர்.
இந்தப் போட்டி மூலம் நான் நல்லா பியானோ வாசிக்கிறேன்னு உலகத்துக்கே தெரிஞ்சது. ஆனால், என் அக்கா அமிர்தவர்ஷினி, என்னைவிட நல்லா பியானோ வாசிப்பாங்க. இப்போ, அகத்தியன் பால் மாஸ்டரிடம் கிளாஸுக்குப் போயிட்டிருக்கேன்'' என்று அடக்கத்துடன் சொல்லும் லிடியனின் நாளைய திட்டம் என்ன?

நாளை

‘‘நிஜமா சொல்லணும்ன்னா, இந்த நிமிஷம் வரைக்கும் அதுபற்றி யோசனையோ, கவலையோ கிடையாது. போட்டியில் ஜெயிச்சதுக்காக இந்திய மதிப்பில் 7 கோடி ரூபாய் கொடுத்தபோது, நான் அப்பாகிட்ட கேட்டது, ‘டாடி, எனக்கு பிரியாணி வேணும்’னுதான். வெற்றிக்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் சார் பிரஸ் மீட் வெச்சுப் பாராட்டினாங்க. ‘இன்டர்நேஷனல் இன்ஸ்பிரேஷனல் அம்பாஸடர் ஃபார் இந்தியா’ பட்டம் கொடுத்திருக்காங்க. நிறைய பிரபலங்கள் இப்போ வரை வாழ்த்திட்டு இருக்காங்க.அதையெல்லாம் அனுபவிச்சுட்டிருக்கேன். அப்பாவுக்கு மியூசிக்தான் உயிர். தன் கரியரைவிட எங்க மேலே அதிக கவனம் செலுத்தறார். ஸோ, இனிமே அடிக்கடி இசை நிகழ்ச்சிகளுக்காக அப்பாவோடு வெளியே போவேன். அக்காவையும் அம்மாவையும் ரொம்ப மிஸ் பண்ணுவேன்'' என்று குழந்தையாகச் சொல்லும் லிடியனை பெற்றோரும் அக்காவும் பாசமுடன் அணைத்துக்கொள்கிறார்கள்.
-சு.சூர்யா கோமதி
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன் க.பாலாஜி
லிடியன் டிட் பிட்ஸ்...
*பிரியாணிப் பிரியர்.
*இதுவரை டி.வி-யே பார்த்ததில்லை.
*தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என 4 மொழிகள் தெரியும்.
*பிடித்த ஹாபி சைக்கிளிங்.
*விண்வெளி, கார்கள் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் அதிகம்.