
கனவை வென்ற நாயகி!

அமெரிக்காவில் கிழக்கு கரோலினாவின் இளம் தொழிலதிபர் விருது பெற்றவர், கேப்ரியேல் குட்வின் (Gabrielle Goodwin).ஒன்பது வயதாகும் கேப்ரியேல், ஐந்து வயதிலேயே கண்டுபிடித்தது, தலைமுடி கிளிப் (Hair bow). 2015ஆம் ஆண்டில் ஒருநாள், ‘‘அம்மா, என் தலைமுடிக்குத் தகுந்த கிளிப் சரியாகவே கிடைப்பதில்லை. ஏன் நாமே உருவாக்கக் கூடாது?'' என்று கேட்டார்.

‘‘சரி, உனக்கு எப்படி வேண்டும் என்று நீயே உருவாக்கு. நான் உதவுகிறேன்'' என்றார் தாய்.
கேப்ரியேல், தன் கனவு கிளிப் பற்றி சொல்லச் சொல்ல, அவரின் தாய் உதவியுடன் வித்தியாசமான, அழகான தலைமுடி கிளிப்பை உருவாக்கினார். அது, அவரது வாழ்க்கையையே மாற்றியது. அந்த கிளிப் அனைவரையும் கவர்ந்தது.
குறுந்தொழில் சாம்பியன் விருது, வித்தியாசமான கண்டுபிடிப்புக்கான தேசிய விருது எனப் பல விருதுகளை வென்றார். ஏழு வயதிலேயே தன் பொருள்களை ஆன்லைன் மூலம் சர்வதேச அளவில் சந்தைப்படுத்தினார்.

இப்போது, கேப்ரியேலும் அவர் அம்மாவும் பல நாடுகளுக்குச் செல்கிறார்கள். தன்னம்பிக்கை சொற்பொழிவு நிகழ்த்துகிறார்கள். ஒரு புத்தகமும் எழுதியிருக்கிறார் கேப்ரியேல்.
‘‘நான், சிறுபிள்ளைகளுக்கு ஓர் உதாராணமாக இருக்க விரும்புகிறேன். பெரிதாக கனவு காணுங்கள். கடின உழைப்பு இருந்தால், வெற்றி நிச்சயம்'' என்கிறார் கேப்ரியேல்.