Published:Updated:

அன்பு பேசும் அரும்பு மொழி!

அன்பு பேசும் அரும்பு மொழி!
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பு பேசும் அரும்பு மொழி!

அன்பு பேசும் அரும்பு மொழி!

அன்பு பேசும் அரும்பு மொழி!

திறமையற்றவர் என்று இந்த உலகில் யாருமே இல்லை. ஆனால், ஒரு சிலரை அப்படியாக நினைத்து ஒதுக்கிவிடுகிறோம். அவர்களை முன்னேற்றுவதற்கான  செயல்களும் இங்கே குறைவாகவே உள்ளன.

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இன்று, சாப்பாடு ஆர்டர் செய்வது தூங்கப்போகும் வரை எல்லாவற்றுக்கும் செயலிகள் (APPS) வந்துவிட்டன. அந்த வகையில், ஆட்டிஸம் எனும் அறிவுசார் வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளுக்காகத் தமிழில் ‘அரும்பு மொழி’ என்ற ஆப் உருவாகியுள்ளது.

அன்பு பேசும் அரும்பு மொழி!

இந்தச் செயலி உருவாக்கத்தில் ஒருவரான சிறார் எழுத்தாளர் யெஸ்.பாலபாரதி, “எனக்கும் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட சிறப்புக் குழந்தை இருக்கிறார். அவரால பேச முடியும். கோர்வையாக இல்லாவிட்டாலும் சில சொற்களைப் பயன்படுத்துவார். என் மனைவி ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்தபோது, மகனுக்காகச் சிறப்புக் குழந்தைகளை வளர்ப்பது தொடர்பான பிஎட் படிப்பைப் படித்தார். ஒரு நாள் ‘நம் மகன் பேசும் திறன் பெற்றிருப்பதால் தேவைகளை சொல்லிவிடுகிறான். ஆனால், பேசும் திறன் இல்லாத ஆட்டிஸக் குழந்தைகள், கழிவறைக்குச் செல்ல வேண்டும் என்பதையும் வெளிப்படுத்த முடிவதில்லை. அவர்களது அந்தச் சிரமம் அழுகையாக, கோபமாக வெளிப்படுமாம்’ என்றார்.

அவர்களின் அடிப்படைத் தேவைகளை மற்றவர்களுக்குச் சொல்ல ஆப் இருக்கிறதா என்று தேடிப்பார்த்தோம். ஒரு சில ஆப்கள் மட்டுமே ப்ளே ஸ்டோரில் இருந்தன. அவையும் எளிமையாக இல்லை. விலை மிக அதிகமாக இருந்தன. நாங்களே ஒரு ஆப்பை கட்டமைக்க திட்டமிட்டோம். மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் நண்பர் தமிழ்ச்செல்வன் உதவியால், ‘அரும்பு மொழி’ என்கிற செயலியை உருவாக்கி, மார்ச் 31 வெளியிட்டுள்ளோம்’’ என்றார்.

அன்பு பேசும் அரும்பு மொழி!

இந்தச் செயலியின் சிறப்பம்சம் பற்றி தமிழ்ச்செல்வன், “இதில் ஆறு புகைப்படங்கள் நிரந்தரமாக இருக்கும். அவற்றைத் தட்டும்போது, ஆடியோ ஒன்று ஒலிக்கும்.  சாப்பிடும் சிறுவன் படத்தைத் தட்டினால் சாப்பாடு தேவை என்கிற வசனம் ஒலிக்கும். கழிவறைக்குச் செல்ல, அதற்கேற்ற புகைப்படம் இருக்கும். குழந்தைகள் தங்களது தேவைகளின்  புகைப்படங்களை க்ளிக் செய்வதன் மூலமாகப் பெற்றோர்களுக்குத் தெரிவிப்பார்கள்.  இன்னும் தேவையான புகைப்படங்களையும் ஆடியோவையும் சேமித்துக்கொள்ளலாம்.

குறிப்பாக, வீட்டின் முகவரி ஞாபகம் வைத்துக்கொள்வது சிரமமாக இருக்கும். அவர்களுக்கு வீட்டை புகைப்படம் எடுத்து, விலாசத்தை ஆடியோவாக பதிவுசெய்யலாம்.  குழந்தைகளுக்கு மொழிப்பயிற்சிக்கு, பயிற்சி கொடுக்கவேண்டிய வார்த்தையை ஆடியோவாக பதிவுசெய்து மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும்போது, மொழித்திறன் வளரும்.  ஒரு சில பயனர்களிடம் இந்த ஆப்பை கொடுத்து, அதன் செயல்பாடு குறித்து பரிசோதனை செய்திருக்கிறோம்.

அன்பு பேசும் அரும்பு மொழி!

ஆட்டிஸம் குழந்தைகளின்  சிறந்த வழிகாட்டு துணைவனாக இந்த ஆப் அமையும் என்று நம்புகிறோம். மக்கள் வரவேற்பைப் பொறுத்து இன்னும் பல சிறப்பம்சங்களை இணைப்போம்’’  என்றார்.

‘அரும்பு மொழி’ செயலி, பல குழந்தைகளின் அற்புத நண்பனாக  வலம்வர வாழ்த்துகள்!

-ச.முத்துகிருஷ்ணன்