உலக நாடுகளையே ஆட்டுவிக்கும் பிக்-பாஸ் ஆன அமெரிக்காவே சமீபத்தில் ஆட்டம் கண்டது. அமெரிக்க அரசுக்கு நிதி ஒதுக்கீடு செய்து, அந்நாட்டு நாடாளுமன்ற அவைகளில் ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், ட்ரம்ப் அரசு நிர்வாகம் செயல்பட முடியாமல் அரசாங்கத்தை 'ஷட் டவுன்' செய்தது அந்நாட்டின் அரசுத் துறைகள். அதாவது, அமெரிக்காவில் பல்வேறு அரசுத் துறைகள் செயல்பாடில்லாமல் முடக்கி வைக்கப்பட்டன. கடந்த டிசம்பர் 22 முதல் ஜனவரி 25-ம் தேதிவரை 35 நாள்கள் நீடித்த இந்த முடக்கம், அந்நாட்டில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தியது. 'தங்களுக்குச் சாதகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்' என அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசு, பிப்ரவரி 15-ம் தேதிவரை அரசுத் துறைகளுக்குக் கெடு விதித்திருந்தது. அதற்குள் தன் விருப்பப்படி நிதி ஒதுக்கீடு இல்லாவிட்டால் 'மீண்டும் அரசுத் துறை முடக்கமோ அல்லது அவசரநிலை பிரகடனமோ செய்யப்படும்' என ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். இனி என்ன நடக்குமோ என்று அமெரிக்காவே பதற்றமான நிலையில் இருக்கிறது. அமெரிக்க மக்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகையும் ஒருசேரப் பாதித்த இந்த முடக்கத்தைப் பற்றிய முழு ரிப்போர்ட் இதோ...
அமெரிக்க அரசியலமைப்பில் ஷட்- டவுன் என்றால் என்ன?
'யுனைடெட் ஸ்டேட்ஸ் காங்கிரஸ்' எனப்படும் அமெரிக்க அரசியலமைப்பில் இரு அவைகள் உள்ளன. அவை செனட் சபை (Senate) எனப்படும் நாடாளுமன்ற மேலவை மற்றும் பிரதிநிதிகள் சபை (House of Representatives) எனப்படும் நாடாளுமன்ற கீழ்சபை. அமெரிக்கச் சட்டத்தின்படி, அரசு கஜானாவில் இருக்கும் நிதியைச் செலவு செய்வதற்கான நேரடி அதிகாரம் அமெரிக்க அதிபருக்குக் கிடையாது. மாறாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிதி மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அவற்றுக்கு உறுப்பினர்கள் அங்கீகரித்து, அதன் பின்னர் அதிபர் ஒப்புதலளித்துக் கையெழுத்திட்ட பின்னரே அந்த நிதி, அரசுப் பணிகளுக்காக வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர்ட்ரம்ப், தன் அரசியல் கனவான அமெரிக்கா - மெக்சிகோ இடையேயான தடுப்புச் சுவர் கட்டுவதற்காக 5.7 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கக் கோரியிருந்தார். ஆனால், 'இந்த நடவடிக்கை அநாவசியமானது' என்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அதை நிராகரித்துவிட்டன. இதனைத்தொடர்ந்து, 'தடுப்புச் சுவரைக் கட்டியே தீருவேன்' எனப் பிடிவாதம் பிடித்த ட்ரம்ப், சுவர் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யாததால், அமெரிக்காவின் அரசாங்க நிதித் தேவைகளுக்கான மசோதாவை நிறைவேற்ற ஒப்புதலளிக்க மறுத்து, அரசாங்கத்தை முடக்கினார். அதாவது, அமெரிக்க அரசு நிர்வாகத் துறைகள் பதினைந்தில், ஒன்பது துறைகளின் செயல்பாட்டிற்கான நிதியை நிறுத்தி வைத்தார்.
அமெரிக்கா- மெக்சிகோ இடையே தடுப்புச் சுவர் கட்டவேண்டியது ஏன் ?
மெக்சிகோ வழியாக அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறுபவர்களைத் தடுக்கும் நோக்கில் இந்தச் சுவர் கட்ட ட்ரம்ப் விருப்பம் தெரிவித்தார். அப்படிச் சட்ட விரோதமாகக் குடியேறுவோர்தான், அமெரிக்காவின் எல்லைப் பகுதிகளில் போதைப்பொருள் புழக்கத்திலும், கொலை-கொள்ளை குற்றங்களிலும் அதிகளவில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும், எல்லைப்பகுதிகளில் சுவர் எழுப்புவதன் மூலம் இந்தக் குற்றங்களைத் தடுக்க முடியும் என்றும் அதற்குக் காரணம் சொல்லப்படுகிறது.
'அமெரிக்கா அமெரிக்கர்களுக்கு மட்டுமே' என்ற கருத்தைக் கொண்டுள்ள ட்ரம்ப், 2016-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின்போது, அதிகம் பேசியது அமெரிக்கா - மெக்சிகோ இடையேயான தடுப்புச் சுவரைப் பற்றித்தான் என்பது நினைவுகூரத்தக்கது.
அமெரிக்கா - மெக்சிகோ எல்லைப்பகுதி என்பது கிட்டத்தட்ட 1,900 மைல் தொலைவுகொண்டது. நியூ மெக்சிகோ, டெக்சாஸ், கலிபோர்னியா, அரிசோனா என நான்கு மாகாணங்கள் இந்த எல்லைப் பகுதிக்குள் வருகிறது. அங்கே, மெக்ஸிகோவிலிருந்து மக்கள் அமெரிக்காவில் குடிபெயர்வதைத் தடுக்கச் சுவர் கட்டப்படும் என்பதுதான் ட்ரம்ப்-ன் வாக்குறுதி. இந்தச் சுவர் எழுப்ப வேண்டுமானால், ஏறத்தாழ நாற்பதாயிரம் கோடி ரூபாய் செலவாகும். இதற்கான நிதியை ஒதுக்கக் கோரியே ட்ரம்ப், அரசுத்துறைகள் முடக்கம் நடவடிக்கையில் ஈடுபட்டார். இந்தச் சுவருக்கு ஆகும் செலவில் பாதித் தொகையை மெக்சிகோ அரசு வழங்கும் என்று ட்ரம்ப் சொல்லியிருந்தார். ஆனால், இதற்காக நிதி ஒதுக்கமுடியாது என மெக்சிகோ அரசாங்கம் மறுத்து விட்டது. இந்நிலையில், 'எப்படியாவது இந்தச் சுவரைக் கட்டுவேன்' எனப் பிடிவாதமாக இருக்கிறார் ட்ரம்ப்.
உண்மையில் இந்தச் சுவர் அவசியமா? மக்கள் கருத்து என்ன ?
உள்நாட்டில் பிரச்னை இருக்கிறதா...? அதற்குக் காரணம், வெளிநாட்டுக்காரர்கள்தான். அமெரிக்காவில் போதைப்பொருள் அதிகளவில் புழக்கத்தில் இருந்தாலோ, கொலை, கொள்ளைச் சம்பவங்கள் போன்ற குற்றங்கள் எதுவாயினும் மெக்ஸிகோவிலிருந்து சட்ட விரோதமாகக் குடிபெயர்ந்த அகதிகளாலேயே அரங்கேற்றப்படுகிறது என்ற போலியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது அமெரிக்க அரசு. ஆனால், பெரும்பாலான மக்கள் இதை நம்பத் தயாராக இல்லை. இந்தத் தடுப்புச் சுவரை அவர்கள் வரவேற்கவும் இல்லை. இந்தச் சுவர், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இனவெறிக் கொள்கையின் வெளிப்பாடு என்று மக்கள் குறைகூறுகிறார்கள். மேலும், "அமெரிக்க ரத்தத்தைக் காப்பாற்றுவோம்" என்ற ட்ரம்பின் வார்த்தைகளையே அதற்குச் சாட்சி ஆக்குகின்றனர். குற்றங்களுக்கு மெக்ஸிகோவிலிருந்து வரும் அகதிகள் மட்டும் காரணமல்ல. வேறுசில காரணங்களையும் ஆராய்ந்து, அவற்றைக் களைய வேண்டும்" என்பது அவர்களின் வாதமாக இருக்கிறது.
எந்தெந்த அரசுத் துறைகள் முடக்கப்பட்டன ?
அமெரிக்காவின் ஒன்பது அரசுத் துறைகள் முடக்கப்பட்டன. அவை, வெளியுறவுத்துறை, அமெரிக்காவின் நிதி, பண அச்சடிப்பு, வரி வசூல், கடன் மேலாண்மை போன்றவற்றை நிர்வகிக்கும் கருவூலத் துறை, நீதித் துறை, 75 சதவிகித அரசு நிலங்களை நிர்வகிக்கும் துறை, விவசாயம், காடுகள் மற்றும் உணவு மேலாண்மை குறித்த விஷயங்களை நிர்வகிக்கும் துறை, வர்த்தகத் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, போக்குவரத்துத் துறை, உள்ளாட்சித் துறை, சுகாதாரத் துறையின் சில பிரிவுகள், அமெரிக்க அதிபர் அலுவலகப் பிரவு, பெரும்பாலான அரசுசாரா துறைகள், நீதிமன்றம் சார்ந்த துறைகள் ஆகியன முடக்கம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டன. இவற்றில் எந்தவித வழக்கமான அலுவல்களும் நடைபெறவில்லை. இந்தத் துறைகளின் செயல்பாட்டிற்கான நிதியும், அவற்றில் வேலை செய்வோருக்கான சம்பளமும் நிறுத்தி வைக்கப்பட்டன. அதேசமயம் அத்தியாவசியத் துறைகளான பாதுகாப்புத் துறை, தொழிலாளர் நலத் துறை, சுகாதாரத் துறையின் சில பிரிவுகள், எரிசக்தித் துறை, கல்வித் துறை, அமெரிக்கப் போர் வீரர்கள் நலத்துறை, உள்ளாட்சி அமைப்பின் குறிப்பிட்ட சில துறைகள், அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள கொலம்பியா மாகாணம், சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றின் பணிகளுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை.
இந்த அரசுத் துறை முடக்கத்தால் அமெரிக்காவில் ஏற்பட்ட பாதிப்புகள் என்னென்ன?
அமெரிக்க அரசுத் துறை முடக்கத்தால், ஏறத்தாழ எட்டு லட்சம் அரசு ஊழியர்கள் பாதிப்படைந்தனர். இதில் மூன்று லட்சத்து எண்பதாயிரம் ஊழியர்களுக்குக் கட்டாய விடுப்பு வழங்கப்பட்டது, மீதமுள்ள நான்கு லட்சத்து இருபதாயிரம் அரசு ஊழியர்கள் ஊதியம் இன்றி வேலை செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதனால் மாதச் சம்பளத்தினை எதிர்பார்த்திருந்த பல்வேறு ஊழியர்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகினர், அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்வதுகூடச் சிரமமானது. சுமார் 3 பில்லியன் டாலர் அளவுக்குப் பொருளாதார இழப்பு ஏற்பட்டதாக அறிக்கை ஒன்று கூறுகிறது.
எஃப்.பி.ஐ. ஊழியர்கள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோருக்கு ஊதியம் கிடைக்காமல், அரசின் சட்டம்- ஒழுங்கு வெகுவாகப் பாதிக்கப்பட்டது, தேசிய பூங்காக்கள், அருங்காட்சியங்கள் மூடப்பட்டு சுற்றுலாத் துறை பெரும் நஷ்டத்தைச் சந்தித்தது. புகழ்பெற்ற சுதந்திரதேவி சிலை அமைந்துள்ள மாகாண அரசு, சுற்றுலா பாதிப்படையாமல் இருக்க, தன்னிச்சையாக நிதி திரட்டியது. நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் முதல் பல்வேறு அறிவியல் ஆராய்ச்சி நிலையங்களில் சோதனைகள் நிறுத்திவைக்கப்பட்டன. இதனால் பல ஆயிரம் டாலர் செலவிலான ஆராய்ச்சிகள் பயனற்றுப் போனது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
அமெரிக்கர்களின் இயல்புவாழ்க்கையை முற்றிலுமாகப் புரட்டிப்போட்டது இந்த அரசுத்துறை முடக்கம். அமெரிக்காவைச் சார்ந்துள்ள பல்வேறு நாடுகளும் இதனால் பாதிப்படைந்தன என்பதே உண்மை.
அமெரிக்க அரசுத் துறை முடக்கத்தால் இந்தியாவிற்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன ?
இந்தியாவின் ஏற்றுமதியில் ஏறத்தாழ 12 சதவிகிதம் அளவு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு சுமார் 35 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், அரசுத் துறை முடக்கம் இருந்த காலக்கட்டத்தில் துறைமுகப் பணியாளர்கள்,ஏற்றுமதியாகும் பொருட்களுக்காக அனுமதியைப் பெற தாமதமாவதால் மிகப்பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஏற்றுமதியாளர்கள் பெருமளவில் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டியதாயிற்று. மேலும், டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பும் பெருமளவு சரிவை எதிர்கொண்டது. இந்தியப் பங்குச் சந்தைகளும் சரிவைச் சந்தித்தன. இந்தியர்களுக்கான அமெரிக்க விசா கிடைப்பதில் ஏற்பட்ட குழப்பமும் கூடுதல் பாதிப்பாக அமைந்தது. மேலும், அமெரிக்கா செல்லும் சுற்றுலாப் பயணிகள், சுற்றுலா தலங்கள் மூடப்படுவது தொடங்கி, விமான நிலையப் பாதுகாப்புவரை பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க வேண்டியதாயிற்று.
அரசுத் துறை முடக்கத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவில் இனி என்ன நடக்கும்?
இந்நிலையில், அமெரிக்க காங்கிரஸ் பதினான்காம் தேதி சுமுகமான தீர்வை எட்ட, ஓட்டெடுப்பு நடத்தி ஒரு புதிய நிதி மசோதாவை அங்கீகரித்திருக்கிறது, எல்லைச் சுவருக்கான நிதி ஒதுக்கப்படாத இந்த மசோதாவை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அங்கீகரித்து, இன்னொரு அரசுத் துறை முடக்கத்தைத் தவிர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் , தான் நினைத்தை நிறைவேற்ற, ட்ரம்ப் அடுத்த ஆயுதமாக அவசர நிலையை பிரகடனப்படுத்தி, அமெரிக்க காங்கிரஸிடம் அனுமதி பெறாமலேயே எல்லைச்சுவருக்கான நிதியை ஒதுக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதாரத் தனித்துவம் இல்லாமல் அனைத்து நாடுகளும் ஒன்றையொன்று சார்ந்து இயங்கும் இன்றைய இந்த உலகில், அமெரிக்காவின் இந்தப் பாதிப்பு, பல்வேறு நிலைகளில் உலக நாடுகளுக்கான அச்சுறுத்தலாகவே அமையும் என்பதே உண்மை. எது எப்படி ஆயினும், அமெரிக்கா, அதிபர் ட்ரம்ப்பின் அடுத்தத் தாக்குதலில் இருந்து தப்பிப் பிழைப்பது அரிதுதான்.