
“பயந்தால் பைலட் ஆக முடியாது!”
``சவாலான வேலைகளுக்குப் பெண்கள் வரும்போது சக ஆண் ஊழியர்கள் முன்வைக்கிற எல்லா விமர்சனங்களையும் கிண்டல்களையும் நானும் சந்திச்சிருக்கேன். ‘உனக்கெதுக்கு இந்த வேலையெல்லாம்... பேசாம அட்மின் வேலை பார்த்துட்டுப் போயிடு’ன்னு சொல்லியிருக்காங்க. ‘எத்தனை நாள் தாக்குப்பிடிக்கிறேன்னு பார்க்கத்தானே போறோம்’னு சொன்னாங்க. ‘நீங்கபாட்டுக்கு விமர்சனம் பண்ணுங்க’ன்னு நான் என் வேலையைத் தொடர்ந்துட்டிருந்தேன். என்னால எதைச் செய்ய முடியாதுன்னு அவங்க நினைச்சாங்களோ, அதைச் செய்துகாட்டினேன். மரியாதையைக் கேட்டுப் பெறக் கூடாது; சம்பாதிக்கணும்’’ - துணிச்சலின் அழகுடன் ஆரம்பிக்கிறார் ரேஷ்மா நிலோஃபெர். இந்தியாவின் முதல் பெண் மரைன் பைலட். ரேஷ்மா தமிழ்ப் பெண் என்பது, நமக்கான கூடுதல் பெருமை!
அமெட் யுனிவர்சிட்டியில் படித்து, பி.ஐ.டி ராஞ்சியில் பி.இ மரைன் இன்ஜினீயரிங் முடித்தவர் ரேஷ்மா. கொல்கத்தாத் துறைமுகத்தில் ‘மேட் பைலட்’டாகப் பணிபுரிகிறார். மகளிர் மற்றும் குழந்தைகள்நல மேம்பாட்டு அமைச்சகத்தால் தேர்வுசெய்யப்பட்டு, குடியரசுத் தலைவரால் வருடந்தோறும் வழங்கப்படும் ‘நாரி சக்தி புரஸ்கார்’ விருது வென்றவர்களில் ரேஷ்மாவும் ஒருவர். எழுத்தாளரும் மொழி பெயர்ப்பாளருமான அமரந்தாவின் மகள் இவர்.

“மரைன் பைலட் வேலையைப் பற்றி மக்களுக்கு இன்னும் தெரியவரலை. ஏர்கிராஃப்ட் பைலட், ஃபிளைட்டை இயக்குவாங்கன்னு நமக்குத் தெரியும். மரைன் பைலட், துறைமுகங்களோடு இணைந்து வேலைசெய்றவங்க. உலகத்தின் எல்லாத் துறைமுகங்களிலும் அந்தந்தத் துறைமுகத்துக்கான பைலட்ஸ் இருப்பாங்க. ஒவ்வொரு துறைமுகத்தின் எல்லைக்குள்ளேயும் கப்பல் நுழையும்போது, அந்த இடத்தில்தான் பைலட் கப்பலில் ஏறுவாங்க. துறைமுகத்தின் எல்லையில் தொடங்கி, அந்தக் கப்பலைக் கரையில் கட்டி நிறுத்துறவரைக்குமான முழுப் பொறுப்பும் அந்த பைலட்டுடையது. அந்த இடைவெளி எவ்வளவு தூரமாகவும் இருக்கலாம். அதுல அந்தக் கப்பலைச் செலுத்துறது பைலட்டின் வேலை’’ என்று தன் பணி இயல்பு பற்றி ரேஷ்மா சுருக்கமாகச் சொன்னாலும், மரைன் பைலட்டுக்கு இருக்கும் சவால்கள் மிரள வைக்கின்றன.
கப்பல் துறைமுகத்துக்குள் நுழையும்போது அந்த இடத்தில் நிறைய ஆபத்துகள் இருக்கலாம். தண்ணீர் குறைவாக இருக்கலாம். பல கப்பல்கள் ஒரே இடத்தில் தரைதட்ட நேரலாம். போக்கு வரத்துச் சிக்கல் ஏற்படலாம். காற்றின் வேகம் மற்றும் அலைகளின் ஆர்ப்பரிப்பைக் கணித்து, கப்பலை வழிநடத்தத் தெரிந்தவராக இருக்க வேண்டும் பைலட்.

‘`பைலட் என்பவர், கேப்டனுக்கு ஆலோசனை சொல்றவர். கேப்டனுக்குத் தன் கப்பலைப் பற்றியும், அது கடலில் எப்படி வேலை செய்யும் என்ற தகவல்களும் தெரிஞ்சிருக்கும். ஆனா, துறைமுகங்களில் எந்த இடத்தில் ஆழம் அதிகம், எங்கே தண்ணீர் குறைவு, அந்தந்தத் துறைமுகத்தின் வானிலை எப்படியிருக்கும் என்ற தகவல்கள் தெரியாது. அதை அவங்களுக்குச் சொல்லி, கப்பலை வழிநடத்துறவங்க பைலட். அதை யெல்லாம் நாங்க அனுபவத்தில்தான் கத்துப்போம். அது தவிர, எங்களுக்குத் தேவை யான தகவல்களை, துறைமுகம் அப்பப்போ அப்டேட் பண்ணும். வானிலை மாற்றங்களைக் கணிக்கிறதையும் காலப்போக்கில் அனுபவத்திலேயே கத்துக்கிட்டேன்’’ என்று விவரங்கள் சொல்கிறவரின் பணியிடச் சூழல் அசாதாரணமானது.

‘`இந்தியாவில் நான் மட்டும்தான் ஒரே லேடி ரிவர் பைலட். தைரியம், தன்னம்பிக்கையைத் தாண்டி, குடும்பத்தாரின் ஆதரவும் இருந்தால்தான் இந்த வேலையில் தொடர முடியும். இதுதான் வேலை நேரம்னு குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. அலைகளின் வேகத்தைப் பொறுத்துதான் நாங்க வேலை செய்வோம். அது எப்போ, எப்படியிருக்கும்னு கணிக்க முடியாது. சில நேரம் நடுராத்திரியில அழைப்பு வரும். சில நேரம் அதிகாலையில அழைப்பு வரும். எந்த நேரத்திலும் வேலைபார்க்கத் தயாராக இருக்கணும். அதனால தான் இந்தத் துறையில பெண்களின் பங்களிப்பு குறைவு. மாமனாரும் கணவரும் கப்பல்துறை சார்ந்த வேலைகளில் இருக்கிறதால என் வேலையைப் புரிஞ்சுக்கிறாங்க’’ என்பவர், இந்த வேலை தன்னை மனதளவில் மட்டுமன்றி, உடலளவிலும் பலசாலியாக மாற்றியிருப்பதாகச் சொல்கிறார்.
“கயிற்றேணி மூலமாகத்தான் கப்பலில் ஏறணும். அதுக்குப் பயிற்சிகள் எதுவும் கிடையாது. அதுவும் அனுபவத்தில் கத்துக்கிறதுதான். `கரணம் தப்பினால் மரணம்’ கதைதான். உயரத்தி லிருந்து விழுந்தா முதுகெலும்பு நொறுங்கலாம். தலையில் அடிபடலாம். தண்ணீருக்குள் நின்னுட்டிருக்கிற கப்பல் ஆடிக்கிட்டே இருக்கும். அலை மேலே எழும்பி வர்றதுக்குள்ளே கப்பலில் ஏறலைன்னா, கால்கள் மாட்டி நசுங்கிடும். ஆனா, இதுக்கெல்லாம் நான் ஒருநாளும் பயந்ததில்லை.’’ - அசத்தலாகச் சொல்கிற அலைகளின் காதலிக்கு அத்தனையும் வசப்படட்டும்!
-ஆர்.வைதேகி