அரசியல்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

தண்ணீர் இல்லை... தவிக்கும் தமிழகம்!

தண்ணீர் இல்லை... தவிக்கும் தமிழகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
தண்ணீர் இல்லை... தவிக்கும் தமிழகம்!

தண்ணீர் இல்லை... தவிக்கும் தமிழகம்!

தண்ணீர் இல்லை... தவிக்கும் தமிழகம்!

‘‘ஓட்டு போட்டாப் போடுங்க...போடாட்டிப் போங்க!’’

தண்ணீர்ப் பிரச்னைக்குத் தீர்வு கேட்டு, தன்னை வழி மறித்து வாக்குவாதம் செய்த மக்களைப் பார்த்து, இப்படிச் சொன்னவர் வேறு யாருமல்ல; இந்திய மக்களவையின் துணை சபாநாயகர் தம்பிதுரை. ராமநாதபுரத்தில், தண்ணீருக்காகச் சாலைமறியல் செய்த மக்களிடம் சிக்கிக் கொண்டு, கடும் வசைமாரியில் தவித்தார் தமிழக அமைச்சர் மணிகண்டன். கரூர், ராமநாதபுரம் மட்டுமல்ல; தமிழகமே வறட்சியில் கருகிக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் 18 அன்று தமிழக மக்கள் அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு வாக்குச்சாவடிக்குச் செல்வார்களா, காலிக்குடங்களைத் தூக்கிக்கொண்டு, வீதி வீதியாகத் தண்ணீருக்கு அலைவார்களா என்று தெரியவில்லை.

தண்ணீர் இல்லை... தவிக்கும் தமிழகம்!

தமிழகத்திற்கு இயற்கை அளித்த அத்தனை பொக்கிஷங்களையும் அழித்துவிட்டு, ஆண்டுதோறும் மழைக்காக மன்றாடுவது வாடிக்கையான வேடிக்கையாகிவிட்டது. ‘காஞ்சு கெடுக்குது, இல்லேன்னா பேஞ்சு கெடுக்குது’ என்று கிராமத்து மக்கள் சொல்வதைப்போல, சமீபத்திய ஆண்டுகளில் தமிழகத்தில் பெருமழை கொட்டித்தீர்க்கிறது அல்லது கிட்ட வராமலே எட்டிப் போய்விடுகிறது.

தமிழகத்திற்கு ஆண்டுதோறும் கிடைக்கும் சராசரி மழையளவான 920 மில்லி மீட்டரில், தென்மேற்குப் பருவமழைக்காலத்தில் 30-35 சதவிகிதமும், வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் 45-50 சதவிகிதமும் மழைப்பொழிவு இருக்கும். கோடைமழையும், காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களால் வரும் மழையும் சமன் செய்யும். ஆனால், கடந்த ஆண்டில் 14 சதவிகிதம் மழை குறைந்து, 789 மில்லிமீட்டர் மட்டுமே மழை பெய்தது.

பருவமழை குறைந்ததால், தமிழகத்திலுள்ள அணைகள், ஏரிகள், குளங்கள் வறண்டுவிட்டன. நீர்நிலைகள் வற்றியதால், நிலத்தடி நீரும் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது.

தண்ணீர் இல்லை... தவிக்கும் தமிழகம்!

வாய் திறக்காத அரசு!

தேர்தல் நேரத்தில் வலுத்துவரும் போராட் டங்களைச் சமாளிக்க வேண்டுமென்பதற்காக, தமிழகத்தின் 24 மாவட்டங்களை நீரியல் வறட்சி மாவட்டங்கள் என்று வருவாய்த்துறைச் செயலாளரை அறிவிக்கச் சொல்லிவிட்டு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என எல்லோரும் தேர்தல் பிரசாரத்துக்குக் கிளம்பிவிட்டார்கள்.

“தர்மபுரி, கிருஷ்ணகிரி, சிவகங்கை, ராம நாதபுரம் உட்பட 14 மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டுமென்று கடந்த ஜனவரியிலிருந்து தமிழக அரசை வலியுறுத்திவருகிறோம். ஆர்ப்பாட்டங்கள் நடத்தினோம். அப்போது அதைக் கண்டு கொள்ளாத தமிழக அரசு, இப்போது ‘நீரியல் வறட்சி மாவட்டங்கள்’ என்று அறிவித்துள்ளது. ‘வறட்சி மாவட்டங்கள்’ என்று அறிவிக்கவில்லை. இந்த அறிவிப்பில் பல குளறுபடிகளும் சந்தேகங்களும் உள்ளன” என்கிறார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம்.

தண்ணீர் இல்லை... தவிக்கும் தமிழகம்!

வழக்கமாக வறட்சி பாதித்துள்ள மாவட்டங்கள் என்றுதான் அரசு அறிவிப்பு வெளியிடும். நீரியல் வறட்சி என்பது, மக்களுக்கு மட்டுமன்றி, அரசு அதிகாரிகளுக்குமே புதிதாக இருக்கிறது. அதென்ன நீரியல் வறட்சி?

‘‘ஒட்டுமொத்த வறட்சி என்று அறிவித்துவிட்டால் பயிர் பாதிப்பு, ஆடு மாடுகள் பாதிப்பு என்று பல பாதிப்புகளைக் கணக்கிலெடுத்து, நிவாரணம் வழங்க வேண்டும். ‘நீரியல் வறட்சி’ என்று சொல்லி, இதை வெறும் தண்ணீர்ப்பிரச்னையாக மட்டுமே ‘டீல்’ செய்துவிடலாம் என்று அரசு நினைக்கிறது. இது தவறான முன்னுதாரண மாகிவிடும்.  பல மாவட்டங்களில் 50 சதவிகிதத்துக்கும் குறைவாகவே மழை பெய்துள்ளது. தர்மபுரியில் 38 சதவிகித மழைதான் பெய்துள்ளது. 50 சதவிகிதத்துக்குக் குறைவான மழைப்பொழிவு இருந்தாலே, அதை வறட்சி மாவட்டம் என அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு இழப்பீடு, வறட்சி நிவாரணப் பணிகள், குடிநீருக்கான ஏற்பாடுகள், திட்டங்கள் அறிவித்தல் என்று பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வெறும் ‘நீரியல் வறட்சி’ என்று அறிவித்திருப்பதால், இதில் இழப்பீடுகள் மாதிரியான எதுவும் இருக்காது” என்று கவலையை வெளிப்படுத்துகிறார் சண்முகம்.

தண்ணீர் இல்லை... தவிக்கும் தமிழகம்!

கண்டுகொள்ளப்படாத ஜெ. திட்டம்!

வறட்சி என்பது தமிழகத்துக்குப் புதிதல்ல. 2013-ம் ஆண்டிலும் 2017-ம் ஆண்டிலும் வறட்சி அறிவிப்பு வெளியிடப் பட்டது. “தமிழகத்தில் 140 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது” என்று 2017-ம் ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியே அறிவித்தார். அடிக்கடி வறட்சியில் மாநிலம் பாதிக்கிறது என்று தெரிந்தும், நிரந்தரத்தீர்வுக்கான எந்த முயற்சியையும் தமிழக அரசு எடுக்கவே இல்லை. 2001 முதல் 2006 வரையிலான ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில், ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேகரிப்பு மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. அதைச் சிறப்பாகச் செயல்படுத்தியிருந்தாலே நிலத்தடி நீர் மட்டத்தைச் சமநிலையில் வைத்திருக்க முடியும். கடந்த இரு ஆண்டுகளாக, தமிழகம் முழுவதும் நீர்நிலைகளைத் தூர் வாருவதற்கு அனுமதி தரப்படுகிறது. ஆனால், தூர்வாரும் பணியைவிட, மண்ணைக் கடத்தி விற்கும் வேலையே கனஜோராக நடந்தது.

தண்ணீர் இல்லை... தவிக்கும் தமிழகம்!

பாக்கெட் நிரம்பியது... பணி நடக்கவில்லை!

நீர்மேலாண்மை வல்லுநரும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான வீ.சுரேஷ், “அ.தி.மு.க., தி.மு.க ஆகிய இரண்டு ஆட்சிகளிலும் நீர் நிலைகளைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. தி.மு.க. ஆட்சியில் ‘அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்’ கொண்டுவரப்பட்டது. அ.தி.மு.க ஆட்சியிலும் இதேபோல ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டது. இவற்றுக்காக, ஒவ்வோர் ஆண்டும் பல நூறு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டும் உரிய பலன் கிடைக்கவில்லை. நீர்நிலைகளைப் பாதுகாக்க, பராமரிக்க என்கிற பெயர்களில் பல்லாயிரம் கோடி ரூபாயை உலக வங்கியிடம் கடனாக வாங்குகிறார்கள். இதனால்  கான்ட்ராக்டர்கள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் ஆகியோரின் பாக்கெட்டுகள் நிரம்புகிறதே தவிர, பணி எதுவும் உருப்படியாக நடக்கவில்லை. இந்தத் திட்டங்களில் பொதுமக்களை ஈடுபடுத்தாமல், கான்ட்ராக்டர்களை மட்டுமே வைத்துச் செய்ததுதான் முக்கியக் காரணம்” என்று குற்றம்சாட்டுகிறார்.

கேரளா செய்தது... தமிழகம் செய்யவில்லை!

வறட்சிக்காலத்தில் அரசு செய்ய வேண்டிய பணிகள் குறித்து நம்மிடம் பேசிய சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமன், “மண்ணுக்குள் மழைநீர் புகவேண்டும். ஆனால், எங்கெங்கு காணினும் கான்கிரீட் தளங்களை அமைத்து பூமியை மூடிவிடுகிறோம். அதேபோல, தாவரங்களையும், மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பையும் மறந்துவிட்டோம். இந்த மூன்றையும் செய்தாலே தண்ணீர்ப் பிரச்னையே வராது. ஆனால், ‘வளர்ச்சி’ என்ற பெயரில் இந்த மூன்றையும் பலி கொடுத்துவருகிறோம். வறட்சி என்று அறிவித்துவிட்டால் முதற்கட்டமாக, மக்களுக்குக் குடிநீர் சிரமமில்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்; வணிகத்துக்குத் தண்ணீர் எடுப்பதை உடனே நிறுத்தவேண்டும்; ஆழ்துளைகளில் இருந்து அரசு மட்டுமே தண்ணீர் எடுக்க வேண்டும். மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் போன்ற இடங்களுக்கு முன்னுரிமை அளித்து, அங்கு தடையின்றித் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்; இதுபோக மீதி இருக்கும் தண்ணீரைத் தொழிற்சாலை போன்ற வணிக நோக்கங்களுக்கு ரேஷன் அடிப்படையில் வழங்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் வறட்சி அறிவிக்கப்பட்டபோது, அந்த மாநில அரசு இவற்றைத்தான் செய்தது. கேரளா செய்ததைத் தமிழக அரசால் செய்ய முடியாதா?” என்றார் ஆதங்கத்துடன்.

தண்ணீர் இல்லை... தவிக்கும் தமிழகம்!

வறட்சியைச் சமாளிக்க என்ன மாதிரியான நடவடிக்கைகளை அரசு எடுக்கப்போகிறது என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை உயரதிகாரிகளிடம் நாம் கேட்டபோது, “தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், இது குறித்துப் பேச முடியாது” என்று சொல்லி, பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

இப்போதே இந்த நிலை என்றால், தேர்தலுக்குப் பின் நிலைமை இன்னும் மோசமாகும் என்றுதான் தெரிகிறது.

எடப்பாடிக்கும், ஸ்டாலினுக்கும் இப்போதைய கவலை, 18 சட்டமன்றத் தொகுதிகளில் ஜெயிப்பதுதான். அதிகாரத்தை வைத்துக்கொண்டிருக்கும் அவரும் எதுவும் செய்யப்போவதில்லை; தேர்தல் வரையிலும் இவரும் இதைப்பற்றிப் பேசப்போவதில்லை. இப்போதைக்கு ஆள்பவரை வேண்டுவதைவிட, ‘மழையைக் கொடு’ என்று ஆண்டவனை வேண்டுவதைத் தவிர, தமிழக மக்களுக்கு வேறு கதியில்லை.

ஆ.பழனியப்பன்

ஓவியம்: ஹாசிப்கான்

படங்கள்: ப.சரவணகுமார், தே.அசோக்குமார்

கைகொடுக்கும் கல்குவாரி!

சென்னையை அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் தேங்கியுள்ள தண்ணீர், சென்னை மக்களின் குடிநீருக்காக எடுக்கப்படுகிறது. மேலும், மீஞ்சூர் மற்றும் நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டமும் சென்னையின் தாகத்தைத் தீர்ப்பதற்குச் சிறிய அளவில் கைகொடுக்கிறது. சென்னை மக்களின் தாகத்தைத் தீர்ப்பதற்காகத் திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் கண்டிகையில் 5-வது நீர்த்தேக்கம் அமைக்கப்படுகிறது. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் 2013-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இத்திட்டம், இப்போது ரூ.380 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுவருகிறது. 1,000 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கம், வரும் அக்டோபரில் செயல்பாட்டுக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.

கேட்டதும் கிடைத்ததும்!

2015-16 மற்றும் 2017-18 ஆண்டு நிவாரண நிதியாக, தேசிய இயற்கைப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.39,565 கோடி வழங்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியது. மத்திய அரசு வழங்கியதோ, வெறும் ரூ.1,748.28 கோடி (வெறும் 4%). தேசிய இயற்கைப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 21,648 கோடி நிதியைக் கோரிய ராஜஸ்தானுக்கு ரூ.2,387 கோடி (11%) வழங்கப்பட்டுள்ளது. உத்தர்காண்ட் மாநிலத்துக்கு 76 சதவிகித நிதி கிடைத்துள்ளது. உத்தரப்பிரதேசத்துக்கு 45 சதவிகிதமும், மகாராஷ்டிராவுக்கு 38 சதவிகிதமும் நிதி வழங்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைநகரின் தாகம்!

2015 பெருவெள்ளத்தில் மூழ்கிய சென்னையில், இப்போது கடுமையான வறட்சி. கடந்த மூன்று ஆண்டுகளாகப் போதிய மழை இல்லை என்பதால், பெரும்பாலான வீடுகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்டன. சில இடங்களில் மூன்று மணி நேரம் மோட்டார் ஓடினாலும் நான்கைந்து பக்கெட்டுகள் தண்ணீரே கிடைக்கிறது. வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு மட்டுமே மாநகராட்சிக் குடிநீர் வருகிறது. மழைநீர்ச் சேகரிப்பு மையங்கள் குறித்த விழிப்புணர்வு குறைந்துவிட்டது. வீடுகளுக்கு வெளியே வீதிகளில் போர்வெல் போடுவது சர்வசாதாரணமாக நடக்கிறது. சென்னையின் குடிநீர் ஆதாரங்களான புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் ஆகிய நான்கு ஏரிகளும் வற்றிவிட்டன. அங்கு சொற்ப அளவிலான தண்ணீரே இப்போது உள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் விளைநிலங்களிலிருந்து நிலத்தடி நீரை உறிஞ்சி, டேங்கர்களில் எடுத்துவந்து சென்னையில் விநியோகிக்கும் வணிகம் அதிகரித்துள்ளது.