
ஆதிச்சநல்லூர்: தமிழரின் ஆதிவரலாற்றுத் தடம்!
தமிழ்த்தாய் வாழ்த்து எழுதிய மனோன்மணீயம் சுந்தரனார், Tamilian Antiquary இதழில் ஒரு கட்டுரை எழுதினார். ‘அறிவியல்பூர்வமாக ஆராய்ச்சி செய்யும் வரலாற்று ஆராய்ச்சியா ளர்கள் கங்கை நதிக்கரைகளி லிருந்தே தொடங்குகிறார்கள். உண்மையில் இந்திய வரலாறு என்பது கிருஷ்ணா, காவேரி, வைகை நதிக்கரைகளிலிருந்தே தொடங்கப்பட வேண்டும்’ என்று அந்தக் கட்டுரை நீளும். சரியாக 111 ஆண்டுகள் கழித்து சுந்தரனார் எழுதியது நிஜமாகியிருக்கிறது.
வழக்கமாக, தென்னிந்தியாவின் வரலாற்றுத் தொன்மையை வடஇந்திய ஆராய்ச்சியாளர்கள் கருத்தில் கொள்வதில்லை. கீழடி ஆராய்ச்சியில் அழகியல் நிரம்பிய தமிழகத் தொன்மை நகரமொன்று கண்டறியப்பட்ட பிறகு, வேகவேகமாக அந்த அகழ்வுக்குழியை மூடுவதில் கவனம் செலுத்தியது மத்திய அரசு. அந்த அகழ்வை நடத்திய தொல்லியல் அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணாவை, தொலைதூரத்தி லிருக்கும் அசாமுக்குப் பணியிடமாற்றம் செய்தது. அமர்நாத்தை மீண்டும் கீழடிக்குக் கொண்டு வரவும், அகழ்வுப்பணியை விரைவுபடுத்தவும் பெரும் சட்டப்போராட்டம் நடத்த வேண்டிய நிலை.ஆதிச்சநல்லூருக்கும் அதே நிலைதான்.
1876-ல் ஜாகோடர் என்ற பெர்லின் தொல்லியல் அறிஞர் ஆதிச்சநல்லூரில் முதல் அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டு, அங்கு கிடைத்த எலும்புகள் மற்றும் மண்டை ஓடுகளை எடுத்துச் சென்றிருக்கிறார். அதையடுத்து 1902-ல் பிரிட்டன் அறிஞர் அலெக்சாண்டர் ரீ ஆதிச்சநல்லூரில் பெரிய அளவில் ஆராய்ச்சி நடத்தி, ‘தென்னிந்தியாவில் கண்டுபிடிக்கப் பட்டவற்றுள் மிகவும் பரந்த தொல்லியல் களம் ஆதிச்சநல்லூர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில்வே பாதை அமைக்கும்போது, பல மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து அந்தப் பகுதியில் சுமார் 114 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி, சில ஆய்வுகளை மேற்கொண்டது இந்தியத் தொல்பொருள் துறை. இதே நேரத்தில், ஹரப்பாவில் அகழ்வாராய்ச்சிப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பானர்ஜி, தன்னுடைய குறிப்பில், ‘சிந்து சமவெளி நாகரிகத்தைவிடத் திராவிட நாகரிகம் முற்பட்டது’ என்கிறார். ‘சங்கிலித் தொடர்போல், ஆதிச்சநல்லூரைத் தலைமையிடமாகக் கொண்டு மெசபடோமியா, பாலஸ்தீன நாடுகளுக்குக் கடல் வழியாக மக்கள் சென்றிருக்கிறார்கள். அங்கிருந்து சிந்து சமவெளி இடத்திற்கும் வந்து சேர்ந்திருக்கிறார்கள்’ என்கிறார் பானர்ஜி. இது, உலக நாகரிகத்தின் தொட்டில் என்று ஆதிச்சநல்லூர் சொல்லப் படுவதற்கு மேலும் ஒரு சாட்சியமாகக் கருதப்பட்டது. இத்தனை அறிஞர்களால் குறிப்பிடப்பட்ட ஓர் இனத்தின் தொன்மையை இந்திய அரசு மீண்டும் ஆராய்ச்சி செய்தது 2004-ல்தான். இந்தியத் தொல்பொருள் துறையின் ஆய்வாளர் தியாக.சத்தியமூர்த்தி தலைமையில், ஓராண்டுக்கு ஆராய்ச்சி நடைபெற்றது. 163 பெரிய பானைகளும், சின்னச் சின்னப் பொருள்களும் அதிகளவில் கிடைத்திருக்கின்றன. அதோடு, பல பானைகளில் உமி போன்ற பொருள்களும் கண்டெடுக்கப்பட்டன.
ஆய்வறிக்கையை சமர்ப்பிக்காமலேயே சத்தியமூர்த்தி ஓய்வுபெற, அவருடைய இடத்துக்கு டெல்லியிலிருந்து சத்யபாமா கொண்டு வரப்படுகிறார். ஆனால் ஆய்வறிக்கை தயாரிக்க அவருக்கு உரிய வசதிகள் எதையும் இந்தியத் தொல்பொருள் துறை செய்து கொடுக்கவில்லை என்பது வேதனையான ஒன்று. இந்த ஆய்வறிக்கை வெளிவருவதை மத்தியில் இருப்பவர்கள் விரும்பவில்லை என்று இதிலிருந்தே தெரிகிறது.
இந்நிலையில்தான், ‘‘ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும், ஆராய்ச்சியின் போது எடுக்கப்பட்ட பொருள்களை இங்கேயே வைக்க ஏற்பாடு செய்யவும், 2004-ல் நடந்த ஆராய்ச்சியின் முடிவுகளை வெளியிட வேண்டும்’’ என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்பேரில், ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் கார்பன் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டன.
‘கி.மு 905 மற்றும் கி.மு 971’ என்று ஆதிச்சநல்லூர்ப் பொருள்களின் காலத்தை வெளிக்கொண்டுவந்தது பரிசோதனை முடிவு. இந்த ஆய்வு முடிவுகளை மட்டும் எடுத்துக்கொண்டு, நீதிமன்றத்துக்குச் சென்றது மத்திய தொல்பொருள் துறை. ‘ஆய்வு முடிவின் அடிப்படையில் ஆதிச்சநல்லூரில் யார் அகழாய்வு செய்ய வேண்டும்’ என்று கேள்வியை எழுப்பியுள்ளது நீதிமன்றம். ‘‘மத்திய தொல்பொருள்துறை, ஆதிச்சநல்லூர் ஆராய்ச்சி அறிக்கையின் முன்மாதிரியைத் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளனர். இதனடிப்படையில், நீதிமன்றத்தில் தங்களுடைய வாதத்தை எடுத்துரைக்கவுள்ளது தமிழகத் தொல்லியல் துறை’’ என விவரித்தார் தமிழகத் தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன்.

“தமிழகத்தின் தொல்பொருளாராய்ச்சியின் புதிய மைல்கல் இது. தமிழ்நாட்டின் நதிக்கரை நாகரிகம் பற்றிய ஆய்வை வலுப்படுத்தவேண்டிய தேவையை இது உணர்த்துகிறது. சங்க இலக்கியம் வெறும் கட்டுக்கதை அல்ல; அதிலுள்ள வரலாற்று உண்மைகளை நாம் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்பதை இது தெளிவாக்குகிறது” என்கிறார் ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன்.
தற்போது ப்ளோரிடாவுக்குப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட மாதிரிகள் பதினேழு வருடங்களுக்கு முன்பு எடுத்தது. அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருந்தார்களா என்ற சந்தேகத்தை எழுப்புகிறார்கள் தொல்லியல் ஆர்வலர்கள்.
ஏற்கெனவே, ஆதிச்சநல்லூர் செம்புக் கலவையிலுள்ள ஆர்சனிக் என்ற வேதிப் பொருளின் விகிதாச்சாரம், ஹரப்பா போன்ற இடங்களில் கிடைத்த செம்புக் கலன்களிலுள்ள ஆர்சனிக் விகிதாச்சாரத்தோடு பொருந்திப் போவது சசிசேகரன் மற்றும் அவரது குழுவினரின் ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.
ஆதிச்சநல்லூர் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ளது. சங்க இலக்கியம் குறிப்பிடும் பொருநை நதிதான் தாமிரபரணி என்று கருதப்படுகிறது. தாமிரபரணி என்பது வடமொழிப் பெயர். `தாமிர’ என்றால் ‘செம்பு’ என்பது பொருள். செம்பு என்ற தமிழ்ச் சொல், செம்பு என்ற உலோகத்தையும், சிவப்பு என்ற வண்ணத்தையும் குறிக்கும். தமிழ் மொழியில் செப்புத்துறை என்றால் இடுகாடு. ஆதிச்சநல்லூர் பகுதியில் செம்புத் தாது கிடைத்ததாகவும் கருதப்படுகிறது. எனவே, இடுகாட்டுக்குச் செப்புத்துறை என்று பெயர் வந்ததன் காரணமே சிந்தனையைத் தூண்டுகிறது.
தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை மறைக்க எத்தனை சதிகள் நடந்தாலும் அவற்றையெல்லாம் மீறி, தமிழரின் தொன்மை மீண்டெழும். உலகளவில் தொன்மையான மொழிகள் பல அழிந்துவிட்டன. இத்தனை ஆண்டுகளைத் தாண்டித் தமிழ்மொழி உயிர்ப்புடன் இருக்கும்போது, தமிழர்களின் வரலாற்றை மட்டும் அழித்துவிட முடியுமா என்ன?!
- வெ.நீலகண்டன், இ.லோகேஷ்வரி