அரசியல்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஒலிப்பதை நிறுத்திய சிலம்பு!

ஒலிப்பதை நிறுத்திய சிலம்பு!
பிரீமியம் ஸ்டோரி
News
ஒலிப்பதை நிறுத்திய சிலம்பு!

ஒலிப்பதை நிறுத்திய சிலம்பு!

சிலப்பதிகாரத்தைப் பரப்புவதற்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த சிலம்பொலி செல்லப்பனின் வாழ்வு நிறைவுற்றது.

நாமக்கல் மாவட்டம், சிவியாம்பாளையத்தைச் சேர்ந்த செல்லப்பன், முதலில் கணித ஆசிரியர் என்றால், பலரும் வியக்கத்தான் செய்வார்கள். கணிதத்தில் பட்டம்பெற்றவர், ஆசிரியராகவும் கல்வி அதிகாரி யாகவும் பணியாற்றினார். அவரின் தமிழ்ப்பற்று, தமிழ் வளர்ச்சித் துறையில் அவரைக் கொண்டு போய்ச் சேர்த்தது. அந்தத் துறையின் இயக்குநராகவும் தலைமையேற்றார்.

ஒலிப்பதை நிறுத்திய சிலம்பு!

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வெளியீட்டுப் பிரிவில் இயக்குநராகவும் அங்கேயே பதிவாளராகவும் இருந்தார். 1989-91 காலகட்டத்தில், சென்னை, தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார். எந்த அரசுப் பதவியில் இருந்தாலும், தமிழ் வளர்ச்சிக்காகச் சிறு துரும்பையேனும் அசைக்கவேண்டும் என்ற உள்ளுணர்வோடு செயல்பட்டவர், செல்லப்பன்.

அறிஞர்கள், பேராசிரியர்கள், புலவர்கள் மட்டுமே பருகியிருந்த சிலம்பின் சுவையை, இலக்கியம் புழங்காத எளிய மக்களுக்கும் கொண்டுபோய்ச் சேர்த்தார்.

``வழக்கமான இலக்கிய மேடையில் பேசுவதைப் போன்றது அல்ல, தொடர் சொற்பொழிவு. பேசப்போகும் இலக்கியத்தை முழுமையாகப் படித்து, உணர்ந்திருந்தால் மட்டுமே இலக்கியத் தொடர் சொற்பொழிவை நிகழ்த்தமுடியும். சிலப்பதிகாரத்தைப் பற்றி மட்டுமல்ல, மணிமேகலை, சீவகசிந்தாமணி, சங்க இலக்கியம், பிரபந்த இலக்கியங்கள், சீறாப்புராணம், இராவணகாவியம்,  பாரதிதாசன் படைப்புகள் என அதிகமான சொற்பொழிவுகளை நிகழ்த்தியவர் செல்லப்பனார்” எனப் புகழ்கிறார், ஆட்சித் தமிழறிஞர் திருவள்ளுவன் இலக்குவனார்.

தமிழ்ப்புலமையாளர்களின் நூல்களை முழுமையாகப் படித்து, அணிந்துரை எழுதித் தருவதை வாழ்நாள் முழுவதும் செய்துவந்தார், செல்லப்பன். அவர் எழுதித்தந்த அணிந்துரைகள் மட்டும் ஆயிரத்தைத் தாண்டும். ஒன்றல்ல இரண்டல்ல ஆறு தொகுதிகளாக அவை அனைத்தும் தொகுக்கப்பட்டு, தமிழக அரசின்  விருதையும் அண்மையில் பெற்றது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் சிலப்பதிகாரத்தைப் பரப்புவதற்காகவே, சிலப்பதிகார அறக்கட்டளையைத் தொடங்கி, ஆண்டுதோறும் மாநாடு, கருத்தரங்கு, சிலப்பதிகாரப் பணியில் ஈடுபடுபவருக்கு இளங்கோ விருது வழங்கல் என, கடைசிவரை இயங்கிக்கொண்டே இருந்தார்.

சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை 1954-ல் அளித்த ‘சிலம்பொலி’ பட்டமே, செல்லப்பனின் அடையாளமாக நிலைத்துவிட்டது, எவ்வளவு பொருத்தம்!

- இரா.தமிழ்க்கனல்