மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சட்டம் பெண் கையில்! - கருக்கலைப்பும் சட்ட நடைமுறைகளும்! - 19

சட்டம் பெண் கையில்
பிரீமியம் ஸ்டோரி
News
சட்டம் பெண் கையில் ( யாழ் ஶ்ரீதேவி )

வழக்கறிஞர் வைதேகி பாலாஜி

ருத்துவக் கருக்கலைப்புச் சட்டம் (Medical Termination of Pregnancy Act 1971) பற்றி விரிவாக விளக்குகிறார் வழக்கறிஞர் வைதேகி பாலாஜி.

பெண் தாயாக விரும்புவது அவள் உரிமை. ஆனால், அந்தக் கருவில் வளரும் உயிரைக் கொல்வதற்கான உரிமை அந்தப் பெண்ணுக் குக் கிடையாது. கருவைக் கலைக்க வேண்டும் என்றால், மருத்துவக் கருக்கலைப்புச் சட்டம் 1971 விவரிக்கும் சூழல்களில் மட்டுமே அதற்கு அனுமதி கிடைக்கும். கருவைக் காக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் மட்டுமே இந்தச் சட்டம் இயற்றப்படவில்லை. கருவைச் சுமக்கும் பெண்ணின் உயிருக்குக் கருக்கலைப்பினால் ஆபத்து எதுவும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதும் இந்தச் சட்டத்தின் அக்கறை.

சட்டம் பெண் கையில்! - கருக்கலைப்பும் சட்ட நடைமுறைகளும்! - 19

பாதுகாப்பு இல்லாத கருக்கலைப்பு தாய், சேய் என இரண்டு உயிர்களுக்கும் பாதிப்பை உண்டாக்கிவிடும் என்பதால், அதை நெறிப்படுத்த வடிவமைக்கப்பட்ட இந்தச் சட்டத்தின் வரையறைகளைப் பார்ப்போம்.

* ஆரோக்கியமான பிரசவம், பாதுகாப்பான கருக்கலைப்பு ஆகிய இரண்டையும் உறுதிப்படுத்துவதே இச்சட்டத்தின் நோக்கம்.

* கரு உருவான 20 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்துகொள்ளலாம்.

* கர்ப்பத்தைக் கலைக்காவிட்டால் அதைச் சுமக்கும் பெண்ணின் உடல்நிலை அல்லது மனநிலையை அது பாதிக்கும் என்றால், கருவானது  வளர்ச்சியடையாமல் இருந்தால், ஒரு பெண் தன் விருப்பத்துக்கு மாறாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு அதனால் கர்ப்பமாகியிருந்தால்... என இந்தச் சூழல்களில், 20 வாரங்களுக்குள் அந்தக் கருவைக் கலைத்துக்கொள்ளச் சட்டம் அனுமதிக்கிறது. 

* 18 வயதுக்கு மேலான பெண்ணுக்கு அவர் சம்மதமும், மைனர் பெண் அல்லது மனவளர்ச்சி குன்றிய பெண் எனில் அவரின் பாதுகாவலரின் சம்மதமும் கருக்கலைப்புக்கு அவசியம். 

* கருக்கலைப்பு செய்ய, கர்ப்பமானது 12 வாரங்களுக்குட்பட்டது எனில் ஒரு மருத்துவரின் ஆலோசனையும், 12 - 20 வாரங்கள் கர்ப்பம் எனில் இரண்டு மருத்துவர்களின் ஆலோசனையும் அவசியம். 

* கருக்கலைப்பு, பதிவு செய்யப்பட்ட மருத்துவரால்தான் செய்யப்பட வேண்டும். 

* சட்டத்துக்குப் புறம்பாகக் கருக்கலைப்பு செய்ய முயன்று சம்பந்தப்பட்ட கர்ப்பிணி மருத்துவரால் பாதிப்புக்குள்ளானால், அந்த மருத்துவருக்கு (அல்லது அத்தகைய செயலில் ஈடுபட்ட நபருக்கு) இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 316-ன் கீழ் அதிகபட்சமாக 10 வருட சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

சட்டம் பெண் கையில்! - கருக்கலைப்பும் சட்ட நடைமுறைகளும்! - 19

சட்ட வரையறைகள் ஒருபுறம் இருக்க, நடை முறையில் ‘20 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்ய வேண்டும்... அதற்கு மேலானால் அனுமதிக்க முடியாது’ என்ற நிலைப்பாட்டில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. ஒரு கருவின் குறைபாடுகள், 20 வார காலத்துக்குப் பிறகு தெரியவரும்போது, அதைக் கலைக்கவேண்டிய அவசியமும் நிர்பந்தமும் கர்ப்பிணிக்கு நேரலாம். ஆனால், 20 வார காலத்துக்கு மேல் கருவில் வளர்ந்த சிசுவைக் கருக்கலைப்பு செய்யும் மருத்துவர்கள் தண்டனைக்குள்ளாவார்கள் என்பதால், மருத்துவர்களால் கருக்கலைப்பு மறுக்கப்படும் நிலையில் கர்ப்பிணி நீதி மன்றத்திடம் அனுமதி பெற வேண்டும். இப்படியான சூழலில், 20 வார கர்ப்ப காலத் துக்குப் பிறகு தங்கள் கருவைக் கலைக்க அனுமதிக்க வேண்டி நீதி மன்றங்களை நாடும் கர்ப்பிணிகள் பலர்.

‘கருக்கலைப்பு செய்ய இப்போது இருக்கும் சட்டப்படியான 20 வார கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்’ என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இப்படிப் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையின் விளைவாக, மருத்துவக் கருக்கலைப்புச் சட்டத் தில் திருத்தங்கள் கொண்டுவர வேண்டி சட்ட வரைவு வடிவமைக் கப்பட்டுள்ளது.

அந்தத் திருத்த சட்ட வரைவின் படி, கருக்கலைப்புக்கான சட்ட அனுமதி 20 வார கால அவகாசத்திலிருந்து 24 வார கால அவகாசமாக நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. 

ஒரு வழக்கு...

‘என் கர்ப்பத்தில் வளரும் சிசுவின் வளர்ச்சி குறை பாட்டுடன் உள்ளது. குழந்தை பிறந்தபிறகு பிழைக்கவைப்பது கடினம். பல அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருக்கும். எனவே, எனக்குக் கருக்கலைப்புக்கு அனுமதி வேண்டும்’ என்று கேட்டு, கொல்கத்தாவைச் சேர்ந்த மேஜர் பெண் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அப்போது அவர் 26 வார கால கர்ப்பிணியாக இருந்தார். அரசுத்தரப்பு மருத்துவப் பரிசோதனை செய்து தந்த  மருத்துவ அறிக்கையின் பரிந்துரைப்படி, உச்ச நீதிமன்றம் கருக்கலைப்புக்கு அனுமதியளித்தது.

இப்படி, சூழலின் அடிப்படையில் சில தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. என்றாலும், சில கர்ப்பிணிகள் இதுபோன்ற சூழல்களில் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து, அங்கு நல்ல முடிவு கிடைக்காதபட்சத்தில் உச்ச நீதிமன்றம்வரை சென்று தீர்ப்பு வருவதற்குள், பிரசவ காலமே வந்துவிடுகிறது.

கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியக் குறைபாட்டை முன்னிறுத்திக் கருக்கலைப்பு செய்ய அனுமதி வேண்டும் என மனு அளிக்கும்  திருமணமான பெண்கள் ஒருபக்கம் இருக்க, பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமாக்கப்படும் குழந்தைகளின் சார்பாகக் கருக்கலைப்பு அனுமதி வேண்டித் தொடரப்படும் வழக்குகள், துயரமானவை.

அவை பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்