கடலூர் மாவட்டத்தில் மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு, கடற்கரைப் பகுதிகளான கடலூர், கிள்ளை, விருத்தாசலம் மணிமுத்தாறு ஆகிய இடங்களில் தீர்த்தவாரி நடைபெற்றது.
கடலூர் தேவனாம்பட்டினத்தில் நடந்த திருவிழாவில் திருமாணிக்குழி, திருப்பாதிரிபுலியூர், திருவந்திபுரம், வரகால்பட்டு,
வெள்ளப்பாக்கம், காராமணிக்குப்பம், கோண்டூர் உட்பட சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட ஊர்களைச் சேர்ந்த தெய்வங்கள் கொண்டுவரப்பட்டன. தெய்வங்கள் அலங்கரிக்கப்பட்டு மேளதாளம் முழங்கிட தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு எழுந்தருளச் செய்து தீர்த்தவாரி நடைபெற்றது. விழாவின் சிறப்பம்சமாகக் கடந்த ஆறு வருடங்களுக்குப் பிறகு இந்த வைபவத்துக்கு
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் எழுந்தருளியது குறிப்பிடத்தக்கது. திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு
கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். சிதம்பரம் அருகே கிள்ளை முழுக்குத்துறைப் பகுதியில் சிதம்பரம் மற்றும் கிள்ளையைச் சுற்றியுள்ள கோயில்களிலிருந்து 50-க்கும் மேற்பட்ட தெய்வ மூர்த்தங்கள் எழுந்தருள, தீர்த்தவாரி நடைபெற்றது.
முன்னதாக, கிள்ளை தீர்த்தவாரிக்குச் சென்ற ஸ்ரீ முஷ்ணம் பூவராகப் பெருமாளுக்குக் கிள்ளை தர்காவில் முஸ்லிம் அன்பர்கள்
வரவேற்பு அளித்து நைவேத்தியம் செய்தனர். பின்னர் மத நல்லிணக்கத்தைக் காப்பாற்றும் வகையில் தர்காவில் தர்கா நிர்வாகி
சையதுசகாப் மற்றும் முஸ்லிம் அன்பர்களுடன் பட்டாசார்யார்களும் கலந்துகொண்டு பாத்தியா ஓதப்பட்டது. குறிப்பிடத்தக்க சிறப்பம்சம். தொடர்ந்து பூவராகப் பெருமாள் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார்.
இதேபோல் காட்டுமான்னார்கோயில் அருகே ஓமாம்புலியூர், எய்யலூர் ஆகிய ஊர்களில் கொள்ளிடம் ஆற்றிலும், சேத்தியாத்தோப்பு
அருகே உள்ள கூடலையாத்தூரில் வெள்ளாற்றிலும், விருத்தாசலத்தில் மணிமுத்தாற்றிலும் தீர்த்தவாரி நடைபெற்றது. மாசிமகத்
திருவிழாவில் பலர், இறந்த தங்களின் முன்னோர்களுக்குத் திதி கொடுத்தனர்.