மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேம் சேஞ்சர்ஸ் - 34 - LIMEROAD.COM

கேம் சேஞ்சர்ஸ் - 34 - LIMEROAD.COM
பிரீமியம் ஸ்டோரி
News
கேம் சேஞ்சர்ஸ் - 34 - LIMEROAD.COM

கார்க்கிபவா

2017-ம் ஆண்டின் முடிவில் இந்தியாவில் இணையம் மூலம் நடந்த வர்த்தகத்தின் (E-Commerce) மதிப்பு 27,000 கோடி. இதில் கணிசமான அளவு ஃபேஷன் பொருள்களே விற்றிருக்கின்றன. இணையத்தில் உடைகள் மற்றும் பிற ஃபேஷன் பொருள்களை அதிகம் வாங்குபவர்கள் பெண்களே என்கிறது அந்தப் புள்ளிவிவரம். இந்த டேட்டாவைப் பார்த்துக்கொண்டிருந்தபோது திடீரென ஒரு விஷயம் என்னை உறுத்தியது. 33 வாரங்களாக வரும் இந்த கேம்சேஞ்சர்ஸ் தொடரில் இன்னும் ஒரு பெண்ணைப் பற்றிக்கூட நாம் பார்க்கவில்லை. பெண்கள் ஸ்டார்ட் அப் பக்கம் வரவில்லையா அல்லது நான் எழுதவில்லையா?

உலக அளவிலும் இந்திய அளவிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஸ்டார்ட் அப்களின் கதைகள் பெரும்பாலானவற்றில் பெண்களின் பங்கிருக்கிறது. இந்தியாவின் யுனிகார்ன் ஸ்டார்ட் அப்புகளில் ஒன்றான பைஜூவின் நிறுவனர் பைஜூ ரவீந்திரனின் மனைவி திவ்யாதான் முக்கியப் பொறுப்பிலிருக்கிறார். அவரைப் பற்றி பைஜூ அத்தியாயத்தில் பார்த்திருக்கிறோம். நிறைய ஸ்டார்ட் அப்புகள் தொடங்கப் பட்ட பிறகு பெண்கள் இணைந்து அதன் வெற்றிக்கு உதவியிருக்கிறார்கள். ஆனால், தொடங்கியவர் என்று வரும்போது  பெண்கள் பெயர் அதிகம் பார்க்க முடிவதில்லை. முந்தைய கால தொழில் சாம்ராஜ்யங்கள் இயங்கிய முறையை முற்றிலும் மாற்றியமைத்தவை ஸ்டார்ட் அப் எனச் சொல்கிறோம். அப்படியென்றால் இந்தப் பாலின பேதத்தையும் ஒழித்திருக்க வேண்டு மில்லையா? ஆம், ஸ்டார்ட் அப் அதையும் செய்திருக்கிறது. அதற்கு ஒரு நல்ல மற்றும் முக்கியமான உதாரணம் எனச் சுச்சி முகர்ஜியைச் சொல்லலாம்.

சுச்சி ஹரியானாவில் பிறந்தவர்; டெல்லியி லிருக்கும் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பொருளாதாரம் பயின்றவர். பின், லண்டனில் முதுகலைப் பட்டம் பெற்றார். 16 வருடங்களுக்கும் மேலாக Skype, Gumtree, eBay போன்ற புகழ்பெற்ற இ-காமர்ஸ் நிறுவனங்களில் முக்கியப் பொறுப்பிலிருந்தார். நல்ல சம்பளம், அழகான குடும்பம். அதோடு சுச்சியும் நின்றிருக்கலாம்தான். ஆனால், கனவுகள் உங்களை அப்படி நிற்க விடாது. இணைய வர்த்தகத் துறையில் நிறைய மாற்றங்கள் தேவை; அவை தன்னால் நிகழ வேண்டுமென்ற ஆசை சுச்சிக்குப் பல ஆண்டுகளாக இருந்தது.

கேம் சேஞ்சர்ஸ் - 34 - LIMEROAD.COM

2011, லண்டன். அப்போது சுச்சிக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருந்த சமயம். சுச்சி ஒரு பத்திரிகையை வாசித்துக்கொண்டிருந்தார். ஒவ்வொரு பக்கமும் வழவழ தாள்கள். அழகான புகைப் படங்கள். அதிலொன்றுதான் சுச்சியைக் கவர்ந்த தங்க நகை விளம்பரம். பார்த்த நொடியிலே அதை வாங்க வேண்டுமென்ற ஆர்வம் சுச்சிக்கு. ஆனால், பத்திரிகை யில் அதற்கு வாய்ப்பில்லையே. அந்த நொடிதான் Limeroad.com கருவான நேரம். அதன்பின் தங்க நகை ஆசை காணாமற்போனது. சுச்சியின் எண்ணமெல்லாம் ”இப்படி யொரு சேவையிருந்தால் எப்படியிருக்கும்?” என்பதே நிறைந்திருந்தது.

இந்தியாவில் எத்தனையோ இ-காமர்ஸ் தளங்கள் இருக் கின்றன. அவை யெல்லாம் குறைந்த விலையில் பொருள்களைத் தருவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. ஆண்களைவிட அதிக அளவில் பெண்கள் பங்களிக்கும் ஒரு துறையில் அவர்கள் விருப்பங்கள் கேட்கப்படுகின்றனவா என யோசித்தார் சுச்சி.

ஆண்களுக்கு ஷாப்பிங் என்பது தேவையான பொருள்களை வாங்கும் ஒரு விஷயம். பெண்களுக்கு அது ஒரு பரவசம் தரும் அனுபவம். என்ன வாங்குகிறோம் என்பது இரண்டாம்பட்சம்தான். பெண்கள் தங்கள் ஷாப்பிங் அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புவார்கள். ஆண்களுக்கு அதில் பெரிய ஆர்வம் இருப்பதில்லை. எப்படிப் பார்த்தாலும் பெண்களின் ஷாப்பிங் என்பது ஆண்களின் ஷாப்பிங்கைவிட முற்றிலும் வித்தியாசமானது. அந்த அனுபவத்தை இணைய ஷாப்பிங் போர்ட்டல்கள் தருவதில்லை என்பதால் பெண்களுக்கென பிரத்யேக ஷாப்பிங் போர்ட்டல் கொண்டு வரலாம் என நினைத்தார் சுச்சி. அதற்கான முயற்சிகளில் இறங்கினார். லண்டலில் வேலை செய்துவந்த சுச்சி, இரண்டு குழந்தைகளுக்குத் தாயான சுச்சி, தன் கனவை நனவாக்க இந்தியாவிற்கு 2011-ல் திரும்பினார்.

கிராண்டு ட்ரங்க் ரோடு (GT road) என்பது வரலாற்றில் மிக முக்கியமான ஓரிடம். 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தச் சாலை ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் தொடங்கி, பாகிஸ்தான் சென்று, அங்கிருந்து வாகா வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து, கொல்கத்தாவில் முடியும். 2500 கி.மீ நீளம் கொண்ட இந்தச் சாலை ஆசியாவின், குறிப்பாக இந்தியாவின் வர்த்தகத்தையே மாற்றி எழுதியது. இதன் டிஜிட்டல் வெர்ஷனைத்தான் உருவாக்க விரும்பினார் சுச்சி.

சுச்சியின் விருப்பம் டெக்னிக்கலாக சிரமமானது. மற்ற விஷயங்களில் சுச்சி கில்லி. டெக்னிக்கல் உதவிக்கு பிரஷான் மாலிக் என்ற நண்பரை நாடினார். பிரஷாந்த் ஃபேஸ்புக்கில் டெக் லீடாக வேலை செய்துகொண்டிருந்தார். சுச்சி Limeroad.com என்ற ஸ்டார்ட் அப் ஐடியாவை விவரித்ததும் பிரஷாந்த் உடனே இணை நிறுவனராக இணைந்துகொண்டார். தன் தேவைகள் என்ன என்ன எனச் சுச்சி சொல்லச் சொல்ல, பிரஷாந்த் அதற்கு வடிவம் கொடுக்கத் தயாரானார்.

கேம் சேஞ்சர்ஸ் - 34 - LIMEROAD.COM

சுச்சியின் தேவை என்ன?

முதலில், தங்கள் தளம் பெண்களின் ஷாப்பிங் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். வாங்குகிறார்களோ இல்லையோ, அவர்கள் பார்த்ததைப் பற்றிப் பேசுவார்கள்; அலசுவார்கள். அதற்கொரு வசதி வேண்டும். அதைத்தான் Scarpbook என்ற ஆப்ஷனாக Limeroad.com தருகிறது. உள்ளூர் பிராண்டோ, உலக பிராண்டோ... அதைப் பற்றி வாடிக்கையாளர்கள் என்ன நினைக்கிறார்களோ அதைச் சொல்லலாம். மிக்ஸ் அண்ட் மேட்ச் போல இரண்டு வெவ்வேறு உடைகள் வாங்க டிப்ஸ் தரலாம். வீட்டுக்கு ஏற்ற ஸ்க்ரீன் எதுவெனச் சொல்லலாம். இதை Looks என்கிறார்கள். இந்த Looks-ஐ நம் நண்பர்களுடன் ஃபேஸ்புக்கில் பகிரலாம். அவர்களுக்கு அது பிடித்திருந்து, அதை வாங்கினால் லைம்ரோடு நமக்குப் பணம் தரும். ஏனெனில், அந்தப் பொருளின் டிசைனர் நாம்தானே?

அடுத்து, ஒவ்வொரு 10 நாள்களுக்கும் ஒருமுறை லைம்ரோடில் இருக்கும் வர்த்தகர்கள் புதிய கலெக்‌ஷனைச் சேர்க்க வேண்டும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் எப்போது வந்தாலும் புதிதாக ஏதாவது இருக்கும். இப்படிப் பல பிரத்யேக விஷயங்களை லைம்ரோடுக்குள் கொண்டு வந்தார்கள். இவை மூலம் `இது இன்னொரு ஷாப்பிங் தளமல்ல’ என்ற பெயர்பெற்றது லைம்ரோடு.

16 ஆண்டுகள் இதே துறையில் சுச்சி வேலை செய்ததால் லைம்ரோடுக்கு முதலீடு கிடைப்பதில் பெரிதாகச் சிரமம் ஏதுமிருக்கவில்லை. லைம்ரோடின் பிசினஸ் ரோடு மேப்பைத் தெளிவாக உருவாக்கியிருந்தார் சுச்சி முகர்ஜி. ஆனால், அதைச் சாத்தியமாக்கு வதில்தான் ஏகப்பட்ட சிக்கல்கள். ஐரோப்பா நாடுகள்போல இந்தியாவில் வேலைகள் சொன்னபடி நடப்பதில்லை. லைம்ரோடு டிஜிட்டலாக கடையைத்தான் திறந்தது; அதில் விற்க வர்த்தகர்கள் முன்வர வேண்டும். அதில் பெரிய சிக்கலை சுச்சி சந்தித்தார். அந்தப் பயணம் சுச்சி என்ற பெண்ணுக்கு மட்டுமல்ல; பல பெண்களுக்கு வரமானது.

கேம் சேஞ்சர்ஸ் - 34 - LIMEROAD.COM

வாடிக்கையாளர்களும் சுச்சியும் மட்டுமல்ல; லைம்ரோடு பிராண்டின் தூதுவரான நடிகை நேஹா தூபியாவும் பெண்தான். இதில் இணைந்திருக்கும் வர்த்தகர்கள் பலரும் பெண்கள்தாம். அவர்களுக்கே முன்னுரிமை தருகிறது லைம்ரோடு. இந்தியா முழுவதையும் 8 பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனிப் புகைப்படக்கலைஞர்களை வைத்திருக்கிறது லைம்ரோடு டீம். வர்த்தகர்களின் பொருள்களை இவர்கள் படமெடுத்துக் கொடுக்க, அவை லைம்ரோடு இணையத்தில் வாடிக்கையாளர்கள் பார்வைக்கு வரும். தேவைப்படும் வர்த்தகர்களுக்குப் பயிற்சியும் தருகிறது லைம்ரோடு. சுச்சி என்ற ஒரு பெண்ணின் கனவு நனவானதால் இன்று பல பெண்களின் கனவும் நனவாகியிருக்கிறது.

பெண்கள்தாம் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பல ஆயிரம் ஆண்டுகளாக நம் சமூகத்தில் இருக்கிறது. அவர்கள் வேலைக்குச் சென்றாலும் கூடவே குடும்பத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. வெற்றிபெற்ற பல பெண் தொழில்முனைவோர் குடும்பச்சுமையிலிருந்து விலகி இருந்தவர்கள்தாம். ஆனால், சுச்சி குடும்பப் பொறுப்பை விட்டுவிடவில்லை. அதையும் திறம்படக் கையாண்டார்.

``இங்கே வெற்றிபெறப் போராட வேண்டியிருக்கிறது. அது உங்கள் ஜீனிலே இருக்க வேண்டும். அதற்கு ஆண், பெண் என்ற பேதமில்லை. தோல்வி களுக்குத் தயாராக இருக்க வேண்டும். அங்குதான் பெண்கள் சறுக்குகிறார்கள். குடும்பம் என்ற ஒன்று அவர்களுக்குச் சவாலாக இருக்கிறது. எந்தக் குடும்பம் ஆதரவாக இருக்கிறதோ அந்தப் பெண் எப்படியும் வெற்றி பெற்றுவிடுவார். எனக்கு என் குடும்பம் அப்படித்தான்” என ஒரு முறை சுச்சி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். சுச்சியின் இரண்டாவது குழந்தைக்கு ஒரு வயது மட்டுமே ஆயிருந்தபோது சுச்சி லண்டனுக்கும் டெல்லிக்கும் இடையே பறந்துகொண்டிருந்தார். மாதத்தில் ஒரு முறை மட்டுமே லண்டன் போவார். மற்ற நாளெல்லாம் சுச்சியின் கணவர் தான் இரண்டு குழந்தைகளையும் அங்கே பார்த்துக்கொண்டார்.

சுச்சியின் தலைமையில் லைம்ரோடு இன்று இந்தியாவின் முக்கியமான இணைய வர்த்தக பிராண்டு ஆகியிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் ஐந்து கோடிப் பேர் லைம்ரோடுக்கு வருகிறார்கள். சென்ற ஆண்டு மத்தியப்பிரதேச மாநில அரசுடன் கைகோத்தி ருக்கிறது லைம்ரோடு. இதன் மூலம் உள்ளூர் கைவினைப்பொருள்களை உலகம் முழுவதும் விற்பதற்கு உதவுகிறது. இதனாலும் பல பெண்கள் பலம் பெறுகிறார்கள். பெண்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட தளத்தில் இப்போது ஆண்களுக்கான ஷாப்பிங்கும் உண்டு. இப்போதும் 70% விற்பனைக்குப் பெண்களே காரணம் என்கிறது லைம்ரோடு.

ஒரு நேர்காணலில் ``உங்களுக்குப் பிடித்த திரைப்படம் எது” என்ற கேள்விக்கு `அயர்ன் மேன்’ என்றார் சுச்சி. உண்மையில், அவரே ஒரு  அயர்ன் வுமன்தான்.