சட்டம் பெண் கையில்! - 10 வயது சிறுமிக்குக் கருக்கலைப்பு... தீர்ப்பும் விவாதமும் - 20

வழக்கறிஞர் வைதேகி பாலாஜி
பாதுகாப்பு இல்லாத கருக்கலைப்பு, தாய் சேய் என இரண்டு உயிர்களுக்கும் பாதிப்பை உண்டாக்கிவிடும் என்பதால், அதை நெறிப்படுத்த வடிவமைக்கப்பட்ட மருத்துவ கருக்கலைப்புச் சட்டம் (Medical Termination of Pregnancy Act 1971) பற்றி சென்ற இதழில் பார்த்தோம். பாலியல் வன்கொடுமை காரணமாக 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் கருவுற நேர்ந்தால், இந்தச் சட்டம் எப்படிச் செயல்படுத்தப்படுகிறது என்பது பற்றி இந்த இதழில் விளக்குகிறார் வழக்கறிஞர் வைதேகி பாலாஜி.

சிறுமிகள் கர்ப்பமாக்கப்படும் சூழல்களில் மருத்துவ கருக்கலைப்புச் சட்டம் 1971 மட்டுமல்லாது, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டமும் (The Protection of Children from Sexual Offences (POCSO) Act, 2012) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். 18 வயதுக்கு உட்பட்ட சிறுமி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு, பரிசோதனையின் மூலம் கர்ப்பம் கண்டறியப்பட்டால், அந்தச் சிறுமி யைப் பரிசோதித்த மருத்துவர், அதுபற்றி காவல்நிலையத்திலோ, இளம் சிறார்களுக்கான சிறப்புக் காவல்துறையினரிடமோ ரிப்போர்ட் செய்ய வேண்டும். அதை செய்யத் தவறினால், போக்ஸோ சட்டப் பிரிவு 19(1)-ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும். அக்குற்றச் செயலுக்குத் தண்டனையாக அதிகபட்சம் ஆறு மாதகால சிறைத்தண்டனை வரை விதிக்கப்படும். அபராதமும் உண்டு. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனைக்கு அழைத்துவரப்படும்போது மருத்துவரோ, மருத்துவமனை நிர்வாகமோ அவருக்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனை அல்லது சிகிச்சையை மேற்கொள்ளலாம். `சட்டப்படியான அறிக்கை யைக் கொடுத்தால்தான் அனுமதிப்போம்' என்று மறுக்கத் தேவையில்லை. சிறுமிக்கு சிகிச்சையை ஆரம்பித்துவிட்டு, சட்டப் படியான நடைமுறைகளை மேற்கொள்ளலாம்.
குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டம் 2015 பிரிவு 74-ன்கீழ் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயர், ஊர், பள்ளி உள்ளிட்ட எந்த ஓர் அடையாளத்தையும் மருத்துவமனை, காவல்துறை, ஊடகம் என யாரும் வெளிப் படுத்தக் கூடாது. அதை மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக ஆறு மாத காலம் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டு லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது அபராதம் மற்றும் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்
10 வயது சிறுமிக்குக் கருக்கலைப்புச் சட்டத் தீர்ப்பு

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி, உறவினரால் வன்கொடுமைக்கு ஆளாகி கர்ப்பமாக்கப்பட்டாள். அந்த சிறுமிக்கு, தனக்கு என்ன நடந்தது என்பதை உணரத் தெரியவில்லை. வயிறு வலிக்கிறது என்று தன் பெற்றோரிடம் கூற, அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் கர்ப்பம் என்று தெரியவர அதிர்ச்சியுற்றனர். பால்யம் மாறாத அந்தச் சிறுமிக்கு, ஏற்கெனவே இதயக் கோளாறு காரணமாக அறுவைசிகிச்சையும் செய்யப்பட்டிருந்த நிலையில், சிறுமிக்கு கருக்கலைப்பு செய்வதற்கான அனுமதி கேட்டு சத்தீஸ்கர் மாநில உயர் நீதிமன்றத்தை அவள் பெற்றோர் அணுகினர். அவர்களது கோரிக்கை அங்கு நிராகரிக்கப்பட்டது. அவர்கள், உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றனர். உச்ச நீதிமன்றம், சிறுமியின் மருத்துவ அறிக்கையை அறிந்துகொள்ள மருத்துவக் குழுவின் பரிசோதனைக்கு அவளை அனுப்பிவைத்தது.
ஏற்கெனவே அவளுக்கு உடல்நிலையில் சிக்கல் இருப்பதாலும், கருக்கலைப்பு செய்தால் அந்தச் சிறுமியின் உயிருக்குப் பாதிப்பு உண்டாகும் என்பதாலும், சட்டப்படி 20 வார காலத்தைக் கடந்துவிட்டதாலும் கருக்கலைப்பு இந்த நிலையில் சாத்தியமாகாது என்ற மருத்துவர்களின் அறிக்கையைப் பரிசீலித்த நீதிமன்றம், கருவைப் பெற்றெடுக்கத்தான் வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. ஊடகங் களின் மூலம் உலகெங்கும் இந்தத் தீர்ப்பு விவாதமானது.
`ஒரு குற்றவாளியால் தன்னையே அறியாமல் இந்த நிலைக்குத் தள்ளப்பட்ட அந்த 10 வயது குழந்தை, மருத்துவ அறிக்கையின்படி கருக்கலைப்பைத் தாங்க முடியாது என்றால், பின்னர் எப்படி அவளால் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க முடியும்?’, `அவள் உடல்நிலை இதற்கு ஒத்துழைக்குமா... சுகப்பிரசவம் இவளுக்குச் சாத்தியமாகுமா?’, `அறுவை சிகிச்சை மூலம் அந்தக் குழந்தையைப் பெற்றெடுத்து, அதன் வலிகளையும் குழந்தையின் சுமையையும் அவள் சுமக்க வேண்டுமா... அவள் எதிர்காலம், உடல்நிலை என்னவாகும்?’ என்று நாடெங்கும் இந்தத் தீர்ப்பு விவாதப்பொருளானது.
இறுதியாக, அந்த 10 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சையின் மூலம் பெண் குழந்தை பிறந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அந்தக் குழந்தையை குழந்தைகள்நல வாரியத்திடம் ஒப்படைத்தனர்.
கருக்கலைப்புச் சட்டத்தில் மாற்றம் தேவை
ஒரு குழந்தை உறவினர்களாலோ, வெளி நபர்களாலோ பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, `பெற்றோரிடம் சொல்லக் கூடாது' என்ற மிரட்டலுக்குப் பயந்து, உடல் உபாதைகள் காரணமாக மருத்துவமனைக்குச் செல்லும்போதுதான் அவள் கர்ப்பம் என்பதே கண்டறியப்படும். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கே அந்தக் குடும்பத்துக்கு அவகாசம் தேவைப்படும். பின்னர், அவர்கள் தங்களைத் தேற்றிக்கொண்டு, இந்தச் சமுதாயத்தை எதிர்கொள்ளத் தங்களைத் தயார்படுத்திக்கொண்டு `கருவைக் கலைத்து விடலாம்' என்று முடிவெடுக்கும்போது, சட்டப் பிரிவு அவர்களை அனுமதிக்க மறுக்கிறது.
இப்போதுள்ள மருத்துவ வளர்ச்சியில், கைதேர்ந்த மருத்துவர்களால் பாதுகாப்பான முறையில் கருவைச் சுமப்பவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் கருக்கலைப்பு செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. அதனால், கரு வளர்ந்து 20 வாரத்தைத் தாண்டியிருந்தால் அதைக் கலைக்கக் கூடாது என்று, மருத்துவ வளர்ச்சி இல்லாத காலகட்டத்தில் ஏற்படுத்தப் பட்ட கருக்கலைப்புச் சட்டப் பிரிவில் மாற்றம் கொண்டுவர வேண்டும். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு கர்ப்பமான சிறுமிகளின் உடல்நிலையை மருத்துவப் பரிசோதனை செய்து, பாதிக்கப்பட்ட தரப்பு விரைவான முடிவை எடுக்க உதவும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் குழுமம் அமைக்கப்பட வேண்டும். வளர்ந்த கருவைக் கலைக்கும் அவகாசத்தை 20 வாரத்திலிருந்து 24 வாரமாக மாற்றி சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும். இவற்றையெல்லாம் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்திவருகிறார்கள்.
ஓவியம்: கோ.ராமமூர்த்தி
முன்மாதிரி தீர்ப்பு!
சட்டத்தின் வரைமுறைகளிலிருந்து விலகுவதற்கான சந்தர்ப்பங்களைச் சில நேரங்களில் வழக்குகளின் தன்மை வழங்குகிறது. அதற்கு இந்த வழக்கு ஓர் உதாரணம்.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி, தனக்கு வைத்தியம் பார்த்த ஒருவனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, அவன் மிரட்டலுக்கு அஞ்சி, தனக்கு நடந்த கொடுமையை வெளியே சொல்லாமல் இருந்திருக்கிறாள். அவள் தாங்க இயலாத வயிற்றுவலி என்று சொல்லவே, மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதுதான் அவள் கர்ப்பமாகியிருப்பது தெரியவந்துள்ளது. அவளது கர்ப்பம் 24 வாரத்தை அடைந்துவிட்ட நிலையில், கருக்கலைப்பு அனுமதிக்காக நீதிமன்றத்தின் மூலம் மருத்துவக்குழு பரிசோதனைக்கு அவள் அனுப்பி வைக்கப்பட்டாள். ‘இந்தக் கருக்கலைப்பால் அந்தச் சிறுமியின் உயிருக்கு ஆபத்தில்லை என்றால், மருத்துவர்கள் கருக்கலைப்பு முடிவை எடுக்கலாம்’ என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
பாலியல் வன்கொடுமையால் வஞ்சிக்கப்பட்டு கர்ப்பமான சிறுமிகளின் கர்ப்பகாலம் 20 வாரங்களைக் கடந்துவிட்ட நிலையிலும், சிறுமியின் தரப்பில் கர்ப்பத்தைக் கலைத்துவிட விருப்பம் தெரிவித்தால், சிறுமியின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்று மருத்துவர்கள் அறிவிக்கும் சூழ்நிலைகளில், நீதிமன்றம் கருக்கலைப்புக்கு அனுமதிக்கும் இத்தகைய தீர்ப்புகள், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பங் களுக்குக் குறைந்தபட்ச நிம்மதியைத் தரும்.