
34,12,000 நன்றி!
வணக்கம்
இதழியல் வரலாற்றில் இன்னுமொரு மைல்கல்லைத் தொட்டிருக்கிறது ஆனந்த விகடன்!
93 வருடங்களாக, உங்கள் அன்பும் ஆதரவும் தோள்கொடுக்க, ‘தமிழர்களின் நம்பர் 1 பத்திரிகை’யாக மீண்டும் மீண்டும் திகழ்கிறான் ஆனந்த விகடன். தற்போது வெளியிடப்பட்டிருக்கும் ‘Indian Readership Survey - 2019 (Q1)’ ஆய்வறிக்கை முடிவுகள், இதை உறுதிப்படுத்தியிருக்கின்றன. இந்தியா முழுவதும் மாநகரங்கள், நகரங்கள், கிராமங்கள் என்று மக்கள் மத்தியில் பரவலாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
தேசிய அளவில் நடத்தப்படும் இந்த ஆய்வின்படி, இந்தியாவில் வெளியாகும் அனைத்து மொழிப் பத்திரிகைகளில் 12-வது இடம், இந்தி தவிர்த்த பிறமொழி வார இதழ்களில் இந்திய அளவில் இரண்டாவது இடம் என்று முந்தைய ஆண்டின் (2017) ஆய்வைக் காட்டிலும் முன்னேறியிருக்கிறது ஆனந்த விகடன். தமிழ் வார இதழ்களில் தொடர்ந்து முதல் இடத்தைத் தக்கவைத்திருக்கிறது. இந்தப் புகழும் பெருமையும் வாசகர்களாகிய உங்களையே சேரும்.

இந்திய நாளிதழ்களைப் பொறுத்தவரை முந்தைய ஆய்வைக் காட்டிலும் 1.8 கோடிப் பேர் அதிகம் வாசிக்கிறார்கள். அதேபோல, வார இதழ், மாதமிருமுறை இதழ், மாத இதழ் ஆகியவற்றை வாசிப்பவர்களின் எண்ணிக்கை 90 லட்சம் அதிகரித்திருக்கிறது. டிஜிட்டல் யுகத்திலும் அச்சுப் பத்திரிகைகளைப் படிப்பவர்களின் எண்ணிக்கை 40.7%-ல் இருந்து 42.5% என உயர்ந்திருப்பது, இதன்மூலம் உணர்த்தப்படும் உண்மை நிலை.
‘வாட்ஸ்-அப் செய்திகளையே அதிகம் படிக்கிறார்கள், இதழ்களில் வரும் ஆழமான கட்டுரைகளை அதிகம் விரும்புவதில்லை’ என்ற பிம்பம் தகர்க்கப்பட்டிருக்கிறது. இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் படிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபோதும் அச்சுப் பத்திரிகைகளின் மீதான வாசகர்களின் நம்பகத்தன்மை முன்பைவிடவும் அதிகரித்திருக்கிறது என்பதையே உறுதிப்படுத்தியுள்ளன இந்த ஆய்வு முடிவுகள்.
இந்த ஆய்வின்படி ஆனந்த விகடன் வார இதழ் 34,12,000 வாசகர்களைப் பெற்றிருக்கிறது. முந்தைய ஆண்டின் அறிக்கையின்படி 27,08,000 வாசகர்கள். தற்போது ஆனந்த விகடனின் வளர்ச்சி 26% அதிகரித்திருக்கிறது என்பதைப் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அதுமட்டுமா, விகடன் குழுமத்திலிருந்து வெளியாகும் அவள் விகடன், மாதமிரு முறை இதழ்களில் முன்னோடியாகத் திகழ்ந்து, அதன் வாசகர்களின் எண்ணிக்கையும் 18% அதிகரித்திருக்கிறது என்பது பெருமைக்கும் கொண்டாட்டத்துக்கும் உரிய செய்தி.
இதுபோலவே, சுட்டி விகடன், சக்தி விகடன், நாணயம் விகடன், மோட்டார் விகடன், பசுமை விகடன், டாக்டர் விகடன் ஆகியவற்றின் வாசகர்கள் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. (வார, மாதமிருமுறை, மாத இதழ்கள் போன்றவற்றை மட்டுமே ஆய்வு நிறுவனம் கணக்கில் எடுப்பதால், வாரமிருமுறை வெளியாகும் ஜூனியர் விகடன் இதழ் இந்தக் கணக்கெடுப்பில் சேர்க்கப்படவில்லை).
இந்த வளர்ச்சி, ஆனந்த விகடன் குழும இதழ்களின் மீது வாசகர்கள் வைத்திருக்கும் அபிமானத்தைக் காட்டுகிறது. இணையத்தில் ஸ்குரோல் செய்து படிப்பது, தொலைக்காட்சிகளில் சேனல்களை மாற்றி மாற்றிப் பார்ப்பது என்றிருக்கும் சூழலில் புத்தகங்களை வாங்கித் தொட்டுப் பார்த்து வாசித்து மகிழும் வாசகர்களாகிய உங்களால்தான் 26% வளர்ச்சியை ஆனந்த விகடன் அடைந்திருக்கிறது.
உண்மையை உரக்கச் சொல்வதும், செய்திகளை நேர்மையோடும், நடுநிலை யோடும் அளிப்பதும்தான் வாசகர்களை ஆனந்த விகடனுடன் கட்டிப்போடும் மந்திரக் கயிறு. புதுமையான தொடர்கள், பகுதிகள், பிரத்யேகமான கட்டுரைகள், படங்கள், வண்ண மயமான வடிவமைப்புகள், நாட்டு நடப்புகளை நகைச்சுவையுடன் சித்திரிக்கும் கார்ட்டூன்கள், தரமான படைப்புகள் ஆகியவை எப்போதும் ஆனந்த விகடனை நம்பர் ஒன் இதழாக வாசகர்களிடம் நிலைநிறுத்தியிருக்கின்றன.
93 ஆண்டுகளாக விகடன் வளர்ச்சிக்கு அடித் தளமாய் விளங்கும் வாசகர்களுக்கே இந்தப் பெருமை முழுக்கச் சேரும். ஏனெனில், வாசகர்களே விகடனின் வரம்... அவர்களின் ஆதரவே எங்கள் உரம்!
தரமான பங்களிப்புகளை வழங்கும் எழுத்தாளர்களுக்கும் படைப்பாளிகளுக்கும், நியாயமான விலையில் விகடனை வாசகர்களுக்கு அளிப்பதற்குத் துணைநிற்கும் விளம்பரதாரர்களுக்கும், கடைக்கோடி வாசகர்களுக்கும் ஆனந்த விகடன் இதழை அக்கறையுடன் கொண்டு சேர்க்கும் முகவர்கள், விற்பனையாளர்கள், வீடுகளில் விநியோகிக்கும் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இணைந்திருப்போம்... தொடர்ந்து உயர்ந்து நிற்போம்!