
வழக்கறிஞர் வைதேகி பாலாஜி
சமீபத்தில் வெளியான குழந்தை பேரம் தொடர்பான ஆடியோ அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குழந்தையில்லா தம்பதிகள், சட்டப்படி ஒரு குழந்தையைத் தத்தெடுப்பது பரவலாகும்போதுதான், இதுபோல சட்டத்துக்குப் புறம்பாகக் குழந்தையை விலைபேசி வாங்குவது மற்றும் கடத்துவது போன்ற குற்றங்கள் களையப்படும். வாழ்க்கையில் ஏதோ ஒரு காரணத்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட தத்து சட்ட நடைமுறைகள், தத்து கொடுக்கப்படும் குழந்தைகளின் பாதுகாப்பை மனத்தில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றை விளக்குகிறார், வழக்கறிஞர் வைதேகி பாலாஜி.

யாரெல்லாம் தத்தெடுக்கலாம்?
• திருமணமாகி குழந்தை இல்லாதவர்கள்.
• திருமணம் செய்துகொள்ளாமல் குழந்தையைத் தத்தெடுக்க விரும்புபவர்கள்.
• மரணம், விவாகரத்து போன்ற காரணங்களால் துணையை இழந்தவர்கள்; துணையைப் பிரிந்தவர்கள்.
• ஏற்கெனவே ஆண் குழந்தை இருந்து, பெண் குழந்தையைத் தத்தெடுக்க ஆசைப்படுபவர்கள்.
• ஏற்கெனவே பெண் குழந்தை இருந்து, ஆண் குழந்தையைத் தத்தெடுக்க ஆசைப்படுபவர்கள்.
• ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கும்போதும் இன்னொரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க நினைக்கும் கருணை மனம் கொண்டவர்கள்.

இப்படிப் பலதரப்பட்ட மக்களும் ஆதரவற்ற குழந்தை களுக்கு மறுவாழ்வு அளிக்கலாம்; அளித்துவருகின்றனர். திருமணம் மற்றும் விவா கரத்து போன்றவற்றுக்கு அவரவர் மதச் சட்டங்களைப் பின்பற்றுவதைப்போல தத் தெடுப்புக்கும் அவரவர் மதச் சட்டங்களைப் பின்பற்றிவந்தனர். இந்துவான ஒருவர், இந்துக் குழந்தையைத் தத்தெடுப்பதற்கான நடைமுறைகளைப் பற்றி இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் 1956-ல் விளக்கப்பட்டுள்ளது. இச்சட்டப் பிரிவு 16-ன்படி, தத்து எடுப் பவரும் கொடுப்பவரும் தத்து எடுப்பதற்கான ஆவணங்களைத் தயாரித்து, அதை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்ய வேண்டும். பிரிவு 17-ன்படி தத்து எடுப்பவர்கள் - கொடுப்பவர்களுக்கிடையே பணப் பரிவர்த்தனை கூடவே கூடாது. பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதாக நிரூபிக்கப் பட்டால், அபராதத்துடன் சிறைத் தண்டனையும் வழங்கப்படும். அது, ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படலாம்.
தத்துக் குழந்தைக்கு சொத்துரிமை
தத்தெடுக்க முன்வருபவர்களுக்கு, அதுகுறித்து நிறைய கேள்விகளும் சந்தேகங்களும் எழலாம். குறிப்பாக, குழந்தை இல்லை என்கிற காரணத்துக்காக வேறொரு குழந்தையைத் தத்தெடுத்த பின்னர், அந்தத் தம்பதிக்கு இயற்கையாக ஒரு குழந்தை பிறக்கும்போது, வளர்ப்புக் குழந்தையின் நிலை என்னாகும்?
இதை கருத்தில்கொண்டு, வளர்ப்புக் குழந்தையின் நலனை முன்னிறுத்தி, சட்டம் சொல்லும் வரையறைகளைப் பார்ப்போம்.
• சட்டப்படி ஒரு குழந்தையைத் தத்தெடுத்த பின்னர், அந்தத் தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்தால், அந்த பயாலஜிக்கல் குழந்தைக்கு உரிய அத்தனை உரிமைகளும் வளர்ப்புக் குழந்தைக்கும் உண்டு... வளர்ப்புப் பெற்றோரின் இனிஷியல் உட்பட. அவர்களுக்கு இயற்கையாக குழந்தை பிறந்தாலும் வளர்ப்புக் குழந்தையும் அவர்களின் சட்டப்படியான வாரிசுதான்.
• தத்தெடுப்புச் சட்டப்பிரிவு 12-ன்படி, தத்தெடுக்கப்பட்ட குழந்தை, அந்தக் குடும்பத் தில் தனக்குச் சகோதர, சகோதரி உறவுமுறை வருபவர்களைத் திருமணம் செய்ய இயலாது.
• சொத்துப் பங்கீடு, பெற்றோர் அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெறும்போது கிடைக்கப்பெறும் சலுகை போன்ற வாரிசுரிமைகளில், பயாலஜிக்கல் குழந்தையும் வளர்ப்புக் குழந்தையும் சமமாகவே பாவிக்கப்படுவார்கள். வளர்ப்புக் குழந்தைதானே என்று எந்த வகையிலும் சட்ட உரிமைகளிலிருந்து விலக்கி வைக்கவோ, நிராகரிக்கவோ முடியாது.
தத்தெடுப்பதற்கான சட்ட விதிமுறைகள்
ஆதரவற்றோர் இல்லங்களில் வளரும் குழந்தைகளைத் தத்தெடுப்பதாகக் கூறி, தத்தெடுத்த பின்னர் அவர்களை விற்பது அல்லது வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்து பணம் சம்பாதிப்பது போன்றவற்றைச் சிலர் தொழிலாகவே செய்துவருகின்றனர். இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க, தத்தெடுப்புக்கான சட்ட நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பார்ப்போம்.
இந்து ஆண் தத்தெடுப்பதற்கான சட்ட நிபந்தனைகள்
• தத்தெடுக்கும் ஆண் 18 வயதைக் கடந்த மேஜராக, நல்ல மனநிலை உள்ளவராக இருக்க வேண்டும். அவர் திருமணமானவர், திருமணமாகாதவர், விவாகரத்தானவர் என யாராக இருந்தாலும் அவர் ஆண் மற்றும் பெண் குழந்தையைத் தத்தெடுத்துக்கொள்ளலாம். தத்தெடுக்கும் குழந்தை 15 வயதுக்குட்பட்ட குழந்தையாக இருக்க வேண்டும்.
• தத்தெடுக்கும் ஆண் திருமணமானவர் எனில், அவர் மனைவியின் சம்மதம் கண்டிப் பாகத் தேவை.
• தத்தெடுக்கும் ஆணுக்கு மகனோ மகன் வழிப் பேரனோ இருக்கக் கூடாது. தத்துக் கோருபவருக்கு ஏற்கெனவே ஆண் குழந்தை பிறந்திருந்தால் அல்லது இதற்கு முன் வேறு ஆண் குழந்தையைத் தத்தெடுத்திருந்தால், அவரால் இன்னோர் ஆண் குழந்தையைத் தத்தெடுக்க முடியாது. ஆனால், அவர் பெண் குழந்தையைத் தத்தெடுத்துக்கொள்ளலாம்.
• தனித்து வாழும் ஆண், ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுக்க விரும்பினால், அந்தக் குழந்தையைவிட அவர் 21 வயது மூத்தவராக இருக்க வேண்டும். அவருக்கு மகளோ அல்லது பேத்தியோ இருக்கக் கூடாது.
இந்து தத்தெடுப்புச் சட்டப்படி, பெண் துணை இல்லாமல் வாழும் ஆண் ஒருவர் பெண் குழந்தையைத் தத்தெடுக்க சட்டம் அனுமதித்து வந்தது. ஆனால், சமீபகாலமாக சிறுமிகளுக்கு உண்டாகும் பாலியல் தொல்லைகளைக் கருத்தில்கொண்டு, 2017-ல் தத்தெடுப்பு ரெகுலேஷன் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி திருமணமான ஆண், தன் மனைவியுடன் சேர்ந்து 15 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையைத் தத்தெடுத்துக்கொள்ள லாம். திருமணமாகாத ஆணோ, மனைவியை விவாகரத்துச் செய்தவரோ, மனைவியை இழந்தவரோ பெண் குழந்தையைத் தத்தெடுக்க அனுமதிக்கப்படுவதில்லை.
இந்துப் பெண் ஒரு குழந்தையைத் தத்தெடுப் பதற்கான சட்ட நிபந்தனைகள், தத்து கொடுப்பவர்களுக்கான வரையறைகள், தத்துப் பிள்ளைகள் தொடர்பான வழக்கு ஆகியவற்றைத் தொடர்ந்து பேசுவோம்...
அடுத்த இதழிலும்!
ஓவியம்: கோ.ராமமூர்த்தி
தத்தை ரத்து செய்யலாமா?
இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டப் பிரிவு 15-ல் கூறப்பட்டுள்ளதன்படி சட்டப்படி நடைபெற்ற தத்தெடுப்பை வளர்ப்புத் தாயோ, தந்தையோ அல்லது வேறு நபர்களோ ரத்துசெய்ய முடியாது.