பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் வர்த்தமான் நேற்று இரவு வாகா எல்லை வழியாக இந்தியா வந்தடைந்தார். இந்தியா வந்த அவரை வாகா எல்லையில் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்கள் கோஷங்கள் எழுப்பி வரவேற்றனர்.

இந்திய விமானி அபிநந்தனை பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் வரவேற்று ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, `வரவேற்புகள் அபிநந்தன் வர்த்தமான். உங்களின் தைரியம் கண்டு நாடு பெருமைப்படுகிறது. நாட்டில் உள்ள 130 கோடி மக்களுக்கும் நம் பாதுகாப்பு படைவீரர்கள் ஒரு முன்னுதாரணமாக திகழ்கின்றனர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தன் ட்விட்டர் பக்கத்தில், `அபிநந்தன் வர்த்தமானுக்கு வரவேற்புகள். உங்களின் தைரியம், கடமை உணர்வு, கண்ணியத்தால் நம் நாடு பெருமையடைந்துள்ளது. உங்களுக்கும் நமது விமானப்படைக்கும் எனது வாழ்த்துகள்’ எனப் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, `விங் கமாண்டர் அபிநந்தன் உங்களின் கண்ணியம், தைரியம் மற்றும் வீழாதமனநிலை எங்கள் அனைவரையும் பெருமையடையவைத்துள்ளது. அன்பான வரவேற்புகள்’ என்று கூறியுள்ளார்.

பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர், `நாட்டின் மரியாதைக்காகவும், உங்கள் தனிப்பட்ட பாதுகாப்பிற்காகவும் நீங்கள் கடைமைப்பட்டுள்ளீர்கள். உங்கள் சட்டையில் இந்தியாவின் நிறங்களை அணிந்துகொண்டு கடினமான நேரத்தில் அமைதியையும் திறமையையும் நீங்கள் காண்பித்தீர்கள். அபிநந்தன் நீங்கள் வரலாறு படைத்துவிட்டீர்கள். நாங்கள் தேர்ந்தெடுத்ததில் நீங்கள் சிறந்த பாதுகாப்பு படைவீரர். சபாஷ் விமானப்படை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
