
குப்பை மலையாகும் நீலமலை! - நீர்த்துப்போகும் நீதிமன்ற உத்தரவு...
பலவித வண்ணங்களில் பூப்பூக்கும் மரங்கள், பசுமை போர்த்திய புல்வெளிகள், சோலைக்காடுகள், மலைத் தொடர்கள், மேகம் தவழும் பள்ளத்தாக்குகள்… எனப் பசுமை கொஞ்சும் இடம், நீலகிரி மலை. சாரல் மழை, பறவைகளின் ஓசை என எப்போதும் ரம்மியமான சூழல் இருப்பதால், ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 40 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கிறார்கள். இத்தனை லட்சம் பயணிகள், மலையின் அழகை மட்டும் ரசித்துச் செல்வதில்லை. மலைகளின் அரசிக்கு ஏராளமான குப்பைகளைப் பரிசாகத் தந்தும் செல்கிறார்கள். இப்படி ஒருநாளைக்கு நீலமலையில் சேரும் மொத்தக் கழிவுகள் எவ்வளவு தெரியுமா? கிட்டத்தட்ட 15 டன்!

கடந்த 1972-ம் ஆண்டு, தீட்டுக்கல் வனப்பகுதியில் வனத்துறைக்குச் சொந்தமான 20 ஏக்கர் நிலத்தை, கழிவுகளைக் கொட்டிவைப்பதற்காக, குத்தகைக்கு எடுத்தது ஊட்டி நகராட்சி. கடந்த 47 ஆண்டுகளாக இந்தப் பகுதியில்தான் கழிவுகள் கொட்டி எரிக்கப்படுகின்றன. இதுவரை சுமார் 1.34 லட்சம் டன் குப்பைகள் இங்குக் கொட்டப்பட்டிருப்பதாக நகராட்சியின் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
‘வனப்பகுதிக்கு அருகே குப்பைக் கிடங்கு அமைந்துள்ளதால், காட்டு மாடு, கடமான் போன்ற வன விலங்குகள், கழிவுகளைச் சாப்பிட்டுப் பாதிப்படைகின்றன. குப்பைகளைக் கொட்டி அவற்றைத் தீ வைத்து எரிப்பதால், சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. சுற்றியுள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கும் நோய்கள் வருகின்றன. அதனால் குப்பைக் கிடங்கை அகற்ற வேண்டும்’ என்று பல ஆண்டுகளாக இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துவந்தனர். இதற்கு அதிகாரிகள் செவி சாய்க்காத நிலையில், தீட்டுக்கல் பகுதி மக்கள், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கில், ‘தீட்டுக்கல் குப்பைக் கிடங்கில், ஊட்டி நகராட்சி இனி குப்பைகளைக் கொட்டக்கூடாது. அங்குக் குவிந்துள்ள குப்பைகளை அகற்றி, அந்த நிலத்தை மீண்டும் வனத்துறை வசம் ஒப்படைக்க வேண்டும். இனிவரும் காலங்களில், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், மட்கும் குப்பைகள், மட்காத குப்பைகள் என்று தரம் பிரித்து அகற்ற வேண்டும்’ என்று கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது, தேசிய பசுமைத் தீர்ப்பாயம். ஆனால், உத்தரவிட்டு ஆறு மாதங்களாகியும் இதுவரை குப்பைகளை அகற்ற எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இன்னும் அதே இடத்தில் குப்பைகள் கொட்டப்படுவதுதான் வேதனையான விஷயம்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தீட்டுக்கல் பகுதியைச் சேர்ந்த விவசாயி நாகலிங்கம், “சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு இந்தப் பகுதியில், அரசு சார்பில் நிலம் வழங்கப்பட்டுள்ளது. தியாகிகளின் வாரிசுகள் இந்தப் பகுதியில் வாழ்ந்து வருகிறோம். பல ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்தப் பகுதியில், குப்பைகள் கொட்டி எரிக்கப்படுகின்றன. அதிலிருந்து வரும் புகையால்… சுவாசக் கோளாறு, தோல் நோய்கள் என்று பல வியாதிகள் ஏற்படுகின்றன. கால்நடைகளும் பாதிக்கப்படுகின்றன. பாதிப்பின் உச்சகட்டத்தில்தான் பொது மக்கள் இணைந்து வழக்குத் தொடர்ந்தோம். ஆனால், பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நகராட்சி நிர்வாகம் கொஞ்சம்கூட மதிக்கவில்லை. இதே நிலை நீடித்தால், பெரிய அளவில் போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம்” என்றார்.
“எங்களால் நிம்மதியாகச் சாப்பிடக்கூட முடியவில்லை. கையில் விசிறியோடுதான் சாப்பிட அமர முடியும். அந்த அளவுக்கு ஈக்களின் தொல்லை அதிகரித்துள்ளது. வெளியூர்களிலிருந்து எங்கள் உறவுக்காரர்கள் வந்தாலும் ஒருநாள்கூட இங்கு தங்குவதில்லை. துர்நாற்றம்தான் காரணம்” என்று கவலையோடு சொன்னார், அந்தப் பகுதியைச் சேர்ந்த ரவி.
சூழலியல் ஆர்வலர் சிவதாஸ், “நீலகிரியில் குப்பைகளைக் கையாள்வது மிகப் பெரும் சவாலாக மாறி வருகிறது. சேகரிக்கப்படும் குப்பைகளை ஓர் இடத்தில் கொட்டிவைப்பது என்பது பழைய முறை. ஆனால், அதையேதான் இன்றளவும் பின்பற்றுகிறார்கள். அதனால், சூழலுக்கும் காட்டுயிர்களுக்கும் மனிதர்களுக்கும் பெரும் கேடு நேர்கிறது. ஊட்டி நகராட்சி, போர்க்கால அடிப்படையில், குப்பைக் கிடங்கு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யாவிடம் பேசினோம். “ஊட்டி நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மேலாண்மை செய்ய மாற்று இடம் பார்த்து வருகிறோம். தீட்டுக்கல் வனப் பகுதியில் இருக்கும் குப்பைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்படும்” என்றார்.
விரைவாக நடவடிக்கை எடுத்து சூழலைக் காக்க வேண்டியது அவசியம்!
- ர.சதீஷ்குமார்
படங்கள்: கே.அருண்