
காசு... பணம்... துட்டு... மணல்! - குற்றவாளிகளைக் காக்கும் காக்கிகள்...
இயற்கையைச் சுரண்டி மணலைக் கொள்ளையடிக்கும் கும்பலைக் காப்பாற்ற, முதல் தகவல் அறிக்கையையே கிழித்துப் போடும் அளவுக்கு மாமூலில் திளைத்துக் கிடக்கிறார்கள், புதுச்சேரி காவல் துறையினர்.

புதுச்சேரியில், வில்லியனூர், செல்லிப்பட்டு, பிள்ளையார்குப்பம் பகுதிகளைக் கடந்து ஓடும் சங்கராபரணி ஆற்றில் மணல் அள்ளுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த ஆற்றில் காவல் துறையினரின் துணை யுடன் இரவும் பகலுமாக மணல் திருட்டு நடந்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் மணல் அள்ளும் தகராறில் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். மணல் திருட்டில் ஈடுபடும்போது மணல் சரிந்து விழுந்தும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இரவில் வேகமாக இயக்கப்படும் மணல் லாரி களாலும் விபத்துகள் ஏற்படு கின்றன. ஆனாலும், மணல் கொள்ளையர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை, காவல் துறை. காரணம், மணல் மாஃபியாக் கள், மாத மாமூலாக அள்ளி இறைக்கும் கரன்சிகள்தான்.

“செல்லிப்பட்டு, பிள்ளை யார் குப்பம் பகுதிகளில் ஆற்றில் பாறை தெரியும் அளவுக்கு மண்ணைச் சுரண்டிட்டாங்க. அந்தப் பகுதியில இப்போது மணலே கிடையாது. வில்லியனூர் பகுதியில மட்டும்தான் ஆற்றில் மணல் இருக்கு. அதனால், மணல் கடத்துற கும்பல் அத்தனையும் இந்தப் பக்கம் வந்துடுச்சு. இதைக் காரணமாக வெச்சு, இங்க ரவுடியிசமும் அதிகமாயிடுச்சி. இந்தப் பகுதிக்குப் புதுசா வந்திருக்கிற எஸ்.ஐ நந்தகுமார், மணல் திருடுறதுக்குப் புதுசா ஒரு திட்டம் கொண்டு வந்திருக்காரு. ஒரு லாரிக்கு மாசம் 1,00,000 லட்சம் ரூபாய்னு அவருக்குக் கொடுத்துட்டா, மாசம் முழுக்க கணக்கு வழக்கு இல்லாம மணல் எடுத்துக்கலாம். அந்தத் திட்டத்துல மட்டும் இப்போது 50 லாரிகள் ஓடிகிட்டிருக்கு. மாசம் 50 லட்சம் ரூபாய் அந்தப் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகுது. அந்த நந்தகுமார் தன்னோட மனைவி பேர்ல கிட்டத்தட்ட ரெண்டு கோடி ரூபாய் மதிப்புக்குச் சொத்து வாங்கிப் போட்டுருக்கார். போலீஸ் வேலையில் இருக்கறவங்க சொத்துகள் வாங்குனா, தலைமை அலுவலகத்துல ஒப்புதல் வாங்கணும். ஆனா, இவர் இவ்வளவு சொத்துகள் வாங்கியிருக்குறதை யாரும் கண்டுக்கலை” என்கிறார்கள் வில்லிய னூர் பகுதி மக்கள்.
மணல் திருட்டு குறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் கார்த்திக், “கடந்த 23-ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு பிள்ளையார்குப்பத்தில், திருட்டு மணல் ஏற்றிவந்த ‘TN-19-J-7196’ என்ற பதிவெண் கொண்ட லாரியை எஸ்.ஐ நந்த குமார் மடக்கினார். அந்த லாரி யின் டிரைவர், ‘மாமூல்தான் வாங்கிட் டீங்களே, அப்புறம் ஏன் வண்டியைப் பிடிக்கிறீங்க’னு கேட்டுவிட்டார். இதனால் கோபமடைந்த நந்த குமார், அப்பகுதியில் ரோந்துப் பணியிலி ருந்த ஏட்டு பாஸ்கர் என்பவர்மூலம், ‘திருட்டு மணல் ஏற்றி வந்த லாரியையும், அதை ஓட்டி வந்த கவியரசன் என்பவரையும் ஒப்படைக்கிறேன்’ என்று எழுதி வாங்கிக்கொண்டு அந்த டிரைவரை லாக்கப்பில் வைத்தார். தொடர்ந்து, ஏ.எஸ்.ஐ தணிகாசலம் மூலம் கவியரசன் மீது எஃப்.ஐ.ஆர் (எண்.89/2019) போட வைத்தார். ஆனால், கவியரசனை ரிமாண்ட் செய்யக் கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லாமல், மணல் கடத்தல் கும்பலிடம் பேச்சுவார்த்தை நடத்தி பெருந்தொகையைப் பெற்றுக்கொண்ட நந்தகுமார், மதியம் 1.30 மணியளவில் கவியரசனை விடுவித்துவிட்டார்.

ஏற்கெனவே போடப்பட்ட எஃப்.ஐ.ஆரில் இணைப்புத் தாளைக் கிழித்துவிட்டு ‘லாரியைப் பிடிக்கும்போது டிரைவர் கவியரசன் இருட்டில் தப்பித்து ஓடிவிட்டார்’ என மாற்றி எழுதி, ஏட்டு பாஸ்கர், ஏ.எஸ்.ஐ தணிகாசலம் ஆகியோரின் கையெழுத்துகளையும் நந்தகுமாரே போட்டு விட்டார். எஃப்.ஐ.ஆர் போட்டு, ‘குற்றவாளி கைது’ என்று தினசரி அறிக்கையில் (Daily Occurance Report) இன்ஸ்பெக்டரும் கையெழுத்துப் போட்டுவிட்ட நிலையில், அந்த ஆவணங்கள் அனைத்தையும் கிழித்து எறிந்து வேறு ஆவணங் களை வைத்திருக்கிறார், நந்தகுமார். இப்படிப் பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் துணிந்துவிட்டது, காவல்துறை. கடந்த மூன்று ஆண்டுகளாக 150-க்கும் மேற்பட்ட மணல் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதற் கெல்லாம் எந்த நடவடிக்கையும் இல்லை. இப்படி தில்லுமுல்லு செய்துவரும் நந்தகுமார் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை, காவல்துறை தலைமை மற்றும் சி.பி.ஐ ஆகியவற்றுக்குப் புகார் அனுப்பியிருக்கிறேன்” என்ற கார்த்திக், மாற்றப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் நம்மிடம் கொடுத்தார்.
இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக ஏ.எஸ்.ஐ. தணிகாசலத்தை செல்போனில் தொடர்பு கொண்டோம். நமது அழைப்பை ஏற்கவில்லை. நாம் அனுப்பிய குறுந்தகவலுக்கும் பதில் அளிக்கவில்லை.
எஸ்.ஐ நந்தகுமாரை செல்போனில் தொடர்பு கொண்டோம். இந்தக் குற்றச்சாட்டுகள்குறித்து நாம் பேச ஆரம்பித்ததும் “மறியல் போராட்டம் நடக்கிற இடத்தில் இருக்கிறேன். பிறகு பேசுகிறேன்” என்று கூறி தொடர்பைத் துண்டித்துவிட்டார். சில மணி நேரங்களுக்குப் பிறகு நாம் தொடர்பு கொண்டோம். ஆனால், நம்முடைய அழைப்பை அவர் ஏற்கவில்லை. நந்தகுமார் தன் தரப்பை எப்போது சொன்னாலும் பிரசுரிக்கத் தயாராகவே இருக்கிறோம்.
சட்டத்தை மதிக்காத இதுபோன்ற அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்குமா காவல் துறை தலைமை?
- ஜெ.முருகன், படங்கள்: அ.குரூஸ்தனம்